- தமிழர்களின் உரிமைப் போராட்டங்களில் ஈடுபட்டவர்களை இணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவை எந்தளவில் உள்ளன?
இதைச் சற்று விரிவாகப் பார்க்க வேண்டும். ஏனென்றால் இந்த இணைப்பு முயற்சிகள் இரண்டு தளங்களில் நடக்கின்றன. ஒன்று “மாற்று அரசியல்” என்ற அடையாளத்தோடு செயற்படும் மக்களுடைய விடுதலைக்கும் மேம்பாட்டுக்குமான நடைமுறை அரசியலை, யதார்த்த அரசியலை முன்னெடுக்கும் சக்திகளை இணைக்கும் முயற்சி.
மற்றது வழமையைப்போல நடைமுறைக்கு அப்பாலான, சாத்தியங்களற்ற கற்பனாவாத அரசியலை முன்னெடுக்கும் தரப்பினரை ஒருங்கிணைக்கும் முயற்சி.
முதலாவது தரப்பினராகிய மாற்று அரசியலை முன்னெடுப்போர், கடந்த கால அனுபவங்களைப் படிப்பினையாகக் கொண்டவர்கள். யதார்த்த நிலைமைகளையும் சர்வதேச சூழமைவையும் கணக்கில் எடுத்துப் புதிய அரசியலை வெற்றியை நோக்கிக் கொண்டு செல்ல விரும்புவோர். இவர்கள் ஒருங்கிணைவதன் மூலமாக நிச்சயமாக தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு கிட்டும். அதோடு இலங்கைச் சமூகங்களுக்கும் நன்மைகளுண்டு. இன்றைய உலக அரசியல் ஒழுங்குவிதியில் ஒன்றை ஒன்று அங்கீகரித்தும் அனுசரித்தும் பயணிப்பதே வெற்றிக்கு வழியாகும்.
இரண்டாவது தரப்பினர் எந்தப் படிப்பினைகளையும் கொள்ளாமல், யதார்த்தத்தை உணராமல், தமது தீவிர (இனவாத) நிலைப்பாட்டினால் தமிழ் மக்களைத் தனிமைப்படுத்துவோர். இந்த அணுகுமுறையினால் அரசுக்குச் சாதகமாகவும் சமாந்தரமாகவும் செயற்பட்டு தமிழ் மக்களை மேலும் பின்னடைவுக்கே கொண்டு செல்வர். அதாவது எந்தப் பிரச்சினைக்கும் தீர்வைக் காணாமல் மேலும் மேலும் புதிய புதிய பிரச்சினைகளை உருவாக்கிக் கொண்டேயிருப்பர். இது தமிழ் மக்களை மீள முடியாத அவலத்திற்குள் தள்ளுவதாகும். இவ்வாறு “அவலத்திற்குள் தள்ளுவதற்கும் ஒன்றிணையக் கோருகிறார்களே!” என்பது மிகப் பெரிய துயரமாகும்.
எனவே இந்த ஒருங்கிணைப்பு முயற்சிகளையிட்டு மக்கள் மிகத் தெளிவாகப் புரிந்து கொள்வது அவசியம். நன்மைக்கான ஒருங்கிணைவா? தீமைக்கான ஒருங்கிணைவா என. பொத்தாம் பொதுவாக “தமிழ் அரசியல் சக்திகள் (கட்சிகள்) எல்லாம் ஒன்றிணைய வேண்டும்” என்று எளிதாகச் சொல்லிக் கொண்டு இருந்து விட முடியாது. அடிப்படை வேறுபாடுகளைச் சரியாக இனங்காண வேண்டும். இல்லையெனில் மீண்டும் மீண்டும் ஏமாற்றமே மிஞ்சும். மீண்டும் தோல்வியே கிட்டும்.
ஏனென்றால், தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றில் ஏற்கனவே பல ஒருங்கிணைப்பு முயற்சிகள் நடந்துள்ளன. 1970 களில் தமிழரசுக் கட்சி (எஸ்ஜே.வி.செல்வநாயகம்), அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் (ஜீ,ஜீ.பொன்னம்பலம்), இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்(தொண்டமான்) இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணி உருவாகியது. இந்தக் கூட்டணியினால் கிடைத்த நன்மைகள் என்ன?
