இலங்கையின் சக்தி தேவையை எதிர்வுகூறக்கூட இயலாத, கையாலாகாத அரசாங்கத்தின் கேடுகெட்ட நடத்தையால், இலங்கையர் அனைவரதும் வாழ்க்கை சீரழிகிறது. அனைத்துத் தவறுகளையும் அந்நிய செலாவணிப் பற்றாக்குறை என்ற ஒற்றைக் காரணியின் தலையில் கட்டிவிட்டு, அப்பால் நகர்ந்துவிட அனைவரும் முயல்கிறார்கள். இது அனைவருக்கும் வசதியானது. ஆட்சியாளர்களுக்கு இது நல்லதொரு வாய்ப்பு; கொள்கை வகுப்பாளர்களுக்கு தமது தொடர்ச்சியான தவறுகளை மறைக்கும் நல்லதோர் ஆயுதம்; மக்களின் கையறுநிலைக்கு விளக்கம் கொடுக்கும் ஒரு காரணி.
ஆனால், விரிவானதும் ஆழமானதுமான பார்வையில், குறுகிய நோக்கத்தினாலான கொள்கைவகுப்பும் குறிப்பிட்ட சிலரின் நலன்களுமே, இன்றைய சக்தி நெருக்கடிக்கான காரணிகள் என்பதை நாம் பேசுவதில்லை.
இலங்கையின் மின்சாரத் தேவை, கடந்த இரண்டு தசாப்தங்களாக தொடர்ச்சியாக அதிகரித்து வந்திருக்கிறது. 1990களின் நடுப்பகுதி வரை நீர்மின்சக்தியிலேயே இலங்கையின் மின்சார உற்பத்தி தங்கியிருந்தது. அதைத் தொடர்ந்து, அதிகரித்த மின்சாரத் தேவைகளுக்காக, நிலக்கரியிலும் பெற்றோலிலும் இருந்து மின்சார உற்பத்தி தொடங்கியது. காலப்போக்கில், இவை இரண்டிலும் இருந்தான மின்சார உற்பத்தியே பிரதானமானது.
மறுமுனையில், உலகளாவிய ரீதியில் புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்களின் ஊடு, மின்சார உற்பத்தி மலிவானதாக மாறியது. இலங்கை போன்ற நாடுகளில் காற்றாலைகளாலும், சூரியமின்கலங்களின் உதவியோடும் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான வளங்களும் வாய்ப்புகளும் இருந்த போதும், மின்சார உற்பத்திக்கு இலங்கை நிலக்கரியையும் டீசலையும் நம்பி இருக்கிறது.
காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கு சுவட்டு எரிபொருட்களின் பாவனையைக் குறைப்பதும் தடுப்பதும் அவசியமானது. இந்நிலையில், காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவற்கான உலகளாவிய முயற்சிக்கு நாமும் பங்காற்ற வேண்டும். ஏனெனில், இது எமது வருங்காலத் தலைமுறையின் எதிர்காலம் பற்றியது.
இதைக் கருத்தில் கொண்டே, உலகளாவிய சக்தி நிலைமாற்றத்தின் அடிப்படை, நின்றுநிலைக்கக்கூடியதும் மலிவானதும் அனைவருக்குமானதும் சூழலுக்கு மாசற்ற சக்தி மூலங்களை நோக்கி நகர்கின்றது. எளிமையாகச் சொல்வதாயின், சுவட்டு எரிபொருட்களுக்குப் பதிலாக, புதுப்பிக்கத்தக்க சக்தியைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்வதில், உலகின் பலநாடுகள் முனைப்பாயுள்ளன.
இலங்கை போன்ற நாடுகளில் ஆண்டு முழுவதும் கிடைக்கும் சூரிய ஒளியும் தீவாக இருப்பதன் விளைவால் கரையோரங்களில் வீசுகின்ற காற்றும், முறையே சூரியகலன்களையும் காற்றாலைகளையும் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு வாய்ப்பானது. இவை இரண்டும் இலங்கையின் சக்தித் தேவைகளுக்குப் பயன்படும் முக்கியமான வளங்கள். ஆனால், இவ்வளங்கள் அதன் முழுமையான பயன்பாட்டைப் பெறவில்லை.
இதன் பின்புலத்திலேயே, இலங்கையில் நிலவும் மின்சார நெருக்கடியை நோக்க வேண்டியுள்ளது. இலங்கையின் நிலக்கரி மீதான காதல் சொல்லி மாளாளது.
