(சுகு ஸ்ரீதரன் நேர்காணல் – கருணாகரன்)
தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கும் சுகு ஸ்ரீதரன், ஈழவிடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகாலப் போராளிகளில் ஒருவர். ஏறக்குறைய 45 ஆண்டு கால அரசியல் போராட்ட வரலாற்றைக் கொண்டவர். ஆயுதப் போராட்ட அரசியல், ஜனநாயக நீரோட்ட அரசியல் என இரண்டிலும் செழிப்பான அனுபவங்களைக் கொண்ட சுகு, பல தரப்பினருடைய மதிப்பையும் தன்னுடைய நற்குணத்தினாலும் சிந்தனைத் திறத்தினாலும் பெற்றவர். புதுடில்லி, தமிழ்நாடு, தென்னிலங்கை, மலையகம் என விரிந்த பரப்பில் அரசியல் உறவுகளைக் கொண்டிருக்கும் சுகுவுக்கு, தமிழ், முஸ்லிம், மலையக மக்களிடத்திலும் அந்தந்தச் சமூகத் தலைமைகளிடத்திலும் மதிப்புண்டு. எதையும் வித்தியாசமாகச் சந்திக்கும் இயல்பும், எந்தப் பிரச்சினையையும் அதன் வரலாற்றுச் சூழலிலும் சமூகச் சூழலிலும் சர்வதேசச் சூழலிலும் வைத்துப் பார்க்கும் தன்மையும் சுகுவின் அடையாளமாகும். இதற்குக் காரணம், அவரிடமுள்ள அரசியல், சமூகவியல், இலக்கியம், வரலாறு, பண்பாடு, பொருளாரம், மானுடவியல், சூழலியல் எனப் பன்முக வாசிப்பே. 45 ஆண்டு கால அரசியல் வாழ்வில், தலைமறைவு வாழ்க்கை, சிறை, அரசியல் வகுப்புகள், களப்பணி, மக்கள் போராட்டங்கள், தேர்தல் அரசியல் எனப் பலவற்றையும் சந்தித்த ஆளுமை.
1. இனப்பிரச்சினைத் தீர்வுக்கு ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த இளைஞர்களும் இயக்கங்களும் தோற்றுப் பின்வாங்கியதற்கான காரணம் என்ன?
சகோதரப் படுகொலை. அதன் விளைவு, மக்கள் மத்தியில் ஏற்பட்ட அவ நம்பிக்கை. சர்வதேச பிராந்திய எதார்த்தங்களை புரிந்து கொள்ளாமை. சக சமூகங்கள் மீதான பகைமை, படுகொலைகள்…. சர்வதேச, தேசிய தலைவர்கள் மீதான தாக்குதல்கள்.
தோற்றுப் பின்வாங்கவில்லை. உள்ளிருந்தே பின்வாங்கச் செய்யப்பட்டது.
2. இவற்றை ஏன் முன்னுணரவில்லை? அப்போதே சர்வதேச அரசியல் பார்வையை இந்த இளைஞர்களும் இயக்கங்களும் முன்வைத்ததுண்டு. அப்படியிருந்த போதும் தவறுகளின் மேல் தவறுகள் ஏன் நிகழ்ந்தன?
பொத்தம் பொதுவாக இவ்வாறு கூற முடியாது. எல்லா இயக்கங்களுக்கும் அவ்வாறான சர்வதேசப் பார்வை இருந்தது என்று கூற முடியாது. குறுங்குழுவாத சிந்தனையே தூக்கலாக இருந்தது. சில இயக்கங்களுக்கு அவ்வாறான பார்வை இருந்தாலும் செயற்படுவதற்கான சமூக இடைவெளி அழிக்கப்பட்டிருந்தது.
3. ஆயுதப்போராட்ட இயக்கங்களின் வழிமுறையை நிகராகரித்த அல்லது அதற்கு வெளியே நின்ற அன்றைய தமிழர் விடுதலைக் கூட்டணியின் அல்லது இன்றைய தமிழ்த்தேசிய அடையாளக் கட்சிகளின் நிழலில் பின்னாளில் இந்த இயக்கங்கள் சரணடைய வேண்டி வந்ததை எப்படிப் பார்க்கிறீர்கள்?
அரசியல் அற்ற ஆயுதம். கண் மண் தெரியாமல் செய்த படுகொலைகள். ஜனநாயக மறுப்பு. பெருவாரியான இளைஞர் யுவதிகளின் அர்ப்பணிப்புகளை இழிவாக்கி, “ஆசாடபூதி பிரமுகர்கள் மேல்” என்ற நிலையை சமூகத்தில் உருவாக்கியது. ஊழலும் அயோக்கியத்தனமும் கபடதாரித்தனமான பாரம்பரிய ஆளும் வர்க்க அரசியல் படுகொலை, அரசியலுக்கு இது பரவாயில்லை என்றவாறு மக்களினதும் போராளிகளதும் அர்ப்பணங்கள் அவமாக்கப்பட்டது.
4. புலிகளின் காலத்திற்கும் (2009 க்கு முன்பும்) அதற்குப் பின்னுள்ள இன்றைய நிலைக்கும் உள்ள வேறுபாட்டை – அரசியல் நிலைமையை எப்படிப்பார்க்கிறீர்கள்?
