விக்கினேஸ்வரனின் மீது தனிப்பட்ட ரீதியில் எந்தப் பகையோ கோபமோ எனக்கில்லை. அவருடைய வாழ்க்கை ஒழுக்கம் பற்றியும் நான் தனிப்பட எத்தகைய விமர்சனங்களையும் முன்வைத்ததில்லை. அதற்கு அவசியமும் இல்லை.
பதிலாக அவர் ஒரு அரசியல்வாதியாக, அரசியல் தலைவராக, மாகாணசபையின் முதலமைச்சராக இருப்பதால், அவர் மீதான விமர்சனங்களும் கேள்விகளும் எழுப்பப்படுகின்றன. சில சந்தர்ப்பங்களில் அவரைப் பாராட்டியும் இருக்கிறேன். சரியானவற்றைச் செய்யும்போது எப்படிப் பாராட்டுகளையும் ஊக்கத்தையும் பெறுகிறாரோ அதைப்போலத் தவறானவற்றைச் செய்யும்போதும் செய்ய வேண்டியவைகளைச் செய்யாமல் விடும்போதும் கண்டனங்களையும் கேள்விகளையும் குற்றச்சாட்டுகளையும் விமர்சனங்களையும் எதிர்கொள்ள வேண்டும். பொதுவாழ்வுக்கு வரும் எவருக்கும் இத்தகைய ஒரு நிலை ஏற்படுவது இயல்பு. அதிலும் மக்கள் வழங்கிய அதிகாரத்தைத் தன்னுடைய கையில் வைத்துக் கொண்டு, மக்களுக்குரிய பணிகளைச் செய்யத் தவறும்போது அதைக்குறித்த கேள்விகளை எழுப்புவதும் விமர்சனங்களை முன்வைப்பதும் ஊடகவியலாளன் என்ற வகையில் தவிர்க்க முடியாதது. இவ்வாறு செய்வதைத் தவறு என்று எப்படிச் சொல்ல முடியும்? இதைச் செய்யாமல் விடுவதே தவறாகும். மக்களுக்கு விரோதமானதாகும்.
தவிர, தமிழ் மக்களின் போராட்ட வழியில் அரசியலுக்கும் அதிகாரத்துக்கும் வந்தவரல்லவிக்கினேஸ்வரன். படிமுறையான அரசியற் பங்களிப்புகளுக்கூடாக வளர்ச்சியடைந்தவருமல்ல. எதிர்பாராத விதமாக அரசியலுக்கு வந்தவர். அப்படித்தான் அதிகாரத்தில் அமர்ந்தவர். அதி்ர்ஷ்டலாபச் சீட்டின் வழியாகத் திடீர்ப் பணக்காரர் ஆகிறதைப்போன்றதே விக்கினேஸ்வரனின் இன்றைய பாத்திரம். அதனால்தான் அவருக்கு எளிய மக்களின் வாழ்க்கை நிலை புரியாமலுள்ளது. எளிய மக்களின் உணர்வுகளை விளங்கிக் கொள்ளக் கடினமாகவும் இருக்கிறது.
தன்னுடைய வாழ்க்கைக் காலத்திலோ தமிழ் மக்களுடைய அரசியல் போராட்ட வரலாற்றிலோ விக்கினேஸ்வரன் சம்மந்தப்பட்டவரல்ல. அவருடைய குடும்பத்தினர் கூட எத்தகைய பாத்திரத்தையும் பங்கையும் கொண்டவர்களுமல்ல. ஒரு மணி நேரம் கூட அவரோ அவருடைய குடும்பத்தினரோ பதுங்குகுழியில் இருந்த பதற்றமான அனுபவத்தைப் பெற்றதில்லை. இடம்பெயர்வு, நெருக்கடி வாழ்க்கை, உயிரிழப்பு, உடமை இழப்பு, அலைச்சல் நிறைந்த வாழ்க்கை, உடல் உறுப்பு இழப்பு, காயம், வலி, துயரம், உறவுகளைத் தேடியலையும் நிலை, அரசியல் கைதிகள் என்றெல்லாம் பிரச்சினைகளைச் சந்தித்த வாழ்க்கை எதையும் சந்தித்திருக்காதவர்கள். பொருளாதாரத் தடை, இராணுவ நடவடிக்கை, குண்டு வீச்சு என்ற அனுபவங்களின் நிறம் அறியாத குடும்பம். இதுபோலக் கட்சி, இயக்கம், அமைப்பு,வெகுமக்கள் போராட்டம் எதிலும் சம்மந்தப்படாத வாழ்க்கையோடிருந்தவர் விக்கினேஸ்வரன்.