முதலாவது அனல்மின்நிலையம் அமைக்கப்பட்டது முதல், இலங்கையின் கொள்கைவகுப்பாளர்கள் தொடர்ச்சியாக அனல்மின்நிலையங்களை அமைப்பதில் அக்கறைகாட்டி வந்துள்ளார்கள். ஏன் இந்த அக்கறை என்பதற்குப் பலகாரணிகள் உண்டு. அதில் முதன்மையானது, நிலக்கரி கொள்வனவில் மேற்கொள்ளப்படும் ஊழல்.
கடந்த பத்தாண்டுகளில், இது குறித்துப் பல தடவைகள் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிலக்கரிக்கு மேலதிகமாக, பெற்றோலியத்தின் மூலம் உற்பத்தியாகும் மின்சாரமும் இலங்கையின் மின்சார உற்பத்தியைச் சுவட்டு எரிபொருட்களில் தங்கியுள்ளதாக மாற்றியுள்ளது. இவை இரண்டும் இலங்கையின் அந்நியச் செலாவணியில் முக்கிய பங்காற்றுவன.
இலங்கை, கடந்த பத்தாண்டுகளில் புதுப்பிக்கத்தக்க சக்தி மீது கவனம் செலுத்தியிருந்தால், இன்றைய சக்தி நெருக்கடியைத் தவிர்த்திருக்க முடியும். இங்கு, கடந்த பத்தாண்டுகளில் இலங்கையில் புதுப்பிக்கத்தக்க சக்தி உற்பத்திக்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளனவே என்ற ஐயம் எழுவது இயல்பானது.
கடந்த பத்தாண்டுகளில், இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டங்களில் பெரும்பாலானவை, இலங்கையின் வடபகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்டவை. இத்திட்டங்கள் அனைத்தும், பொதுமக்களின் எதிர்ப்பைச் சந்தித்தவை என்பதும் பொதுமக்களின் ஒப்புதல் இல்லாமல் செயற்படுத்தப்பட்டவை என்பதும் கவனிப்புக்குரியது.
மன்னாரில் அமைக்கப்பட்ட காற்றாலை உற்பத்தித் திட்டமானது, ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியோடு இலங்கை அரசாங்கத்தால் செயற்படுத்தப்பட்டது. இது தவிர்ந்த மிகுதி அனைத்தும் தனியாரால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் ஆகும். வவுனியா, பளை, மறவன்புலவு, பூநகரி என இத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தபடுகின்ற அனைத்து இடங்களிலும், இத்திட்டங்களுக்கு பாரிய எதிர்ப்பு நிலவியது; இன்னமும் நிலவுகிறது. ஆனால், புதுப்பிக்கத்தக்க சக்தியின் பெயரால், இவ்வெதிர்ப்புகள் கண்டுகொள்ளப்படவில்லை.
இவ்வெதிர்ப்புகளுக்குப் பல காரணங்கள் உண்டு. மன்னாரில் காற்றாலைகள் அமைந்துள்ள இடமானது, தனியாருக்குச் சொந்தமான காணிகளாகும். 1990களில் போரால் இடம்பெயர்ந்து, போரின் முடிவின் பின்னரே சொந்த இடங்களுக்குத் திரும்பிய மக்களிடமிருந்து காணிகளை அரசாங்கம் ‘காணி சுவீகரிப்புச் சட்டத்தின்’ அடிப்படையில் சுவீகரித்துக் கொண்டது. இதனால் அரசாங்கம் நிர்ணயித்த குறைந்த விலைக்கு இக்காணிகளை அரசுக்கே விற்க வேண்டி வந்தது.
மறவன்புலவில் காணிகளை மக்களிடமிருந்து வாங்கிய நிறுவனம், எதற்காக வாங்குகிறோம் என்று காரணத்தைச் சொல்லாமலேயே வாங்கியது. சில சந்தர்ப்பங்களில் மக்களுக்கு நல்லகுடி நீர் தருவதற்கான தொழிற்சாலை அமைக்கப்போவதாகச் சொன்னதான அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
பூநகரியில் திட்டமிட்டபடி காற்றாலைகளும் சூரியகலன்களும் கொண்ட திட்டம் அமைந்தால், மாடுகளின் மேய்ச்சல் நிலங்கள் இல்லாமல் போவதோடு மீனவருக்கான கடலுக்கான பாதைகள் தடைப்படும் என்று கௌதாரிமுனை மக்கள் அச்சப்படுகிறார்கள். கடந்த பத்தாண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டங்கள், மக்களின் பல நலன்களைக் கருத்தில் கொள்ளப்படாமல் மேற்கொள்ளப்பட்டவை.