புலிகளின் காலத்தில் ஜனநாயக இடைவெளி இருக்கவில்லை. மாற்றுக் கருத்துக் கொண்டோரை உயிர் மீதமின்றி அழிக்கும் போக்கே மேலோங்கி துருத்திக் கொண்டிருந்தது. இன்று 100 கருத்துக்கள் முட்டி மோதுவதற்கான இடைவெளி இருக்கிறது. ஆனால், ஏற்கனவே 2009 க்கு முன்னர் இருந்த தலைமுறைகள் அழிந்து விட்டன. ஆளுமையுள்ள தலைமைத்துவங்கள் அழிக்கப்பட்டன. அரசியல் தலைமைத்துவம் மாத்திரம் அல்ல. அறிவு ஜீவிகள், தொழிற்சங்கவாதிகள், ஊடகவியலாளர்கள் பலர் கொல்லப்பட்டனர். கணிசமான பகுதியினர் புலம்பெயர்ந்து சென்று விட்டனர். ஒரு வறண்ட சமூகம் மிச்சமாகி விட்டிருக்கிறது. ஒரு கணம் சிந்தித்துப்பாருங்கள். இவர்கள் உயிருடன் இருந்தால் எத்தனை பெரிய சமூக வளம்! வாராது வந்துற்ற மாமணிகளை தோற்றோம்.
5. இன்றைய நிலையில் இனப்பிரச்சினைக்கான தீர்வை எட்டுவது எப்படி? அதற்குச் சாத்தியமான வழிகள்?
தமிழ் பேசும் மக்களின் நிலை தற்காப்பு நிலையே இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவான மாகாண சபை முறைமை. அனைத்து சமூகங்களுக்காகவும் அதனை நாம் ஆதரித்துக் கொண்டு அதன் அதிகாரங்களை 1988இல் சொல்லப்பட்டவாறு உள்ளது உள்ளபடி முழுமையாக பகிர்ந்து கொள்ள முயல்வதே சிறப்பு.
மற்ற நிலைப்பாடுகள் எவ்வாறு இருந்தாலும் இந்த ஒரு விடயத்திலாவது தமிழ் முஸ்லிம் சிங்கள மலையக ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும். இல்லாவிட்டால் முடியாது.
6. இந்த வழிகளைக் குறித்து ஒருமித்த எண்ணம் தமிழ், சிங்கள, முஸ்லிம் கட்சிகளிடத்தில் இல்லையே!
ஆரம்பத்திலேயே கூறியவாறு இதுதான் இங்கு பிரச்சனை. வடக்கு கிழக்கு தமிழ் கட்சிகளிடம் எப்போதாவது இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக ஒருமித்த கருத்து நிலவியதா அல்லது புரிதல் இருந்ததா? எப்போதாவது விதிவிலக்கான சந்தர்ப்பங்களை தவிர. இதற்கு தமிழ் முஸ்லிம் மலையக சிங்கள ஜனநாயக சக்திகள் இடையே புரிதலை உண்டாக்குவது ஒரு சவால். ஆனால் அதனைச் செய்துதான் ஆகவேண்டும். 2022 இல் நடந்த அரகலய எழுச்சிச் சூழல் கூடவோ குறையவோ ஒரு இணைந்து செயல்படுவதற்கான வெளியை உருவாக்கி இருக்கிறது. இந்த எழுச்சி இனவாத சக்திகளுக்குத் தடுமாற்றங்களை உண்டாக்கியது. ஆனால் தற்போது மீண்டும் இன மதவாத சக்திகள் சமூகங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் பதட்டங்களையும் பூசல்களையும் உருவாக்குகின்றன .இவற்றைத் தாண்டியாக வேண்டும்.
7. இனப்பிரச்சினைக்கான தீர்விலும் இலங்கையின் அரசியல் பொருளாதார நிலைப்படுத்தலிலும் இந்தியாவின் அனுசரணை, வகிபாகம் குறித்துத் தொடர்ச்சியாகப் பேசப்படுகிறது. ஆனாலும் இந்தியா இன்னும் இனப்பிரச்சினைக்கான தீர்வில் ஒரு தீர்க்கமான முடிவை எடுத்திருப்பதாகத் தெரியவில்லையே!
ஒரே ஒருவிடயம் தான் இருக்கிறது. இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாக உருவாக்கப்பட்ட மாகாண சபை முறை. அதனை வலுப்படுத்தச் சொல்லி இலங்கை அரசுக்கும் தமிழ் மற்றும் இதர சமூகத் தலைவர்களுக்கும் இந்தியா தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது. கரிசனைகள் முதலில் இலங்கையில் இருந்து வர வேண்டும். அனைத்து சமூக தலைமைகளிடமிருந்தும் வர வேண்டும். கூட குறைய இந்திய முறையை ஒத்த பிராந்திய மட்டத்தில் அதிகார கட்டமைப்பை இலங்கையில் உருவாக்குவதில் இந்தியா பங்களித்திருக்கிறது.
பிரதானமாக காரியமாற்ற வேண்டியவர்கள் இங்கு உள்ளவர்கள். அனைத்து சமுகங்களின் தலைவர்களும்.
