(Gopikrishna Kanagalingam)
அண்மைய நாட்களில், உலகின் எந்த நாட்டு ஊடகங்களையும் தொடர்ச்சியாகப் படிப்பவர்கள், பார்ப்பவர்கள், அல்லது கேட்பவர்கள், “றோகிஞ்சா” என்ற பதத்தை அறிந்திருப்பர். இல்லாவிடின், “றோகிங்கியா”, “ரோஹிஞ்சா”, “ரோஹிங்கியா”, “றோஹிங்கா” என்று, அக்குழுவினரை வேறு பெயரில் அறிந்திருந்தாலும், அவர்களைப் பற்றி நிச்சயமாக அறிந்திருப்பர்.
இவர்களின் முழுமையான வரலாற்றை அறியாதவர்கள் கூட, கடந்த பல தசாப்தங்களாக, ஒடுக்கப்படும் சமூகமாக இவர்கள் காணப்படுகின்றனர் என்பதை, ஊடகங்களில் எங்காவது மூலைகளில் காணப்படும் செய்தி அறிக்கைகளிலாவது கண்டிருப்பர். ஒரு சமூகத்தின் கலாசாரம், சாதனைகள், அடைவுகள் போன்றன எல்லாவற்றையும் விட, அந்த மக்களின் இழப்புகளும் சோதனைகளும் பரவலாக அறியப்படும் போது, அது ஆரோக்கியமான நிலைமை அன்று என்பதை, நாம் புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும்.
பௌத்தர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மியான்மாரில், றோகிஞ்சா மக்கள், சுமார் 1.1 மில்லியன் பேர் இருப்பர் என்று கணிக்கப்படுகிறது. அந்த நாட்டால், பிரஜாவுரிமை பறிக்கப்பட்டு, நாடற்றவர்களாக மாற்றப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தொடர்பான உத்தியோகபூர்வமான தரவுகளைப் பெறுவது, கடினமாகவே காணப்படுகிறது.
இவ்வாறுள்ள சிறுபான்மையினமான றோகிஞ்சா முஸ்லிம்கள், ராக்கைன் மாநிலத்தில் பெரும்பான்மையாக வாழுகின்றனர். இந்த மாநிலம் தான், மியான்மாரில் காணப்படும் பிரச்சினைகளின் மையப்பகுதியாகக் காணப்படுகிறது. ஏற்கெனவே பல தடவைகள், பல ஆண்டுகளாக இம்மக்கள் அழிவுகளைச் சந்தித்திருந்தாலும், அண்மையில் சந்தித்துவரும் அழிவுகள் தான், ஒப்பீட்டளவில் அதிக கவனத்தை ஈர்த்திருக்கின்றன என்பதை குறிப்பிட்டுக் காட்ட வேண்டிய தேவையில்லை.
இவ்வாண்டு ஓகஸ்ட் 25ஆம் திகதி, ஒரு மாதத்துக்கும் முன்னர், இடம்பெற்ற சம்பவங்கள் தான், அண்மைக்கால அழிவுகளை ஏற்படுத்தின. றோகிஞ்சா இன முஸ்லிம்களில் காணப்படும் ஆயுதக்குழுவொன்று, பாதுகாப்புப் படையினர், பொலிஸார் ஆகியோரின் பாதுகாப்புச் சாவடிகள் மீது, ஒருங்கிணைந்த தாக்குதல்களை நடத்தி, சில உயிரிழப்புகளை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து தான், ஆயுததாரிகளைத் தேடியழிக்கிறோம் என்ற போர்வையில், இராணுவ நடவடிக்கையொன்றை ஆரம்பித்த மியான்மார் இராணுவம், அப்பாவிகளைக் கொல்வதோடு, வீடுகளையும் எரிப்பதாக, சர்வதேச ஊடகங்களாலும் மனித உரிமைகள் ஆர்வலர்களாலும் குற்றஞ்சாட்டப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு, போதுமான ஆதாரங்களும் இருக்கின்றன என்றே கருதப்படுகிறது. இதில், இராணுவத்தினர் மாத்திரமன்றி, கடும்போக்கு பௌத்த சிவிலியன்களும் ஈடுபடுகின்றனர் என்று அறிவிக்கப்படுகிறது. இதன் விளைவாகத் தான், றோகிஞ்சா மக்கள் வாழும் ராக்கைன் மாநிலத்திலிருந்து, 410,000க்கும் மேற்பட்ட மக்கள், பங்களாதேஷுக்குத் தப்பிச் சென்றுள்ளனர். அவ்வளவு பேரையும் எப்படிச் சமாளிப்பது என்று, பங்களாதேஷ் தடுமாறிக் கொண்டிருக்கிறது. அங்கு, பசியும் பட்டினியும் தாண்டவமாடிக் கொண்டிருக்கிறது.
