சுருங்கக்கூறின், தகப்பன், தகப்பனுக்குப் பின்னர் மகன்; மகனுக்குப் பின்னர் பேரன் என, வாரிசுகள் அந்தப் பதவிகளைப் பெற்றுக்கொள்ளுதல் ஆகும். இதில் நேரடி வாரிசு அல்லாது, நெருங்கிய உறவுகள் அந்தப் பதவிகளை அடுத்ததாகப் பெற்றுக்கொள்வதையும் வாரிசு அரசியல் எனலாம்.
குடும்ப அரசியல் அல்லது குடும்ப ஆட்சி என்று தமிழில் நாம் சுட்டுவதை, ஆங்கிலத்தில் நெபொடிஸம் (Nepotism) என்பார்கள். இது nepotismo என்ற இத்தாலிய வார்த்தையிலிருந்து வந்தது. இந்த வார்த்தையின் வேர் nepos என்ற இலத்தீன் வார்த்தை. இலத்தீனில் nepos என்றால் nephew மருமகன் என்று அர்த்தம்.
17ஆம் நூற்றாண்டுக்கு முன்னர், பாப்பரசர்கள் தமது அதிகாரத்தை தமக்கடுத்து, தமது மருமகன்களுக்கு வழங்கிய வழக்கத்தைக் குறித்து, இந்தச் சொல் உருவாகியிருக்கலாம் என்கிறார்கள் சில ஆய்வாளர்கள். ஆனால் சமகாலத்தில், இந்தச் சொல்லின் அர்த்தம் இன்னும் விரிவடைந்துள்ளது.
‘குடும்ப ஆட்சி’ என்பதை, குடும்ப உறுப்பினர்களுக்கு அவர்களது உறவினர்கள், ஆதரவாகக் காட்டும் ஒரு வகையான பாரபட்சம் எனலாம். குறித்த குடும்ப உறுப்பினரின் தகுதி, யோக்கியதை ஆகியவற்றை ஆராயாமல், தமது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, அந்தக் குடும்ப உறுப்பினருக்கு அல்லது உறவினருக்கு பதவியை வழங்குவது குடும்ப ஆட்சி எனப்படுகிறது.
வாரிசு அரசியலும் குடும்ப ஆட்சியும் ஒன்றோடொன்று நெருங்கியவையாயினும், அவற்றிற்கிடையே சில வேறுபாடுகள் உண்டு. வாரிசு அரசியல் என்பது, கட்டாயம் குடும்ப ஆட்சியால்தான் ஏற்பட வேண்டும் என்ற அவசியம் கிடையாது. சில சந்தர்ப்பங்கள், தகப்பன் பெரும் அரசியல் தலைமையாக இருந்தபோதும், தகப்பன் உயிரோடிருந்தவரை வாரிசுகள் அரசியற்பக்கம் கால்பதித்துக்கொள்ளாத நிலையில், இருந்த உதாரணங்கள் சில உள்ளன.
ஆகவே, அந்த இடத்தில், அந்தளவில் குடும்ப ஆட்சி அங்கு இருக்கவில்லை எனலாம். ஆனால், தகப்பனின் மறைவுக்குப் பிறகு, அந்த வெற்றிடத்தை நிரப்ப வாரிசுகள் அழைத்துவரப்படும் போது, அங்கு குடும்ப ஆட்சி இல்லையென்றாலும், வாரிசு அரசியல் ஏற்படுகிறது. இதுபோன்ற அரிய சந்தர்ப்பங்களைத்தாண்டி, பெருமளவுக்கு வாரிசு அரசியலும் குடும்ப ஆட்சியும் ஒன்றோடொன்று பிணைந்திருப்பதையே காணக்கூடியதாக இருக்கிறது.
வாரிசு அரசியல் மற்றும் குடும்ப ஆட்சியின் பரவலானது, தனிப்பட்ட குடும்பங்கள் கொண்டிருக்கும் பெரும் சக்தியைப் பிரதிபலிக்கிறது. அதுவும் அதிக வருமான சமத்துவமின்மை, அரசு அடக்குமுறை உள்ள நாடுகளில், இந்தக் குடும்பங்கள் செல்வத்திலும் செல்வாக்கிலும் ஒப்பிட முடியாத உயரத்தில் இருக்கின்றன.