தற்போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துக்கு முண்டு கொடுத்துக் கொண்டிருப்பதைப்போல “போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம்” என்று தமிழ் மக்களுக்கு எதிராக அறைகூவல் விடுத்த ஐ.தே.க அரசாங்கத்தை ஆதரித்து மாவட்ட அபிவிருத்திச் சபை என்ற மாயைக்குப் பின்னால் போனதுதானே!
இதற்குப்பிறகு ஈ.பி.ஆர்.எல்.எவ், ஈரோஸ், விடுதலைப்புலிகள், ரெலோ ஆகிய விடுதலை இயக்கங்களின் ஒருங்கிணைவு ஈழதேசிய விடுதலை முன்னணி என்று நடந்தது. அதனால் திம்புக் கோட்பாடு என்ற அரசியல் தீர்வுக்கான முன்வைப்பு உருவாகியது. அதன் விளைவே இன்று நம் கையில் இருக்கும் மாகாணசபையாகும். ஆனாலும் துரதிருஷ்டவசமாக ஈழதேசிய விடுதலை முன்னணியின் ஆயுள் நீடிக்கவில்லை.
பிறகு ரெலோ, தமிழ்க்காங்கிரஸ், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழரசுக்கட்சி ஆகியன இணைந்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்ற பேரில் உருவாகியது. இதையிட்டு தமிழ் மக்களில் பெரும்பாலானவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். கூட்டமைப்பின் மூலம் பெரிய அரசியல் மாற்றங்களையும் சாதனைகளையும் உண்டாக்க முடியும் என்று நம்பினார்கள். ஆனால் கூட்டமைப்பினால் எதையும் செய்ய முடியவில்லை. இந்த நிலையில் அதற்குள் ஏற்பட்ட முரண்பாடுகள், அதிகாரப்போட்டி போன்ற பல காரணங்களினால் ஈ.பி.ஆர்.எல்.எவ்வும் தமிழ்க்காங்கிரசும் (சுரேஸ் பிரேமச்சந்திரனும் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும்) வெளியேறும் நிலை ஏற்பட்டது. தொடர்ந்து கூட்டமைப்பிற்குள்ளிருந்த முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரனும் அவரோடு ஐங்கரநேசன், அனந்தி போன்றோரும் வெளியேறினார்கள்.
இதற்குப் பிறகு இந்தக் கூட்டமைப்புக்கு வலுச்சேர்க்கச் சென்றது புளொட். அப்படியிருந்தும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினால் என்ன பயன் கிடைத்துள்ளது? கூட்டமைப்பினுள்ளே தொடர்ந்து நடக்கும் குத்துவெட்டுகளையும் இழுபறிகளையும் அதிகாரப்போட்டிகளையும் கண்டு மக்கள் உச்ச வெறுப்புக்குள்ளாகியிருக்கின்றனர்.
இந்த நிலையில்தான் புதிய அணி ஒன்றை – மாற்றுக் கூட்டு ஒன்றை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இந்தச் சூழலிலேயே தமிழ் மக்களுடைய நிகழ்கால, எதிர்கால நிலைமைகளையிட்டு அக்கறைப்படுவோர் நல்லதொரு முயற்சியில், அவசியமான பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களுடைய முயற்சியை மனப்பூர்வமாக வரவேற்கிறோம். அதற்கான ஒத்துழைப்பையும் முழுமையாக வழங்குகிறோம். ஆனால், இதனுடைய உடனடிச் சாத்தியங்கள் குறித்த கேள்விகள் உண்டு. ஏனென்றால் இந்தத் தரப்புகளுக்கிடையில் அரசியல் நிலைப்பாட்டிலும் அடையாளத்திலும் வேறுபாடுகள் உள்ளன. இந்த வேறுபாடுகளுக்கிடையில்தான் ஒற்றுமையைக் காண வேண்டும். அந்த ஒற்றுமையின் அடிப்படையிலே ஒருங்கிணைவு ஏற்பட வேண்டும். அல்லது ஒருங்கிணைப்பை ஏற்படுத்த வேண்டும். இது சற்றுக் கடினமான பணியே. ஆனால் அவசியமானதாகும்.