8. உண்மையில் இந்தியா யாருக்கு ஆதரவாக உள்ளது? தமிழர்களுக்காகவா, சிங்களவர்களுக்காகவா அல்லது தமிழ், சிங்கள, முஸ்லிம், மலையக மக்கள் என்ற இலங்கை மக்களுக்காகவா? அப்படியென்றால் இன ஒடுக்குமுறையை இந்தியா எப்படிப் பார்க்கிறது?
அனைத்து சமூகங்களுக்கும் இந்தியாவுடன் மொழி கலாச்சார பாரம்பரிய உறவுகள் உண்டு.
140 கோடி மக்களை கொண்ட ஒரு உபகண்டம் என்ற அளவில் மிக மிக அனைத்து இலங்கையர்களுடனும் உறவை பேணுவது பிரதான போக்காக இருக்கும். மற்றது அவர்களிடம் இந்தியாவின் பாதுகாப்பு, சமூக பொருளாதார உறவுகள் சார்ந்தும் கரிசனைகள் இருக்கும். உலகில் நாடுகளுக்கு இடையிலான உறவுகள் அவ்வாறுதான் அமைகின்றன. 22 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நாடு தொடர்பான கரிசனங்கள் தீவிரமானவை. இலங்கை இந்திய உபகண்டத்தின் பரஸ்பர நலன்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மக்களிடையிலான உறவுகள் பற்றிய கரிசனை வேண்டும் .பரந்த உலகில் வாழ்வதற்கு எம்மை தகவமைக்க வேண்டும். தீவுச் சிந்தனைகளுக்குள் மூழ்கி விட முடியாது.
9. இனப்பிரச்சினைத் தீர்வில் இலங்கை அரசும் சிங்கள அதிகாரத்தரப்புகளும் (கட்சிகள், ஊடகங்கள், புத்திஜீவிகள், மதபீடங்கள்) எவ்விதம் செயற்பட வேண்டும்? இதை எப்படிச் சாத்தியப்படுத்துவது?
அதற்கான ஒரு பொதுவான இயல்பு, போக்கு எதார்த்தமானது அல்ல. இதில் அவரவரின் வர்க்க நலன்கள் இருக்கின்றன. எனினும் இந்த உலகில் இலங்கை என்ற நாடு கண்ணியமாகவும் சுயமரியாதையாகவும் தன்னை நிலை நிறுத்த வேண்டுமானால் பல இனமாகவும் மொழிகளின் நாடாகவும் மதச்சார்பற்ற நாடாகவும் இராணுவவாத மதவாத இனவாத முன்னுரிமைகள் களையப்பட்ட நாடாகவும் அமைய வேண்டும். 2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற அரகலய எழுச்சியில் அத்தகைய சில கூறுகள் காணப்பட்டன. அது வளர்த்தெடுக்கப்பட வேண்டும். சமூக பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீள வேண்டும். இதை விட வேறு மார்க்கம் கிடையாது.
10. நாடு பொருளாதார ரீதியில் பிற நாடுகளிடத்திலும் உலக நிதி நிறுவனங்களிலும் கையேந்திக் கொண்டிருக்கும் நிலையிலும் இனவாதச் சிந்தனை குறையவில்லையே! தொல்பொருட் திணைக்களத்தின் நடவடிக்கைகள் தொடக்கம் தமிழ்த் தரப்பினால் மேற்கொள்ளப்படும் அதிதீவிர நிலைப்பாடுகள் வரையில் ஏட்டிக்குப் போட்டியாக இதைக் காணமுடிகிறது. யுத்தமும் பொருளாதார நெருக்கடியும் தந்த படிப்பினைகள் என்ன?
நம்மில் ஒற்றுமை இல்லையேல் அனைவருக்கும் தாழ்வு என்பதுதான் படிப்பினை. ஆனால் அந்தப் படிப்பினையை எடுத்துக் கொண்டு முன் செல்வதற்கான அறிகுறிகள் குறைவாகவே காணப்படுகின்றது. வாழ்வா சாவா என்ற பொருளாதாரச் சவாலை இலங்கை எதிர்நோக்கி நிற்கையில் இந்தத் தொல்பொருள் தேடுதல்கள் இனமதவாத பகைமைகளைத் தெரிந்தும் மீள முடியாதபடுகுழியில் வீழ்தலே போலத்தான். பரஸ்பரம் உடன்கட்டை ஏறல் போலத்தான். இனமத மோதல்கள் எம்மை அழிக்கும் அபாயகரமான போதை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த மதவாதிகளும் இனவாத அரசியல்வாதிகளும் நாட்டின் அனைத்து சமூகங்களையும் நரகப் படுகுழியில் தள்ளும் போதை வியாபாரிகள் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.
11. இனப்பிரச்சினைத் தீர்வுக்கு வடக்குக் கிழக்கு இணைப்பும் சுயாட்சிக்குரிய அடிப்படைகளைப் பற்றியும் தமிழ்த்தரப்பினால் வலியுறுத்தப்படுகிறது. இதில் முஸ்லிம்களின் நிலைப்பாட்டையும் கிழக்குத் தமிழர்களின் எண்ணங்களையும் எப்படிச் சரியாக இணைத்துக் கொள்ள வேண்டும்?