மறுபக்கமாக, மியான்மாரின் ராக்கைனில், இன்னமும் தங்கியுள்ள றோகிஞ்சா முஸ்லிம்களின் பாதுகாப்புத் தொடர்பில், தொடர்ந்தும் அச்சம் வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த விடயங்களில் அதிக கவனம் பெற்றுள்ள சில விடயங்களில் முக்கியமானதாக, மியான்மாரின் அரச தலைவி ஆங் சாங் சூ கியின் மௌனம் மாறியிருக்கிறது. ஜனநாயகம் என்ற பெயருக்கு உயிர்கொடுப்பவர் போன்று, மேற்கத்தேய நாடுகளின் செல்லப்பிள்ளையாக இருந்தவர் இவர். தனது நாட்டின் இராணுவ ஆட்சிக்கெதிராகப் போராடினார் என, சிறைவாசம் அனுபவித்து, பின்னர் சமாதானத்துக்கான நொபெல் பரிசை வென்ற இவர், மியான்மாரின் எதிர்காலத்துக்கான முக்கியமான ஒளிக்கீற்றாகக் கருதப்பட்டார்.
அவர், தேர்தலில் போட்டியிடும் போதே, பெரும்பான்மையின பௌத்தர்களுக்கு ஆதரவாகச் செயற்படுகிறார், றோகிஞ்சா மக்களின் பிரச்சினைகள் குறித்துக் குரலெழுப்புகிறார் இல்லை என்ற குற்றச்சாட்டுகள் காணப்பட்டன. ஆனால், றோகிஞ்சா மக்களின் பிரச்சினைகள், அப்போது பெருமளவுக்குப் பேசுபொருளாக இருந்திருக்கவில்லையென்ற நிலையில், சர்வதேச ஊடகங்களில், அது கவனம் பெற்றிருக்கவில்லை.
ஆனால், தற்போது, பிரதான பேசுபொருளாக, இம்மக்களின் பிரச்சினைகள் மாறியுள்ள நிலையில், இம்மக்களின் அவலங்களின் போது அமைதியாக இருக்கிறார் என்ற குற்றச்சாட்டு, அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, மனித உரிமைகளுக்கான போராளியாகக் கருதப்பட்ட அவர், தனது நாட்டு இராணுவத்தால், தனது நாட்டு மக்களுக்கே அநியாயம் இழைக்கப்படும் போது, அமைதியாக இருக்கிறார் என்றால், அதை இரட்டை முகமென்றன்றி, வேறு எவ்வாறு அழைக்க முடியும்? நீண்ட அமைதிக்குப் பிறகு, இப்பிரச்சினை தொடர்பாக நேற்று முன்தினம் (19), தனது நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர், “அனைத்து மனித உரிமைகள் மீறல்களையும் கண்டிக்கிறேன்” என்று, மேலோட்டமான கருத்தையே வெளிப்படுத்தினார். றோகிஞ்சா இனத்தவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என, அந்த இன மக்களின் பெயர்களை வெளிப்படுத்தக்கூட, அவர் மறுத்திருந்தார். இதை விட, “இவ்வளவு அதிகமான மக்கள், ஏன் வெளியேறுகிறார்கள் என்பதைக் கண்டறிய வேண்டும்” என, எதுவுமே தெரியாதவர் போன்று கூறியிருந்தார். நாட்டின் தலைவியாக, தனது நாட்டிலுள்ள ஒரு மாநிலத்தைச் சேர்ந்தவர்களில் சுமார் 40 சதவீதத்தினர், நாட்டை விட்டு ஏன் வெளியேறுகின்றனர் எனத் தெரியாத நிலையில் அவர் இருக்கிறார் என்பதை, நம்பத்தான் வேண்டுமா? தங்களின் தேர்தல் வெற்றிகளுக்காகவும், பெரும்பான்மையினரின் ஆதரவை இழக்கக்கூடாது என்பதற்காகவும், அநியாயங்களைக் கண்டும் காணாமல் இருப்பவர்களை, இனிமேலும் மதிப்புக்குரியவர்கள் என்று எண்ணிக் கொண்டிருப்பது, எந்தளவுக்குப் பொருத்தமானது? இவரின் செயற்பாடுகள் இவ்வாறிருக்க, இந்தியாவிலும் இலங்கையிலும், புதியவிதமான வெறுப்பு உமிழ்தலைக் காணக்கூடியதாக இருக்கிறது.
சில நாட்களுக்கு முன்னர், கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது. மிகப்பெரிய பதாதையொன்றை அவர்கள் ஏந்தியிருந்தனர். “மியான்மாரின் பெளத்தர்களே, அனைத்து இலங்கையர்களும் உங்களுடன் இருக்கின்றனர். அனைத்து முஸ்லிம்களும் பயங்கரவாதிகள் அல்லர்; ஆனால், அநேகமான பயங்கரவாதிகள், முஸ்லிம்கள்” என்று, அந்தப் பதாதை தெரிவித்தது.
அனைத்து இலங்கையர்கள் சார்பாகவும் பேசுவதற்கும் குரலெழுப்புவதற்கும், அதில் கலந்துகொண்ட சுமார் 50 பேருக்கு யார் உரிமை கொடுத்தார் என்ற கேள்வி ஒருபுறமிருக்க, ஓர் இன மக்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது, அவர்களுக்காகக் குரல் கொடுக்காமல், ஒடுக்குபவர்களுக்குக் குரல் கொடுப்பதை, எவ்வாறு அழைப்பது?
