இவை கடந்த வாரம் இலங்கையின் வடபுலத்தில் ஒரு கிராமத்தில் அரங்கேறிய காட்சி.
புத்தூர் மேற்கு கலைமதி கிராமத்தில் இன்னொருமுறை மக்களுக்கு வாழ்விடங்களுக்கு நடுவே பிணத்தை எரித்தே தீருவது என்று சிலர் முடிவெடுத்து, கடந்த வாரம் மேற்கொண்ட முயற்சிகள் ஊர்மக்களின் தளராத தீரமான போராட்டத்தின் விளைவால் தடுக்கப்பட்டுள்ளது.
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், கலைமதி கிராம மக்கள் தங்கள் ஊருக்கு நடுவே உள்ள மயானத்தை நிரந்தரமாக அகற்றக் கோரி மேற்கொண்ட நீண்ட தளராத போராட்டத்தின் விளைவாக, நீதிமன்றத்தின் மூலம் நீதியைப் பெற்றுக் கொண்டார்கள். இந்த முரண்பாட்டின் மய்யம் சாதி.
தமிழ் மக்களின் விடுதலைக்காகக் குரல் கொடுப்பதாகச் சொல்கிற தமிழ்த் தேசியவாதிகள் யாரும் திரும்பிப் பார்க்காத ஆதரவு தராத களம் கலைமதி கிராமம். 700 குடும்பங்கள் இங்கே வாழ்கின்றன. இங்குள்ள யாரும், தங்களின் பிணங்களை இந்த மயானத்தில் எரிப்பதில்லை. மாறாக, இதன் அடுத்த கிராமத்தில் உள்ள ஆதிக்கசாதியினரே தங்களின் பிணங்களை இங்கு எரிக்க முயல்கிறார்கள். மீண்டும் முளை விட்டுள்ள இந்த நெருக்கடி, இன்றைய சூழலில் ஆழமாகவும் விரிவாகவும் அதிகரிக்கின்ற சாதிய மனப்பாங்கின் வெளிப்பாடுகளாகும்.
இந்தப் பிரச்சினை வெறுமனே ஒரு கிராமத்துக்கு மட்டும் உரியதல்ல. புன்னாலைக்கட்டுவன், ஈவினையை அண்டியுள்ள திடற்புலம் மயானம், புத்தூர் மேற்கு கிந்துசிட்டி மயானம், கரவெட்டி வடக்கு மயானம் என்பன சில உதாரணங்கள்.
ஈவினை, திடற்புலம் மயானப் பிரச்சினை நீதிமன்றம் வரை சென்றுள்ளது. கரவெட்டி வடக்கில் அமைந்துள்ள மயானத்தில் உயர் சாதியினர் எனப்படுவோர், தமக்கான ஒரு பகுதியை மதில் எழுப்பிப் பிரித்து, அதில் தாங்கள் மட்டும் தம்மவர்களை எரிப்பதற்கு முயற்சி எடுத்துள்ளனர். ஆனால், அதைத் தடுக்கும் வகையில், அப்பிரதேச மக்களால் அம்மதில் உடைத்தெறியப்பட்டது. இதனால் சாதிய மோதலுக்கான முறுகல் நிலை தோன்றியது. அதில் பிரதேச சபை தலையிட்டு, அவ்வாறு தனியாகப் பிரித்து மதில் கட்டமுடியாது எனக் கூறி, அப் பிரச்சினையைத் தணித்தாலும், இன்னமும் முரண்பாடு நிலவுகிறது.
மக்களுக்காகவே மயானங்கள் தோற்றுவிக்கப்பட்டன. சனத்தொகை குறைவாக இருந்த காலத்தில், குடியிருப்புகளுக்குத் தூரத்தில் மயானங்கள் அமைக்கப்பட்டன. சனத்தொகை பெருகி மக்கள் குடியிருப்புகளுக்கு நிலம் இல்லாதபோது, வசதியற்ற அன்றாடம் உழைத்து வாழும் சாதாரண மக்கள் மயானங்கள் என்றும் பாராது, அவற்றை அண்டிய காணிகளை விலைக்கு வாங்கிக் குடியமர்ந்தனர்.
புதிய மின்மயானங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால், தங்கள் கிராமத்தில் உள்ள மூன்று மயானங்களையும் பயன்படுத்தாமல் அண்டைய கலைமதி கிராமத்துக்கு நடுவில் குடியிருப்புகளுக்கு நடுவே உள்ள மயானத்தில் பிணத்தை எரிக்க முயல்வது சாதியத்திமிரன்றி வேறல்ல.
வடபுலத்தின் சாதி ஒடுக்குமுறையின் தொடர்ச்சியாக, மக்கள் குடியிருப்புகள் நடுவே மயானங்களைப் பேணும் சாதியாதிக்க முயற்சிகள் இன்னமும் தொடர்கின்றன. தமிழ்த் தேசிய இன விடுதலைப் போராட்ட காலத்திலும் போர்ச் சூழலிலும் மறைந்து வருவதாகத் தோற்றம் காட்டி நின்ற சாதியம், போர் முடிவுற்றதைத் தொடர்ந்த கடந்த பத்தாண்டுகளில் வடக்கில் சாதியம் வெவ்வேறு தளங்களிலும் வழிகளிலும் தனது இருப்பை நிலைநிறுத்த முனைந்து நிற்கின்றது.
இந்தச் சாதியத்திமிரைக் கட்டமைப்பதில் ஊடகங்களினதும் சமூகவலைத்தளங்களினதும் பங்கு பெரிது. குறிப்பாக, உண்மைச் செய்திகளை மறைப்பது, செய்திகளைத் திரிப்பது, பொய்களைப் பரப்புவது என்பன தொடர்ந்து நடந்து வருகின்றன. மறுபுறம், சாதியப் பிரச்சினைகள் பற்றிய தமிழ் அரசியல் தலைவர்களின் மௌனம் தொடர்ந்து நீடிக்கிறது.
‘சாதித் திமிருடன் வாழும் தமிழனோர் பாதித் தமிழனடா’ என்றார் கவிஞன் சுபத்திரன். இன்றும் சாதிய மனங்களோடு தான், ஊடகங்கள் தமது வியாபாரத்தையும் தமிழ்த்தேசியம் தனது அரசியலையும் முன்னெடுக்கின்றன. ‘சாதியம் மறுப்போம் சமத்துவம் காண்போம் மனங்களை விரிப்போம் மனிதராய் எழுவோம்’ என்பது இந்நூற்றாண்டிலேனும் ஈழத் தமிழ்ச் சமூகத்துக்கு இயலுமாகுமா?