ஒரு சமூகத்தின் வரலாற்றை பதிவு செய்வது என்பது மிகவும் கடினமான விடயம். அதனை செய்வதற்கு அந்த வரலாற்றுடன் வாழ்ந்திருக்க வேண்டும். ஒரு மனிதனால் அரை தசாப்த காலமே நேரடி அனுபவங்களை பொதுவாக ஒரு மனிதரால் பெற முடியும். இதற்கு அப்பால் அந்த வரலாற்றை எழுத வேண்டின் வாசிப்புகள், அவதானிப்புகள், கேள்வி ஞானம், கலந்துரையாடல் ஆய்வு என்று பலதுக்குள்ளும் சென்றாக வேண்டும்.
அப்போதுதான் அதை ஒரளவிற்கு முழுமைக்கு அண்மையான ஆவணமாக அமைக்க முடியும். அந்த நோக்கை அடைவதற்கான வேலைகளை இந்த புத்தகத்தின் ஆசிரியர் வரதன் கிருஸ்ணா ஈடுபட்டிருப்பதாக புத்தகத்தின் தகவல் கனதிகள் கூறி நிற்கின்றன. அந்த வகையில் இந்த வரலாற்றுப் புத்தக ஆசிரியருக்கு வாழ்த்துகள்.
இலங்கை சமூகத்தின் சிறுபான்மை மக்கள் பிரிவுகளான வடக்கு கிழக்கு தமிழ் மக்கள், முஸ்லீம் மக்கள், மலையக மக்கள் என்ற மூன்று பிரிவினர்களிடையே அதிகம் ஆவணப்படுத்தலுக்குரிய வாய்புகளை குறைவாக கொண்டிருந்த வளங்கள் உள்ள மலையக மக்கள் பற்றி தகவல்களை திரட்டுதல் என்பது சற்றே கடினமாக இருந்திருக்கும் ஆனாலும் அதற்கான தயாரிப்புகளை இந்த புத்தகத்தின் உருவாக்கத்தில் காணக் கூடியதாக உணர முடிகின்றது.
வரலாற்று ஆவணமாக ஒரு பதிவை செய்ய முற்படும் போது தகவல்கள் உண்மையானதாக அல்லது அதற்கு அண்மையில் உள்ளதாக அமையாவிட்டால் அதனை பலரும் வரும் காலத்தில் உசாத்துணையாக பாவிப்பதற்குரிய நம்பகத் தன்மையை இழக்க நேரிடலாம். இதனை நாம் பல்வேறு வரலாற்றுப் புத்தகங்கள் பதிவுகளில் கண்டு வந்திருக்கின்றோம்.
இந்த புத்தகம் ஒரு உசாத்துணைப் புத்தகமாக கொண்டிருப்பதற்கான தகுதிகளை தன்னகத்தே கொண்டிருப்பது சிறப்பானதாகும்.
‘பலமானவர்கள்..” அதிகார வர்க்கம் போன்றவை தனக்கிருக்கும் வாய்ப்புகளை பாவித்து வரலாற்றுத் திரிபுகளை நிறையவே செய்திருக்கின்றன. இது அதற்கான வாய்ப்புகளை நிதிவளங்கள் பலதையும் கொண்டிருக்கும் சூழலில் ஏற்படலாம்…? ஆனால் இந்த எந்த வசதிகளையும் அதிகம் கொண்டிராத தனி நபராக அவர் சார்ந்த சமூகம் அடிப்படையிலும் இப்படியான வரலாற்று புத்தகத்தை வெளியிடுவது அதனை பலரும் ஏற்கும் வகையில் அமைப்பது பலரிடமும் கொண்டு செல்வது என்பது மிகுந்த சவாலாக இருக்கும் நிலையில் இந்த புத்தக உருவாக்கம் நடைபெற்று இருக்கின்றது.
இதன் வெளியீடு சில தினங்களுக்கு முன்பு முதல் நிகழ்வாக மலையத்தில் நடைபெற்று அதனைப் பலரிடமும் கொண்டு சென்ற சிறப்பை இந்த புத்தகம் கொண்டிருக்கின்றது.
