இதற்கும் அப்பால், குறித்த மாற்றுக்கருத்தை கொண்டு நகரும் தலைமைகளை, மாற்றுத்தலைமைகள் எனப் பொருள்கோடல் கொள்வதானது தமிழ் மக்கள் மத்தியில் பழகிப்போன சொல்லாடலாகும்.
தமிழ்த்தேசிய அரசியல் களம் உருவாகிய காலத்தில் இருந்து, அது ஆயுதப்போராட்டமாக மாற்றமடைந்த பின்னரும், மாற்று கொள்கையுடையோர், மாற்று இயக்கங்கள் என்ற பொருள்கோடலுடன் கட்டுண்டு பயணித்தவர்களே தமிழ் மக்கள். எனினும் தற்கால அரசியல் இயங்கு தளத்தில், மாற்றுக்கருத்துள்ளோர் யார், அதற்குத் தலைமை தாங்குவோர் யார் என்ற கேள்விகள் பலமானதாகவே உள்ளது.
ஏனெனில், அண்மைய நாள்களாக மாற்று தலைமையின் உருவாக்கம் அவசியம் என்ற கருத்தியலும் மாற்றுத்தலைமை உருவகம் பெற்றுள்ளதான விடயங்களும் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
அவ்வாறெனில், அந்த மாற்றுத்தலைமை என அடையாளப்படுத்தக் கூடிய நிலையில் உள்வர்கள் யார்? அவர்களது கொள்கை முன்னெடுப்புகள் என்பது தொடர்பில் ஆராயப்படவேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றீடாக, தமிழ் மக்களின் உரிமை தொடர்பான விடயத்தை வென்றெடுக்கும் நோக்கோடும் கொள்கைப் பிடிப்போடும் பயணிக்கும் அரசியல் கட்சியாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கொள்கையை பார்க்க முடிகின்றது.
ஏனெனில், கூட்டமைப்பைப் பொறுத்தவரையில், எந்தத் தளத்தில், பாதையில் பயணிக்கின்றோம் என்ற தடுமாற்றத்தில் தள்ளாடுகின்றது. அதன் அரசியல் தீர்வுக் கொள்கையைப் பொறுத்த மட்டில், மத்தியில் சமஷ்டியா, ஒற்றையாட்சிக்குள் அதிகாரப் பகிர்வா என்ற நிலைப்பாட்டைத் தமக்கு இசைவான விதத்தில், ‘வார்த்தை ஜாலங்களால்’ வெளிப்படுத்தி வருகின்றனர். இது, ‘திருவிழாக்காலத்தில் குழல் ஊதி வியாபாரம் செய்யும்’ நிலைப்பாட்டுக்கு ஒப்பானதாகவே பார்க்கப்படுகின்றது.
இந்நிலையிலேயே, தமக்கென ஒரு கொள்கையை கொண்டு பயணிக்கத் தலைப்படுபவர்கள் அனைவரும், தம்மை மாற்றுத்தலைமை என்ற பத்திக்குள் அடையாளப்படுத்துகிறார்கள். இந்த நிலைமையானது, தமிழர்களது அரசியல் இருப்பைச் சிதைக்க முயல்வதாகவே சிந்திக்கத் தோன்றுகின்றது.
தமிழர் அரசியல் தளத்தில், அரசியல் நகர்வை முன்னெடுக்கும் பல கட்சிகளுக்கு மத்தியில், ‘ஒரு நாடு; இரு தேசம்’ என்ற வேறுபட்ட கொள்கையை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கொண்டு பயணிக்கின்றது.
இது வெல்லக்கூடியதா, சாத்தியமான நிலைப்பாடா என்பது தொடர்பில் விவாதிக்கப்பட்டே முடிவெடுக்கப்பட வேண்டும். ‘வேட்டி அவிழும்போது, அதைச் சரிசெய்ய முற்படும்போது, உள்ளாடையையும் பறிகொடுப்பது’ போன்ற, ஆபத்தான படுகுழிகள் இந்தப் பாதையில் இருப்பதையும் அதில் பயணிப்பவர்கள் சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள். எனினும், அவர்களை மாற்றுத்தலைமை, மாற்றுக்கொள்கை என்று வகைப்படுத்திக்கொள்ள முடிகின்றது.
