வலிசுமந்த மேனியராக…….. அக்ரோபர் 30ம் நாள் 1990

ஆம் சில மணி நேர அவகாசத்தில் உடமைகள் எதனையும் எடுத்துச் செல்ல அனுமதிக்காது வட பகுதியில் இருந்து வெளியேறிவிட வேண்டும் என்று ஒரே மொழி பேசும் கலாச்சாரம் பாரம்பரியத்தினால் வேறுபாடுகளை உடைய பல நூறு ஆண்டுகள் ஒன்றாக குழல் புட்டிற்குள் தேங்காயும் புட்டுமாக கலந்த வாழ்ந்த மக்களை இன சுத்திகரிப்பு செய்த அந்த சம்பவம் அமைந்துவிட்டது.

இதனை அன்றைய காலகட்டத்தில் விடுதலைப் போராட்டத்தை முழுவதும் ஏக போகமாக கையில் வைத்திருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் செய்தனர் என்பது உள்ளங்காய் நெல்லிகாயாக தெரிந்த விடயம்.

இச் சம்பவத்தை தமிழர் தரப்பு அன்று தடுத்து நிறுத்த முடியவில்லை என்ற போக்கு இதற்கான பொறுப்புக் கூறலை தமிழரை நோக்கி நீட்டப்படுவதில் இருந்த தவிர்க்க முடியாத நிலமைகளை வரலாற்றில் ஏற்படுத்திவிட்டது.

இதற்கு ஆயிரம் காரணங்கள் கூறப்பட்டாலும் இதில் ஒரு காரணமும் முழு முஸ்லீம் மக்களையும் வட பகுதியில் இருந்து சுத்திகரிப்பு செய்வதற்கான எந்த நியாதாதிக்கத்தையும் கொண்டிருக்கவில்லை என்பது மனித நேயத்தின்பால் அறம் சார்ந்து சிந்திப்பவர்கள் செயற்படுபவர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

இலங்கை வாழ் சிறுபான்மை மக்களை தனித் தனியாக இணைந்து ஐக்கியப்பட்டு தமது உரிமைகள் பெறமுடியாமல் செய்வதற்காக பேரினவாதம் செய்த சூழ்சிகள் 1920 களில் காலியில் நடைபெற்ற சிங்கள் முஸ்லீம் கலவரத்திற்கு பௌத்த சிங்கள மேலாதிக்கத்திற்காக பிரித்தானியாவிற்கு கப்பல் ஏறி பிரித்தானிய காலனியாதிக்கவாதி இராணியிடம் வாதிட்டு வந்த இராமநாதன் காலத்தில் இருந்து ஏற்படுத்திய வலிகளில் இருந்து ஆரம்பித்ததுதான்.

தனிநாடு என்ற கோரிக்கையை முன்வைத்து 1977 இல் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி புத்தளம் வரை வடக்கு கிழக்கு ஈறாக தமிழ் பேசும் மக்கள் என்று அழைகப்படும் தமிழ் முஸ்லீம் மக்களை வேட்பாளாக களம் இறக்கி சர்வ தேசத்திற்கும் மொழியால் ஏன் பிரதேங்களால் நாம் ஒன்றாகவே ஒரே சிந்தனையில் இருக்கின்றோம் என்று வாழ்ந்து காட்டியவர்களாக வரலாறுகள் கட்டமைக்கப்பட்டது.

அத் தேர்தலின் சில காலங்களின் பின்பு அஸ்ரப் தனியாக பிரந்து முஸ்லீம் மக்களுக்கான தனித்துவமான கட்சியை அமைத்து செயற்படுவதற்குரிய சூழல் ஏற்படுவதற்கு தமிழர் தரப்பு மிதவாத தலமையில் தவறான அணுகு முறையும் காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது.

ஆனாலும் இதனையும் மீறி தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தனிநாட்டுக் கோரிக்கையும் பாராளுமன்ற வெற்றியின் பின்னரான ஜேஆரின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அரசிடம் சமரசம் ஆகி மாவட்ட சபையை எற்றுக்கொண்ட நிகழ்வும்…. இலங்கை அரசு நிகழத்தி இனக் கலவரங்களும் ஆயுதம் ஏந்தி தமிழர்களுக்கான தாயகம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற ஆயுதப் போராட்டத்தை வலுப் பெறச் செய்த போது அதில் ஆயிரம் ஆயிரம் முஸ்லீம் இளைஞர்கள் பல்வேறு விடுதலை அமைப்புகளுடன் இணைந்து போராடியது உயர்த் தியாகங்கள் செய்த வரலாற்றையும் நாம் மறைக்க முடியாது மறுக்க முடியாது.

அது விடுதலை அமைப்புகளுக்குள் சிறப்பாக இடதுசாரி சிந்தனையை தமக்குள் கொண்டிருந்து அமைப்புகளிடைபே முஸ்லீம் மக்கள் வளர்ந்து வரும் தேசிய இனம் அவர்களுக்கான அரசியல் தீர்வாக அவர்கள் வாழும் பிரதேசங்ளை(தொடர்ச்சியாக இல்லாவிடினும்) நிர்வாக ரீதியாக ஒன்றிணைத்து ஒரு சுயாட்சியை தனியாக அமையும் தனிநாட்டிற்குள் அமைக்கலாம் என்ற கருத்துக்களும் தீரமானங்களும் சில விடுதலை அமைப்புகளின் பேராளர் மகாநாட்டுத் தீர்மானங்களாக எடுகப்பட்டதும் வரலாறு.