மலையக மக்களின் ஒருவராக ஆசிரியர் இருப்பதினால் அந்த சமூகம் சந்தித்த சவால்கள், வலிகள், வேதனைகள், ஏமாற்றங்கள், வெற்றிகள், தோல்விகள,; முகவரியற்ற தன்மைகள், நாடற்றவர் என்ற அவலங்கள், நாடு கடத்தப்பட்ட ஏமாற்றங்கள,; என்று பலதையும் உணர்பூர்வமாக தனது சுய அனுபவங்கள் மூலம் வெளி கொணர முடிந்திருப்பதாக உணர முடிகின்றது இந்த புத்தகத்தை வாசிக்கும் போது.
இலங்கை வாழ் தமிழ் மக்களின் சாத்தவீகப் போராட்டங்கள் அதனைத் தொடர்ந்து தனிநாட்டுப் போராட்டம் அது ஆயுதப் போராட்டமாக பரிணமித்த போது பிரதான போராட்டக் களத்துடன் புவியல் ரீதியில் அதிகம் இணைப்பை கொண்டிராவிட்டாலும் மலையக மக்கள் தாமும் இணைந்து பல்வேறு காலகட்டங்களிலும் போராடிய வரலாற்றுப் பங்களிப்பை இந்தப் புத்தகம் பேசவிளைகின்றது.
இது பற்றி பொது வெளியில் அதிகம் பதியப்படவில்லை, பேசப்படவில்லை என்ற ஆதங்கம் மலையக மக்களிடம் இருப்பது நியாயமானது. ஒரு வகையில் அவர்களின் பங்களிப்பு, தியாகங்கள் கருத்தில் கொள்ளப்படவில்லையோ மதிப்புகள் வழங்கப்படவில்லையோ என்ற ஏமாறற்ங்கள் ஏக்கங்கள் அவர்களிடம் உள்ளதாக நான் இணைந்து போராடிய எனது மலையக தோழர்கள் மூலம் அறிய முடிந்தது.
அந்தக் ஆதங்கங்களை தீர்ப்பது போல் இந்த புத்தகத்தின் உள்ளடக்கம் அதற்கான ஆவணங்களை வரலாற்றுக் குறிப்புடன் இந்த பேசி இருக்கின்றது.
இலங்கையில் மிகப் பெரிய பலமான தொழிற்சங்கச் செயற்பாடுகள்… மலையக தொழிலாளி வர்க்கம் எவ்வாறு மிக மோசமாக பெரும் தேசியவாதத்தினால் சிதகறிக்கப்பட்டது என்பதையும் கூடவே அந்த மக்கள் மத்தியில் இருந்து உருவான சில சங்கங்களினாலும் அந்த மக்கள் ஏமாற்றப்பட்டது என்பதையும் தைரியமாக வெட்ட வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்கும் ஆசிரியர் தனது எழுத்தை உண்மையாக உபயோகித்து இருக்கின்றார்.
அந்த வகையில் தொண்டமானின் குடும்ப இணக்க காட்டிக் கொடுப்பு அரசியல் மலையக மக்கள் மத்தியில் ஒரு பலமான சரியான அரசியல் தலமையை ஏற்படுத்துவதில் அரை நூற்றாண்டு காலமாக தடைகளை ஏற்படுத்தியிருக்கின்றது என்று வரலாற்று உண்மைக் கூறுகளை ஆதாரங்களுடன் சம்பவத் தொகுப்பாக விபரித்திருக்கின்றது.
இந்த வரலாற்றுப் பாடம் இனி வரும் காலங்கள் ஒரு சரியான தலமையை மலையகத்தில் கட்டியமைப்பதற்கு உதவிகரமாக இருக்கும் என்பது என்னைப் போன்ற மலையக மக்களின் விடுதலை பற்றிய நம்பிக்கைகளை ஏற்படுத்துவதற்கு இந்த புத்தகம் உதவுகின்றது.
மலையக மக்களின் சாத்வீகமான போராட்டங்களில் பலர் தமது உயிர்களை அர்பணித்தனர். இதில் பெண்களும் அடங்குவர் அவர்களை முடிந்தளவிற்கு பட்டியலிட்டு ஆவணப்படுத்தியிருப்பது சிறப்பு.வரலாற்றில் பெண்களின் தியாகங்கள் அதிகம் பேசப்படவில்லை என்ற தவறு இங்கு தவிர்க்கப்பட்டிருக்கின்றது.