ஆனால், சாதாரண மக்கள் அத்தனைபேரும் இந்த நெருக்கடி வாழ்க்கையை, பெருந்துயர் வாழ்க்கையை வாழ முடியாமல் வாழ்ந்தவர்கள். அழிந்து மீண்டவர்கள். இன்னும் மீள முடியாத அழிவிலிருந்து கொண்டு தவிப்பவர்கள். ஆகவே இவ்வாறு எந்தப் பாதிப்பிற்குள்ளும் சிக்குப்படாமல் வாழ்ந்த ஒருவருக்கு எதிர்பாராத வகையில் அரசியல் வாய்ப்பை மக்கள் ஏதோ ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் கொடுத்தார்கள் என்றால், அதற்கு விசுவாசமாக அவர் செயற்பட்டிருக்க வேணும். சும்மா பம்மாத்துக் கதைகளைச் சொல்லிக் காலத்தைக் கடத்திக் கொண்டிருக்க முடியாது.
தன்னைப்பற்றிய பிம்பங்களை உருவாக்குவதும் அவரைச் சுற்றியிருக்கும் “அடிப்பொடிகள்” உருவாக்கும் பிம்பத்தை விரும்பி ரசித்துக் கொண்டிருப்பதும் பொருத்தமற்றது. பதிலாக மக்களுக்கான பணியின் மூலம் சனங்களின் இதயத்தில் உருவாகும் மதிப்பான நிலையே மெய்யான மதிப்புத் தோற்றமாகும். அதையே அவர் உருவாக்க வேணும். அதுவே அவருக்குச் சிறப்பும் அழகுமாகும். அதுவே தலைமைத்துவப் பண்பு.
நான் ஏற்கனவே பல சந்தர்ப்பங்களிலும் சுட்டிக்காட்டியதைப்போல, மத்தியதர வர்க்கத்தினர் அல்லது மேல் மத்தியதர வர்க்கத்தினரின் அல்லது உயர் குழாத்தினரின் மனநிலைக்குச் சேவகம் செய்வதற்காக விக்கினேஸ்வரனுக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கும் மத்தியதர வாழ்க்கைக்குக் கீழே இருக்கின்ற மூன்றில் இரண்டு பங்கு மக்களுக்குமாகவே அவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்காகவே அவருக்கான பதவி.
விக்கினேஸ்வரனை ஒரு சாரார் கண்மூடித்தனமாக விசுவாசிக்கிறார்கள். ஆதரிக்கிறார்கள் என்பது உண்மையே. அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு யதார்த்தம் என்ன என்றே தெரியாது. மெய்யைக் கண்டடையும் பக்குவமோ தேர்ச்சியோ கிடையாது.வாழ்க்கை நெருக்கடிகளோ பாதிப்போ கிடையாது. அவர்களுக்கு எப்போதும் ஒரு எதிர்நிலைப் பண்பைக் கொண்ட சக்தி தேவை. முன்பு புலிகள் என்றால், இப்போது விக்கினேஸ்வரன். இவர்கள் இந்த சக்தியைக் கருவியாக்கிக் கொண்டு சிங்களத்தரப்புக்குச் சவால் விட்டுக்கொண்டிருப்பார்கள். இது இந்த வர்க்கத்தின் உளவியலாகும். இதனால் கால விரயமும் சக்தி விரயமும் வள இழப்பும் நிகழுமே தவிர, வேறு எந்த நன்மைகளும் நிகழாது.
ஆனால், விக்கினேஸ்வரன் பிரதிபலிப்பது மத்தியதரத்தினருடையதும் மேல் வர்க்கத்தினுடையதுமான இந்த உளநிலையையே. இவர்களே விக்கினேஸ்வரனுக்கான ஆதரவுச் சக்திகளுமாவர். இவர்களுடைய எண்ணம் எதுவும் என்றும் ஈடேறப்போவதில்லை. ஏனெனில் அதீத கற்பனா வாதத்தில் வேர் கொண்ட சிந்தனை அது.
ஆகவேதான் சாமானிய நிலை நின்று, காலத்திற் சொல்ல வேண்டிய விசயங்களைச் சொல்வதற்கு முயற்சிக்கிறேன். சனங்களோடு இணைந்து அவர்களுடைய கஸ்ர நட்டங்கயோடு கலந்து வாழ்ந்து கொண்டிருப்பவன் என்ற தகுதியே இந்த விமர்சனங்களுக்கும் நான் எழுப்புகின்ற கேள்விகளுக்குமான அடிப்படைத் தகுதியாகும்.
இது தனியே விக்கினேஸ்வரனுக்கு மட்டுமான பதில் அல்ல. அவரைப்போன்ற கொழும்பு மைய வாழ்க்கையைப் பேணிக் கொண்டு தமிழ்த்தேசிய – தனிநாட்டுக் கோரிக்கையை வலுப்படுத்த வேண்டும் என்று கூறிச் செயற்படும் அத்தனை பேருக்குமானதாகும். அதாவது இரட்டை முகத்துடையோருக்கானதாகும்.
(Sivarasa Karunagaran)