எது எதுக்கெல்லாமோ முன்னுதாரணமாகத் திகழும் என்று எதிர்பார்க்கப்பட்ட வடக்கு மாகாண சபை கடைசியில் சபையின் அமைச்சரைப் பதவி விலக்க முதலமைச்சருக்கு அதிகாரம் இருக்கிறதா இல்லையா என்கிற சட்டக் கேள்விக்குப் பதில் தேடித் தருவதுடன் தனது ஆட்சியை நிறைவு செய்யப்போகின்றது.
இதை நினைத்துத் தமிழர்கள் பெருமைப்படுவதா? அழுவதா?
இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் அரசமைப்பில் ஏற்படுத்தப்பட்ட 13ஆவது திருத்தத்தின் மூலமே மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன.
தொடக்கம் முதலே தமிழர் தரப்பு இதனை நிராகரித்தது. தமிழர்கள் கேட்கும் தீர்வுக்கான அடிப்படையாகக்கூட இது இருக்கமுடியாது என்று எதிர்க் கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார்.
மாகாண சபை தமிழர்களுக்குத் தீர்வாக முடியாத ஒன்று என்பதை உலக சமூகத்திற்கு நிரூபிப்பதற்காகத்தான் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைத் தேர்தல்களில் போட்டியிடுகின்றோம் என்றுகூடத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் தேர்தல் காலங்களில் விளக்கம் அளித்ததை மறந்துவிட முடியாது.
ஓய்வு பெற்ற நீதியரசர் ஒருவரை வடக்கு மாகாண முதலமைச்சராக்கியபோது இந்தச் சபையொரு செல்லாக்காசு என்பதை அவர் அணுவணுவாக உலகத்துக்கு எடுத்துக்காட்டுவார் என்றெல்லாம் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
நடந்ததோ அதற்கு மாறானது. அவர் ஒரு ஓய்வுபெற்ற நீதியரசராக வேறு இருந்த தனால் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை எல்லாம் அக்குவேறு ஆணிவேறாகப் பிய்த்து உதறுவார் என்றெல்லாமும்கூட எதிர்பார்ப்பு இருந்தது.
பாவம் தமிழ் மக்கள்! அவர்கள் எதிர்பார்த்தது எதுவும் அவர்களுக்கு நடப்பதில்லை என்பதே அவர்களின் வரலாறு. வடக்கு மாகாண சபையின் நிலையும் அதுதான்.
தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்கு மாகாண சபை ஒரு தீர்வாக முடியாது என்பதை உலகுக்கு நிரூபித்ததோ இல்லையோ ஆட்சி அதிகாரத்தைத் தமிழர்களின் கையில் கொடுப்பது குரங்கின் கைப் பூமாலை என்பதை நிரூபிக்கப்பட்டுவிட்டது.
இன்னும் இன்னும் அதிகாரங்களைக் கொழும்பிடம் இருந்து பறித்தெடுப்பார்கள், சட்ட ரீதியாக வீரப் போராட்டம் நடத்துவார்கள் என்று வடக்கு மாகாண சபையைத் தமிழ் மக்கள் அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்க அவர்களோ ஒரே கட்சியின் முதலமைச்சர் அதே கட்சியைச் சேர்ந்தவர்களை அமைச்சராக நியமிக்கவும் நீக்கவும் அதிகாரம் படைத்தவரா இல்லையா என்று ஒவ்வொரு நீதிமன்றமாகச் சட்டப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரன் விடயத்தில்தான் இந்தச் சட்டப் போராட்டம் மும்முர மாகியிருக்கிறது. அமைச்சர் டெனீஸ்வரனை தன்னுடைய சொந்த விருப்பின் பேரில் பதவி விலக்கினார் முதலமைச்சர்.
அதற்கு அவருக்கு முழுமையான அதிகாரமும் வசதியும் இருந்த போதும் நெருக்கடி கொடுத்த பின்னர், டெனீஸ்வரனை அவரது கட்சி நீக்கியது என்று தெரிவித்து பதவி விலக்கினார்.
மற்றொரு அமைச்சரான பா.சத்தியலிங்கம் முதலமைச்சரின் நெருக்கடியை அடுத்துத் தானாகவே பதவி விலகினார். அவர்கள் இருவர் மீதும் மீண்டும் ஒரு ஊழல், மோசடி விசாரணைக் குழு விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்த முதலமைச்சர் பின்னர் சத்தியலிங்கம் பதவி விலகியதும் டெனீஸ்வரனைப் பதவி நீக்கிவிட்டு புதிய அமைச்சரவையை நியமித்தார்.
அத்துடன் ஊழல், விசாரணைக் குழு நியமனம் குறித்த கதையை அப்படியே கைவிட்டார். அண்மையில் ஒருநாள், அவர்களைப் பதவி விலக்குவதற்காகத்தான் அப்படிச் சொன்னேன் என்று மாகாண சபையில் பச்சையாக ஒப்புக்கொள்ளவும் செய்தார்.
அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியதை ஏற்க மறுத்த டெனீஸ்வரன் நீதிமன்றத்தை நாடினார். அவரைப் பதவி நீக்கியதில் சட்ட மீறல்கள் இருப்பதாகக்காட்டி அவரது அமைச்சுப் பதவியை மீளளிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. இப்போது அதனை எதிர்த்து உயர் நீதிமன்றம் சென்றிருக்கிறார் முதலமைச்சர்.
விரைவில் தீர்ப்பு வந்துவிட்டால் அமைச்சரை சொந்த ‘ஈகோ‘வுக்காகப் பதவி நீக்க முதலமைச்சர் ஒருவருக்கு அதிகாரம் இருக்கிறதா இல்லையா என்பது இந்த உலகத்துக்குத் தெரியவந்துவிடும்.
எப்படியிருந்தாலும் 30 ஆண்டுகளாக மற்ற எந்தவொரு மாகாண சபையினருக்கும் வந்திருக்காத இத்தகையதொரு சந்தேகத்தை உருவாக்கி அதற்குத் தீர்வும் காணும் வகையில் வடக்கு மாகாண சபை மற்றெல்லா மாகாண சபைகளுக்கும் ஒரு முன்னுதாரணம்தானே!
தமிழர்கள் தம் விதியை நொந்துகொண்டாலும் இந்தச் சாதனையை ஏற்றுத்தானாகவேண்டும்.
(உண்மையின் குரல்)