நடேச ஐயர், வேலுப்பிள்ளை, வெள்ளையன், இராசலிங்கம், அப்துல் அஸீஸ் போன்ற அந்த மக்களுக்காக வாழ்வை அர்பணிக்க தயாராக இருந்த போராளிகள் தமது உயிரை அர்பணித்த சிவனு லட்சுமணன் போன்றவர்களுக்கு எந்த வகையிலும் குறைவில்லாமல் இந்த புத்தக ஆசிரியர் காலத்து மலையகப் போராளிகள் ஈழவிடுதலைப் போராட்டத்தின் ஒரு அங்கமாக மலையக மக்கள் மத்தியில் இருந்து புறப்பட்டு போராடிய செயற்பாட்டை பார்க்க முடியும்.
இரண்டு முக்கிய ஈழ விடுதலை அமைப்புகள் இந்த செயற்பாட்டிற்கான போராளிகளை உருவாக்கினார்கள். அவர்களின் அர்பணிப்புகளை பொது வெளியில் பதிந்தும் வந்திருக்கின்றனர். அவை இரத்தினசபாபதி தலமையிலான ஈரோஸ் அமைப்பும், பத்மநாபா தலமையிலான ஈபிஆர்எல்எவ் அமைப்பும் ஆகும்.
அவர்களின் போராட்ட வரலாற்றில் உள்ள தகவல்களுடன் இணைந்து மலையக மக்கள் போராளிகளின் பயணம் அமைந்தது என்பதை இந்த புத்தகம் முடிந்தளவிற்கு பெயர்களை குறிப்பிட்டு பேசி இருக்கின்றது. இதன் மூலம் வீழ்ந்து விடாத வீரமாக மலையகப் போராளிகள் இலங்கையின் முழு ஒடுக்கு முறைக்கும் எதிராகவும் ஏனைய சிறுபான்மை இனங்களுடன் இணைந்து செய்த போராட்டங்களின் வரலாற்றில் தடங்களை நிறுவி நிறப்பதாகவே இந்தப் புத்தகம் பதிவு செய்ய முற்பட்டிருக்கின்றது.
இனக் கலவரங்களால் இடம் பெயர்ந்து கிளிநொச்சி, வன்னிப் பிரதேசங்கள்ல் வாழ்ந்து வந்த மலையக மக்கள் ஈழவிடுதலைப் போராட்டத்தில் இணைந்தது ஒரு வகையில் தவிர்க்க முடியாத சூழல் என்று சொல்ல முற்பட்டாலும் அவர்களை இந்த போராட்டங்களின் தலமை சக்தியாக இனம் காட்டப்பட்டது அதிகம் இல்லாதது சிறுபான்மையினருக்குள் சிறுபான்மையினர் என்ற வடக்கு மேலாதிகத்தின் செயற்பாடாக அமைந்தது ஈழவிடுதலைப் போராட்டத்தின் அவலங்கள்….
இதற்கு அப்பால் வடக்கு கிழக்கிற்குள் அமையாது மலையகத்தில் உள்ளவர்கள் இந்த ஈழ விடுதலைப் போராட்டத்தில் இணைந்தது என்பது வெறும் உணர்ச்சியின் அடிப்படையில் அல்ல உணர்வுகளின் அடிப்படையிலானது. அவர்களுடன் ஒன்றாக பயணித்த காலங்களில் இன்று வரை அது என்னால் உணரப்பட்டது அதனையும் கிருஷ்ணா வரதன் தனது பதிவில் ஆளமாக பதிய முற்பட்டிருக்கின்றார்.
சமூகம் ஒன்றிற்கான கல்வி மறுப்பு என்பது அந்த சமூகம் விழிப்படைந்து தமது உரிமைகளை பெறுவதற்கான தடைகளை ஏற்படுத்தும் என்பதை இன்று வரை மலையகத்தில் கடைப் பிடித்துவரும் ஒடுக்கு முறையின் வடிவாக இருந்தன என்பதை வரலாற்றுப் போக்கில் எடுத்துரைத்தருப்பது இந்த புத்தகத்தின் சிறப்பு.
கொழும்பை மையமாக கொண்டு தினக் கூலிகளாக வேலை செய்த மலையகத்தவர் மத்தியில் தமிழ் நாட்டு திராவிட பாரம்பரிய பெரியாரின் சுயமரியாதை சமூக நீதிக் கருத்துகளை விதைக்கும் முகமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட திராவிடக் கட்சிகளின் செயற்பாடுகளை வரலாற்று ஆவணமாக தெளிவாக பேசி இருக்கின்றது இந்த புத்தகம்.