இவற்றுக்கும் அப்பால், முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், தனித்து அரசியல் போட்டிக்களத்தில் குதித்துள்ளார்.
அரசியல் செயற்பாடு என்பது, கீழ் மட்டத்திலும் இறங்கிச் செயலாற்றும் தன்மைகொண்ட தலைமைத்துவத்துடன் கூடியதாக அமைய வேண்டிய தேவை உள்ள நிலையில், வெறுமனே அறிக்கை அரசியலில் காலத்தை கடத்தும் பண்பு, தமிழ் அரசியலாளர்கள் மத்தியில் அதிகரித்து வருகின்றது. மக்கள் முன், முகம்கொடுக்க அச்சம் கொள்ளும் நிலைப்பாடே, இதற்குக் காரணமாக இருகின்ற போதிலும் கூட, அதை மாற்றியமைத்துப் பயணிக்க கூடிய கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.
முன்னாள் முதலமைச்சர், என்ற ஸ்தானத்தில் இருந்து பயணித்த விக்னேஸ்வரன், உள்ளூரில் மட்டுமல்ல இராஜதந்திரிகள் மட்டத்திலும் எதிர்பார்க்கப்பட்ட ஓர் அரசியல்வாதியாகவே பார்க்கப்பட்டார்.
எனினும், முதலமைச்சர் என்ற பதவிக்கு முன்பாக, ‘முன்னாள்’ என்ற அடைமொழி இணைக்கப்பட்டதும் ஒரு சிலரின் அரசியல் ஆசைகளுக்காகப் கட்சியொன்றை உருவாக்கியதும் அவரையும் சாதாரண அரசியல்வாதியாகவே அடையாளம் காட்டியுள்ளது.
புதிய கட்சி உருவாக்கிய பின்னர் என்றாலும், மக்களுடனான அரசியலை அவர் இன்னும் ஆரம்பிக்கவில்லை. வெறுமனே முதலமைச்சராகத் தான் இருக்கும்போது, செயற்பட்ட விதத்திலான அறிக்கை அரசியலையே இற்றைவரை பயன்படுத்தி வருகின்றமையானது, அவர் மத்தியில் இருந்த மக்கள் செல்வாக்கின் தற்போதைய நிலைகுறித்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மாகாணசபைக் காலத்தில் எவ்வாறு ஒரு சரிவுப் பாதைக்கு சென்று, அதில் இருந்து மீண்டுவரக் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டிருந்ததோ, அதேபோன்றதான போக்குநிலையில் முன்னாள் முதலமைச்சரின், தமிழ் மக்கள் கூட்டணியும் சென்றுகொண்டிருக்கின்றது.
தமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சி, மாற்றுத் தலைமையின் தேவைகருதியோ, தமிழ் மக்களுக்கு அரசியல் எதிர்காலமே இல்லாத நிலையில் அதைத் தாங்கிப் பிடிப்பதற்காகவோ உருவாக்கப்பட்டது என்று கருதப்படுமாக இருந்தால், தற்போதைய இதன் போக்கு, நகைப்புக்குரியதாகவே உள்ளது.
தமிழ் மக்களது அரசியல் தளத்தில், உரிமைகளை மீட்கப் புறப்பட்டதாகப் பல கட்சிகளும் பல்வேறு அபிவிருத்திகளை முன்னெடுக்கவுள்ளதாக இன்னும் சில கட்சிகளும் வலம்வரும் நிலையில், அரசியலில் கத்துக்குட்டியான விக்னேஸ்வரனால் இவற்றுக்கு ஈடுகொடுத்து, அரசியல் பயணத்தை முன்னெடுக்க முடியுமாக இருக்குமா என்பது, எல்லோர் மனத்திலும் எழும் கேள்வியே.
