முதலமைச்சர் விக்னேஸ்வரனின் செவ்வி ஒன்று, கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியாகி இருந்தது. கூட்டமைப்புத் தலைமைக்கும், அவருக்கும் இடையிலான பனிப்போர், தீவிரம் பெற்ற பின்னர், அவர், விரிவாகப் பல விடயங்களைப் பேசிய ஒரு செவ்வியாக இது இருந்தது. அந்தச் செவ்வி வெளியானதுமே, அதைத் தமிழ் மொழியாக்கம் செய்து, முதலமைச்சரின் செயலகம், பெரும்பாலான தமிழ் ஊடகங்களுக்கு அனுப்பியிருந்தது.தமிழ் ஊடகங்களும் அப்படியே வெளியிட்டிருந்தன.
அதுதான் பல்வேறு ஊடகங்களைச் சிக்கலில் மாட்டி விட்டிருக்கிறது. ஆங்கிலத்தில் வெளியான செவ்வியின் மூலத்திலிருந்து, தமிழ் மொழியாக்கத்தில் சில மாறுபட்ட கருத்துகள் இடம்பெற்றிருந்தன.
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மற்றும் சுமந்திரனின் அணுகுமுறைகள் தொடர்பாக உங்களின் கருத்து என்ன?” என்பது ஆங்கில மூலத்தில் இருந்த வினா?
அதற்கு, முதலமைச்சர் விக்னேஸ்வரன், “எமது மக்களின் அபிலாஷைகள், எதிர்பார்ப்புகள், தேவைகளில் இருந்து அவர்கள் விலகியே நிற்கிறார்கள். அவர்களிடம் விடப்படுமானால், எமது அடிப்படை அரசியல் அபிலாஷைகளை விட்டுக்கொடுக்கும் நிலை ஏற்படும். எமது மக்களின் உண்மையான அரசியல் நிலையைப் புரிந்து கொள்ளும் நிலையில் அவர்கள் இல்லை என்பது கவலைக்குரியது. தவறான தமது கருத்துகளே, சரியானவை என்ற மனோநிலையில் இருக்கிறார்கள்” என்று பதிலளித்திருந்தார்.
ஆனால், முதலமைச்சரின் செயலகத்தால் அனுப்பப்பட்ட மொழியாக்கத்தில், இந்தக் கேள்விக்கு, “ எமது மக்களின் எதிர்பார்ப்புகள், தேவைகள், அவசியங்களில் இருந்து எட்டியே நிற்கிறார்கள் அவர்கள். அவர்களைத் தொடர்ந்து இருக்கவிட்டால், அடிப்படைக் கோரிக்கைகளில் இருந்து சறுக்கி விடுவோம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இது சம்பந்தன், சுமந்திரன் ஆகியோரைத் தொடர்ந்து இருக்க விடக்கூடாது என்ற தொனிப்பட அமைந்திருந்தது. அதற்கே தமிழ் ஊடகங்களும் முக்கியத்துவம் அளித்திருந்தன. பல தலைப்புச் செய்தியாகவும் வெளியிட்டிருந்தன.
ஒரு செவ்வியில் வேறுபட்ட அர்த்தங்களை உருவாக்க முயன்றதன் மூலம், முதலமைச்சர் விக்னேஸ்வரன், தமிழ் ஊடகங்களுக்கு ஒரு முகத்தையும் ஆங்கில ஊடகங்களுக்கு இன்னொரு முகத்தையும் காட்ட விரும்புகிறாரா என்ற சந்தேகம் எழுகிறது.
பொதுவாகவே, முதலமைச்சர் விக்னேஸ்வரன் தமிழ் ஊடகங்களுக்கு விரிவான செவ்விகளை அளிப்பதைத் தவிர்த்து வருகிறார். அவ்வப்போது குறுகிய நேரம் செய்தியாளர்களுடன் உரையாடுவதை விட, விரிவாகப் பேசக் கூடிய விடயங்களுக்கு அவர் தயக்கம் காட்டுகிறார். அது முன்னெச்சரிக்கையான விடயம் என்றாலும், இந்தச் செவ்வி விடயத்தில், சில கேள்விகள் எழுகின்றன.
ஊடகங்களுக்கும் தனக்கும் இடையில் இடைவெளி ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் உறுதியாக இருக்கிறார். ஊடகங்களில் இருந்து விலகி விட்டால், தாம் மறக்கப்பட்டுப் போவோம் என்பது அவருக்குத் தெரியும்.
