நுணலும் தன் வாயால் கெடும் என்பதற்கு அண்மைய நேரடி உதாரணம் வடக்கு மாகாண சபை முதல்வர் சாட்சாத் விக்னேஸ்வரன் என்பதை காணொளியில் கண்டேன். கடந்த காலங்களில் வடக்கு மாகாண சபையில் நடந்த நிர்வாக சீர்கேடுகளை பட்டியலிட்டு எதிர்கட்சி தலைவர் சபையில் கேள்வி எழுப்பி இருந்தார். அவர் குறிப்பிட்ட இருபது விடயங்கள் பற்றி பதில் சொல்லும் கடமை முதல்வருக்கு உரியது.ஆனால் முதல்வர் அதுபற்றிய விபரத்தை கொடுக்கும் முன்பாக எதிர்கட்சி தலைவரை தரக்குறைவாக விமர்சிக்கும் உரையைத் தான் முதலில் நிகழ்த்தினார். பத்திரிகைகளில் விளம்பரம் தேடுகிறார். சபை முதல்வரின் சாதுரியத்தால் தான் இன்றுவரை எதிர்கட்சி தலைவராக நீடிக்கிறார். அவர் கட்சியில் இருந்து துரத்தப்படலாம் என்ற பயத்தில் பல கட்சிகளுக்கு தன்னை பிரபல்ய படுத்துகிறார் என்று பலவாறு பேசினார்.
கடைந்தெடுத்த கடைநிலை கீழ்த்தர அரசியல் வாதி போல தரம் தாழ்ந்து பேசிய முதல்வர் செயல் அவருக்கு வாக்களித்த அத்தனை வாக்காளரையும் தலைகுனிய வைத்திருக்கும். நீண்ட நெடிய போராட்டம் தந்த வலிகள் தீர ஏதோ வகையில் ஓரளவு தீரவாவது தரும் என்ற மனநிலையில் தான் அவர்கள் மாகாண சபை தேர்தலில் வாக்களித்து எந்த வகையிலும் போராட்டத்திற்கு பங்களிப்பு செய்யாத அன்னியரான இவரை முதல்வர் ஆக்கினர்.
அவருக்கு இருந்த ஒரே தகுதி நீதித்துறையில் அனுபவம் உள்ளவர் அதனால் சட்டப்படி மாகாண அதிகாரங்களை பெற்றுத்தருவார் என்பதே. அவருக்கு இருந்த ஆங்கில அறிவும் தென்னிலங்கை தொடர்பும் கூட மாவை சேனாதிராசா அவர்களை முதல்வர் போட்டியில் இருந்து விலகசெய்ய சம்மந்தர் கையில் எடுத்த ஆயுதமாகவும் இருந்தது. பலவிதமான எதிர்பார்க்கைகளுடன் அழைத்து வரப்பட்டதால் மக்களும் வாக்குகளை விரும்பி அழித்தனர்.
பின்பு நடந்தவை எல்லாம் இலவுகாத்த கிளிகளின் நிலை போலானது. அதுபற்றிய பின்னோக்கிய பார்வைக்காக சபையில் பிரேரணை கொண்டுவரப்பட்டு எதிர்கட்சி தலைவர் இருபது விடயங்களை சபையில் தெரிவித்து அதற்க்கான விளக்கத்தை கேட்டிருந்தார். அதுபற்றிய நேர்மையான பதிலை கொடுக்கும் நிலையில் முதல்வர் இருக்கவில்லை என்பது அவர் தனது உரையை ஆரம்பிக்கும் போதே தெரிந்து விட்டது.
கேள்விக்கு பதில் கூறாது எதிர்கட்சி தலைவர்பற்றி கேலி பேசுவதும் அவரை கிண்டல் செய்வதும் சீண்டுவதுமாகவே அவரது பேச்சு அமைந்தது. பொறுமை இழந்த எதிர்கட்சி தலைவர் சீறிய சீற்றம் பேரவை தவிசாளர் தலையிடும் நிலைக்கு தள்ளியது. இங்கு பேரவை தவிசாளர் நடுநிலையாளரா என்ற கேள்வி எனக்கு எழுகிறது. காரணம் தனிநபர் விமர்சனம் மற்றும் கட்சி பற்றிய விமர்சனம் உறுப்பினரின் சிறப்புரிமையை மீறும் செயல் என்பது சபை தவிசாளருக்கு தெரியாதா?