ஒரு காலத்தில் மலையகம் சிங்கள மக்கள் மட்டும் வாழ்ந்த நிலமாக இருந்தது ஆங்கிலேயர்கள் மலையகத் தமிழர்களை கூலிகளாக தென் இந்தியாவில் இருந்த கொண்டுவரப்பட்டு குடியேற்றி சிங்களவர்களின் நிலங்கள் பறிகப்பட்டன என்பது போன்ற பேரினவாத சக்திகளின் பிரச்சாரமும் அதனால் ஏற்பட்ட கலவரங்கள் போராட்டங்கள் இங்கு புரியப்பட வேண்டும் என்ற வகையில் இந்தப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றதா..? என்பதை நான் ஆய்விற்கு விட்டுவிடுகின்றேன்.
கொப்பேகடுவாவின் சிந்தனையின் அடிப்படையில் ஜயரத்தின மலையத்தில் மலையக மக்களை சிறுபான்மையினராக்கும் செயற்பாடுகள் கிழக்கில் அம்பாறை திருகோணமலை போன்ற இடங்களில் டிஎஸ் செனநாயக்கா போன்றவர்களால் திட்டமிட்டு செயற்படுத்திய போன்று ஒப்புவமையான செயற்பாடுகள் செயற்படுத்தப்பட்டன. அவரின் இந்த செயற்பாடுகள் கண்டி பிரதேசத்தில் கிடைத்த வெற்றி நுவரேலியாவில் ஏற்படவில்லை என்பதை மட்டக்களப்புடன் ஒப்பிட்டுப் பாரக்க முடியும்.
ஆனால் இந்த செயற்பாடுகள் அன்று மலையகம் முழுவதும் முன்னெடுகப்பட்டன இது இன்று வரை மலையகத்திலும் கிழக்கிலும் தொடருவது ஒரு வரலாற்று ஒப்பீடாக பார்க்கப்பட வேண்டும். இது போன்ற செயற்பாட்டிற்குள் சிறுபான்மை மக்கள் இணைந்து போராட வேண்டிய தேவையை இந்த புத்தகத்தின் கருத்தியல் கூறி நிற்பதாக என்னால் உணர முடிகின்றது.
நாடு கடத்தப்பட்ட இடம் பெயர்வு என்று தமிழ் நாட்டிற்கும் இனக் கலவரங்களால் வடக்கிற்கும் இடம் பெயர்ந்த மலையக மக்களின் வாழ்வியல் பற்றிய வரலாற்றை பார்போமாகின்…. இரு இடங்களிலும் ஒரே மொழி பேசும் கிட்டத்தட்ட ஒரே காலாச்சாரம் உடைய மக்களை அரவணைத்து ஆதரித்து முன்னோக்கி நகர்த்துவதற்கு பதிலாக ஏமாற்றங்களும், அவலங்களும், அவமரியாதைகளும் விஞ்சுவதான செயற்பாடுகளையே இந்த மக்கள் இன்று வரை சந்தித்து வருகின்றனர் இந்த வரலாற்று தடயங்களை தாங்கியதாக இந்த புத்தம் விரிந்து செல்கின்றது.
பெரும்பான்மை மக்களுடன் புவியியல் ரீதியில் இணைந்து பிணைந்ததான மலையக சூழலில் மக்கள் அரசியல் மயப்படுத்தி அணிதிரட்டி (ஈழ)போராட்டத்தில் வலுவான காலச் சூழல் என்ற நிலையினை அடைய முன்பே இராணுவச் செயற்பாடுகளை நடாத்துவதற்குரிய இடமாக மலையகத்தை தெரிவு செய்து செயற்பட்ட அணுகுமுறை பல பின்னடைவுகளை மலையகத்தில் ஏற்படுத்தியது என்பது பாடமாக இருக்கின்றது.
