தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தொடர்பிலான விக்னேஸ்வரனின் மேற்கண்ட கூற்றில், பெருமளவு உண்மையுண்டு. அது, சுய அனுபவங்களின் சார்பில் வருவது. ஏனெனில், இன்றைக்கு விக்னேஸ்வரன் அரசியல் கட்சியொன்றின் தலைவராக, மாற்றுத் தலைமைக்கான போட்டியில் இருப்பதற்கு ஒரே காரணம், சம்பந்தன் மட்டுமே!
2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் காலத்தில், “வீட்டை விட்டு வெளியே வந்து, மக்கள் வாக்களிக்க வேண்டும்” என்று சொந்தக் கட்சிக்கு எதிராகவே அறிக்கைவிட்டு, மாற்றுக் கட்சிக்கு ஆதரவளித்திருந்தார் விக்னேஸ்வரன். அந்தத் தேர்தலில், முகத்தில் அறையும் பதிலொன்றை மக்கள் அவருக்கு வழங்கியிருந்தார்கள்.
அந்தத் தருணத்திலேயே, அவரைக் கட்சியிலிருந்தும் முதலமைச்சர் பதவியிலிருந்தும் நீக்கியிருந்தால், இன்றைக்கு அரசியலைவிட்டு ஒதுங்கியிருப்பார். ஆனால், அதைத் தவிர்த்து, “பேசுவோம், பார்ப்போம்” என்று, கட்சிக்காரர்களின் கோரிக்கைகளைத் தவிர்த்து, விக்னேஸ்வரனுக்கான அனுசரணை நிலைப்பாட்டை சம்பந்தனே எடுத்தார்.
வடக்கு மாகாண சபைக்குள் எழுந்த ஊழல் குற்றச்சாட்டுக் குழப்பங்களை அடுத்து, 2017ஆம் ஆண்டு முதலமைச்சருக்கு எதிராகத் தமிழரசுக் கட்சி, நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முன்வைத்தது. அப்போதும், விக்னேஸ்வரனை அதிலிருந்து காப்பாற்றிக் கரை சேர்த்தது, ‘பேசுவோம், பார்ப்போம் புகழ்’ சம்பந்தனே! சொந்தக் கட்சியினரின் நிலைப்பாடுகளுக்கு எதிராகத் தன்னுடைய கனவான் தனத்தை, விக்னேஸ்வரனுக்காகவும் அவர்களுக்குப் பொதுவான, மூத்த ஜனாதிபதி சட்டத்தரணி நண்பரின் வேண்டுகோளுக்காகவும் சம்பந்தன் காட்டியிருந்தார்.
பிரச்சினைகளுக்குத் துரிதமான தீர்வொன்றை நாடும் நபர் சம்பந்தனல்ல. ஆற அமர ஆராய்ந்து, முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்கிற எண்ணம் கொண்டவர். முள்ளிவாய்க்கால் முடிவுக்குப் பின்னரான, தமிழ்த் தேசிய அரசியலில், கூட்டமைப்பு ஒரு வலுவான சக்தியாகத் தொடர்வதற்கும் அவரே ஒற்றைக் காரணம். அவருக்குப் பதிலாக இன்னொரு தலைவரை, அந்த இடத்தில் வைத்துப் பார்த்தால், ஒரு சில ஆண்டுகளிலேயே, கூட்டமைப்பு இன்னும் பல கூறுகளாக உடைந்து, காணாமற்போயிருக்கும்.
அப்படியான கட்டத்தில், சம்பந்தனின் ‘பேசுவோம், பார்ப்போம்’ யுத்திதான், யார் உள்ளே வந்தாலும் வெளியே போனாலும், கூட்டமைப்பை இன்றளவும் காப்பாற்றியிருக்கிறது. “சம்பந்தன், முடிவுகளை எடுப்பதற்குத் தயங்குபவர்; தட்டிக் கழிப்பவர்” என்று இன்றைக்குக் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் விக்னேஸ்வரன், தைரியமான முடிவுகளை எடுப்பதற்கு, உண்மையிலேயே திராணி உள்ளவரா என்கிற கேள்வி எழுகின்றது.
ஏனெனில், கூட்டமைப்புக்கு எதிராக, ஓரளவுக்குப் பலமான மாற்றுத் தலைமைக்கான வெளி, வடக்கில் உருவாகி வந்த போது, தைரியமாக முடிவுகளை எடுக்க முடியாத தன் இயல்பால், அதைக் கலைந்து போக வைத்தவர் விக்னேஸ்வரன். ஒரு கட்டம் வரையில், யாழ். மய்யவாத கருத்துருவாக்கிகளும் செயற்பாட்டாளர்களும் சிவில் அமைப்பினரும் போக்கிடமற்ற அரசியல்வாதிகளும் விக்னேஸ்வரனைச் சுற்றி, பெரிய பெரிய ஒளிவட்டங்களை வரைந்தார்கள். அது, கூட்டமைப்புக்கு எதிரான தேர்தல் கட்டமைப்பொன்றை கட்டுவதற்கான எதிர்பார்ப்பின் போக்கில் இருந்தது. ஆனால், விக்னேஸ்வரன், தன்னுடைய இன்னோர் இயல்பால், அவர்களை நடுத்தெருவில் விட்டார்.