பேரினவாதம் ஊர்கால் படை என்று தமிழர்களையும் முஸ்லீம் மக்களையும் பிரிப்பதற்காக உருவான படையின் செயற்பாடுகளையும் மறுதலித்து தமது படுக்கை அறையில் மறைவிடம் அமைத்து கிழக்கின் விசேட அதிரடிப்படையிடம் இருந்து போராளிகளை காப்பாற்றிய சம்பவங்களே அதிகமாக இருந்தன. இதனை அனுபவமாக கண்டவர்கள் நாம்.

கிழக்கில் பள்ளிவாசலில் புகுந்து நடாத்திய கொலைகளும் முஸ்லீம் கிராமங்களில் நடாத்திய வன்முறைகளுக்கும் பதிலடியாக பேரினவாதம் ஊர்காவல் படையை தமது கையில் எடுத்து பதிலடியாக செயற்பட்ட வேண்டத் தகாத செயற்பாடுகளை இஸ்லாம் மார்கத்தை நம்பும் எந்த இஸ்லாமியரும் ஆதரிக்கவில்லை மாறாக ஒரே மொழி பேசும் மக்களாக அரவணைத்து பாதுகாத்த வரலாறுகளே அதிகம்.

அதுதான் இலங்கை இந்திய அரசுகளுக்கிடையிலான ஒப்பந்தமும் அதன் அடிப்படையில் அமைந்து இணைந்த வடக்கு கிழக்கு மகாண சபையில் ஐந்து அமைச்சர்களில் ஒருவர் முஸ்லீமாகவும் மகாணசபையில் எதிர் கட்சியாக வலுவான நிலையில் முஸ்லீம் காங்கிரஸ் தெரிவு செய்யப்பட்ட போது ஆட்சி நடைபெற்ற ஒரு வருடத்திற்கு குறைவான காலத்தில் முஸ்லீம் காங்கிரஸ் சபையில்… வெளியில்…. எதிரிக் கட்சியாக இல்லாமல் ஆளும் தரப்புடன் சினேகமாக ஆக்க பூர்வமான பங்காளிக் கட்சியாக பயணித்த வரலாறு சொல்லி நிற்கின்றது.

1990 மார்ச் மாதமளவில் கலைத்த இணைந்த மகாண சபையும் அதன் பின்னரான 1990 இன் பிற் கூற்றுக் கால கட்டங்களே அதிகம் முஸ்லீம் மக்கள் தமிழ் மக்கள் இணைந்து செயற்படுவதற்கான தடைகள் அதிகம் தமிழ் தரப்பு தமது ஆயுதம் எல்லா வெற்றிகளையும் குவிக்கும் என்ற மதையில் செயற்பட்ட அரங்கேற்றிய சம்பவங்கள் அதிகம் ஆரம்பிக்கப்பட்ட கால கட்டம் ஆகும்.

அதில் உச்சம் 1990 அக்ரோபர் மாதம் 30 ம் திகதி வட பகுதியில் இருந்து சில நூறு ரூபாய்களை மட்டும் எடுத்துக் கொண்டு சில மணி நேராத்தில் வட பகுதியில் பாரம்பரியமாக தலைமுறை தலைமுறையாக வாழ்ந்த பூமியை விட்டு விரட்டப்பட்ட இனச் சுத்திரிகரிப்பு செய்யப்பட்ட சம்பவம் ஆகும். இந்த முஸ்லீம் மக்கள்தான் முதன் முதலில் இலங்கையை விட்டு அதிகம் புலம் பெயர் தேசத்திற்கும் புத்தளத்திற்கு ஓரளவிற்கு நிரந்தரமாக இன்று வரை அகதிகளாக்கப்பட்ட மக்கள் ஆகும்.

ஆனாலும் அந்த மக்கள் தமக்கு ஆதரவான பெரும்பான்மை தமிழ் மக்கள் இந்த இனசுத்திரிகரிப்பை ஏன் தடுத்து நிறுத்த முடியவில்லை…? முயலவில்லை…? என்ற குழப்பமான மனநிலையிற்கு தள்ளப்பட்டாலும் அவர்கள் தமிழ் சகோதரர்களை வெறுக்கவில்லை என்பதை நாம் இதன் பின்னரான ஒரு முக்கிய சம்பவத்தில் காணக் கூடியதாக இருந்து. அது 2009 மே மாதம் முள்ளிவாய்காலில் நடைபெற்று முடிந்து இறுதி யுத்தத்தில் இராணுவத்திடம் சரண் அடைந்த பொதுமக்கள் இயக்கப் பொடியளை வவுனியாவில் அமைந்த முள்ளுக் கம்பி முகாங்களுக்கு பின்னால் நிறுத்திய போது இந்த இலட்சம் மக்களுக்கு தினமும் தேவைiயான பாரியளவு உணவுத் தேவையை முகாமிற்கு சென்று சமைத்து போட்டவர்களில் இந்த கிழக்கு மகாண வாழ் முஸ்லீம் மக்களே. அவர்களின் இந்த மனிதாபிமான செயற்பாடுகள் மகத்தானவை.