இதற்கு யாரையும் வில்லங்கப் படுத்த முடியாது. அதிகமான உரையாடல் வேண்டும். தமிழ் தரப்பு யார் என்ற பிரச்சினையும் இருக்கிறது. நாங்கள்தான் தமிழ் தரப்பு என்று யாரும் உரிமை கொண்டாடினால் இன்றைய நிலையில் அது சரியாக இருக்காது.
பரஸ்பரம் பரந்தஅளவில் தமிழ் முஸ்லிம் தரப்பினரிடமும் சிவில் சமூகம் உட்பட பரந்த உரையாடல் வேண்டும். அதேபோல் மலையக சிங்கள மக்களுடனும் உரையாட வேண்டும். பரஸ்பர அவநம்பிக்கைகள் குறைந்து போவதற்கு வழி காணப்பட வேண்டும்.
12. இனப்பிரச்சினைத் தீர்வை முஸ்லிம்களும் இணைந்தே காணமுடியும். ஆனாலும் தமிழ் – முஸ்லிம் தரப்புகளிடையே (கட்சிகளுக்கிடையிலும் சரி, சமூகங்களுக்கிடையிலும்சரி) இன்னும் சரியான புரிந்துணர்வும் ஒருமித்த நிலைப்பாடும் எட்டப்படவில்லையே! இதற்கான காரணம் என்ன? இதை எப்படிச் சாத்தியப்படுத்துவது?
அவர்கள் தமிழ் பேசுபவர்கள் ஆக இருந்தாலும் முஸ்லிம் மக்களின் தனித்துவங்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும். அந்த மக்களின் பாரம்பரிய வாழ்வு, சமூக பொருளாதார நிலைமைகள், வடக்குக் கிழக்கில் அவர்களுடைய நியாயமான அச்சங்கள் புரிந்து கொள்ளப்பட வேண்டும். 1990 இல் உடுத்த துணியுடன் வெளியேற்றப்பட்டது தொடர்பாக தமிழர் தரப்பில் ஆக்கபூர்வமான விமர்சனங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. இது தமிழ் தேசிய அவமானம். அந்த மக்கள் உரிய முறையில் திரும்ப வரவேற்கப்படவும் இல்லை. தமிழ் பேசும் மக்களாக வாழ்ந்த காலம் சிதைந்து நீண்ட காலம் ஆகிவிட்டது. இரத்தம் தோய்ந்த சகோதர சமூக அனுபவங்கள் இருக்கின்றன. இதைக் கடப்பதற்கு பரஸ்பர புரிதலுக்கான கடுமையான முயற்சிகள் வேண்டும் . சமூகங்களுக்குள்ளே தோன்றிய மதவாத இனவாத பிரதேசவாத சக்திகள் சமூகத்தை துண்டு துண்டாக உடைத்துக் கொண்டிருக்கின்றன என்பது வேதனையான உண்மை. இவர்கள் இந்த மதம் என்ற பிரக்ஞையே இல்லாத இடங்களில் எல்லாம் அவை செயற்கையாக உருவாக்கப்படுகின்றன.
13. தமிழ்த் தேசியவாதம் உள்வாங்கும் தேசியவாதமாக (Inclusive nationalism) கட்டமைக்கப்படவில்லை. அதனால்தான் அதற்குள் இன, மத, சாதி, பால், பிரதேச வேறுபாடுகள் துருத்திக் கொண்டுள்ளன என்ற குற்றச்சாட்டுப்பற்றி?
துரதிஷ்டவசமான இந்த உண்மையை இங்கு குறிப்பிட்டு தான் ஆக வேண்டும். யாழ் மைய தமிழ் தேசியம் சாதிய, பெண்ணடக்குமுறை போன்றனவெல்லாம் இவற்றின் மேல்தான் எழுந்தது. இதன் மேலாதிக்கம் இன்றளவிலும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. சக சமூக விரோதங்களும் சக இயக்கவிரோதங்களும் அண்டை நாட்டு மீதான விரோதமும் இங்கிருந்துதான் மேற்கிளம்புகின்றன. புலம்பெயர்ந்து சென்று பல்வேறு சமூகங்கள் மத்தியில் வாழ்ந்தாலும் இது தகர வில்லை.
சக மனிதர்களுடன் சேர்ந்து வாழ இதற்கு பயிற்சி அளிக்க வேண்டியிருக்கிறது. கிணற்றுத்தவளை மனோ நிலையில் இருந்து இது விடுபட வேண்டும். உபகண்ட அளவில் இலங்கையின் அனைத்து சமூகங்களும் இயங்குவதனால்தான் இதற்கு பரந்த இயல்பை கொண்டு வர முடியும்.
14. தமிழ்த்தேசியவாதத்தின் ஜனநாயகக் குறைபாடுகளைப் பற்றி?