அதாவது, விக்னேஸ்வரன், தன் மீது நம்பிக்கை வைத்து, அழைத்து வந்தவர்களை, நடுத்தெருவில் விடுவதில் வல்லவர். சம்பந்தனையும் சுமந்திரனையும் அப்படித்தான் ஒரு கட்டத்தில் கைகழுவினார். அதுபோல, தமிழ் மக்கள் பேரவையின் பங்காளிகளையும் அடுத்த தேசிய தலைவர் என்று அழைத்தவர்களையும் அவர் இடைநடுவில் கைவிட்டார். இன்றைய அரசியலில் அவர் நிலை, ஓர் ஆசனத்தைக் குறிவைத்து ஓடும் கட்சியின் தலைவர் என்கிற மட்டிலானது.
ஒரு முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசராக விக்னேஸ்வரன், வடக்கு மாகாண சபைக்கு அழைத்துவரப்பட்டபோது, அவருக்கான கடப்பாடுகள் வழங்கப்பட்டிருந்தன. அரசியல் தீர்வொன்றை நோக்கிய தமிழ்த் தேசிய அரசியல் பயணத்தில், மாகாண சபை முறைமை ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று அல்ல. ஆனபோதிலும், 13ஆவது திருத்தச் சட்டத்தின் கூறுகளைச் சட்ட ரீதியாகச் சவாலுக்கு உட்படுத்தி, அதிலுள்ள நல்ல அம்சங்களை அடையாளம் காண வேண்டும் என்பது, கூட்டமைப்பின் நிலைப்பாடாக இருந்தது. அதன்மூலம், இந்திய – இலங்கை ஒப்பந்தத்தைப் பேணிக் கொண்டு, அடுத்த கட்டங்களை நோக்கிச் செல்வதற்கான வாய்ப்புகளை உருவாக்க முடியும். ஏனெனில், தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைகள் சார்ந்து, நாம் விரும்பினாலும் இல்லாவிட்டாலும் செய்யப்பட்டிருக்கும் சர்வதேச ஒப்பந்தம் அது.
ஆனால், மாகாண சபையின் அதிகார எல்லைகளை, நீதிமன்றப் பொறிமுறைகளின் மூலம் அடையாளம் கண்டு, அடுத்த கட்டங்களை நோக்கி நகர்வதற்காக அழைத்துவரப்பட்ட விக்னேஸ்வரன், மாகாண சபைக்குள் சட்ட வலுவற்ற தீர்மானங்களை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தத் தொடங்கினார். ஐந்து ஆண்டுகால வடக்கு மாகாண சபையின் முதலாவது பதவிக்காலம், 450க்கும் அதிகமான தீர்மானங்களை நிறைவேற்றி, இலங்கை வரலாற்றில் சாதனை படைத்திருந்தது.
மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் தீர்மானங்களை, மாகாண சபைக்குள் நிறைவேற்றுவது ஒன்றும் அவ்வளவு பெரிய குற்றமில்லைத்தான். ஆனால், அந்தத் தீர்மானங்களின் சட்டவலு, எது சார்ந்தது என்பது பற்றியும் மக்களைத் தெளிவுபடுத்தியிருக்க வேண்டும்.
ஒரு முன்னாள் நீதியரசராக, இலங்கை அரசமைப்பின் வரையறைகளைத் தெரிந்து, அதைச் செய்திருக்க வேண்டும். ஆனால், அவர், ஒரு கட்டத்தில் துறைசார் நிபுணர் என்கிற கட்டத்திலிருந்து விலகி, வாக்குகளைக் குறிவைக்கும் தேர்தல் அரசியல்வாதி என்கிற கட்டத்தை நோக்கி நகரத் தொடங்கினார். அது, வடக்கு மாகாண சபையைத் தோல்விகளின் சபையாக மக்களிடம் சேர்ப்பித்தது.