இன்று தமிழ் மக்கள் மிகப் பாதகமான நிலைக்குள்ளாகியிருக்கிறார்கள். மிகப் பெரிய தியாகங்களைச் செய்து முன்னெடுக்கப்பட்ட ஆயுதப்போராட்டம் தற்போது தோற்கடிக்கப்பட்டுள்ளது. போராடிய மக்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்த நிலையிலேயே தொடர்ந்தும் இருக்கிறார்கள். போர் முடிந்து பத்து ஆண்டுகள் கடந்து விட்டன. போருக்குப் பிந்திய அரசியல் சூழலும் தமிழ் மக்களுக்குப் பாதகமானதாகவே இருக்கிறது. சர்வதேச நியமங்களின் அடிப்படையில் போருக்குப் பிந்திய சூழலில் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டிய நிலைமாறு காலகட்டச் செயற்பாடுகள் எதுவும் அரசினால் சரியாக மேற்கொள்ளப்படவில்லை.
புனர்நிர்மாணம், மீளிணக்கம், பகை மறப்பு, சமாதானம், அரசியல் தீர்வு என்பதெல்லாம் காலம் கடத்துவதற்கான கருவி என்றளவில்தான் உள்ளன. இது பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் மிகப் பெரிய அநீதியாகும். ஒடுக்குமுறைக்கு மேலான ஒடுக்குமுறை. பாதிக்கப்பட்ட மக்களின் தரப்பிலிருந்து இந்த அநீதியை எதிர்த்து நிற்கும், நீதியைப் பெற்றுத் தரும், மாற்றங்களை உண்டாக்கும் என்றெல்லாம் மக்களால் எதிர்பார்க்கப்பட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, தன்னுடைய சுய நலன்களுக்காக அரசுடன் இணைந்து மக்களுக்கு விரோதமாகச் செயற்படுகிறது.
இந்த நிலையில் மாற்று அரசியல் சக்திகள் மக்களுக்காகத் தமக்கிடையிலான வேறுபாடுகளிலும் ஒருங்கிணைவைக் காண முயற்சிப்பது அவசியமே. இதேவேளை “இணைக்கும் முயற்சிகள்” என்பதே கவலைக்குரிய ஒன்றாகும். ஏனென்றால், மக்களுடைய விடுதலைக்கும் நன்மைக்குமாகப் பாடுபடுவோர் தாமாகவே முன்வந்து ஒன்றிணைய வேண்டும். அல்லது ஒருங்கிணைய முடியும். தமிழ் மக்களின் இன்றைய மற்றும் எதிர்கால நிலைமையைக் கருத்திற்கொள்ளும் நல்ல சக்திகள் தமக்கிடையில் உள்ள இடைவெளிகளைக் குறைக்க வேண்டும்.
- உரிமைப் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் அனைவரினதும் இலக்கு தமிழர்களின் அபிலாஷைளை வென்றெடுப்பதே. அப்படியிருக்க, அவர்களை ஒன்றிணைப்பது சாத்தியமற்றிருப்பதேன்?
நீங்கள் சொல்வதைப்போல எல்லோருடைய இலக்கும் ஒன்றாக இருந்தாலும் அதை அடைவதற்கான வழிமுறைகள் வெவ்வேறாகவே உள்ளன. இது இயல்பு. ஏற்கனவே நான் கூறியிருக்கிற மாதிரி ஒவ்வொரு தரப்புக்கும் தனியான அரசியல் அடையாளங்களும் வரலாறும் உண்டு. இவை இந்த ஒருங்கிணைவிலும் செல்வாக்குச் செலுத்தும் காரணிகளாக இருக்கும். இன்னும் வெளிப்படையாகச் சொன்னால் ஒவ்வொரு தரப்பிலும் உள்ளவர்களிடையே உள்ள தனி நபர் ஆளுமைக்குணங்களும் கூட இந்த ஒருங்கிணைப்பில் தாமதங்களையும் சாத்தியக்குறைவுகளையும் உண்டாக்குகின்றன என்பது கவனத்திற்குரிய, கவலைக்குரிய ஒன்றாகும். இங்கேதான் நாம் ஒரு கேள்வியை எழுப்ப வேண்டியுள்ளது, ஒவ்வொரு தரப்பினாலும் முன்னெடுக்கப்படுவது மக்களுக்கான அரசியலா? கட்சிக்கான அரசியலா? என. இங்கே செல்வாக்குச் செலுத்துவது மக்களா? தனிநபர் முதன்மையா என?