அது ஒரு குறைபாடு என்று குறை மதிப்பீடு செய்து விட முடியாது. அது மிகவும் பாரதூரமானது. பால் சமத்துவம், சமூக நீதி, பிரதேசங்கள் இடையிலான சமத்துவம், இவற்றுக்கப்பால் சக அரசியல் சமூக இயக்கங்கள், சக சமூகங்கள் பற்றி சகிப்புத்தன்மை கொண்டதல்ல. யாழ்மைய மத்திய தரவர்க்க அரசியல் மேலாதிக்கம் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும். தமிழ் முஸ்லிம் மலையக மக்களிடையே சமத்துவம் சகோதரத்துவம் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும்.
வரலாற்று பூர்வமாகவே இந்த மேலாதிக்கம் பற்றிய கசப்பான அனுபவங்களும் எச்சரிக்கை உணர்வும் சந்தேகங்களும் இருக்கின்றன.
15. தமிழர்கள் ஒரு தேசமாகத் திரள வேண்டும் என்பது இனப்பிரச்சினைத் தீர்வுக்குத் தரக்கூடிய சாதகங்கள் என்ன? பாதக நிலை என்ன?
கடந்த காலம் போல் இப்போது சிந்திக்க முடியாது .புதிய எதார்த்தங்களை கரிசனைக்கு எடுக்க வேண்டும் .மொழி சார்ந்து மாத்திரம் அல்லாமல் பிரதேசம், பொருளாதார பண்பாட்டு அம்சங்கள் போன்றவற்றையும் கரிசனைக்கெடுக்க வேண்டும் .ஜனநாயக பூர்வமாகவே இந்த விடயம் அணுகப்பட வேண்டும். யாழ் மைய சிந்தனையில் இருந்து அகத்தியரின் கமண்டலத்துக்குள் காவிரியை அடக்கியது போல் இதை அடக்கிவிட முடியாது. எதார்த்தம் நம் முன் இருக்கிறது. அதே வேளை பேரினவாத ஒடுக்குமுறை தமிழ் முஸ்லிம் மலையக தேசிய சமூகங்களை ஒன்றிணைப்பதற்கான எதார்த்த அவசியத்தை உணர்த்தி நிற்கிறது. அது ஜனநாயக பூர்வமாகவே மேற்கொள்ளப்பட முடியும். கிழக்கு வடக்கு மாகாணங்களுக்கு இடையில் உள்ள பிரச்சனைகளும் முஸ்லிம் மக்கள் உடனான உறவுகளும் உரையாடல்கள், உடன்பாடுகளின் ஊடாகவே எட்டப்பட முடியும்.
16. சிங்களத் தேசியவாதம், தமிழ்த்தேசியவாதம், முஸ்லிம் தேசியவாதம், மலையகத் தேசியவாதம் என இன்று இன ரீதியான தேசியவாத உணர்வு கூர்மைப்பட்டிருக்கிறது. இந்தச் சூழலில் பகை மறப்பு, நல்லிணக்கம், அரசியல் தீர்வு, சமாதானம் போன்றவற்றை எட்டுவது எப்படி?
இலங்கையின் இன மத மொழி பன்மைத்துவத்தை அந்த யதார்த்தத்தை மானசீகமாக ஏற்றுக் கொள்ளாமல் இது சாத்தியப்படாது. இதயங்கள் இங்கு இணைய வேண்டும்.
இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்திலேயே மதச்சார்பற்ற நாடாக பிரகடனம் செய்யப்பட்டது. அதே நேரத்தில் இந்தியாவின் பலமொழி, பல்கலாச்சார தன்மை கருத்தில் எடுக்கப்பட்டது. அதனால் தான் இன்றளவில் இந்தியா இந்தியாவாக இருக்கிறது.
இலங்கை மத இனச் சார்பற்ற நாடாக மாறுவதற்கான நெடும் பயணம் மேற்கொள்ள வேண்டும். அதே வேளை சிங்கள தமிழ் முஸ்லிம் மலையக பறங்கி மலாய் மக்களின் பிரதேச ரீதியான ஏற்றதாழ்வுகளைக் கரிசனைக்கெடுத்த அதிகாரப் பகிர்ந்தளிப்பு, சமத்துவத்தை உறுதி செய்வதற்கான ஏற்பாடுகள் அவசியம்.
17. பிரதான அரசியற் தலைமைகளும் கட்சிகளும் ஊடகங்களும் பகை மறப்பிற்கும் நல்லிணக்கத்துக்கும் இனப்பிரச்சினைத் தீர்வுக்கும் தயங்குவது ஏன்?
அவர்கள் தமது வர்க்க நிலைகளில் இருந்தும் இன மத சாதி பெருமித உணர்வுகளிலிருந்தும் நிலப் பிரபுத்துவ மனப்பாங்குகளில் இருந்தும் சிறு முதலாளித்துவ உணர்வுகளில் இருந்தும் சிந்திக்கிறார்கள். அனைத்து மாந்தர்கள், அவர்களின் தனித்துவங்கள், அபிலாசைகள், இவற்றை ஒன்றிணைத்து முன் செல்லும் கனவுகள் அவர்களிடம் இல்லை. இருக்காது.
எல்லோரும் ஒன்று என்று தேர்தல் காலங்களிலும் சில சிறப்பான நாட்களிலும் உதட்டால் கூறுவார்கள். ஆனால் மானசீகமாக இல்லை.
தீர்க்கதரிசனமும் ஆளுமையும் துரதிருஷ்டியும் மானுட நேயமும் சமூகவாஞ்சையும் இதற்கு முன் நிபந்தனை.
