வினைதிறன் மிக்க அரசியலுக்கு வித்திட்டுள்ள பாராளுமன்றம்

பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, பிரசன்ன ரணவீர ஆகியோருக்கு பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்வதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பிரசன்ன ரணவீர நான்கு வாரங்களும் விமல் வீரவன்ச இரண்டு வாரங்களுக்கும் சபை அமர்வுகளில் பங்கேற்க முடியாது. பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

ஒழுக்கக் கோவை மற்றும் சிறப்புரிமை தொடர்பான குழு செய்த பரிந்துரைக்கமைய சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ சார்பு கூட்டு எதிரணி வாக்கெடுப்பின் போது தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி தடுக்க முனைந்தனர். எதிர்ப்பதும் தடுப்பதும் அவர்களுக்குரிய ஜனநாயக உரிமையாகும். என்றாலும் ஜனநாயகத்தை பேணும் ஒழுக்க நடவடிக்கையை அரசியலாக்க முனைந்த அவர்களது நடவடிக்கையும் இறுதியில் தோல்வியில் முடிந்தது.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் எம்.பி யாழ் பொது நிகழ்வொன்றில் பேசும்போது புலிகள் இயக்கம் புத்துயிர் பெறவேண்டுமென்ற தொனியில் பேசியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இது தொடர்பில் ஒன்றிணைந்த எதிரணியினர் ஜூலை மாதம் 3ஆம் திகதியன்று சபையினுள் குழப்பம் விளைவித்தனரென்பது உங்களுக்கு ஞாபகம் இருக்கும்.

எம்.பிக்கள் விமல் வீரவன்சவும் பிரசன்ன ரணவீரவும் குழப்பத்துக்கு காரணமாக இருந்தார்கள் என்பதே நிரூபணமான குற்றச்சாட்டு.

கௌரவ உறுப்பினர்களான விமல் வீரவன்ச, சபாநாயகரை மிகவும் அவதூறாகப் பேசியுள்ளார். அதற்காக இவர் இரண்டு வாரம் அமர்வுகளில் பங்கேற்க முடியாது. அதேபோல, கௌரவ உறுப்பினர் பிரசன்ன ரணவீர, செங்கோலை தூக்க முற்பட்டார். இதுவும் நிரூபணமானதால் இவருக்கு 4 வாரங்கள் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இந்த நாட்டின் அதி உயர் சபையாக இருப்பது பாராளுமன்றம். ஜனநாயக சமூகக் கட்டமைப்பின் அதிகார மையமும் இதுதான். அதே நேரம், ஜனநாயக விழுமியங்களையும் பண்பாடுகளையும் பேணும் கௌரவத்துக்குரிய சபையும் இதுதான்.

என்றாலும் காலம் காலமாக குழப்பங்கள் ஏற்படாமலும் இல்லை; சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்படாமலும் இல்லை. சுதந்திரமடைந்த காலத்திலிருந்து இப்படி நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அதி கௌரவ சபையினுள் நடக்கின்ற சம்பவங்களை ஜனநாயகப் பண்போடு பார்க்க முடியவில்லை.

ஊடகங்களுக்கு இவைகள் பரபரப்பான சம்பவங்களாக அல்லது செய்திகளாக இருக்கலாம். ஆனால், ஜனநாயகப் பாரம்பரியத்துக்கும் நமது பண்பாடுகளுக்கும் இழுக்கை ஏற்படுத்துவதாகவே இருக்கிறதென்பதை எவரும் மறுதலிக்க முடியாது.

பாராளுமன்றத்தை வழி நடத்துவதற்கான வழிகாட்டியாக இருப்பது நிலையியற் கட்டளைகள் (Standing Order). அதேநேரம், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்க நெறிக்கோவையும் தனியாக நடைமுறையில் இருக்கிறது. எனினும், இவைகள் முறையாகப் பேணப்படவில்லை என்பதே சகல தரப்பினரதும் குற்றச்சாட்டும்; ஆதங்கமாகவும் இருந்துவந்தது.

என்றாலும், இந்த நல்லாட்சி அரசு, நிலையியற் கட்டளைகளையும் எம்.பிக்களுக்கான ஒழுக்கக் கோவைகளையும் திருத்தியிருக்கிறது என்பது சற்று நிம்மதியைத் தருகிறது. திருத்திய புதிய நிலையியற் கட்டளைகளுக்கமையவே கௌரவ உறுப்பினர்களான விமல் வீரவன்சவும் பிரசன்ன ரணவீரவும் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்.

சபையை அகௌரவப்படுத்தும் வகையில் நடந்து கொண்டார்கள் என்பதே இவர்கள் மீதான நடவடிக்கையாகும். இந்த வேளையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ள கருத்துக்களும் நாட்டு மக்களை திரும்பிப்பார்க்க வைத்துள்ளது.

