(விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் பற்றி கருணாகரன் சுகன் சாகரன் என்ன கூறுகின்றார்கள்)
கருணாகரன்:
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்களில் பலர் எதிர்கொள்ளும் வாழ்க்கை நெருக்கடிகளைப்பற்றியும் சவால்களைப் பற்றியும் தொடர்ந்து எழுதிக் கவனப்படுத்தி வருகிறேன். இவர்களுடைய நிலைமையைப்பற்றி வேறு சிலரும் தொடர்ச்சியாக உரையாடல்களைச் செய்து வருகின்றனர். இருந்தாலும் நிலைமையில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.
கடந்த வாரம் சர்வதேச ஊடகவியலாளர் ஒருவர் இந்த முன்னாள் இயக்க உறுப்பினர்களுடன் உரையாடல்களைச் செய்தார். கூடவே நானும் சென்றிருந்தேன்.
அந்தப் போராளிகள் சொல்லும் கதைகளும் வாழும் வாழ்க்கையும் அவர்களுடைய மனக்கவலைகளும் கடந்து சென்று விடக்கூடியவையல்ல.
இயக்கம் இருந்த காலத்தில் அவர்களுக்கென்றொரு பாதுகாப்பான வாழ்க்கை இருந்தது. அங்கீகாரம் இருந்தது. போரில் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பிறகு, எல்லாமே தலைகீழாகி விட்டன. இப்பொழுது, அவர்களிற் பலர் நாளாந்த வாழ்க்கையை ஓட்டுவதற்கே பெரிய சிரமப்படுகின்றனர்.
அதிலும் கை, கால் இழந்தவர்களின் நிலை இன்னும் மோசமானது. முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டவர்களின் கதையைப் பற்றிச் சொல்லவே முடியாது. அந்தளவுக்கு படுமோசம். நிரந்தர வருவாய்க்கு வழியற்றிருக்கும் இவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் ஏராளம், ஏராளம். ஒவ்வொரு போராளியின் துயரக் கதையும் மாபெரும் துயர்க்காவியம்.
இவர்களுக்கு அரசாங்கமும் முறையாக உதவவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தொடக்கம், தமிழ் அரசியற் கட்சிகள், அரசியற் தலைவர்கள், பொது அமைப்புகள், புலம்பெயர் சமூகத்தினர் என எவரும் முறையான ஒரு திட்டத்தோடு உதவ முன்வரவில்லை. இதனால், பலர் கைவிடப்பட்டவர்களின் கதையாளர் என்றாகியுள்ளனர். இது இந்தப் போராளிகளிடத்திலே விரக்திக்கும் மனச்சோர்வுக்கும் வன்முறை எண்ணத்துக்கும் வழிவகுத்திருக்கிறது. எல்லோராலும் கைவிடப்பட்டதாக உணர்ந்திருக்கிறார்கள்.
வாய்ப்புள்ளவர்களை விட ஏனையவர்கள் இந்த மாதிரியான முள் வளையங்களுக்குள்தான் சிக்கியிருக்கிறார்கள்.
இவர்களுடைய நிலைமை இப்படியிருக்கும்போது புலிகளின் பேரால் என்னென்னவோ காரியங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
சாகரன்:
இவர்களின் நிலைக்காக வருந்துகின்றேன் இவர்களை வைத்து பிழைப்பை தேடியவர்கள் தேடுபவர்களை கண்டிக்கின்றேன் இவர்களுக்கான புனர்வாழ்வு அளிக்க ஆக்க பூர்வமான செயற்பாடுகளை வட கிழக்கு மாகாண அரசுகள் முன்னுரிமை கொடுத்து செயற்பட வேண்டும். நாமும் இதில் இணைய வேண்டும். இதே வேளை இவ்விடத்தில் இன்னொரு விடயத்தையும் குறிப்பிட்டே ஆகவேண்டு இவர்கள் தமது கடந்த கால செயற்பாடுகள் பற்றிய சுய பரிசோதனை ஒன்றையும் தமக்குள் அல்லது பொது வெளியில் செய்தே ஆகவேண்டும். இது ஒரு வகையில் சுய விமர்சனமாக அமையும் இதுவே எதிர்காலத்தில் ஒரு பலம் மிக்க சரியான பார்வையுள்ள சமூதாயத்தை கட்டியமைக்க உதவும். இது வெந்த புண்ணில் வேல்பாய்ச்சும் வார்த்தைகள் அல்ல மாறாக சீழ்பிடித்திருக்கும்காயத்தை (புண்ணை) துப்பரவு பண்ணி வைத்தியம் செய்யும் அணுகுமுறை…..! இது வலித்துத்தான் ஆகும்.
சுகன்:
இவர்களாற் கொன்றொழிக்கப்பட்ட மாற்று இயக்கப் போராளிகள் அவர்கள் குடும்பங்கள் நிலை என்ன ஆனது என இதுவரை கேட்டோமா ? அவர்களிற்கும் ஒரு வாழ்க்கை இருந்திருக்கக்கூடும் என சிந்தித்திருக்கிறோமா ? வாழ்வாதாரத்திற்கு அவர்கள் என்ன செய்திருக்கக்கூடும் என ஒரு கணம் சிந்தித்திருக்கிறோமா ? அந்த கொடும் இருள்சூழ்ந்த காலங்களில் என்ன நடந்தது என நம்மிடம் கரிசனை இருந்ததா ? அவர்கள் பின்னர் என்ன ஆனார்கள் என கேட்டோமா ? ஒட்டுக்குழுக்கள் எனவும் மகிந்த பேரினவாத அரசின் அடிவருடிகள் எனவும் இப்போதும் பரப்புரையில் ஈடுபட்டிருக்கும் இவர்களின் ஆன்ம நண்பர்களால் இப்போதும் அவமானத்தைத் தவிர வேறெதை கொடுக்கக்கூடியதாக இருக்கிறது ?