அதனால் அவர், முன்னாள் தமிழக முதல்வர் மு.கருணாநிதியின் பாணியைக் கையில் எடுத்துக் கொண்டு, கேள்வி – பதில் அறிக்கைகளை, அவராகவே தயாரித்து ஊடகங்களுக்கு அனுப்பத் தொடங்கினார்.
செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு என்றே, முதலமைச்சர் பதில் அனுப்புவார். ஆனால், அவர் பதிலளிக்க விரும்பும் கேள்விக்கு மாத்திரம், தாம் பதிலளிக்க விரும்பும் வகையிலேயே அது அமைந்திருக்கும் – அமைக்கப்பட்டிருக்கும்.
இந்தப் பாணியை வேறு மொழியிலாவது, எந்த அரசியல்வாதியேனும் கையாண்டார்களா தெரியாது. ஆனால், தமிழில் இதை அறிமுகப்படுத்தியவர் மு.கருணாநிதி தான். தினமும், அவரது, கேள்வி -பதில் அறிக்கை ஊடகங்களுக்கு அனுப்பப்படும். பக்கம் நிரப்பச் சிரமப்படும் மாலை நாளிதழ்களுக்கு, அது மிகவும் வரப்பிரசாதமாகவும் இருக்கும்.
கருணாநிதியின் கேள்வி – பதில் அறிக்கையை அவர் மாத்திரமன்றி, அவரது தனிப்பட்ட செயலாளர் சண்முகநாதனும் தயார்படுத்துவது வழக்கம். அதற்காகக் கருணாநிதி ஒருபோதும், ஊடகங்களின் கேள்விகளுக்கு நேரடியாகப் பதிலளிக்கத் தயங்கியதோ – தவறியதோ இல்லை. இதையும் ஒரு தனித்துவமான ஆயுதமாகவே அவர் கையாண்டார்.
கருணாநிதி நோயுற்ற பின்னரும், அவரது பெயரில் அறிக்கைகளும் கேள்வி – பதில் அறிக்கைகளும் வெளியாகின. அதை, கருணாநிதியின் தனிப்பட்ட செயலாளர் சண்முகநாதனே தயாரித்துக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் மு.க. ஸ்டாலின் அதை நிறுத்தி விட்டார். இயலாமல் இருக்கும் போது, கருணாநிதியின் பெயரில் அறிக்கைகள், பேட்டிகள் வெளியாவது அபத்தம் என்பதால், அதை நிறுத்தி விட்டதாக அவர் கூறியிருந்தார்.
முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு இந்த அறிக்கையை வேறு யாரேனும் தயாரித்துக் கொடுக்கிறார்களோ அல்லது அவரே தயாரித்துக் கொள்கிறாரோ தெரியவில்லை. ஆனால், அவர் ஊடகங்களுக்கு நேரடியாகப் பதிலளிப்பதைத் தவிர்ப்பதற்காகவே, இதைப் பயன்படுத்துகிறார் என்பதில் சந்தேகமில்லை.
அவ்வாறு அவர் அனுப்பியதையெல்லாம் அப்படியே வெளியிட்டுப் பழகிப் போன தமிழ் ஊடகங்களுக்கு, ஆங்கில மொழியில் வெளியான மூலச் செவ்விக்கும், இதற்கும் வேறுபாடு இருக்கிறதா என்று ஒப்பிட்டுப் பார்க்கும் ஆர்வம் ஏற்பட்டிருக்கவில்லை. முதலமைச்சரின் செயலகமே அனுப்பிய மொழிபெயர்ப்பு என்பதால், பிழையிருக்காது என்ற நிலைப்பாட்டில், அவர்களும் பிரசுரித்து விட்டனர். இந்த நிலையில், எதற்காக, முதலமைச்சரின் செயலகம் மாறுபட்ட அர்த்தங்களைக் கொடுக்கும் வகையில், மொழியாக்கத்தை அனுப்பியது என்ற கேள்வி எழுகிறது.
அதாவது, ஆங்கிலத்தில் அந்தச் செவ்வியில் இடம்பெற்ற விடயங்களில் மென்மைத் தன்மையையும் தமிழில் அது கடினத்தன்மையையும் கொண்டதாக இருக்கிறது.
‘சம்பந்தன், சுமந்திரனை விட்டு வைக்கக்கூடாது’ என்ற தொனி மொழியாக்கப் பிரதியில் தெரிகிறது. அவர்களை வெளியேற்ற வேண்டும் என்ற ஒருவித கோபம் அதில் தெறிக்கிறது.
