பூனை குட்டிகள் கூடைக்குள் இருந்து வெளியே வந்துவிட்டன. ஆளுனரை சந்தித்து எலி பிடிக்க முடியாத தங்கள் தந்தை மீது நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டுவந்து வளர்ப்பு தந்தைக்கு ஏற்பாடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளன. இந்த நிலை தனக்கும் முன்பு முதலமைச்சராக இருந்த வேளை வந்தது என கூறிய ஆளுநர் தந்தையின் மீதான குற்றசாட்டுகளை தரச்சொன்னார்.
கூரை ஏற தெரியாதவரை வானம் ஏறி வைகுண்டம் கூட்டி செல் என கூட்டிவந்தது கூட்டமைப்பு. முதல் கோணல் முற்றும் கோணல் என்பது போல மந்திரிசபை அமைப்பதில் கூட நடந்த இழுபறி சந்தி சிரித்தது. தனது தம்பிக்கு மந்திரி பதவி கேட்டார் சுரேஸ் பிரேமசந்திரன் என பதவி ஏற்பு மேடையில் வைத்து தான் தகுதிக்கு தான் பதவி வழங்குவேன் என பிரேமானந்த தாசன் கூறினார்.
செக்ஸ் விடயத்தில் மாட்டிக்கொண்ட பிரேமானந்தா போலவே தகுதி காண் அடிப்படையில் நியமித்த அமைச்சர் ஐங்கரநேசன் ஊழல் செய்தார் என முதல்வர் நியமித்த விசாரணை குழுவே அறிக்கை தந்து அவரை பதவிநீக்கம் செய்ய சிபாரிசு செய்தது. கூடவே அமைச்சர் குருகுலராசா செய்த அதிகார துஸ்பிரயோகமும் வெளிப்பட்டது. ஆதாரம் போதாது என இருவர் தப்பிவிட்டனர்.
குங்கும பொட்டு பட்டு பீதாம்பர குரு பிரம்மா குரு விஸ்ணு சுலோகம் சொல்லும் முதல்வர் இருவரை தாமே முன்வந்து பதவி விலக சொன்னார். மற்றும் இருவரை மீள் விசாரணை முடியும் வரை நீண்ட விடுமுறையில் செல்ல சொன்னார். இரண்டுமே சபை ஏறாத செயல் என்பது தெரியாத முதல்வர் இன்று மூக்கறுந்த சூர்ப்பனகையின் நிலையில் முக்கையீனப்பட்டு நிற்கிறார்.
அண்மையில் மனோ கணேசனிடம் ஒரு சக சிங்கள அமைச்சர் தனிநாடு கேட்டீர்கள் உங்களால் ஒரு மாகாணத்தை கூட நிர்வகிக்க முடியவில்லையே என கேட்டதாக அவர் முகநூலில் பார்த்தேன். என்ன செய்வது கறையான்கள் புற்றெடுக்க கருநாகங்கள் புகுந்த நிலை போலவே எமது இளையவர்களின் உயிர் தற்கொடையால் உருவான சபையின் நிலையும் மாறிவிட்டது.
முதலாவது இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபை தேர்தலில் கலந்து கொள்ள எவரும் முன்வராத நிலையில் நாபாவின் தலைமையில் ஈ பி ஆர் எல் ப் உடன் இணைந்து ஈ என் டி எல் எப் அமைப்பும் தேர்தலை சந்தித்தது. வடக்கில் போட்டி இல்லாத போதும் கிழக்கில் மும்முனை போட்டி இருந்தது. தெரிவு செய்யப்பட்ட எவருமே நிர்வாக முன் அனுபவம் இல்லாதவர்கள்.
ஆனால் அவர்களிடம் உண்மையும் நேர்மையும் இருந்தது. அதனால் அவர்களின் தலைமையில் செயல்ப்பட இலங்கையின் முதல் தர நிர்வாக சேவை அதிகாரிகள் முன்வந்தனர். அந்த பத்து முதல் தர செயலார்கள் கட்டமைத்த அமைப்பின் கீழ் தான் மகிந்தவின் சதியால் பிரிபட்ட கிழக்கு மற்றும் வடக்கின் மாகாண சபைகள் இன்றுவரை இயங்குகின்றன. அன்று ஊழல் இல்லை.