பாராளுமன்றம் வினைத்திறனுடன் செயற்படவில்லை என்பது அவரது ஆதங்கமாக இருக்கிறது. மக்கள் பிரதிநிதிகள் சபைக்கு வருகை தருவதில் குறைபாடு இருக்கிறது. உரிய நேரத்திற்கு வருவதில் ஆர்வம் காட்டுகிறார்களில்லை என்று கூறும் ஜனாதிபதி, பாராளுமன்றத்தை வினைத்திறனுடன் செயற்படுத்தி விளைதிறனைப் பெறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது என கோபாவேசம் கொள்கிறார்.

பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதன் மூலமே பாராளுமன்றத்தை வினைத்திறனுடன் இயங்கங்கச் செய்ய முடியும் என்பது அவருடைய வெளிப்படையான கருத்து.

இதனை ஒரு ஜனாதிபதியின் கருத்தாக அல்லது ஆதங்கமாக பார்க்க முடியாது. பாராளுமன்றத்தில் மிக நீண்ட அனுபவம் உள்ளவர் ஜனாதிபதி. பாராளுமன்ற ஜனநாயகத்தில் அதீத நம்பிக்கையுள்ள அவர், தற்போதைய எம்.பிக்களின் வருகை தொடர்பில் திருப்தி கொள்ளவில்லை என்பது தெட்டத் தெளிவாகத் தெரிகிறது.

உண்மையில், அரசியல் கலப்பில்லாமல் யதார்த்தமாக ஆராய வேண்டிய பிரச்சினை இதுவாகும்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையினுள் இல்லாததால் அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட சில சட்டமூலங்கள் நிறைவேற்றப்படாமல் ஒத்தி வைக்கப்பட்ட சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்திருக்கின்றன. பாராளுமன்ற வார்த்தைப் பிரயோகத்தில் சொன்னால், சபை நடவடிக்கைகளை நடத்துவதற்குத் தேவையான ‘கோரம்’ இன்மையால் இந்த நிலை ஏற்படுகிறது.

பாராளுமன்ற நிலையியற் கட்டளைப்படி, சபை அமர்வை நடத்துவதற்கு ஆகக்குறைந்தது 21 உறுப்பினர்கள் சபையினுள் இருக்க வேண்டும். இதனையே ‘நடப்பு எண்ணிக்கை அல்லது கோரம் என்று கூறப்படுகிறது.

225 உறுப்பினர்களைக் கொண்ட இந்தப் பாராளுமன்றத்தில் 21 உறுப்பினர்கள் கூட இல்லாமல் சபை அமர்வு ஒத்திவைக்கப்படுகிறதென்றால், நிலைமை பெரும் கவலைக்குரியதாகவே இருக்கிறது.

ஒரு மாதத்தில் 8 நாட்கள் மாத்திரமே பாராளுமன்ற அமர்வு நடைபெறுவது சம்பிரதாயம். (விசேட அமர்வுகளும் சிலவேளைகளில் இடம்பெறும்) ஒரு மாதத்தில் வருகின்ற இரண்டாவது செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை (4 நாட்கள்) அமர்வு நடைபெறும். அதேபோல, அதே மாதத்தில் வருகின்ற 3வது செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிவரையும் (நான்கு நாட்கள்) சபை நடவடிக்கைகள் இடம்பெறுவது வழக்கம்.

இந்த எட்டு நாட்கள் தவிர ஏனைய நாட்களில், அவரவர் தொகுதிகளில் நின்று மக்கள் பணியாற்ற வேண்டுமென்பதற்காகவே இந்த அமர்வு வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், நடப்பது என்ன? என்பதை ஜனாதிபதியே விலாவாரியாகத் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

மக்களுக்காகப் பணியாற்றப் புறப்பட்டவர்கள் அந்தப் பணியை செவ்வனே செய்ய வேண்டுமென்பதே ஜனாதிபதியினதும் நாட்டு மக்களினதும் எதிர்பார்ப்பு.

பாராளுமன்ற ஜனநாயகத்தில் அதீத நம்பிக்கை கொண்டவர்கள் தான் சபைக்குத் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். அதில் சந்தேகமில்லை. ஆனால், மக்கள் நலன்சார் சட்டமூலம் ஒன்றைக் கூட இயற்றுவதற்கு பங்களிப்பு செய்ய முடியாமல் போகும் பிரதிநிதித்துவத்தால் என்ன பலன் இருக்கப்போகிறதென்பதை….? நீங்களே தீர்மானியுங்கள்.

ஆளும் தரப்போ எதிர்த்தரப்போ – எந்தத் தரப்பு என்றாலும் பாராளுமன்ற ஜனநாயகத்தையும் சம்பிரதாயத்தையும் மீறிச் செயற்படுவதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. 225 உறுப்பினர்களும் கௌரவத்துக்கும் கண்ணியத்துக்கும் உரியவர்கள். உங்கள் அர்ப்பணிப்பை எதிர்பார்த்துத்தான் மஹாஜனங்கள் உங்களை உரிமையோடு அனுப்பி வைத்தார்கள் என்பதை மறந்து செயற்படுவது நல்லதல்ல.

(Thinakaran)