இப்போது, புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டங்களை அரசாங்கம், அந்நியநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது. ‘அதானி’ நிறுவனத்துக்கு மன்னாரிலும் பூநகரியிலும் வழங்கப்பட்டுள்ள திட்டங்கள் எவ்வாறான விளைவுகளைக் கொண்டு வந்து சேர்க்கப்போகின்றன?
சம்பூரில் அனல்மின் நிலையத்துக்காக அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் மீளக்குடியேற்றப்படவில்லை. அதே இடத்தில் இப்போது, இந்தியா அரசாங்கம் பாரிய சூரியசக்தி திட்டமொன்றை உருவாக்குகின்றது.
அந்நிய நிறுவனங்களிடம் இத்தகைய திட்டங்களை ஒப்படைப்பது எமது மின்சாரத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குட்படுத்தும். இலங்கை, இந்நிறுவனங்களிடமிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்ய வேண்டிவரும். அப்போது மின்சாரத்துக்கான விலையைத் தீர்மானிப்பது இந்நிறுவனங்களாகவே இருக்கும்.
ஒருவேளை, இலங்கை அரசாங்கம் கோருகின்ற விலைக்கு மின்சாரத்தை விற்பனை செய்ய இந்நிறுவனங்கள் விரும்பாதவிடத்து, அவை மின்சாரத்தை இந்தியாவுக்கு விற்பனை செய்யவியலும். இது நாடுகளுக்கு இடையில் ஏற்படுத்தப்படவுள்ள மின்கம்பி இணைப்பு மூலம் சாத்தியமாகும்.
இந்தியாவால் நடைமுறைப்படுத்தபடவுள்ள இத்திட்டங்கள், அடிப்படையில் இந்தியாவுக்கு மின்சாரத்தை ஏற்றுமதி செய்வதை நோக்காகக் கொண்டவை என்பதை, ‘அதானி’ நிறுவனம் இலங்கைக்கு அனுப்பிய கடிதம் உறுதிசெய்கிறது.
இலங்கையின் நெருக்கடி, வளங்களை அந்நியர்களுக்குத் தாரை வார்ப்பதற்கான நியாயத்தை உருவாக்கியுள்ளது. இப்போது, எமக்கு அந்நியச் செலாவணி தேவை. அதற்காக எதையும் செய்யமுடியும் என்ற நிலையை அரசாங்கம் உருவாக்கியுள்ளது.
சக்தி நெருக்கடி, எவ்வாறு அந்நிய நிறுவனங்களுக்கு வாய்ப்பாக அமைந்ததோடு, எமது மின்சாரத்தேவைகளின் மீதான கட்டுப்பாட்டை இலங்கை இழந்து வருகிறதோ, அதேபோலவே ஏனைய பொதுத்துறைகளும் அந்நியக் கரங்களுக்குப் போகும் நாள் தொலைவில் இல்லை.
அரசியல்வாதிகளின் மீது மட்டும் பழியைப் போட்டுவிட்டு, அப்பால் நகரவியலாது. இலங்கையின் சக்தித் தேவைகளை நிறைவேற்றத் தேவையான சக்தி மூலங்களைக் கண்டடையாதது யார் குற்றம்? புதுப்பிக்கத்தக்க சக்தி நோக்கிய பயணத்தை நாம் மேற்கொள்ளாமல் போனது ஏன்? அமைச்சுகள், இலங்கை மின்சார சபை ஆகியன என்ன செய்து கொண்டிருந்தன?
புதுப்பிக்கத்தக்க சக்தியை, இலங்கை மின்சார சபை தொடர்ச்சியாக எதிர்த்து வந்தது ஏன்? இவையெல்லாம் பதிலை வேண்டும் வினாக்கள் மட்டுமல்ல, கொள்கை வகுப்பாளர்களும் தொடர்புடைய அரச அலுவலர்களும் மின்சார சபையும் என அனைவரும் பொறுப்புக்கூறக் கடமைப்பட்டவர்கள்.
ஆனால், அந்தப் பொறுப்புக்கூறலை நாம் கோருகிறோமா? கொள்கை வகுப்பாளர்கள், கொள்ளை வகுப்பாளர்களாக மாறிய தேசமதில், நாடு வளங்களையும் மக்கள் நிலங்களையும் இழப்பதில், அதிசயப்பட எதுவுமில்லை.