அதிலும் “இவர்களைத் தொடர்ந்து இருக்கவிட்டால்” என்று கூறப்படும் வசன நடைக்கு, தமிழில் பல்வேறு அர்த்தங்களை அவரவரே போட்டுக் கொள்ளவும் முடியும். அதில் ஆபத்தான – அபத்தமான விடயங்களும் உள்ளன. சிலவேளைகளில் ஆங்கிலத்தில் சற்று அழுத்தமில்லாமல் கூறிய விடயத்தை, தமிழில் அழுத்திக் கூற முதலமைச்சர் விரும்பியிருக்கலாம்.
இவ்வாறான சிக்கல்கள் வரும் போது, பொதுவாகவே அரசியல்வாதிகள், ஊடகங்களின் மீது பழியைப் போடுவது வழக்கம். “செவ்வி எடுத்தவர் தவறாக விளங்கிக் கொண்டார்; எனது கருத்தை மாற்றி விட்டார்” என்று குத்துக்கரணம் அடிப்பார்கள்.
ஆனால், ஆங்கிலத்தில் செவ்வி எடுத்தவர், தனது கருத்தை மாற்றி விட்டார் என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் இலகுவாகக் குற்றம்சாட்ட முடியாது. அவர் ஆங்கிலச் செவ்விகளையும் கூட, பொதுவாகவே மின்னஞ்சலில் கேள்விகளைப் பெற்று, தானே, அதற்கு எழுத்து மூலம் பதிலளிப்பது வழக்கம். மொழியாக்கப் பிரதியும் கூட, அவர் வழக்கமாகப் பயன்படுத்தும் மொழி நடையில் தான் தயாரிக்கப்பட்டிருந்தது. எனவே, இது முதலமைச்சருக்குத் தெரியாத விடயம் என்று கூறமுடியாது.
எவ்வாறாயினும், ஓர் ஆங்கிலச் செவ்வியின் மொழியாக்க விடயத்தில், ஊடகங்களைத் தவறாக வழிநடத்த முயன்றிருந்தால் அது தவறான அணுகுமுறை. முதலமைச்சர் தனது கருத்து இதுதான் என்று உணர்ந்திருந்தால், தாராளமாகவே, அவரது கேள்வி – பதில் பாணி அறிக்கையில் மிகத் தெளிவாக அதைக் கூறியிருக்கலாம். அதுதான் அறமும் கூட.
முதலமைச்சர் கொடுக்கும் அறிக்கைகளை அப்படியே போட்டுப் பக்கங்களை நிரப்பிப் பழக்கப்பட்டுப் போன ஊடகங்கள் இப்போது, தெரிந்தோ தெரியாமலோ, தாம் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளதையிட்டு வெட்கப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
இது என்ன பெரிய பிரச்சினை என்று யாரேனும் கருதலாம். மிகப்பெரிய பிரச்சினையோ பிழையோ இல்லைத் தான்.
ஆனால், ‘முதலமைச்சர் கொழும்பு ஆங்கில நாளிதழுக்கு அளித்த செவ்வியில் இவ்வாறு கூறியிருக்கிறார்’ என்ற குறிப்புடன் அதைப் பிரசுரித்த ஊடகங்களுக்குத் தான் இது பெரிய பிழை.
ஏனென்றால், ஆங்கிலச் செவ்வியின் மூலம், அவ்வாறு இருக்கவில்லை. எனவே, ‘ஆங்கிலச் செவ்வியின் மொழியாக்கம்’ என்று அதைக் குறிப்பிடுவது அறமாகாது.
அரசியல் தலைவர்களின் இதுபோன்ற செவ்விகள், அவர்களின் ஊடகப் பிரிவுகளால், மொழியாக்கம் செய்யப்பட்டு வழங்கப்படுவது வழக்கம் தான். அவர்கள், தம்மைப் பிரபலப்படுத்திக் கொள்வதற்கோ, சில விடயங்களை அழுத்திச் சொல்வதற்கோ தான், அவர்கள் இவ்வாறு செய்வது வழக்கம்.
அதுவே பிரச்சினையாக வெடித்தால், சில வேளைகளில் அரசியல்வாதிகள் ஊடகங்களைப் பலிக்கடா ஆக்கி விட்டும் தப்பித்துக் கொள்வார்கள்.
இந்த நிலையில், பிரதியெடுத்துப் பிரசுரிக்கும் வழக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயம், தமிழ் ஊடகங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது என்பதை முதலமைச்சரின் செவ்வியும் மொழியாக்கமும் உணர்த்தி விட்டிருக்கின்றது.