நீங்களே மீறலாமா முதல்வரே?
கரோனா தொற்று தொடர்பாக சில நாட்களுக்கு முன்பு கர்நாடக முதல்வர் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்தார். வணிக வளாகங்கள், திரையரங்குகள் போன்றவற்றை மூட உத்தரவிட்டார். நூறு பேருக்கும் மேற்பட்டார் கூடும் நிகழ்வுகளுக்குத் தடைவிதித்தார். எனினும், உபதேசமெல்ல்லாம் ஊருக்குத்தான்போல என்று அவரை கர்நாடகத்தின் எதிர்க்கட்சியினரும் சமூகச் செயல்பாட்டாளர்களும் காய்ச்சி எடுத்துக்கொண்டிருக்கின்றனர். ஆம், பெலாகவி என்ற ஊரில் 2 ஆயிரம் பேர் கூடிய திருமண நிகழ்ச்சியில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா கலந்துகொண்டிருக்கிறார். கர்நாடக பாஜகவின் சட்டமன்றக் கொறடா கவட்கிமத்தின் இல்லத் திருமணம் அது. “திருமணத்தில் கலந்துகொண்டது பொறுப்பற்ற செயல். ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர் தன்னுடைய விதிமுறைகளைத் தானே மதிக்கவில்லை என்றால் மக்கள் எப்படி மதிப்பார்கள்” என்று கேட்கிறார் காங்கிரஸின் செய்தித் தொடர்பாளர் இவான் டி’சோசா. காது கேட்கிறதா?