அப்படிப்பட்ட நிலையில், 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலோடு, ராஜபக்ஷர்களின் மீள் வருகையின் போது, வடக்கு ஆளுநராக பி.எஸ்.எம். சார்ள்ஸ் நியமிக்கப்பட்டார். அந்த நியமனம், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பரிந்துரையின் பேரில் நிகழ்ந்ததாகச் சொல்லப்பட்டது.
ராஜபக்ஷர்கள் மீண்டும் அதிகாரத்துக்கு வந்ததும், இராணுவம் உள்ளிட்ட படைத்துறை அதிகாரிகளைக் கொண்டு, வடக்கு, கிழக்கை ஆக்கிரமிக்கிறார்கள் என்கிற விமர்சனங்கள் எழுவதைத் தடுக்கும் நோக்கில், வடக்கு ஆளுநராக பி.எஸ்.எம்.சார்ள்ஸும், கிழக்கு ஆளுநராக அநுராதா யகம்பத்தும் நியமிக்கப்பட்டார்கள்.
மாகாண சபைகளின் பதவிக்காலம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், மாகாணங்களில் நிர்வாக நடவடிக்கைகள் அனைத்தும், ஆளுநர் ஊடாக மத்திய அரசால் முன்னெடுக்கப்படுகின்றன.
ஏற்கெனவே, வடக்கு, கிழக்கை நோக்கி, பௌத்த சின்னங்களை தேடுகிறோம் என்கிற பெயரில், ஜனாதிபதியின் கீழான செயலணிகள், தமிழரின் பாரம்பரிய நிலங்களை ஆக்கிரமித்து வருகின்றன. அதன் போக்கிலும், வடக்கு மாகாணத்தின் புதிய செயலாளராக சமன் பந்துலசேனவின் நியமனத்தையும் கொள்ள வேண்டியிருக்கின்றது. அதுபோல, இந்த நியமனத்துக்கு இன்னொரு வடிவமும் உண்டு.
ராஜபக்ஷர்கள் மீதான அதிருப்தி, தென் இலங்கையில் வரலாறு காணாத அளவில் அதிகரித்திருக்கின்ற நிலையில், அதை அவர்கள் கடப்பதற்கான வழக்கமான யுக்திகளைக் கையாண்டு வருகிறார்கள். அதாவது, தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் ஊடாக, பௌத்த சிங்களவர்களின் பாதுகாவலர்கள் தாங்கள்தான்; எனவே, தங்களை விட்டால் தென் இலங்கையர்களுக்கு யாரும் இல்லை என்கிற விடயத்தை, மீண்டும் முன்வைக்கிறார்கள். அதன் போக்கிலும், வடக்கு மாகாணத்தின் செயலாளர் நியமனத்தைக் கொள்ள முடியும்.
ஏனெனில், தமிழ் சரளமாக அறியாத ஒருவரை, வடக்கு மாகாணத்தின் செயலாளராக நியமிக்கும் போது, அதைத் தமிழ்த் தலைவர்களும் கட்சிகளும் எதிர்க்கும். அதை ஊடகங்களினூடாகத் தென்இலங்கையில் பிரசாரப்படுத்தி, தங்கள் மீதான உண்மையான அதிருப்தியை, இனவாத அடையாளங்கள் ஊடாகக் கடக்க நினைப்பதாகக் கொள்ளலாம்.
‘வடக்கு மாகாணத்தின் மக்கள் தொகையில் 95 சதவீதமானவர்கள் தமிழ் பேசுபவர்கள். அங்கிருந்து தெரிவாகியிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் 10 பேரும், தமிழ் பேசுபவர்கள். அப்படியான நிலையில், தமிழ்மொழியை சரளமாகப் பேசக்கூடிய ஒருவர், வடக்கு மாகாணத்தின் செயலாளராக நியமிக்கப்பட வேண்டும்..’ என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எழுதி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அதுபோல, வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்டவர்களும், சமன் பந்துலசேனவின் நியமனத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியிருக்கிறார்கள். ஆனால், இந்த எதிர்ப்புகளையெல்லாம் மீறி, திங்கட்கிழமை (26) சமன் பந்துலசேன, வடக்கின் புதிய செயலாளராக பதவியேற்றுவிட்டார்.
