இந்தக்கூற்றின் அடிநாதமாக இருப்பது மலம் அகற்றும் சாதியினரான சக்கிலியர்கள் மீதான வசை. மேலை நாடொன்றில் விக்கி ஒரு பொறுப்பான அரச பதவியிலிருந்து இவ்வாறான அபாண்டமான கூற்றை சொல்லியிருப்பாரானால் அடுத்தநாளே அவர் தன் பொதுவாழ்விலிருந்தும் பதவியிலிருந்தும் விலகவேண்டியிருந்திருக்கும்.
சரி வெளிநாடுகளில் நம்மவர்கள் கக்கூஸ் கழுவும் விபரங்கள் புள்ளிவிபரங்களைப்பார்க்கலாம். நம்மவர்களில் ஏறத்தாள 25% செய்யும் இத்தொழில் அதனுடைய இழி/ பழிச்சொற்களுக்கப்பால் Unskilled வேலைக்காரர்களுக்கு ஒப்பீட்டடிப்படையில் ஓரளவு சிறப்பான தொழில். Uber போன்றவற்றிலுள்ள நவீன பொருளாதார உழைப்பு மற்றும் மூலதனச் சுரண்டல் கக்கூஸ் கழுவும் தொழிலில் இல்லை. ஊரிலிருந்து வந்த அடுத்தநாளே தொடங்கக்கூடிய தொழில். உடல் உழைப்பு என்றாலும் பாரந்தூக்குவதுமாதிரியான கடினமான தொழிலல்ல. 70 வயதிலும் செய்யக்கூடிய உடல்தொழில். முன்னேற்றமடைந்த நாடுகளில் சமூகத்தின் கடைநிலைத்தொழிலைச்செய்பவர்களை அவற்றின் வரலாற்றுரீதியான இழிநிலைகாரணமாகவும் எந்தப்பெரிய நிறுவனத்துக்கும் இவர்களின் சேவை அத்தியாவசியம் என்பதாலும் கண்ணியமாக வேலைத்தலங்களில் மதிக்கும் உயர்பண்பு உண்டு.
இதைவிட எரிபொருள் நிலையத்தில் Console Operator ஆக வேலைசெய்பவர்கள், Cafe களில் Barista ஆக மதுச்சாலைகளில் Bartender ஆக வேலைசெய்யும் அழகிகள், புகையிரத பேருந்து நிலைய உத்தியோகத்தர்கள் முதலியோர் தம் பணிகளில் ஒன்றாக கக்கூசும் கழுவவேண்டும். இவ்வகையில் வெளிநாட்டில் PhD மாணவர்கள், தமது தகுதிகள் அங்கீகரிக்கப்படும்வரை மருத்துவர்கள், என்ஜினியர்கள் IT காரர்கள் என பல நம்மவர்கள் கக்கூஸ்கழுவியிருக்கிறார்கள். லைக்கா அதிபர் சுபாஸ்கரனிலிருந்து இன்றைய வடமாகாண ஆளுனர் சுரேன் ராகவன்வரை இத்தொழிலை செய்திருக்க வாய்ப்புண்டு.
மணியோடர் பொருளாதாரம் போய் கக்கூஸ் காசு பொருளாதாரம் வந்ததை ஆசாடபூதி விக்கி அறியாதிருக்கலாம். ஆனால் கக்கூஸ் காசு நிச்சயம் ஈழத்தின் பொருளாதார ஆதாரமாயிருக்கிறது. பெண்களின் சீதன பாதனங்களிலிருந்து குடும்ப உறுப்பினர்களின் பல்கலைக்கழ/ தொழிற்கல்வியிலிருந்து புலிகளின் கனரக ஆயுதக்கொள்வனவு வரை கக்கூஸ் காசுதான் சாத்தியமாக்கியிருக்கிறது. விக்கியின் ஆடம்பர முதலமைச்சர் வாழ்வுக்கும் மறைகாரணி கக்கூஸ் காசுதான்.
இதைவிட முக்கியமானது நம்மவரின் சாதிய மனநிலையையும் வெளிநாட்டு கக்கூஸ்தொழில் முடிந்தவரை இல்லாமலாக்கியிருக்கிறது.
விக்கி போருக்கு பின்னான ஈழத்தின் சாபம். மகா கெட்ட கனவு. புலிப்பாசிசத்தின் தொடர்மரபு. நீலன் திருச்செல்வம், லக்ஸ்மன் கதிர்காமர் இல்லாத ஆலையில்லா ஊரில் வந்த இலுப்பைபூ விக்கி. விக்கியின்
2013 -2018 ஆட்சிக்காலத்தில் வேலையற்றிருந்த இளைஞர்கள் ஒஸ்றேலியாவுக்கு வந்து கக்கூஸ் கழுவி ஊருக்கு அனுப்பிய பணத்தின் பொருளாதாரத்தாக்கம் பற்றி யாழ் டல்கலைக்கழக மாணவர் ஒருவர் ஆய்வுசெய்தால் தெரியவரும் விக்கி என்ற ஓட்டவாயின் வண்டவாளங்கள்.
ஒஸ்றேலியாவில் நான் செய்த முதல் தொழில் கக்கூஸ் கழுவியதுதான். இனியும் எப்போதும் இத்தொழிலை செய்ய தயாராகவே இருக்கிறேன். ஊருக்கு வந்து இத்தொழிலைச்செய்யவும் நான் தயார்.
2000ம் ஆண்டளவில் மு.க.ஸ்ராலின் சென்னை நகரபிதாவாக இருந்தபோது ஒரு சிங்கப்பூர் கொம்பனிக்கு சென்னையை துப்பரவாக்கும் ஒப்பந்தத்தை கொடுத்தாராம். என்னுடைய கனவு நான் ஒரு கிளீனிங் கொம்பனி தொடங்கி யாழ் நகரை சுத்திகரிக்கும் கொன்றாக்ற் ஐ யாழ் நகரபிதா இமானுவேல்ட் ஆனல்ட் இடமிருந்து பெறவேண்டும். ஒரு வருசத்திலேயே பணக்காரனாகிவிடலாம்.
- நட்சத்திரன் செவ்விந்தியன்.