யுத்தத்தை காரணம் காட்டி வசூலிக்கப்பட்ட பணம் உள்ளுரிலும் புலம் பெயர் தேசம் எங்கும் ‘…அவர் வரட்டும் திருப்பிக் கொடுக்கின்றோம்…” என்ற சொல்லிற்குள் ஒழித்து வைத்து இந்த யுத்த வடுக்களுடன் விளையாடுகின்றார் சிலர். இதற்குள் இயற்கை அனர்தம் சுனாமியின் நிவாரண நிதிகளும் ஏராளம்.
இதனை அம்பலப்படுத்தி எழுதிய கட்டுரைகளும், மேடைப் பேச்சுகளும், கடந்த 11 வருடங்களாக ஆயிரம் ஆயிரமாய் ஆதாரங்களுடன் வந்து கொண்டுதான் இருக்கின்றன. இவர்களை காப்பாற்றும் பெரும் போக்கு ஊடகங்கள் பத்திரிகைகளாக, வானொலிகளாக, தொலைக்காட்சிகளாக கூவி; கொண்டுதான் இருக்கின்றன.
தாயக மீட்பு என்று சொல்லி ஆரம்பிக்கப்பட்ட தொலைக்காட்சிகள் வானொலிகள் தாயகத்தின் தனிநாட்டுக் கனவிற்கு மண் அள்ளிப் போட்ட அரசின் சலுகையில் ஒரு ‘சனல்” என்ற நிலையில் இருந்து பல சனல்கள் என்றும் பல நாடுகளிலும் ஒலிபரப்பு, ஒளிபரப்பு என்றும் விஸ்தரிப்புக்களை செய்து விட்டன.
இதில் விசேடம் என்னவென்றால் இவர்களில் அதிகம் தாயகத்தில் தமது ஊடகச் சேவையை செய்து ‘தேசியத்தைக”; காப்பாற்றும் காவலர்கள் நாம் தான் என்ற சான்றிதழ் பெறுவதுதான். இதில் கணிசமான வெற்றிகளை கண்டுவிட்டனர். கொழும்பின் பிரதான பகுதியில் தமது அலுவலகத்தை திறந்து ‘அறிவித்துலுக்கு” இவ்வளவு பவுண் கட்டுங்கள் என்று ‘ஒப்பாரி” வைக்கும் மக்களிடம் அறவிடுகின்றன. மக்களும் மனித வாழ்வில் ஒரு தடவைதான் என்று விட்டில் பூச்சி போல் பவுணை கட்டி அறிவித்தலைப் போடுகின்றனர்.
இதற்கான பணம் அந்த தாயக மண்மீட்பிற்கு என்று கோஷம்
போட்டும் இறுதிக்கட்ட போர் நிதி என்று அவனுக்கு அவன் சேகரித்து பின்பு
புலம் பெயர் தேசங்கள் எங்கும் ஏன் கொழும்பு தலைநகரத்திலும் முதலீடு
செய்யப்பட்ட நிதிகளின் வட்டியின் குட்டிகள் அப்ப முதலை யோசியுங்கோ…?
ஆயுத மௌனமும் “அவர் வருவார்” சீமான் துரையின் பேச்சுக்களும் ‘அவர்
வரட்டும் கணக்க காட்டுகின்றோம்…. காசைக் கொடுக்கின்றோம்..” என்ற கணக்கு
விடுதலும் தொடர்ந்த வண்ணம்தான் இருக்கின்றது. அதுவும் கொரனா காலத்து
கொள்ளையிலும் இவர்கள்தான் முதலிடம்.
இங்கு வெறுக் கோப்பையுடன் அந்த வெள்ளந்தி சிரிப்பில் குண்டுகளுக்கு மத்தியில் பிறந்த இளம் குருத்து தனது தாய் தந்தையிரின் யுத்த வலிகளை அறியாது தவித்து நிற்கும் வலிகள் எம்மில் பலரை உலுப்பித்தான் விட்டது. உள்ளுரிலும், வெளிநாட்டிலும் உள்ள மனித நேயங்கள் பாத்திரத்தில் உணவளிக்கும் வேலைகளை தொடர்ந்த வண்ணம்தான் இருக்கின்றனர்.
சோற்றை கொடுப்பதற்கு பதிலாக நெல்லை விளைவிப்பதற்கான அடித்தளங்களுக்கான ஆதாரங்களை வழங்குங்கள் என்ற கோஷங்களுடன், செயற்பாட்டுன் செயற்படுவதே சிறந்தது. தமக்கான தேவையை உழைப்பின் மூலம் பெறுவது இதற்கான ஆதாரங்களை முடிந்தளவு உதவிகள், மூலங்களை தாருங்கள் என்ற பிச்சைத் தட்டை ஏந்தி நிற்கும் நிலையில் உள்ள குடும்பங்களின் வலியை உணர்ந்தவர்கள் சாமான்யர்களே.
இன்று சொன்னப் போனால் தமது தேவைகளைக் கூட நிரப்ப முடியாத அன்றாட உழைப்பாளிகள்தான். ஆனால் ஒரு வேளை உணவல்ல பல நாட்கள் உணவில்லாமல் வலிகளை சுமந்தவர்கள் பலர் எம்மில் அந்த வலிகளின் உணர்வுகளை உணர்ந்து செயற்படும் நற் சேவைகளை பாராட்டித்தான் ஆக வேண்டும்.