முதல்வர் அவ்வாறு விமர்சித்து பேசும்போதே சபை தவிசாளர் முதல்வருக்கு அதை அறிவுறுத்தி இருக்கவேண்டும். அவர் அதை செய்யவில்லை. சக்களத்தி சண்டை தொடங்கட்டும் என காத்திருக்கும் கையாலாகாத கணவன் போல் அவர் கப்சிப் என்று சிறிது நேரம் இருந்துவிட்டு எதிர்கட்சி தலைவர் எழுந்து எதிர்குரல் எழுப்பிய போதும் தன்னிலை தவறி முதல்வர் பேசட்டும் பின் நீங்கள் பதில் கூற நேரம் கொடுக்கப்படும் என குழாயடி பெண்டுகள் சண்டையை ரசிக்கும் பேட்டைகாரன் போல் இருந்தார்.
மதம்கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா என நம்பியார் கேட்க அது சினம் கொண்ட சிங்கத்தை கண்டால் ஓடும் என்ற எம் ஜி ஆர் பேசிய சினிமா வசனம் என் நினைவில் வந்தது. முதல்வர் மதம் கொண்ட யானை போல் திமிற சினம் கொண்ட சிங்கமாக மாறினார் எதிர்கட்சி தலைவர். முடிவு முதல்வர் சுதாகரித்து கொண்டு குற்றசாட்டுக்களுக்கு தனது எழுதிவைத்த பதிலை கூற முற்பட்டார். அதில் முக்கால் வாசிப் பதில்கள் நோன்டிச்சாக்காகவே அமைந்தது. இயன்றவரை முழுப்பூசணியை சோற்றில் மறைக்கும் முயற்சியே அவை.
எதிர்கட்சி தலைவர் கூறியது போல வட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் துட்டுக்கு இரண்டு கொட்டை பாக்கு என்பது போன்ற பதில்களே கூறப்பட்டன. மக்களின் வரிப்பணத்தில் தனது வசதிவாய்ப்புக்களை முழுமையாக பெற்றவரால் மக்களின் நலனுக்கு என ஒதுக்கப்பட்ட பணம் சீரான முறையில் செலவிடப்பட்டாதா என்ற கேள்விக்கே விடையளிக்க முடியாதவர், நிர்வாக சீர்கேடு பற்றி கிஞ்சித்தும் கவலை கொள்ளாதவர், கமிசன் அறிக்கைகளை உதாசீனம் செய்பவர் தான் வடக்கு முதல்வர்.
தேர்தலில் தான் வாக்குப்பெற வல்வெட்டிதுறையில் பிரபாகரனை மாவீரன் என்றவர் அண்மையில் இன்றைய இளையவர் பிரபாகரனை பின்பற்ற மாட்டார்கள் என்றார். சுன்னாகம் நீர் பிரச்சனையில் மாறுபட்ட நிலை, பொருளாதார மையம் எங்கு அமைவது என்பதில் குழப்பம், அமைச்சர்கள் மீதான விசாரணையில் அசமந்தம், அமைச்சர் சத்தியலிங்கத்துக்கு பறித்த குழியில் தனது அன்பர் ஐங்கரநேசன் மாட்டியும் சத்தியலிங்கமும் விலகவேண்டும் என்ற முதல்வரின் உடும்பு பிடி என அவர் பார்த்த நீதி துறையே தலைகுனியும் படியான பக்கசார்பான செயல்பாடுகள் அவரின் மீது நம்பிக்கை வைத்து அவரை கூட்டி வந்த சம்மந்தரை நிச்சயம் தலை குனியவைக்கும். இவர்பற்றி அன்றே கம்பவாருதி ஆரூடம் கூறிவிட்டார். சுமந்திரன் நேரடியாக முரண்பட்டுவிட்டார். மாவை முகம் பார்த்து பேசுவதையே தவிர்க்கிறார். எதிர்கட்சி தலைவர் விரல் நீட்டி உங்கள் கட்சி என்ன என கேட்க்கும் நிலைக்கும் முதல்வர் தரம் தாழ்ந்து விட்டார். என் கேள்வி ஒன்றே ஒன்றுதான்….
முரண்பாடே உன் மொத்த உருவம் தான் வடக்கு முதல்வரா?
– ராம் –