தம்மை தமது சகோதரர்களை முழுமையாக இன சுத்திகரிப்பு செய்தவர்கள் தமது தொழுகை இடங்களில் கொன்றவர்கள் என்று வெறுப்புணர்ச்சியை தவிர்த்து முகாங்களில் அடைக்கப்பட்டவர்களுக்கான உணவு வழங்கலில் முன்னிலை பங்கு வகித்த அவர்களை நாம் எவ்வாறு சகோதரர் என்ற நிலையிற்கு அப்பால் வைத்து பார்க்க முடியும்.

2009 இல் இந்த யுத்தம் முடிவுற்று யாழ்ப்பாணத்தையும் ஏனைய நிலப்பரப்பையும் இணைக்கும் ஏ9 பாதை திறக்கப்பட்ட போது ஆட்சி அதிகாரத்தில் பங்கு பற்றிய தமிழ் தரப்பிடம் வினையமாக ஒரு பகிரங்க கோரிக்கை நான்(ம்) முன்வைத்தேன்(தோம்). அது முழுமையான மேளதாளங்களுடன் அடையாள ரீதியாக எமது முஸ்லீம் சகோதரர்களை ஏ9 பாதைவழியாக யாழ்ப்பாணத்திற்கு அழைத்து சென்று மீள் குடியமர்வை ஏற்படுத்தி 1990 நடைபெற்ற அந்த இனச் சுத்திகரிப்பு நிகழ்வால் எற்பட்ட மனக் காயங்களுக்கு நாம் ஒத்தடம் கொடுப்போம்.

இதனை நாம் செய்தால் இந்த சம்பவத்தின் போது தமிழ் மக்கள் வட பகுதி முஸ்லீம் மக்களுக்கு நடைபெற்ற இன சுத்திகரிப்பு நம்பவத்தின் போது ஆயதங்களுக்கு பயந்து மௌனமாக இருந்த சூழ்நிலைத் தவறுகளுக்கு பிராயச் சித்தம் செய்வதாகவும் முஸ்லீம் சகோதரர்களுக்கு எமது சகோதரத்துவ ஆதரவை வழங்குகின்றோம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி எம்மிடையேயான சகோதரத்துவத்தை மேலும் இறுக்கமாக்க உதவும் என்று நம்பினோம். ஆனால் அதிகாரத்தில் பங்கு பற்றியவர்களால் இதனை செயற்படுத்த முடியவல்லை என்பது மனவருத்தத்திற்குரியது.

வரலாற்றில் எமக்கு கிடைக்கும் சந்தர்பங்களை நாம் சரியாக பயன்படுத்த வேண்டும் என்பது முக்கியமாக இருந்த போது நழுவ விட்ட அல்லது அவசியம் புரியப்படாமல் கடந்து போன விடயங்கள் இவை.

இது போலவே 2009 யுத்த முடிவின் பின்னராக அமைந்ம யாழ் மாநகரசபையின் அதிகாரத்தில் துணை மேயராக ஒரு முஸ்லீமை தெரிவு செய்யுங்கள் என்ற கோரிக்கையும் காற்றில் பறக்கவிடப்பட்டன.

தவறுகளை சுட்டிக் காட்டுவது அதிலிருந்து பாடங்களை கற்று எதிர்காலத்தில் சிறப்பாக செயற்பட வேண்டும் என்பதற்காகவே. இனிவரும் வாய்புகளையும் சந்தர்பங்களையும் நாம் சரியாக பயன்படுத்தி இலங்கையில் வாழும் அதிகம் ஒடுக்கு முறைக்கு உள்ளாகும் சிழறுபான்மை இனங்கள் ஒன்றுமைப்பட்டு எமக்கான நியாதிக்கங்களை பெரும்பான்மை மக்களிடமும் தெளிவுபடுத்தி ஒரே நாடு ஒரே சட்டம் என்பதற்கு அப்பால் பல தேசியங்கள் இணைந்து வாழும் அந்தந்த தேசிய இனங்களின் கலாச்சார பண்பாட்டிற்கு அமைய சில விசேட சட்ட முறைகளையும் அங்கீரகரித்து ஐக்கியபட்டு பலமான இலங்கையை கட்டியமைப்போம்.

முப்பது வருடங்கள் கடந்தும் 1990 அக்ரோபரில் நடைபெற்ற முஸ்லீம் மக்களை வட பகுதியில் இருந்து இன சுத்திகரிப்பு தவறுகளை உணர மறுக்கும் மனித நேயமற்றவர்களை இந்த பதிவு மனமாற்றத்தை ஏற்படுத்த உதவ வேண்டும்… அதன் தொடர்ச்சியாக சகோதரத்துவத்தை வளர்க்க உதவ வேண்டும் என்பதற்காகவே பதியப்படுகின்றது