அதிகாரத்தை எவ்வாறு கையகப்படுத்துவது அதை எப்படி எமது மாகாணங்களின் அபிவிருத்திக்கு பயன்படுத்துவது என்பது தவிர வேறு எந்த எண்ணமும் அவர்களுக்கோ அல்லது அவர்களுக்கு தலைமை கொடுத்த மாகாண முதலமைச்சர் உட்பட மந்திரிசபைக்கோ சபை உறுப்பினர்களுக்கோ இருக்கவில்லை. அதனால் அதிகார துஸ்பிரயோகம் என்ற குற்றசாட்டுக்கே இடமிருக்கவில்ல.
அன்று மத்திய அமைச்சர்களுடனும் ஜனாதிபதியுடனும் பொது நிரல் பகிர்வு பற்றிய இழுபறியில் அந்த சபை படாத பாடுபட்டது. இன்று இருக்கும் அதிகாரத்தையும் ஒழுங்காக செயல்படுத்தாமல் வெறுமனே வெற்று தீர்மானங்களை நிறைவேற்றி விட்டு ஊழல் அதிகார துஸ்பிரயோகம் என கமிசன் வைத்து விசாரிக்க மாகாண நிதியில் இருபது லட்சம் செலவு செய்து கேவலப்படுகிறது.
கிழக்கின் சபையை பிள்ளையான் நடத்தியபோதோ அல்லது இன்று முஸ்லிம் காங்கிரஸ் தலைமையில் நடைபெறும்போதோ அந்த மாகாணம் அடைந்த அபிவிருத்தி, வேலை வாய்ப்புகள் பற்றி பெரிதாக குறை கூற முடியாத நிர்வாக அமைப்பை பல தடவைகள் நான் நேரில் சென்ற வேளைகளில் பார்த்தும் கேட்டும் அறிந்த என்னால் வடக்கில் எதையுமே காண முடியவில்லை.
இத்தனைக்கும் தேர்தல் காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெல்ல வேண்டும் என்ற நோக்கில் நேரடியாக களத்தில் நின்று காரியமாற்றும் சந்தர்ப்பம் கிடைத்த போது நான் அடைந்த சந்தோசம் எதிர்பார்க்கை அத்தனையும் இன்று கனவாய் கானல் நீராய் போன மனவேதனை எனக்குண்டு. இதற்கு தானா இத்தனை பேரிழப்புகளை எம் இளையவர் சந்தித்தார்கள் என்ற கேள்வி எழுகிறது.
காலா காலமாக சுயநல தலைமைகளால் ஏமாற்றபட்ட மக்களின் துன்ப துயரங்களை கண்டு தம் இன்பமான இளம் வயது சந்தோசங்களை துறந்து களமாட போனதால் காவியமானவர், அகதியாய் அகிலமெல்லாம் அலைபவர் உறவுகளை இழந்து உடமைகளை இழந்து நிர்க்கதியாய் நிற்ப்பவர் என அனைவரின் இடர்களும் இனி தீர உதவும் என்றுதானே இந்த சபை உருவாக உதவினோம்.
ஆனால் வெறும் பதவி சுகமும் படோடாபமும் உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுபவர்கள் ஒன்று கூடி தமது ஊழல் நடவடிக்கை அதிகார துஸ்பிரயோகம் பற்றிய எந்த கவலையும் இன்றி மக்களைப் பற்றிய கரிசனை இன்றி தம்முள் தாமே நம்பிக்கையீனம் கொண்டு எதிரியே எம்மை பார்த்து எள்ளி நகையாடும் செயலை செய்ய நந்தவனத்து ஆண்டிகளாக ஆளுனரை நாடுகின்றனர்.
– ராம் –