(ப. தெய்வீகன்)
சாய்ந்தமருதில் படையினருக்கும் தீவிரவாதக்குழுவுக்கும் இடையில் நடைபெற்ற சண்டையில் தற்கொலைக்குண்டுதாக்குதல் மேற்கொண்டு இறந்துபோனவனின் மகளை படையினர் பாதுகாப்பாக தூக்கிக்கொண்டு வந்து அம்புலன்ஸ் வண்டியில் ஏற்றுகிறார்கள். இரத்தக்கறைகளை துடைத்துவிடுகிறார்கள். ஆயுதங்கள் தரித்த சீருடைப்படையினர் அவளை தூக்கிக்கொண்டுவரும்போது அவள் கதறி அழவில்லை. அவளுக்கு தன்னைச்சுற்றி என்ன நடைபெறுகிறது என்றே தெரியவில்லை. அதிர்ச்சியிலிருக்கிறாளா அல்லது நேற்றிரவு வரை அப்பாவும் இப்படித்தான் ஆயுதத்துடன் இருந்தாரே, அவருடனும் இவர்களைப்போல இன்னும்பலர் ஆயுதங்களுடன் இருந்தனரே என்று பழக்கப்பட்டுவிட்டாளா தெரியவில்லை. ஆனால், அம்புலன்ஸ் வண்டிக்குள் ஏற்றி, கிடத்தி வைத்து இரத்தக்கறைகளை துடைத்துவிடுகின்றபோதுதான், அவள் கைகள் நடுங்கிக்கொண்டிருப்பது தெரிகிறது. கூடவே, அப்போதுதான் அதிச்சியுற்று நினைவு திரும்பியவள்போல சூழ்நிலையை வித்தியாசமாக உணர்வதாகவும் தெரிகிறாள்.