இலங்கை பாழ்பட்டு வறுமை மிஞ்சி போய்க் கிடப்பதற்கு காரணம், இந்த சிறுமதியே என்றால் அது மிகையல்ல.
எமது அண்டை நாட்டில் காந்தி, நேரு, கான் அப்துல் கபார்கான், அம்பேத்கர், பெரியார், கஸ்தூரிபா, விஜயலட்சுமி, மணியம்மை போன்ற தலைவர்களும் ஆளுமைகளும் தாகூர், பாரதி, மைதிலி, சரண் குப்தா போன்ற கவிஞர்களும் இருந்தனர்.
துரதிஷ்டவசமாக எமக்கு இவை அரிதாகவே அமைந்தன.
தெற்கிலும் வடக்கிலும் நிலவிய ஜனநாயக விரோத நிலமைகளும் இத்தகைய தலைமைத்துவங்கள் உருவாவதற்கான நிலைமைகளை இல்லாது ஒழித்தன. சிரச்சேதம் செய்தன.
18. போரும் பொருளாதார நெருக்கடியும் மக்களின் மனங்களிலும் அரசியல்வாதிகளின் மனதிலும் மாற்றங்களை உருவாக்கவில்லை, பிரச்சினையைத் தீர்க்கும் வழிமுறையைப் பற்றிச் சிந்திக்க வைக்கவில்லை என்றால், அடுத்த கட்டம் என்ன?
வரலாறு வெற்றிடத்தை விட்டு வைப்பதில்லை . 2022ல் பிரமாண்டமான பொது ஜன எழுச்சி ஒன்று ஏற்படும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
1970 களின் முற்பகுதியில் தெற்கிலும் 1980 களிலிருந்து 2009 வரை வடக்கில் போராட்டம், யுத்தம் வரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை .
ஆளும் அரசியல் வர்க்கம் தானாகத்திருந்தும் என்று எதிர்பார்க்க முடியாது. சமூக அழுத்தத்தின் மீதுதான் மாற்றங்கள் நிகழ்கின்றன. வாழ்க்கை சகிக்க முடியாததாக மாறும்போது சமூகம் எழுச்சியுறும். அப்போது தூரதிருஸ்டியும் தீர்க்கதரிசனமும் உள்ள தலைமைத்துவம் உருவாக வேண்டும். அதற்கு அதனிடம் மானுட நேய கொள்கைகள் வேண்டும். இல்லாவிடில் அராஜகமும் பேரழிவும்தான் ஏடறிந்த வரலாறு பூராவும் உள்ளது. காட்டுமிராண்டித்தனத்திற்கும் சர்வாதிகாரத்திற்கும் நாகரீகத்திற்கும் இடையிலான போராட்டத்தின் ஊடாகத்தான் மனித குலம் முன்னேறி வந்திருக்கிறது.
19. தமிழ்க்கட்சிகளிடையே ஒற்றுமையைப் பற்றித் தொடர்ந்து பேசப்படுகிறது. தமிழ்த்தேசியவாதக் கட்சிகளோடும் சரி, அதற்கு வெளியே நிற்கும் நீங்கள் (தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி) சமத்துவக் கட்சி, புதிய ஜனநாயக மாக்ஸிஸ லெனினிஸக் கட்சி, கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், தமிழர் மகா சபை உள்ளிட்ட கட்சிகள் போன்றவற்றுடன் ஏன் ஒரு உடன்பாட்டுக்கு – மாற்று அணியொன்றின் உருவாக்கத்துக்குக் கை கோர்க்க முடியாது?
உடன்பாடு என்பது கொள்கை வழிபட்டது. தவிர, குறிப்பிட்ட சில பிரச்சினைகள் தொடர்பாக, சமூக பொருளாதார அரசியல் விவகாரங்கள் தொடர்பாக, ஐக்கியமாக செயல்பட வேண்டும். ஒன்றிணைதல் என்பதை விட பரந்த ஐக்கிய முன்னணியே இங்கு முதன்மையான விடயம். எல்லாரும் ஒன்று சேர்தல் என்பது எதார்த்தமானதல்ல. இலங்கையின் தெற்கில் உள்ள ஜனநாயக முற்போக்கு சக்திகள், மலையக முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சக்திகள், இவை எல்லாவற்றுடனும் ஐக்கியம் ஒருங்கிணைவு வேண்டும். வேற்றுமையில் ஒற்றுமை காண வேண்டும்.
ஆனால் யாழ் மத்தியதரவர்க்க சிந்தனை ஆதிக்கம் நிறைந்த அரசியல் வானம் கிணற்றின் வாயளவு என்ற சிந்தனை கொண்டது. தமிழ்த் தேசிய புனிதர்கள் என்ற பாசாங்கும் இங்கிருந்துதான் நிகழ்கிறது. மற்றும் துரோகி தியாகி வகையறாக்கள். இது முதலில் தகர்க்கப்பட வேண்டும். குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்ற மனநிலையுடன் அணுகுவதன் மூலம் மாத்திரமே பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.