இதெல்லாவற்றுக்கும் காரணம் தேர்தல் அரசியலில் தமக்கான இடம் என்ன? தமது வெற்றியைத்தீர்மானிக்கும் விடயங்கள் என்ன? புள்ளிகள் என்ன என்ற சிந்தனையே.
இதைக்கடப்பது இன்று சாதாரணமானதல்ல. ஆனால் இதைக் கடக்கவும் வேணும். இதற்குள் உள்ள சாதகங்களை எடுத்துக் கொள்ளவும் வேண்டும். இதற்குத் திறந்த மனதோடு உரையாட வேண்டும். மக்களுக்காக விட்டுக் கொடுப்புகளைகச் செய்ய வேண்டும். சில விடயங்களில் மக்களுக்காக ஏற்றுக் கொள்ளல்களுக்கும் தயாராக வேண்டும். இல்லையென்றால் மக்கள் விரோதச் சக்திகளான தமிழ்த்தேசியக் கூட்டமைப்புப்போன்றவற்றையே பலப்படுத்துவதாக நமது செயற்பாடுகள் அமைந்து விடும். இது மக்களுக்கு நாமம் இழைக்கின்ற தவறாகவே அமையும். மாற்றங்களை உண்டாக்கக் கூடியவர்கள், அதைப்பற்றிய தெளிவுள்ளவர்கள் விலகிப் பலவீனப்பட்டு நிற்பது என்பது தமிழ்ச்சமூகத்துக்குண்டாக்கும் பாதிப்பாகவே அமையும்.
- ஒரே குறிகோளுடன் போராடியோர், தமிழர்களின் அரசியல் கட்சிகள் என தமிழர்களே முரண்பட்டு நிற்கையில், தமிழ் முஸ்லிம் சமூகங்களிடையே ஒற்றுமைப்படுத்தி இணைந்த வட– கிழக்கில் சமஷ்டி முறையிலான சுயாட்சியென்பதற்கான சாத்தியங்கள் என்ன?
இந்தக் கேள்வியே இதற்கான சிறந்த பதிலையும் கொண்டுள்ளது. ஒரே குறிக்கோளுடன் போராடியோர், இன்னும் அதை வலியுறுத்திக் கொண்டிருப்போர் தமக்கிடையில் கொண்டுள்ள முரண்களையும் இடைவெளிகளையும் களைய முடியாத நிலையே காணப்படுகிறது. அதாவது இந்தக் கட்சிகளையும் இந்தத் தலைவர்களையும் ஒருங்கிணைக்க முடியாமலிருக்கும்போது எப்படி வடக்குக் கிழக்கை இணைப்பது? எப்படி முஸ்லிம் சமூகத்தையும் தமிழ்ச்சமூகத்தையும் இணைப்பது? எப்படி சமஸ்டிக்கான சூழலை உருவாக்குவது? எப்படிச் சுயாட்சிக்கான சாத்தியங்களை உண்டாக்குவது? இதையெல்லாம் குறித்து மக்கள் தெளிவாகச் சிந்திக்கும்போது பலரையும் சுற்றியிருக்கும் மாயைகள் தெளிவாகும்.
இதனையே முன்பே குறிப்பிட்டேன். கற்பனாவாதத்திற்கும் யதார்த்திற்கும் இடையில் வேறுபாட்டைக் காண வேண்டும் என.
- அப்படியென்றால் உங்களுடைய அரசியல் தெரிவும் நிலைப்பாடும் என்ன?
எங்களுடைய அரசியல் நிலைப்பாடு, இணைந்த வடக்குக் கிழக்கில் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சமஸ்டி என்பதுவே. ஆனால் அது பன்மைத்துவத்தின் அடிப்படையில் எல்லாச் சமூகங்களுக்குரிய சமத்துவத்தையும் சமனிலையையும் கொண்டிருக்கும். இதுவே உலக நடைமுறையாகும்.
- கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் சுயேட்சையாகக் களமிறங்கி கணிசமான வெற்றியை நீங்கள் கண்டிருக்கின்றீர்கள்.பொதுவாகவே தமிழ் மக்களுக்கு எவ்வளவுதான் சேவையாற்றினாலும்,தேர்தல் என்று வரும்போது அவர்கள் குறித்த சிலரைத்தான் தேர்ந்தெடுப்பார்கள் என்ற நிலையே வடக்கு கிழக்கில் இன்றுரை உள்ளது. இந்நிலையில் புதியதோர் அமைப்பாக சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்புக்கான மக்கள் ஆதரவு எவ்வாறிருப்பதாக எண்ணுகின்றீர்கள்?
