மரணத்தை கொண்டாடும் மனநிலையை தவிர்ப்போம்! மனித நேயத்தை வளர்போம்!!
(சாகரன்)
கடந்த வாரம் கந்தன் கருணைப் படுகொலை பற்றிய பதிவொன்றை மேற்கொண்டிருந்தேன். இதற்கு கிடைத்த ஆதரவு எதிர்வினைகள் என்னை தொடர்ந்தும் எழுதத் தூண்டியிருக்கின்றது. ஈழவிடுதலை அமைப்புக்களிடையேயான முரண்பாடு நட்பு முரண்பாடே ஒழிய பகை முரண்பாடு அல்ல என்பதை ஏற்றுக்கொண்டதனாலேயே சகோதரப்படுகொலைக்கு எதிரான பாசறையில் தொடர்ந்து பொது வெளியில் வேலை செய்து வருகின்றேன். இதனை இன்றும், இன்னமும் இறுகப் பற்றி வருகின்றேன் ஒரு மனிதனின் உயிர் வாழ்தல் என்ற மனிதாபிமான எதிர்பார்பை பகைவர் புலத்திலும் சீர்தூக்கிப் பார்க்கும் மனப் பக்குவத்தை 40 வருடங்களுக்கு முன்பு மக்களின் வடுதலைக்காக புறப்பட்ட நாட்களிலேயே எனக்குள் வளர்த்துக் கொண்டேன். இது நான் நம்பும், கைகொள்ளும் இடதுசாரி சிந்தனையில் இருந்து உருவானது.
முள்ளிவாய்கால் படுகொலை பற்றிய உண்மைகள் உள்ளுர் மக்கள் மத்தியில் மட்டும் அல்லாது சர்வதேச சமூகத்தின் மத்தியிலும் தெரியப்பட்டளவிற்கு இதற்கு சற்றும் குறைவில்லாத படுகொலைகள் பாரிய அளவில் அறியப்பட்டிருக்கவில்லை. உள்ளுரிலும் சர்வதேசத்தின் மத்தியிலும் இதனை வெளிக் கொணரவேண்டிய கடப்பாடு மனித நேயமிக்க யாவரினதும் கடமையாகும். இதன் ஒரு சிறிய முயற்சியே கந்தன் கருணைப் படுகொலைகள். இந்தப் படுகொலையை நியாப்படுத்தும் அல்லது வருத்தம் தெரிவிக்காத நிலமைகள் இன்னமும் எங்கள் சமூகத்தில் நிலவுவது வருத்தம் தரும் விடயமாகும். மரணத்தைக் கொண்டாடும் மனநிலை எம்மிடம் இருந்து அகன்று போகவேண்டும் என்பதே என் இந்தப் பதிவு முயற்சிகளில் ஒன்றாகும்.
மேலும் கந்தன் கருணை போன்ற மரணங்கள் தவிர்க்கப்பட்டிருந்தால், தடுக்கப்பட்டிருந்தால் முள்ளிவாய்கால் அவலங்களை நாம் தடுப்பதில் பலவேளைகளில் வெற்றி கண்டிருக்க முடியும் என்பது என் நம்பிக்கை. விதுஷா, தீபன் போன்றவர்களின் மரணங்கள் கூடவே தமிழினியின் இயற்கை மரணங்கள் எனக்குள் கண்ணீரை வரவழைத்ததை நான் இங்கு பதிவு செய்துதான் ஆகவேண்டும். இவர்களின் துப்பாக்கி என் நெஞ்சுக்கு நேரே நீட்டப்பட்டதையும் நான் அறிந்த நிலையிலும் இவர்களின் மரணங்களை என்னால் கொண்டாட முடியவில்லை. பாசிசம் என்ற கருத்தியலும், மனநிலையும், செயற்பாடும் அழிக்கப்படவேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்துக்கள் கிடையாது.
80 களில் பதின்மை வயதில் இருந்தவர்களுக்கு இயக்கம் என்றால் தமிழீழ விடுதலைப்புலிகள் மட்டுமே. இவர்கள் கூறியவை மட்டுமே தமிழர்களின் போராட்ட வரலாறும், துரோகங்களும் (துரோகம் என்ற வார்த்தை பிரயோகத்தை தவிர்க்க முடியாமல் இங்கு பாவிக்கின்றேன்) என்று நம்பும் யதார்த்த நிலை நிலவியதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். அந்தவகையில் இந்த பதின்ம வயதினருக்கு ஈழவிடுதலையின் வரலாற்று போக்கை அறிவிக்க வேண்டிய கடப்பாடும் கந்தன் கருணை பதிவிற்கான முக்கிய காரணம்.
மற்றபடி மீண்டும் பகைமையை வளர்ப்பதையும், யாரையும் கழுவில் ஏத்த முயலுவதும் எனது நோக்கம் அல்ல. ஆனால் மீண்டும் ஒரு பாசிசமும், ஒரு முள்ளிவாய்காலும் ஏற்படாமல் தடுத்து நிறுத்த முயலுவதே எனது நோக்கம். சிங்கள பௌத்த மேலாதிகத்தின் கைகூலி என்ற வசைகள் தவறுகளை ஏற்கும் மனப்பக்குவத்தை விடுத்து மீண்டும் சகோதரப் படுகொலைகளையும், பாசிசத்தின் வளர்சியையும், ஏகபோகத்தின் செயற்பாட்டையும் உருவாக்கும் மனநிலையின் வெளிப்பாடே. மரணத்தை கொண்டாடும் மனநிலையிலிருந்து நாம் விடுபட்டு மனித நேயத்தை வளர்ப்போம்.