வடக்கு கிழக்கு பிரதேசத்தில் வாழும் நாம் அவிழ்த்து விடப்பட்ட நெல்லிக்காய் மூடை போல் வாழ்ந்து கொண்டு வீறாப்பு பேசுவோம். இந்த போலித்தனத்தை முதலில் கைவிட வேண்டும்.
20. ஈ.பி.ஆர்.எல்.எவ்வுக்கென்றொரு வரலாற்றுப் பாத்திரமும் பங்களிப்பும் உண்டு. ஆயிரம் விமர்சனங்களுக்கு அப்பாலும் நெருக்கடிகளின் மத்தியில் ஈ.பி.ஆர்.எல்.எவ் எடுத்த மாகாணசபையே இன்று எஞ்சியிருக்கும் ஒன்று. ஆனால், இன்று அதை பிற சக்திகள் (தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு) தங்கள் கையில் எடுத்துள்ளன. இந்த நிலையில் மாகாணசபையை மீள உங்கள் தரப்பு கையெடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டா?
அது எம்மை மாத்திரம் சார்ந்ததல்ல. சமூக எதார்த்த நிலைமைகள் சார்ந்தது. அதனை உருவாக்க எமது தோழர்கள் அர்ப்பணித்து இருக்கிறார்கள். வரலாறு முழுவதும் அது எங்கள் கையில் இருக்கும் என்று இல்லை. அது ஒரு குறிப்பிட்ட வரலாற்று பாத்திரம். அவ்வளவுதான். ஆனால் அதனைத் தொடர்ந்து முன்னெடுக்க வலியுறுத்துவோம். நிறைவேறுவது எவரூடாக இருந்தாலும் அதில் எமக்கு பெருமிதமே! ஆத்ம திருப்தியே!!
21. பிளவுண்டிருக்கும் ஈ.பி.ஆர்.எல்.எவ்வை ஒருங்கிணைக்க முடியாதா? ஏனென்றால் தமிழரசுக் கட்சிக்கு நிகரான அல்லது அதையும் விட வலிமையான தரப்பாக ஈ.பி..ஆர்.எல்.எவ் உள்ளது. இன்று அரசியல் அரங்கில் உள்ள ஆளுமைகளில் ஈ.பி.ஆர்.எல்.எவ்வைச் சேர்ந்த நீங்கள், சுரேஸ் பிரேமச்சந்திரன், துரைரத்தினம், சந்திரகுமார், தவராஜா, சிவசக்தி ஆனந்தன், வரதராஜப்பெருமாள்,டக்ளஸ் தேவானந்தா, கோபாலகிருஸ்ணன் போன்றோர் முக்கியமானவர்களாக உள்ளீர்கள். இவர்களிடையே ஒரு அரசியல் இணக்கப்பாடு ஏற்பட்டால் எத்தகைய மாற்றங்கள் நிகழும்?
நாம் ஒரு பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்கள் என்பது சரி. ஆனால் இன்று எல்லோரும் ஒரு திசை என்றல்ல. விருப்பங்களுக்கும் எதார்த்தங்களுக்கும் இடையி்ல் உள்ள இடைவெளி குறைய வேண்டும். விமர்சனம், சுய விமர்சனம் என்ற அடிப்படையிலானஉரையாடல் அவசியம்.
அது இந்தப் பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்களுக்கு மாத்திரமல்ல, சமூகப்பிரக்ஞையுடன் தம்மை அர்ப்பணித்த அனைத்து தரப்பினரையும் கரிசனை கொள்ள வேண்டும். இல்லாவிடில் அது கோஷ்டி வாதம் ஆகிவிடும்.
நாம் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூகம், அனைத்து இலங்கையர்கள், உலகம் என்ற அடிக்கட்டுமானத்திலிருந்து சிந்தித்தால் பிரச்சனைகளுக்கு இலகுவாகவே தீர்வு காண முடியும். அவ்வாறு சிந்தித்தால் வலிமைமிக்க பரந்துபட்ட இயக்கம் ஒன்றை, முற்போக்கு ஜனநாயக இயக்கம் ஒன்றை கட்டி எழுப்ப முடியும்.
22. போருக்குப் பிந்திய அரசியலை Post War Politics எப்படி முன்னெடுத்திருக்க வேண்டும்? இனியாவது அதை எப்படி முன்னெடுக்கலாம்?
போருக்கு பிந்திய அரசியல் சாதாரணர்களின் கையிலிருந்து தமிழ் ஆளும் வர்க்கத்தின் கைகளுக்கு சென்று விட்டது. அதற்கு போர்க்காலத்திலேயே வழிவகை செய்யப்பட்டது.
சாதாரணர் நிலையை முன்னிறுத்தி அர்ப்பணம், சமூக பிரக்ஞை, சகோதரத்துவ உணர்வு கொண்ட புதிய தலைமுறை செயற்பட வேண்டும். கடந்த காலத்தின் அனுபவங்கள் பாடமாக எடுத்துக் கொள்ளப்படவேண்டும்.