வரலாறு எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. அதுவும் அரசியலில் இது நேர்மாறாக அமைவதுண்டு. 1970 களில் தமிழர் விடுதலைக் கூட்டணியையும் தமிழரசுக் கட்சியையும் ஆதரித்தவர்கள் 1980 களில் அவற்றை நிராகரித்தனரே.
கடந்த பத்து ஆண்டுகளாகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை ஆதரித்தவர்கள் இன்று அதே கூட்டமைப்புக்கு எதிராகப் போர்க்கொடி தூக்குகிறார்களே! அதனை நிராகரிக்க முன்வந்திருக்கிறார்களே.
இது மாற்றம் அல்லவா!
தமிழ் மக்கள் மாற்றங்களை விரும்புகின்றவர்கள். போராடும் இயல்புள்ளவர்கள். அதற்காக எந்த அச்சுறுத்தலான நிலையிலும் துணிந்து நிற்கக் கூடியவர்கள். தமது இலட்சியத்துக்காக ஒப்பற்ற தியாகங்களைச் செய்யக் கூடியவர்கள். ஆனால் அவர்களைப் பிழையான சக்திகள் அவ்வப்போது திசை மாற்றிச் சென்று விடுகின்றன.
இந்த நிலையில்தான் நாங்கள் மக்களுக்கு உண்மைகளைச் சொல்லி, யதார்த்தத்தை விளக்கி மக்களுக்கான அரசியலை முன்னெடுத்து வருகிறோம். பிழையான சக்திகளிடமிருந்து மக்களை மீட்கிறோம். இதற்காக மக்களோடு நின்று களப்பணியாற்றுகிறோம். தேர்தல் வெற்றி மட்டும் எமது இலக்கல்ல. மக்களுடைய அரசியல் உரிமையும் வாழ்க்கை மேம்பாடும் சூழல் விருத்தியும் இணைந்த கூட்டு விடுதலையே எமது இலக்காகும். இதனை உணர்ந்த மக்களே எமக்கான ஆதரவை வழங்கி எம்மை வெற்றியடைய வைத்தனர். அவர்களே எமது ஆதரவுப் பலமாகும்.
இதனைப் புலம்பெயர்ந்துள்ள மக்களும் ஏனையவர்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்று கேட்கிறோம்.
இனி வரும் தேர்தலும் தேர்தலுக்கு அப்பாலான அரசியலும் புதிய மாற்றங்களுக்கானதான அமையும் என நம்புகிறேன். ஆனால் அதற்காக நாம் கடுமையாகப் பாடுபட வேண்டும். இந்த மகத்தான பணியில் ஊடகங்கள், ஊடகவியலாளர்கள், புத்திஜீவிகள், பல்கலைக்கழக சமூகத்தினர், இளைய தலைமுறையினர், மாற்றத்துக்கான அரசியலை விரும்புவோர், முற்போக்காளர்கள் அனைவரும் கரங்கோர்க்க வேண்டும்.
எமது ஆதரவுத் தளம் உயர்ந்து வருகிறது. நாங்கள் விரிந்து பரந்து பயணிக்கிறோம். ஆம், மாற்றத்துக்கான – மக்கள் வெற்றிக்கான அரசியல் பலமாகியே வருகிறது என்பேன்.
- தமிழர்களுக்கான ஆரோக்கியமான அரசியல் செல்நெறியின் அவசியம் பற்றி வலியுறுத்துவோர் எல்லோரும் வெறுமனே தமிழ்தேசிய கூட்டமைப்பை விமர்சிப்பதோடு நின்று விடுகின்றனர். உண்மையில் அது சாத்தியமானதா? அப்படியாயின் அது எவ்வாறு அமையவேண்டும்?
இதுவும் முக்கியமானதொரு கேள்வியே. யாரும் யாரையும் எப்படியும் விமர்சிக்கலாம். அது இலகுவானது. அது எந்தளவில் பயனுள்ளது என்பதே நாம் கவனிக்க வேண்டியதாகும். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இன்று கடுமையாக விமர்சிக்கப்பட வேண்டிய நிலையில் இருக்கிறது என்பதையிட்டு மாற்றுக் கருத்தில்லை. கூட்டமைப்பின் தீவிர ஆதரவாளர்களே அதை விமர்சிக்கிறார்கள். அதன் மைய உறுப்பினர்களும் மையக்கட்சிகளுமே கூட்டமைப்பை விட்டு வெளியேறிச் செல்வதையும் நாம் கண்டு கொண்டிருக்கிறோம்.