கல்வியாளர்கள், கண்காணிப்புக் குழுக்கள் என்போர், வாரிசு அரசியலும் குடும்ப ஆட்சியும் அரசியல் மற்றும் ஆட்சியை மோசமாக்கலாம் என்று கூறுகின்றனர். தகுதியற்ற வேட்பாளர்கள் அதிகாரத்தை வெல்வதற்காக, சக்திவாய்ந்த உறவினர்களின் ஆதரவைப் பயன்படுத்தி, திறமையான அடிமட்டத் தலைவர்களை முறையற்ற வகையில் வௌியேற்றி, அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்கிறார்கள். இது ஒரு நாட்டின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல. ஆனால், உலக நாடுகளை எடுத்துப் பார்த்தால், வாரிசு அரசியலும் குடும்ப ஆட்சியும் புதுமையானவையல்ல என்பதும் புலப்படும்.
அமெரிக்காவில் குடும்ப ஆட்சிக்கு எதிரான சட்டமுண்டு. கூட்டாட்சி சட்டமொன்று அமெரிக்க காங்கிரஸின் உறுப்பினர் உட்பட ஒரு கூட்டாட்சி அதிகாரி, அதிகாரியின் அதிகாரம் அல்லது கட்டுப்பாட்டை செயற்படுத்தும் எந்தவொரு நிறுவனத்துக்கும் அல்லது துறைக்கும் அதிகாரியின் ‘உறவினர்’ நியமனம் அல்லது பதவி உயர்வுக்கு பரிந்துரைப்பது, பதவி உயர்வு வழங்குவது அல்லது பரிந்துரை செய்வதிலிருந்து தடை செய்கிறது.
ஆனால், அது வாரிசு அரசியலைத் தடை செய்வதில்லை. அங்கு வாரிசு அரசியல் என்பதை, நாம் கண்கூடாகக் காணலாம். கென்னடி குடும்பம், புஷ் குடும்பம் என்பன காலங்காலமாக பலமான அரசியல் சக்திகளாக இருந்துள்ளன. அண்மையில் ட்ரம்ப் குடும்பம் அமெரிக்க அரசியலில் உத்தியோகபூர்வமற்ற வகையில் ஆதிக்கம் செலுத்தியது. கனடாவில் கூட, ட்ரூடோ குடும்பம் தொடர்ந்து செல்வாக்கு செலுத்தி வருகிறது. தென்கிழக்காசியாவின் வாரிசு அரசியல் பற்றி தனிப்புத்தகமே எழுதலாம்.
தெற்காசியாவுக்கும் வாரிசு அரசியலுக்கும் மிக நெருங்கிய பந்தம் இருக்கிறது. இந்தியாவின் நேரு குடும்பம், கருணாநிதி குடும்பம், பாகிஸ்தானின் பூட்டோ குடும்பம், பங்களாதேஷின் முஜிபுர் ரஹ்மான் குடும்பம், நேபாளின் கொய்ராலா குடும்பம், இலங்கையின் பொன்னம்பலம்-குமாரசுவாமி குடும்பம், சேனநாயக்க குடும்பம், விஜேவர்தன-விக்கிரமசிங்க குடும்பம், பண்டாரநாயக்க குடும்பம், ராஜபக்ஷ குடும்பம் என்பன சில உதாரணங்கள் மட்டுமே!
குடும்பம் என்ற கட்டமைப்பு பலமாகவுள்ள தெற்காசியாவில், எவராவது ஒருவர், மிகச் சிறந்த தலைவராக உருவாகிவிட்டால், அவரது அந்தப் பேரொளி அவரது குடும்பத்தினர் மீது தேய்க்கப்பட்டுள்ளதால், அவரது தன்மைகளை அவரது குடும்பத்தினருக்கும் இருக்கும் என்று மக்களை நம்பவைப்பது எளிது என்று நிஹால் சிங் என்ற அரசியல் கருத்துரைஞர் பதிவு செய்கிறார்.
இந்தக் கருத்தில் நியாயம் இருப்பதாகவே தெரிகிறது. இந்தக் குடும்பங்களிலிருந்து அரசியலுக்கு வந்த வாரிசுகளுக்கும், இந்தக் குடும்பங்களில் அல்லாது அரசியலுக்கு வந்தவர்களுக்கும் திறமை, தகுதி, யோக்கியதை என்ற அடிப்படையில் வித்தியாசத்தைப் பார்த்தால், நிச்சயம் இந்தக் குடும்பங்களிலிருந்து வந்தவர்கள் எந்தவகையிலும் அதீத திறமையானவர்கள் என்று சொல்வதற்கில்லை. ஆனால், அவர்களிடம் அரசியல் அனுபவம் பலமாக இருந்தது. அரசியல் மொழியை நன்கறிந்திருந்தார்கள்.
