விலத்தி நிற்போம்….. விலத்தி வைப்போம்…

சீனாவில் முதலில் அறியப்பட்டு இன்று சீனா தவிர்ந்து..? ஏனைய நாடுகளை உலுக்கிக் கொண்டிருக்கும் வைரஸ் இது என்றால் மிகையாகாது. ஆரம்பத்தில் எமது கோடிக்குள் இது இல்லை என்று எமது படலையை தட்டும் வரும் காணாதது போலவும்….. பாம்பு…. பல்லி சாப்பிடுபவர்களுக்கு இது வரும் எமக்கு அல்ல என்று எள்ளி நகையாடப்பட்டும் வந்த இந்த கொலை விரட்டி உலக மக்களை பீதிக்குள்ளாக்கியிருக்கின்றது.

தமது நாட்டிற்கு மற்ற நாட்டவர் வரத் தடை, தமது நாட்டிற்குள் ஒரு பிரதேசத்தில் இருந்து இன்னொரு பிரதேசத்திற்கு செல்லத் தடை…. காசைத் தொடமாட்டோம் காட்டை(வங்கி அட்டை) மட்டும் ஏற்போம்…..சீனப் பொருளாதாரம் அடிபட்டுப் போகின்றது என்று எமக்கென்ன என்று கண்டு கொள்ளாமல் இருந்தவர்களுக்கு எங்கள் நாட்டுச் பங்குச் சந்தையிலும் நிமிர முடியாத அடி என்று இன்று வரை இந்த வைரஸ் தனது ஆட்டத்தைக் காட்டிக் கொண்டிருக்கின்றது.

மக்கள் மட்டும் அல்ல மந்திரி…. பிரதம மந்திரி என்று யாரையும் விட்டு வைக்கவில்லை. இந்த இடைவிடாத இருமல், மூச்சுத் திணறல். இதற்குள் பயணம் செய்த பணக்காரர்கள் அதிகம் பாதிக்கப்பட அவர்களுக்கு சேவகம் செய்த சிலர் சேவகத்தின் போது வைரஸ் தாவலுக்குள் உள்ளாகி தனிமைப்படுத்தல் தங்கள் வீட்டிலேயே என்று வீட்டிற்குள்ளேயே ஊதியம் இன்றி அடைந்து கிடக்கும் நிலை.

பங்குசந்தையில் வீழ்ச்சிக்கு நேர் எதிர் மாறாக நோய் தொற்றுபவர்களின் சுட்டி ஏறி கொண்டே போகின்றது. எம்மை ஒன்றும் செய்யாது என்று அலட்சியமாக வீதியில் நடமாடிய இத்தாலியின் மன்னன் ரோம் அடங்கிய(எரிந்த) போது பிடி வாசிக்கவும் நாதியற்று அடங்கி ஒடுங்கியும் விட்டான்.

மனித குல மேம்பாட்டிற்கான எதனையும் நிராகரிக்கும் எதேச்சாகார அமெரிக்க டொனால் ட்றம் உம் மௌன மொழி பேசத் தொடங்கிவிட்டார்.

சாணத்தை உடலில் பூசிக்கொண்டு மாட்டின் மூத்திரத்தை குடித்தால் எல்லாம் அடங்கிவிடும் என்ற ஆர்எஸ்எஸ் சங்கிகளின் மூச்சையும் காணவில்லை.

ஆனால் இதற்குள் மட்டக்களப்பு, வவுனியா என்று தனிமைப்படுத்தும் முகாங்களுக்குள் தேசியம் நடத்தும் தேர்தல் வெ(ற்)றி நடிகர்களின் கொக்கரிப்புக்கள் அருவருக்கத்தக்கதாக அரங்கேறி வருகின்றன.

ஆனாலும் இவற்றிற்கு அப்பால் இளைஞர்களான வைத்தியக் கலாநிதி விஷ்ணு சிவபாதம்(மட்டக்களப்பு), கலாராணி ஜீவகுமார்(அவுஸ்திரேலியா) போன்றவர்களின் பதிவுகள் நம்பிக்கைகளை ஊட்டிய வண்ணம் இருக்கின்றன.