சட்ட வலுவுள்ள நியதிச் சட்டங்களை, (சட்டத்துறை விற்பன்னர்களைச் சேர்த்துக் கொண்டு) மாகாண சபைக்குள் நிறைவேற்றி, அவற்றின் அதிகார எல்லைகள் தொடர்பிலான விளக்கத்தை, நீதிமன்றங்களில் பெற்றிருக்கலாம். இதை, வடக்கு, கிழக்கு தவிர்ந்த மாகாண சபைகள், 1990களில் இருந்து செய்து வந்திருக்கின்றன. ஆனால், அவர் எந்தவித சட்டவலுவுமற்ற தீர்மானங்களை நிறைவேற்றி, தீர்மானங்களின் நாயகனாகி இருக்கிறார்.
இந்தத் தேர்தலில், தமிழ் மக்கள் தேசிய கூட்டணிதான், அதிக கட்சிகளைக் கொண்ட கூட்டணியாக இருப்பதாக விக்னேஸ்வரன் இன்னொரு பக்கம் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால், அந்தக் கூட்டணி வெற்றிக்காகக் களமாடும் நிலப்பரப்பு என்பது, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் போல, யாழ்ப்பாணம் என்கிற அளவிலேயே சுருக்கப்பட்டிருக்கின்றது.
விக்னேஸ்வரனை முன்வைத்து, தமிழ் மக்கள் பேரவை ஆரம்பிக்க நினைத்த அரசியல் கூட்டணி, 2017ஆம் ஆண்டு காலத்தில் உருவாகியிருந்தால், அது வடக்கு மாகாணம் என்கிற அளவுக்காவது தன்னுடைய தேர்தல் அரசியலுக்கான பரப்பை வரையறுத்திருக்கலாம். ஆனால், இன்றைக்கு விக்னேஸ்வரன் யாழ்ப்பாணத்துக்குள் அதுவும், ஒரு சில பகுதிகளுக்குள் உதிரியான வாக்குகளைக் குறிவைத்து போராடிக் கொண்டிருக்கிறார்.
விக்னேஸ்வரனின் அரசியல், கொள்கை நிலைப்பாடுகளுக்கும் கூட்டமைப்பின் கொள்கை நிலைப்பாடுகளுக்கும் எந்தவித வித்தியாசமும் இல்லை. ஏன், தமிழ்த் தேசிய பரப்பில் நிலைபெறும் எந்தக் கட்சியின் அரசியல், கொள்கை நிலைப்பாடுகளுக்கும் வித்தியாசமில்லை. ஆனால், இயங்குநிலை என்பதுதான், தங்களை அடையாளப்படுத்தும் என்று கட்சிகள் நினைக்கின்றன.
ஆனால், விக்னேஸ்வரனின் இயக்கம் என்பது, சம்பந்தனின் நிலைப்பாடுகளைத் தொடர்வதுதான். அவரிடம் சுயமான சிந்தனையோ, இலக்கோ ஏதும் இல்லை. மாறாக, தன்முனைப்பு (ஈகோ) பிரச்சினையால், கூட்டமைப்புக்கு எதிராக மாறி, இன்றைய அரசியலுக்குள் சிக்கிக் கொள்ள வேண்டி வந்திருக்கிறது.
மூத்த அரசியல் ஆய்வாளர் திருநாவுக்கரசு, விக்னேஸ்வரனை ‘ஈழத் தமிழர்களின் தலாய் லாமா’ என்று அறிவித்து, ஒரு காணொளியை இந்தியாவில் இருந்து வெளியிட்டிருக்கின்றார். அதில், மூன்று மணித்தியாலங்கள் விக்னேஸ்வரனோடு தான் பேசியதாகவும், தான் சொல்பவற்றை அவர் காது கொடுத்துக் கேட்பதாகவும் சொல்கிறார்.
தாங்கள் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்கும் ஒருவரான விக்னேஸ்வரனை, மக்கள் பலப்படுத்த வேண்டும் என்றும் கோருகிறார். ஆனால், திருநாவுக்கரசு அவர்களிடம், அரசியலும், ஆய்வியலும் படித்த முன்னாள் மாணாக்கர்கள், விக்னேஸ்வரனின் இயல்பு பற்றி, அவரிடம் எதுவுமே சொல்வதில்லையா?
ஏனெனில், கடந்த காலத்தில் விக்னேஸ்வரனைக் குறித்து, திருநாவுக்கரசுவின் வழி வந்தவர்கள் உருவாக்கிய ஒளிவட்டக் கோடுகளையெல்லாம், விக்னேஸ்வரனே துடைத்தழித்திருந்தார். ஈழத்தமிழர் அரசியலில் களத்தைப் புரிந்து கொண்டு செயற்படும் தலைவர்கள்தான் வேண்டும். மாறாக, ஆற்றாமை, தூரநோக்கற்ற சிந்தனைகளின் விளைவாக எழும் நபர்கள் அல்ல. விக்னேஸ்வரன் அப்படியொரு நபரே!