நாட்டின் பொருளாதாரம், மீட்கப்பட முடியாத வீழ்ச்சியைச் சந்தித்து நிற்கின்றது. ராஜபக்ஷர்களின் வருகை, நாட்டை ‘திவால்’ நிலைக்கு இட்டுச் சென்றுவிட்டதான நிலையை, தென் இலங்கை மக்களேகூட உணரத் தொடங்கிவிட்டார்கள். பஷில் ராஜபக்ஷ நிதி அமைச்சராகப் பொறுப்பேற்பதன் ஊடாக, நாட்டின் பொருளாதாரத்தைக் காப்பாற்றிவிடுவார் என்று, ராஜபக்ஷர்களுக்கு ஆதரவான தென் இலங்கை ஊடகங்கள், நாளொரு வண்ணமாகப் புளுகிக் கொண்டிருந்தன.
ஆனால், அவரின் பொருளாதாரத் திட்டங்கள், முன்வைப்புகள் குறித்து, அவர் பதவியேற்ற கடந்த இரண்டு வாரங்களில், மெச்சக்கூடிய அளவுக்கு எதுவும் நிகழ்ந்துவிடவில்லை.
மாறாக, ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற முழக்கத்தை, தேர்தல் மேடைகளில் முழங்கிய ராஜபக்ஷர்கள், இன்றைக்கு சமையல் எரிவாயுவின் விலையை மாவட்ட ரீதியாக வகைப்படுத்தி வெளியிட்டிருக்கிறார்கள்.
கொழும்பில் இருப்பவர்கள் ஒப்பீட்டளவில் குறைந்த விலையிலும், யாழ்ப்பாணத்தில் இருப்பவர்கள் அதிக விலையிலும் சமையல் எரிவாயுவைப் பெறும் நிலையை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
சமையல் எரிவாயு விநியோக நடவடிக்கைகளின் செலவுகளை முன்னிறுத்தி, இந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதாகச் சொல்லப்பட்டாலும், ஒரு பொருளின் விற்பனை விலை என்பது, நாட்டிலுள்ள அனைவருக்கும் பொதுவான ஒன்றாக இருக்க வேண்டும்.
இதை ஓர் ஒழுங்காக, உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனங்களுக்கான விதிகளில் அரசாங்கம் பேண வேண்டும். அதன்மூலமே நுகர்வோரின் உரிமையைப் பாதுகாக்க முடியும். இன்றைக்கு சமையல் எரிவாயுவின் விலையை, விநியோகத்துக்கான தூரத்தைக் கணக்கிட்டு நிர்ணயிக்கும் போது, ஏனைய உற்பத்தியாளர்களும் விநியோகஸ்தர்களும் மற்றைய அத்தியாவசியப் பொருட்களுக்கான விலைகளையும் பிரதேசவாரியாக உயர்த்திக் கொள்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திவிடும். அது, கொழும்பிலிருந்து தூரவுள்ள பிரதேச மக்களின் மீதான சுமையாக மாறும்.
நாட்டின் பொருளாதார அடிப்படை என்ன, அதை எவ்வாறு காப்பாற்றிக் கொள்ளலாம் என்கிற விடயங்கள் குறித்து, தூரநோக்குள்ள பார்வைகள் அற்றவர்களின் கைகளில், நாட்டின் நிதித்துறையும் திறைசேரியும் சென்றால், என்னவெல்லாம் நடக்கும் என்பதற்கு, இலங்கை நல்லதோர் உதாரணம்.
