ஒருவகையில் தமிழரசன் தலைமையிலான
தமிழர் விடுதலைப்படையினரின் நடவடிக்கைகள்
விடுதலைப் புலிகளின் ஆரம்பகால நடவடிக்கைகளால் ஆகர்சிக்கப்பட்டவையாக இருந்தன.
அதிருக்க , பிரபாவை கலியப்பெருமாள் சென்னை சிறையில் சந்தித்ததாகவும் மார்க்சிச மாவோவிச கொள்கைகளை அவருக்கு போதித்து அதனை அவர் ஏற்றுக்கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.
கலியப்பெருமாள் சிறையிலிருக்கும் போது பாண்டி பசார் சம்பவத்தில் கைது செய்யப்பட்டு பிரபாகரன் சென்னை சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆனால் அவர் தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டதற்கு நானும் சாட்சி.
எங்கள் சிறை அறைகளுக்கு முன்னால் இன்னொரு பகுதியில் கலியப்பெருமாள் வள்ளுவன் உட்பட பலர் அடைக்கப்பட்டிருந்தனர்.
எங்களை வெளியில் விடுவதில்லை.
சிறை எவ்வாறு செயல்படும் என்பதற்கான அறிவு என்னிடம் இருக்கவில்லை.
சிறை என்றால் 24 மணி நேரமும் அறையில் அடைத்து வைப்பதென்றே எண்ணியிருந்தேன்.
ஆனால் நடை முறையில் சாதாரண கைதிகள் அறையை விட்டு வெளியில் நடமாடியதை அவதானித்தேன்.
அத்துடன் கலியப்பெருமாள் போன்றவர்களுக்கு சமைத்து சாப்பிடும் உரிமையும் வழங்கப்பட்டிருந்ததை அவதானித்தேன்.
அத்துடன் எங்களை காவல் செய்யும் ஒரு கார்ட் இடது சாரி சிந்தனை கொண்டவர்.
அவர் கலியபெருமாள் சம்பந்தமான தகவல்களை எனக்கு சொன்னார். அவர்கள் சிலவேளை மேலேயிருந்து கைகளை காட்டி புன்முறுவல் செய்வர். நாமும் பதிலுக்கு புன்முறுவல் .
அத்துடன் பிரபாவுக்கு இடது சாரி சிந்தனைகளில் அக்கறை இல்லை. இடது சாரி சிந்தனை தனி நாட்டுக்கு எதிரானது என்ற எண்ணப்போக்கு.
தினமும் காலை 6 மணிக்கு எல்லோரும் எழுந்திருக்கவேண்டும். பிரதம ஜெயிலர் சீருடையுடன் தடி ஒன்றை தாங்கி ஒரு சிறு படையுடன் வந்து கைதிகள் எப்படி இருக்கிறார்கள் என பார்த்து விசாரிப்பார்.
அப்படி ஒருமுறை விசாரிக்கும் போது எல்லாக் கைதிகளையும் பகலில் உலாவ விடுகிறீர்கள், ஏன் எம்மை மட்டும் 24 மணி நேரம் அடைத்து வைத்திருக்கிறீர்கள் என்றேன், அது நீதி மன்ற உத்தரவு என்றார்.
எங்களை மாதம் ஒருமுறை நீதி மன்றம் அழைத்து செல்வர்.
அவ்வாறு கொண்டு சென்ற போது நீதிபதி சிறையில் ஏதாவது பிரச்சனை உண்டா என கேட்டார். நான் பேச வேண்டும் என்றேன்,
அவர் அனுமதி கொடுத்தார்.
எம்மை 24 மணி நேரம் தனி அறையில் அடைத்து வைத்திருக்கின்றனர். இதனால் எனது உள நலமும் உடல் நலமும் குன்றுகிறது.
கேட்டால் நீதி மன்ற உத்தரவென்கிறார்கள் என்றேன். உடனே நீதிபதி அவர்களை ஒரு நாளுக்கு இரண்டு மணி நேரம் வெளியே விடவேண்டும் என உத்தரவிட்டார்.
மறு நாள் பிரதம ஜெயிலர் என்னை ஒரு தனியறையில் சந்தித்தார். எரிச்சலும் ஆத்திரமும் கொண்ட அவர் நீதிமன்றில் ஏன் அவ்வாறு சொன்னாய் எனக் கேட்டார்.
நான் பதிலுக்கு உங்களிடம் தான் முதலில் கேட்டேன் . நீங்க தான் நீதிமன்ற உத்தரவு என்றீர்கள். எனவே நான் நீதிபதியிடம் கேட்டேன் என்றேன் அவருக்கு பதில் இருக்கவில்லை. அதன் பின் பகலில் திறந்து விடுவர்.
பிரபா பெரும்பாலும் வெளியே வருவதில்லை. அறைக்குள்ளேயே இருப்பார். அவரது கொள்கை ஜெயிலுக்கு வந்தா அதிகாரிகள் சொல்வதை கேட்பது என்பது.
கலியபெருமாளும் மற்றைய தோழர்களும் எமக்கு முன்னால் உள்ள கம்பவுண்டில் இருந்தனர். அவர்கள் எமது பக்கம் வருவதில்லை.
அத்துடன் பிரபா இடது சாரி சிந்தனைக்கு எதிரானவர்.
அவ்வாறிருக்க கலியப்பெருமாள் பிரபாவுடன் உரையாடினார் என்பதும் பிரபா மார்க்சிய கொள்கைகளை ஏற்றார் என்பதும் நகைப்புக்குரியது.