ஆனால், “காகம் திட்டி மாடு சாவதில்லை”, “மந்திரத்தால் மாங்காயை விழுத்த முடியாது” என்றெல்லாம் எங்கள் முன்னோரின் அறிவுரைகள், அனுபவ வார்த்தைகள் உள்ளன.
கூட்டமைப்பு இன்று விட்டுக் கொண்டிருக்கும் தவறுகளை எதிர்த்து மக்களை அணி திரட்ட வேண்டியதே இன்றுள்ள பணியாகும். ஆனால் அது மட்டும் போதாது. தமிழ் மக்களுடைய அரசியல் உரிமையும் வாழ்க்கைப் பிரச்சினைகளும் இன்று பெரும் சவாலுக்குரியதாகியுள்ளன.
எனவே, இப்பொழுது நாம் இரண்டு சக்திகளுக்கு எதிரான போராட்டங்களைச் சமாந்தரமாக முன்னெடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். ஒன்று தொடர்ந்து ஒடுக்கி வரும் அரசுக்கு எதிரான போராட்டம். அடுத்தது, ஒடுக்குமுறையை மேற்கொள்ளும் அரசுக்கு ஆதரவளித்து, முண்டு கொடுத்துக் கொண்டு பாதிக்கப்பட்ட மக்களைக் கைவிட்ட கூட்டமைக்கு எதிரான போராட்டம். (கூடவே சமூக மேலாதிக்கச் சக்திகளுக்கு எதிரான போராட்டத்தையும் முன்னெடுக்க வேண்டியுள்ளது).
இந்தப் போராட்டங்களை முன்னெடுப்பதற்கான வியூகங்களை வகுத்துக் கொண்டு மாற்று அரசியலாளர்கள் அணி திரள வேண்டும். வரலாறும் சூழலும் அதற்கான சூழமைவை எமக்கு உருவாக்கித்தந்துள்ளது. இதுதான் உங்களுடைய கேள்விகள் அனைத்திலும் தொக்கி நிற்கின்ற “மாற்று அரசியலுக்கான” ஒருங்கிணைவுக்குரிய சந்தர்ப்பத்தையும் அவசியத்தையும் அடையாளப்படுத்துவது.
அரசியலறிஞர்கள் சொல்வதைப்போல ஒடுக்குமுறையாளர்களும் மக்கள் விரோதச்சக்திகளுமே விடுதலைச் சக்திகளுக்கான – விடுதலையாளர்களுக்கான – சந்தர்ப்பத்தை உருவாக்கித்தருகிறார்கள். விடுதலைக்கான கதவுகளைத் திறக்கத்தூண்டுகிறார்கள் என்பது நூறு வீதமும் உண்மை. எமது மக்களுக்கும் (எமக்கு) அவ்வாறானதொரு சந்தர்ப்பம் மீண்டும் கிடைத்துள்ளது. இதைச் சரியாக – நிதானமாகப் பயன்படுத்தவேண்டும்.
இந்த வரலாற்றுச் சந்தர்ப்பத்தை மக்களுக்காகப் பயன்படுத்திக் கொள்வதற்கு வரலாற்றுச் சக்திகளான மாற்றாளர்கள் முன்வர வேண்டும் என்று கேட்கிறேன். இதற்கு இளைய தலைமுறையினர் தமது முழுமையான ஆதரவை வழங்கிப் பலத்தை உருவாக்க வேண்டும். புலம்பெயர் சமூகத்தினர் எந்தத் தடுமாற்றங்களுமில்லாமல் புதிய உருவாக்கங்களுக்கு முழுமையான ஆதரவை வழங்க வேண்டும். இந்தக் கூட்டாதரவைச் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வதற்கு மக்கள் அரசியலாளர்கள், விடுதலையாளர்கள் அனைவரும் முன்வர வேண்டும். ஒன்றிணைய வேண்டும். இதுவே தமிழ் மக்களுடைய விடுதலைக்கான இன்றைய வழியாகும்.