ராஜபக்ஷர்களின் முதலாம் ஆட்சிக்காலத்தில், நாட்டின் பொருளாதாரம் என்பது, வெளிநாட்டுக் கடன்களில் தங்கியிருக்க முடியும் என்கிற நிலை உருவாக்கப்பட்டது. கிடைக்கின்ற அனைத்து இடங்களிலும் கடன்கள் வாங்கிக் குவிக்கப்பட்டன.
வாங்கிய கடன்களை எப்படி மீளச் செலுத்துவது, குறைந்தது அந்தக் கடன்களுக்கான வட்டிகளையாவது எப்படிச் செலுத்துவது என்கிற அடிப்படை குறித்து, எந்தச் சிந்தனையும் வெளிப்படுத்தப்படவில்லை. அதன் விளைவுகளை, ஒரு சில ஆண்டுகளுக்குள்ளேயே நாடு சந்தித்து நின்றது.
மீண்டும் ஆட்சிக்கு வந்த போதும், ராஜபக்ஷர்கள் கடன்களைக் பெற்றுக் கொண்டு, ஆட்சி நடத்திவிட முடியும் என்று நம்பினார்கள். ஆனால், அவர்கள் எதிர்பார்த்த அளவுக்கான கடன்களைப் பெற முடியவில்லை. ஏன், அவர்களின் நெருங்கிய சகாவான சீனாவும் கூட, இம்முறை பெரியளவிலான கடன்களை வழங்குவதைத் தவிர்த்துவிட்டது. மாறாக, கடந்த காலத்தில் வழங்கிய கடன்களைக் காட்டிக் கொண்டு, தங்களின் திட்டங்களை இலங்கையில் நிறைவேற்றத் தொடங்கியிருக்கிறார்கள்.
சீனாவின் கடன்களுக்கான வட்டிகளை செலுத்துவது கூட, இன்றைக்கு இலங்கையால் முடியாத காரியம். அப்படியான நிலையில், புதிய கடன்களை இலங்கைக்கு வழங்கும் தேவை ஏதும் சீனாவுக்கு இல்லை.
அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி, பயங்கர வீழ்ச்சியில் இருக்கின்றது. மத்திய வங்கியூடாக நடைமுறைக்கு மாறாக, தற்போது ரூபாயின் வீழ்ச்சியைத் தடுத்து வைத்திருந்தாலும், நாட்டில் வங்கிகளுக்கு வெளியிலான டொலர் பரிமாற்றங்களின் போது, ஒரு டொலருக்காக 220 ரூபாய் கொடுக்கப்படும் நிலை காணப்படுகின்றது.
அரசாங்கத்தின் இவ்வாறான பின்னடைவுகளையும் அதிருப்தியையும், சமாளிப்பதற்கு வடக்கில் தமிழ் அறியாத ஒருவரை செயலாளராக நியமித்து, அதன்மூலம் எழும் எதிர்வினைகளை, கவனக் கலைப்பானாக தென் இலங்கையில் காட்ட ராஜபக்ஷர்கள் முயற்சிக்கிறார்கள்.
அதுபோல, பல விடயங்களை தமிழ், முஸ்லிம் மக்களை நோக்கி இன்னும் நிகழ்த்துவார்கள். அவ்வாறான கட்டங்களில் ஜனநாயக ரீதியாக விடயங்களை எதிர்கொண்டு, தென் இலங்கை மக்களிடம் விடயங்களை விளக்கி, ராஜபக்ஷர்களின் சதித் திட்டங்களை முறியடிக்க வேண்டியது முக்கியமானது.
அதற்கு, எதிர்க்கட்சிகள், சிவில் அமைப்புகள் உள்ளிட்ட தரப்புகளின் கூட்டு முயற்சி முக்கியமானது. ஆனால், அவ்வாறானதொரு நிலையொன்று, இன்னமும் தோன்றியிருக்கவில்லை என்பதுவும் ராஜபக்ஷர்களுக்கான சாதகமான அம்சம் ஆகும்.