1976/77 இல் புத்தளம் பள்ளிவாசலுக்குள்ளே பொலிசார் நுழைந்து பொதுமக்களை சுட்டுக்கொன்ற வரலாறு உண்டு. சட்டத்தை மக்களை காக்கவேண்டிய பொலிசாரே பொதுமக்களை வழிபாட்டு இடம் என்றும் பாராமல் கொலைசெய்தார்களே அதை என்னவென்பது?
இதற்கெல்லாம் முன்பாக இந்துக் கோவில்களில் உரிமை போராட்டம் நடாத்திய ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக கோவில் வளாகங்களுக்கு உள்ளேயே வன்முறைகள் நடக்கவில்லையா?கத்தி,கண்டகோடாலி,வாட்கள் என ஆயுதங்கள் பதுக்கி வைக்கவில்லையா?இதற்கு பொலிஸ் மற்றும் உள்ளூராட்சி அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்கவில்லையா?ஆக இன்று மட்டும் பள்ளிவாசல்களில் கத்திகள் என ஊடகங்கள் ஊழையிடுகின்றன.
அல்பிரட் துரையப்பா ஒரு கிறிஸ்தவராக இருந்தும் இந்துக்கடவுளை வணங்கினார்.அவரை கொலை செய்ய புலிகள் தெரிவு செய்த வரதராஜ பெருமாள் ஆலயம் என்ன களியாட்ட மண்டபமா? அல்லது கடற்கரையா? அவரைக் கொல்ல வேறு இடம் கிடைக்கவில்லையா?
புலிகள் தமது தலைமைச் செயலகத்தை யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னால் அமைத்தார்களே அது சரியா? இந்திய இராணுவத்துடனான மோதலுக்கு பல்கலைக் கழக வளாகத்தை பாவித்தார்களே அது சரியா? பல்கலைக் கழகம் புனித இடம் இல்லையா?கொல்லப்பட்ட இந்திய இராணுவத்தின் உடல்களை நாகவிகாரைக்குள் வைத்து எரித்தார்களே அது என்ன மாவீர்ர் துயிலும் இல்லமா?சுடலையா?
திலீபனின் உடலை சுதுமலை அம்மன் கோவில் வாசலில் வைத்தார்களே அது வழிபாட்டு இடம் இல்லையா?அது சுதுமலை அம்மன் கோவிலில் நின்று உடுவில் இந்திய இராணுவ முகாமுக்கு செல் அடித்தார்கள்.மானிப்பாய் மெமோரியல் வைத்தியசாலையில் இருந்து உடுவில் இராணுவ முகாமுக்கு செல் அடித்தார்கள்.இவை எல்லாவற்றையும் மறந்துவிட்டு பலர் பேசுகிறார்கள்.தலதா மாளிகை மீதான தாக்குதலை மறக்க முடியுமா?
இலங்கையில் மிக கொடூரமான படுகொலைகள் என்றால் காத்தான்குடி படுகொலைகள்தான்.அறுபதுக்கும் அதிகமான பிஞ்சுக் குழந்தைகளைக்கூட புலிகள் விட்டுவைக்கவில்லை.இவை எல்லாம் மறந்து புலிகளுக்கு இலட்சியம் இருந்தது.இஸ்லாத்தின் பெயரால் நடத்தப்பட்ட பயங்கரவாதிகளுக்கு என்ன இருக்கிறது? என்ற கேள்வி வேறு.
அவர்கள்தான் பயங்கரவாதிகள் .உலகம் அறிந்த உண்மை.புலிகள் போராட்டம் என்ற பெயரால் வெறியாட்டம் நடத்தினார்கள்.இவர்களை போராளிகள் இலட்சியவாதிகள் என்று இப்போது புதிய ஆராதனை.வன்முறைகளை யார் நடாத்தினாலும் வன்முறைதான்.
எங்கள் ஆட்கள் செய்தால் அவரை தற்கொடையாளிகள் என வரைவிலக்கணம் வேறு.புகழ்ச்சி உரைகள் அப்ப்பா சொல்லவே தேவையில்லை.
எத்தனை அய்யர்கள் கிறிஸ்தவ மதகுருமார்கள் இரகசியமாக புலிப் பயங்கரவாதிகளுக்கு உதவியிருக்கிறார்கள்.இதனால் சிலர் சிறையிலும் இருந்தார்களே.அதை மறந்துவிட்டுப் பேசுகிறோம்.ஒரு அய்யர் பெண் புலிகளுக்கான தற்கொலை அங்கிகளை கடத்திக் கொண்டுவந்து கொழும்பு செக்குத் தெரு கதிரேசன் கோவிலில் ஒழித்துவிட்டு தப்பிவிட்டார்.இதனால் அந்தக் கோவில் தர்மகர்த்தா சிறைவாசம் அனுபவித்து பின்னர் இராணுவ புலனாய்வுப் பிரிவினரால் கொல்லப்பட்டார்.
இன்று நடைபெற்ற துயரமான சம்பவங்கள் ஒரு சில இஸ்லாமிய மதம் சார்ந்தவர்களால் நடத்தப்பட்டது என்பதற்காக அந்த மதம் சார்ந்தவர்களை சந்தேகப்படுவது மனம் காயப்படும்படியாக கதைப்பது எழுதுவது நிறுத்தப்பட வேண்டும்.
(Vijay Baskaran)