தமிழ் மக்கள் செறிந்து வாழும் தொடர்ச்சியான பிரதேசத்திற்குரிய போராட்ட செயன் முறையை மலையகத்தில் கை கொண்டது பாரிய பின்னடைவுகளை ஏற்படுத்தியது. வடக்கு கிழக்கு போன்ற பிரதேசங்களுக்கான ஆயுத செயற்பாடுகளை மலையகத்திற்கும் அது போல் பெருபான்மை சிங்கள மக்கள் பகுதியில் நடாத்தப்படும் ஆயுத செயற்பாடுகள் என்ற வேறு வகையான தந்திரோபாயங்களை ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு கையாண்டதன் விளைவுகளை மலையத்தில் ஈரோஸ், ஈபிஆர்எல்எவ் போன்ற அமைப்புகள் தொடர்ந்தும் அங்கு முழு வீச்சுடன் செயற்பட முடியவில்லை என்பதை இந்த புத்தகம் பேசி உள்ளது.
அது ஈழவிடுதலைப் போராட்ட காலத்தில் ஈழப்புரட்சி அமைப்புடன் இணைந்த தனது விடுதலைப் பயணத்து அனுபவங்களை ஆள அகலமாக பேசி இருப்பதை வெளிப்படுத்தியிருக்கின்றது இந்த புத்தகம். கூடவே ஏனைய ஈழவிடுதலை அமைப்புகளின் செயற்பாடுகளையும் ஓரளவிற்கு தொட்டுச் சென்றிருக்கின்றது.
அதுவும் சிறப்பாக மலையகத்தை அடிநாதமாக கொண்டு வெவ்வேறு விடுதலை அமைப்புகளின் பங்களிப்பு பற்றிய பார்வையினூடு புரிதல்களை ஏற்படுத்தவும் முனைகின்றது.
மலையகத்தின் மக்களை அணிதிரட்டி புரட்சி என்ற இந்திய நக்சல்பாரிகளின் கருத்தியலில் ஆயுதப் போராட்டத்திற்கான தயாரிப்புகள் செயற்பாடுகளில் ஈடுபட்ட கீழைக் காற்று அமைப்பு பற்றி தகவல்கள் என்று எதனையும் ஆசிரியர் விட்டு வைக்கவில்லை அவை சிறப்பானவை.
மலையக மக்களின் வாழ்வியலை கவிதைகளாக கதைகளாக இலக்கியம் படைத்தவர்களின் தகவல்களை இணைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் அந்த ஒரு விடயம் தவற விடப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. கூடவே மலையக மக்களின் காமன் கூத்து பற்றிய விடயத்தையும் எதிர்பார்த்தேன் தவறவிடப்பட்ட விடயங்களாக இதனையும் என்னால் உணர முடிகின்றது.
இரண்டு வரலாற்றறுத் தவறுகளை என்னால் பார்க்க முடிந்தது ஒன்று ஈரோஸ் உறுப்பினர் பவானந்தனின் ஒரு கால் இழப்பிற்கு காரணம் ஏ9 வீதி ஓரத்தில் புதைத்து வைக்கப்பட்ட மிதிவெடி விபத்து நிகழ்வு மற்றது திம்புவில் ஜேஆரின் சகோதரரரே கலந்து கொண்டார் மகன் அல்ல என்பதுவும் ஆகும்.
பல விடயங்களை சரி பார்ப்பதற்கு போதியளவு ஆதாரங்கள் என்னிடம் இல்லை தெரிந்தவற்றை மட்டும் குறிப்படுகின்றேன். இரண்டாவது பதிப்பில் இதற்கான செழுமைப்படுத்தல்களை செய்வோம்.
தரையில் பிறந்து மலையில் வாழ்ந்து மீண்டும் தரையில் வாழ நிர்பந்திக்கப்பட்ட வாழ்க்கை முறையே மலையக மக்கள் இந்தியாவின் தென்னக்தில் இருந்து இலங்கை மலைகளுக்கு கொண்டு வரப்பட்டு மீண்டும் இந்தியாவிற்கு நாடுகடத்தப்பட்ட வலிகள் நிறைந்த சம்பவத்தில் நடைபெற்றது.
அதே போல் பேரினவாதங்களின் கலவரங்களால் வடக்கிறகு இடம்பெயர்ந்த மலையக மக்களின் வாழ்விலும் நடைபெற்றே இருக்கின்றது.
இந்த விளிம்பு நிலை மக்களின் இந்த வலிகளை மனித குலம் புரிந்து கொள்வதற்கு இந்த புத்தகம் ஒரு ஆவணமாக ஆழமான செயற்பாட்டை வரலாற்றில் செய்யுமாயின் அதுவே இந்த புத்தகத்தின் வெற்றியாக அமையும்.
(Dec 12, 2021)