அவர் மீதான மரியாதையும் அவரது ஆழுமையும் அவர் விடாப்பிடியாக தமிழர் தொடர்பான கோரிக்கைகளைத் தொடர்ந்து துணிச்சலுடன் முன்வைக்கும் பாங்கும் தமிழ் மக்களுக்கு ஆறுதல்தரும், உணர்வுரீதியான கருத்துகளாக இருந்தாலும் கூட, அது தனித்த அரசியலுக்கு ஏற்புடையதா என்பதை, அவர், பலதடைவைகள் மீள் பரிசீலனைக்கு உட்படுத்தியிருக்க வேண்டிய தேவை இருந்துள்ளது.
தமிழ் மக்கள் கூட்டணி என்பது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறியவர்களுக்காகவும் அதன் அதிருப்தியாளர்களுக்காகவும் அவர்களின் உசுப்பேற்றல்களால் உருவாக்கப்பட்டுள்ளது என்பதான கருத்து, மக்கள் மத்தியில் உலாவருவதை அவதானிக்க முடிகின்றது. தமிழ் மக்களுக்கான அரசியலை முன்நகர்த்திச் செல்வதற்கான விம்பம், அங்கு உருவாக்கப்பட்டு இருக்குமாயிருந்தால், அக்கட்சி யாழ்ப்பாணம் என்ற குறுகிய வட்டத்தில் பயணிக்க தலைப்பட்டிருக்காது.
அதுமட்டுமன்றி, மக்கள் போராட்டங்களில் தம்மை அடையாளப்படுத்த விரும்பியிருக்கும். எனினும், இதுவரை மக்கள் போராட்டங்களில், ஏதுவான செயற்பாட்டை அவர்கள் வெளிப்படுத்தாமை, மக்கள் மத்தியில் உலாவரும் கருத்தை, நிதர்சனமாக்கி வருகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தான் பயணிக்கும் பாதையின் தூரத்தையோ, அதன் சாத்தியப்பாட்டையோ தெளிவு படுத்த முற்படாத நிலையில், தமிழ் மக்கள் மத்தியில், புதிய அரசியல் கட்சிகள் தோற்றம்பெறுவதைத் தவிர்க்க முடியாத சூழ்நிலையொன்றும் ஏற்பட்டுவிடுகிறது.
ஆனால், அது யாழ். மாவட்டத்தில் தாக்கத்தைச் செலுத்தாத பட்சத்திலும் வடக்கில் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களிலும் கிழக்கு மாகாணத்தின் அனைத்து தேர்தல் தொகுதிகளிலும் தாக்கத்தைச் செலுத்தும் வல்லமையைக் கொண்டது. குறிப்பாக, பல்லின மக்கள் வாழும் பிரதேசங்களில், அதன் தாக்கம் பலமானதாக இருக்கும்.
எனவே, மாற்று அரசியல், மாற்றுத்தலைமை என்ற வகிபாகத்தைத் தமிழ்த் தலைமைகள் தமக்குச் சூட்டுகின்றபோது, தாம் எவ்வாறான கொள்கை முன்னெடுப்புகளைக் கொண்டுள்ளோம் என்பது தொடர்பில், தெளிவுபடுத்தல்களையும் மக்கள் சந்திப்புகளையும் நடத்தியிருக்க வேண்டும்.
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருந்து வெளியில் வந்ததன் பின்னர், தாம் பயணிப்பதற்கு ஆளுமையுள்ள தலைமையொன்றின் தேடலை நடத்திக்கொண்டிருந்தபோது, அதில் சிக்கிக்கொண்ட விக்கினேஸ்வரன், அதைப் பெரும் பிம்பமாகக் கண்டு, உருவாக்கிக் கொண்ட தமிழ் மக்கள் கூட்டணி என்ற தளம், அடுத்துவரும் தேர்தல்களின் போது, கடும் சவால்களைக் காணும்போது, விக்னேஸ்வரனின் கனவு வீணாகிப் போனாலும் ஆச்சரியப்படவோ அது தொடர்பில் விசனப்பட்டுக் கொள்ளவோ பெரியதாக எதுவும் இருக்கப்போவதில்லை என்பதே யதார்த்தம்.