23. ஆட்சி மாற்றத்தையும் (ஆட்சிப் பண்பில் மாற்றம் நிகழ்த்தப்பட வேண்டும்) புதிய ஆட்சி உருவாக்கத்தையும் அரகலயப் போராட்டம் உணர்த்தியது. மக்களின் மனங்களிலும் மக்களுடைய நிலவரங்களிலும் இதை உணரலாம். ஆனால், இதைச் சாத்தியப்படுத்துவதற்கு உள்நாட்டிலும் வெளியிலும் தடைகள் உள்ளனவே?
அரகலய எழுச்சி இலங்கையர்களின் வாழ்வைச் செம்மைப்படுத்துவதற்கு நிகழ்ந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வு.
ஆளும் வர்க்கமும் ஏகாதிபத்திய சக்திகளும் எந்த சமூக எழுச்சியிலும் அதை நீர்த்துப்போக செய்வதிலும் முறியடிப்பதிலும் கரிசனையாக இருக்கவே செய்யும். சமூக மாற்றத்தை விரும்புபவர்கள் தட்டையாக சிந்திக்க முடியாது. சர்வதேச உள்ளூர் சமூக பொருளாதார சக்திகளை விளங்கிக் கொள்ள வேண்டும் .மூலோபாயம், தந்திரோபாயம் போன்ற விடயங்கள் இருக்கின்றன. குறிப்பிட்ட சூழ்நிலைகளில் நண்பர்கள் யார், எதிரிகள் யார் என்ற மதிப்பீடு வேண்டும். புவிசார் எதார்த்தங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். இலங்கையின் மதவாத இனவாத மேலாதிக்க நலன்களில் இருந்து சிந்தித்து எந்த எழுச்சியும் வெற்றி பெற முடியாது. அக்டோபர் எழுச்சி மக்களுக்கு ரொட்டியையும் உலகத்தில் சமாதானத்தையும் தேசங்களுக்கு உரிமையையும் பிரகடனம் செய்துதான் வென்றது.
24. ரணில் விக்கிரமசிங்கவின் இன்றைய இலங்கை. உங்களுடைய பார்வை என்ன?
அவர் ஜேஆரைப் போல ஒரு அவதந்திரி. சமூக பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றிய அவரது கரிசனைகள் குறைவானவை.
ஆனால் அவர் நெருக்கடியான ஒரு அரசு இயந்திரத்தை கையேற்றிருக்கிறார்.
அதனை இயக்குவதற்கு அனைத்து சமூகங்களிலும் அனுசரணை விரும்பியோ விரும்பாமலோ தேவை.
அதனால் தான் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவேன் என ஆர்ப்பாட்டமாக கூறினார் .
ஆனால் அது இப்பொழுது நீர்த்துப் போய்விட்டது.
தமிழ் மக்களின் பிரச்சினைகளை அரைவாசிக்கும் மேல் தீர்வு கண்டு விட்டதாக லண்டனில் பழமைவாத கட்சிகளின் மாநாட்டில் கூறியிருக்கிறார்.
சமூக பொருளாதார பிரச்சினைகளிலும் அவ்வாறு தான் கூறி வருகிறார். இது மிகைப்படுத்தலும் பொய்யும் கலந்தது.
துரதிர்ஷ்டவசமாக இந்த நெருக்கடி நிலையை தாண்டுவதற்கான உருப்படியான மாற்று எதுவும் இலங்கையின் அரசியல் வானில் தற்போது காணப்படவில்லை. சமூக பொருளாதார பிரச்சினைகளில் கரிசனை உள்ளவர்கள் என்று கருதப்படுபவர்கள் கூட இலங்கையின் பன்முகப் பாங்கு, அதிகார பகிர்வு போன்ற விடயங்களில் அலட்சியமும் கள்ள மவுனமும் காக்கிறார்கள். பேரினவாதத்தை சவால் செய்ய முடியாதவர்களாக இவர்கள் இருக்கிறார்கள்.
25. இன்றுள்ள பிராந்திய, சர்வதேச அரசியல் பொருளாதாரச் சூழலில் இலங்கை – இனப்பிரச்சினை – தமிழ், முஸ்லிம், மலைய மக்களின் உரிமைக்கான தீர்வு என்பதெல்லாம் என்ன வகையான எதிர்கொள்ளலைக் கொண்டுள்ளன?
இன்று இலங்கையில் ஏற்பட்டிருக்கும் சமூக பொருளாதார நெருக்கடியில் தமிழ் மலையக முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து பொதுவானதும் தனித்துவமானதுமான கோரிக்கைகளை வலியுறுத்த வேண்டும். அரசு இயந்திரம் சுதாகரித்துக் கொண்டபின் எதையும் பெற முடியாது. இறுமாப்புத்தான் மிகுதியாக இருக்கும். “எனவே காற்றுள்ள போதே தூற்றிக்கொள்”என்றவாறு இலங்கையின் தமிழ் முஸ்லிம் மலையக மக்கள் நடந்து கொள்ள வேண்டும்.
உலகளாவிய நெருக்கடி அல்லது உள்ளூர் அரசு இயந்திர நெருக்கடிகளில்தான் சமூக மாற்றங்கள், சீர்திருத்தங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இந்த தருணம் ஜனநாயக முற்போக்கு சிங்கள மக்களுடன் இணைந்து கொண்டு தமிழ் முஸ்லிம் சமூகங்கள் எதிர்கொள்ள வேண்டியது.