‘Schools are closed
Offices are closed
Malls are empty
Events are called off
Flights have grounded
Economy is down
Even international borders are closed
People are scared to look at each other, let alone touching
But hospitals are still open
We still touch patients to check their pulse and examine them
We don’t hesitate and walk meters away if you have a cold, cough, or fever
There is only one community at a high risk that have not yet stepped back … Doctors
Proud to be a doctor!’

என்ற கலா ஜீவகுமாரின் பதிவில் வைத்தியர்களுடன் சுகாதாரத்துறையில் வேலை செய்யும் அனைவரையும் கூடவே நாட்டின் பாதுகாப்பில் ஈடுபடும் படைத்துறையினரின் சேவைகளையும் இணைத்து பாராட்டி வணங்கி நிற்கின்றேன் நான்.

கூடவே விஷ்ணு சிவபாதம் இன் பதிவில் உள்ள
‘…….
நாம் இனம் மதம் பிரதேசம் என்று பிரிந்து நின்றால் வைரஸ் இக்கு இலகுவாகிவிடும் அல்லவா?

எம்மை நாமே அழித்துக் கொள்வதா?

இந்த கொடிய நோயை குறுகிய நோக்கத்துக்காக மக்கள் பிரதிநிதிகள் கையில் எடுத்துக்கொள்வது பொருத்தமாகுமா?

எமது மாவட்டத்தில் இருந்து கண்டி, கொழும்பு போன்ற பிற வைத்தியசாலைகளுக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பப்படும் நோயாளிகளுக்கு அவர்கள் இதயசுத்தியுடன் எதிர்காலத்தில் சிகிச்சை அளிப்பார்கள் என்பது நிச்சயமா?

அல்லது இவ்வாறான செயற்பாடுகளின் மூலம் மட்டக்களப்பை இந்த நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம் என நம்புகிறீர்களா?

ஆனாலும் கடந்த காலத்தில் எமது வைத்தியசாலையைப் பற்றியும், வைத்தியஙர்களைப் பற்றியும் பொருத்தமற்ற வார்த்தைப் பிரயோகங்கள் மூலம் களங்கப்படுத்திய பொழுதும், இந்த நோயானது நோயாளர்களை நேரடியாக தொடுவதன் மூலம் பரவும் என்று தெரிந்திருந்தும் எமது வைத்தியர்களும் தாதியர்களும் மற்றைய சுகாதார உத்தியோகத்தர்களும் எந்தவித எதிர்ப்பும் காட்டாமல் நோயாளிகளை பராமரிப்பதற்கு தயாராகி விட்டார்கள் அல்லவா?

ஒரு வைத்தியராக நான் இதில் பெருமை அடைகிறேன்…..”

என்ற வாசகங்கள் எம்மை சிந்திக்க வைக்கும் என்று நம்புகின்றேன்.

இன்றை அவசர தேவை எம்மை வைரஸ் தொத்துவதில் இருந்து காப்பாற்றுவதை விட நாம் மற்றவர்களுக்கு வைரஸ் தொத்துவதை தவிர்ப்பதே ஆகும்.

இதுவே இன்று மனித குலத்தைக் காப்பாற்றும் ஒற்றைப் புள்ளியாக இருக்க முடியும்.
இதில் என்னைக் காப்பாற்றுதல் என்ற ‘சுயநல.?”ச் சிந்தனை முழு மனித குலத்தையும் அழித்துவிடும்.

எனவே ‘விலத்தி வைப்போம்” என்பனைவிட ‘விலத்தி நிற்போம்” என்ற பொறி முறையைக் கையாண்டு மனித குலத்தைக் காப்பாற்றுவோம்.

‘விலத்தி நிற்போம்” என்பதற்குள் அடங்கிவிட முடியாத வைத்தியர்கள் உட்பட்ட சுகாதாரத்துறை ஊழியர்கள், இதற்கு உதவிகரமாக செயற்படும் பாதுகாப்பு படையினரை வாழ்த்தி வணங்கி நிற்போம். என்றென்றும் இந்த மனித குலம் இவர்களுக்கு நன்றிக் கடன் செலுத்தியே நிற்க வேண்டும்.