மேலும், அவர்களுக்கு அத்திவாரத்திலிருந்து தமது அரசியல் மாளிகையைக் கட்ட வேண்டிய அவசியம் இருக்கவில்லை. ஏலவே கட்டப்பட்டிருந்த அரசியல் மாடமாளிகையிலிருந்து, இலகுவாக அரசியலில் பிரவேசிக்கக் கூடிய வாய்ப்பு அவர்களுக்கு இருந்தது. இங்கு மாளிகை என்பது அரசியல் கட்சி, இயக்கம், மக்களாதாரவு, அறிமுகம், பலவலான அரசியற் கட்டமைப்பு என எல்வாற்றையும் குறிக்கும்.
எல்லாவற்றையும் விட, அரசியலின் அஸ்திவாரமாக மாறியுள்ள பணமும், பணவசதியும், அவர்களிடம் தாராளமாக இருந்தது. இதனோடு, நிஹால் சிங் சொன்னது போல, அவர்களது முன்னோர்களின் இயலுமை, தம்மில் உள்ளதாக மக்களை நம்பவைப்பது இலகுவாக இருந்ததால், அவர்களால் மற்றைவர்களைவிட அரசியலில் சாதிப்பது இலகுவாயிற்று.
வாரிசு அரசியலைச் சிலாகிப்பவர்கள் இருக்கிறார்கள். அது மன்னராட்சிக் கால மனநிலையின் தொடர்ச்சியாகக் கூட இருக்கலாம். ஆனால், வாரிசு அரசியல் என்பது ஜனநாயகத்தில் ஒரு கறையாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறது. அரசியல்வாதியின் வாரிசு என்பதால், ஒருவரின் அரசியலில் ஈடுபடும் உரிமை மட்டுப்படுத்தப்பட முடியாது. ஆனால், வாரிசு அரசியல் என்பது, அவர் குறித்த நபரின் வாரிசு என்பதால், அவருக்கு பதவி வழங்கப்படும் நிலையாகும். அதுதான் இங்கு விமர்சிக்கப்படுகிறது.
பிரபல்யமான கட்சிகள் அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளபோது, கட்சியின் வேட்பாளர்களை அவர்களே தீர்மானிக்கும் போது, மக்களிடம் அவர்களது தெரிவுகளே திணிக்கப்படுகின்றன. ஆகவேதான் வாரிசுகளும், நாங்கள் வாரிசுகள் என்பதால் அரசியல் பதவி பெறவில்லை, மக்கள் வாக்களித்துதத்தான் அரசியல் பதவிகளைப் பெற்றுக்கொண்டுள்ளோம் என நியாயம் சொல்கிறார்கள்.
ஆனால், ஆடுகளத்தையும் பகடைகளையும் தாயத்தையும் எல்லாம் நீங்களே தீர்மானித்துவிட்டு, தாயத்தை உருட்டிய மக்கள்தான் அதன் விளைவுகளைத் தீர்மானித்தார்கள் என்று சொல்வது எவ்வளவு தூரம் நியாயமானது என்ற கேள்விதான் இங்கு தொக்கு நிற்கிறது.
சச்சின் டென்டுல்கர் நல்ல துடுப்பாட்ட வீரர்; ஆகவே அவரது சகோதரர்களும் அவரைப் போன்ற மிகத் திறமையான வீரர்களாக இருப்பார்கள் என்று எண்ணுவது அறிவீனமானது.
மறுபுறத்தில், ஓர் அரசியல்வாதி, தன்னுடைய சொத்துகளை தனது வாரிசுகளுக்கு வழங்கிவிட்டுப்போகலாம். ஆனால், நாட்டையும் அதன் ஆட்சியையும் அப்படித் தனது வாரிசுகளுக்கு வழங்குவதற்கு நாடும் ஆட்சியும் அவர்களது பரம்பரைச் சொத்தா என்ன?
ஜனநாயகத்தைக் காப்பது மக்களின் கையில்தான் இருக்கிறது. அதை ஒரு குடும்பத்திடம், அல்லது ஒரு சில குடும்பங்களிடம் தாரைவார்த்துவிட்டு, தினந்தினம் புலம்புவதில் பயனில்லை.