இந்த ஆர்ப்பாட்டத்தில், ஏராளமான பௌத்த பிக்குகளையும் காண முடிந்தது.
மியான்மாரில் காணப்படும், இனவாத, கடும்போக்குவாத பௌத்த குழுவான, அஷின் விராது தலைமையிலான 969 என்ற குழுவுக்கும், இலங்கையின் இனவாத, கடும்போக்குவாத பௌத்த குழுவான பொது பல சேனாவுக்கும் இடையில் தொடர்புகள் காணப்படுகின்றன என்பதை, இவ்விடத்தில் ஞாபகப்படுத்த வேண்டியிருக்கிறது. வழக்கமாக, முஸ்லிம்களின் அல்லது இஸ்லாமின் பெயரால், பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்படும் போது, “மிதவாதப் போக்குடைய முஸ்லிம்கள் இருந்தால், இந்தத் தாக்குதலை அவர்கள் ஏன் கண்டிக்கவில்லை?” என்ற கேள்வி, பரவலாக எழுப்பப்படும். அதே கேள்வி, இந்த நாட்டின் பௌத்தர்களிடம் கேட்கப்பட்டால்? பௌத்தர்கள் சிலர் கண்டித்திருந்தார்கள் என்பதை மறுக்க முடியாது, ஆனால், பிரபலமான அல்லது அதிகாரத்தில் காணப்படுகின்ற எவருமே, இதற்கெதிரான கண்டனத்தை வெளியிட்டிருக்கவில்லை என்பதை மறுக்க முடியாது.
அதேபோன்று, அளவுக்கதிகமான றோகிஞ்சா அகதிகளை, இலங்கை அனுமதிக்கப் போகிறது என, சமூக ஊடகத் தளங்களில், பரவலாகப் பகிரப்பட்டு வருவதையும் காண முடிகிறது. அந்தச் செய்தியில் உண்மையில்லை என்பது ஒருபக்கமிருக்க, உண்மையிலேயே அது நடந்தாலும் கூட, அதில் என்ன தவறு இருக்க முடியும்? மியான்மாரில், பௌத்தர்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருந்தால், அவர்களை நாட்டுக்குள் அனுமதிக்க வேண்டுமென, இதே பௌத்த அமைப்புகள் கோராதா? அப்படியாயின், பௌத்த உயிரை விட, இஸ்லாமிய உயிருக்கான பெறுமதி குறைவானது என, இவர்கள் எண்ணுகிறார்களா?
இந்தியாவிலும், இதே நிலையைத் தான் காணமுடிகிறது. நரேந்திர மோடி தலைமையிலான, இந்துத்துவா கொள்கைகளைப் பின்பற்றும் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில், சிறுபான்மையினர் ஒடுக்கப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு, ஏற்கெனவே காணப்படுகிறது. இதற்கு மத்தியில், இந்தியாவில் காணப்படும் றோகிஞ்சா முஸ்லிம்களால், தமது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனவும் அவர்களை வெளியேற்றப் போவதாகவும், இந்திய அரசாங்கம், உச்சநீதிமன்றத்துக்கு அறிவித்திருக்கிறது.
றோகிஞ்சா அகதிகளில் ஒரு சிலர், பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் என்று வைத்துக் கொண்டாலும் கூட, அந்தக் குற்றத்துக்காக, தமது நாட்டில் ஒடுக்குமுறையிலிருந்து தப்பியோடி வந்திருக்கும் மக்கள் அனைவரையும், அதற்காக நாட்டிலிருந்து வெளியேற்றுவது, எந்தளவுக்கு நியாயமானது?
காஷ்மிரின் முன்னாள் முதலமைச்சர் கேட்டதைப் போன்று, பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி, தமிழீழ விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட பின்னர், இலங்கைத் தமிழர்கள் அனைவரையுமே, இந்தியா வெளியேற்றியதா?
உலகில், மிகவும் சாந்தமான மதங்களாகக் கருதப்படும் இந்து, பௌத்தம் ஆகிய மதங்களை, பெரும்பான்மையாகக் கொண்ட இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில், றோகிஞ்சா முஸ்லிம்களுக்கெதிரான இவ்வாறான எதிர்ப்பென்பது, உலகம் முழுவதிலும் காணப்படும் முஸ்லிம்கள் மீதான எதிர்ப்புக்குச் சான்றாக அமைந்துள்ளது.
ஆனால், ஓர் இனத்தை அப்படியே வெறுப்பதென்பது, அந்த இனத்தை அடையாளங்காட்டுவதை விட, வெறுப்பவர்களின் இனக் குழுமத்தையே அதிகமாக அடையாளங்காட்டுகிறது என்பதை, அவர்கள் புரிந்து கொள்கிறார்களா என்பது தான், தற்போதிருக்கும் பிரச்சினையாக இருக்கிறது.