இரத்த உறவுகள் என்பதற்கு அப்பால் பிரதேசம் கடந்து நாடு, மொழி, மதம் கடந்து அல்லல்லுறும் மனிதர்களுக்கு உதவும் தெரசாக்கள் புதுக் குடியிருப்பிலும் உள்ளனர்.. அந்த சகோதரியை மதித்து வணங்கி நிற்கின்றேன். இங்கு ‘புதுக்குடியிருப்பு” ஒரு குறியீட்டுரீதியிலான சொற்பதமே. இது எல்லைகளை கடந்து செயற்படும் செயற்பாடுகள்.
நிலமில்லாவிட்டால் நெல் கொடுத்தும் பிரயோசம் இல்லை. இருக்க வீடு இல்லாவிட்டால் ஆடு, மாடு, கோழி கொடுத்தும் பாரிய பிரயோசம் இல்லை. ஆனால் வலை கொடுத்தால் கடலம்மா யாவருக்கும் பொதுவானவள் என்பதினால் அங்கு தொழில் செய்து மீனைப் பிடிக்கலாம்… வாழலாம்… என்பதற்காகத்தான் ‘வலையை கொடுங்கள்” என்றார்களோ என்ற சமூக விஞ்ஞானத்தை இதற்குள் நான் தேடுகின்றேன்.
கொரனா பேரிடர் உதவிகளை வழங்கும் போது பொதியுடன் விதைகளை வழங்குங்கள் என்று ஆரம்பித்த எம் சிந்தனையில் விதைகளுடன் வலைகளையும் இணைத்துக் கொண்டோம். இதற்கு நான் மேலே குறிப்பிட்ட சமூக விஞ்ஞானம்தான் காரணமோ…?
நலமடிக்கப்பட்ட விதைகளால் ஒரு பிரயோசனமும் இல்லை என்று கமத் தொழலில் திணைக்கழக வல்லுனர்கள் கிராம சேவக உத்தியோகஸ்தர்கள் கூறிய கூற்றை, ‘தொலைபேசி உரையாடலை” என்னை ரொம்பவும் சிந்திக்க வைத்தன.
விவசாயத்தை தொழிலாக கொண்ட குடும்பத்தில் பிறந்த நான் எனது தந்தையார் தான் விதைத்த எந்த பயிருக்குமான நாத்தை(நாற்றை)யும் முதற் போகத்தில் செய்த பயிரில் இருந்து விதைகளை சேகரித்து உருவாக்கினார். இது எல்லா விவசாயிகளுக்கும் பொருந்தி இருந்த நிலையில்…. 40 வருடத்தில் நம்ஆழ்வாரை மீறய சுவாமிநாதன் களின் செயற்பாட்டை எவ்வாறு அதுவும் ஒரு அரசையே எமக்குள் நடத்தினோம் என்று 2009 மே வரை சொல்லி வந்த நாம் அனுமதித்தோம் என்பது எனது பெரிய கேள்வியாக இங்கு இருக்கின்றது.
இதில் சகல உத்தரவு வழங்கியவர்களையும், கமத்தொழில் உத்தியோகஸ்தர்களையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துகின்றேன். சுய உற்பத்தியாளர்களையும் தேசியத்தை தூக்கி பிடித்து நாம்தான் தேசியத்தின் காவலர்கள் என்று உரத்துக் கூறியவர்களையும் இணைத்துக் கொள்கின்றேன்.
விதைகளை, வித்துக்களை தேடி
அலையும் இந்த மரபணு மாற்றம் இந்த வெறும் கோப்பை ஏந்தலின் இன்னொரு காரணமாகி
நிற்பதற்குள் இருக்கும் அரசியலைப் புரிந்து கொள்ள வேண்டும் நாம்.
மாசி
மாதம் வழங்கிய பொதிகளுடன் வழங்க்கப்பட்ட விதைகள் விதைத்து
முளைத்திருந்தால் இந்தக் கோப்பை வெறும் கோப்பையாக இருந்திருக்குமா என்பது
என் நியாயமான கேள்வி என்பதை நான் ஆணித்தரமாக நம்புகின்றேன்.
மரத்தில் கதிகால் வெட்டி… அதனை நட்டு மரமாக்கி… பின்பு அதில் கதிகால் வெட்டி என்று தலைமுறை தலைமுறையாக வாழ்ந்த மனித குலம் தமக்கான குழந்தை அதற்கான குழந்தை என்று தலைமுறையாக வாழ்வதில் காட்டும் இறுக்கத்தனத்தை கதிகாலில் காட்டவில்லை.
இதில் நம்மாழ்வாரை பின் தள்ளி சுவாமிநாதன்களை வணங்கும் அறிவற்ற தன்மையிற்குள் அல்லது குறைந்த நாட்களில் அதிக மகசூல் என்ற உணவு உற்பத்தி என்பது பணத்தை சம்பாதிப்பதற்கான விடயமே ஒழிய மனித குலத்திற்கான உணவு வழங்கல் என்ற முதன்மை விடயத்திற்காக அல்ல என்ற நுகர்வுக் கலாச்சாரத்திற்குள் முழுமையாக நாம் வீழ்ந்து விட்டோமா என்ற கேள்விகளில் உள்ள நியாயங்களை நாம் புரிந்து கொள்வோம்.
இவற்றை நாம் சரியாக கையாண்டு செழுமைப்படுத்தி முன்னேறினால் இந்த வெற்றுப் பாத்திரம்… பிச்சைப் பாத்திரம் போல் காட்சியளிக்கும் எங்கள் குழந்தைகளை இனிவரும் காலங்களில் நாம் காண்பதற்கான வாய்புகளைக் குறைக்கலாம் இணைந்தே செயற்படுவோம்.
இனி ஒரு விதி செய்வோம். இவ் வெற்றுப்பாத்திரங்கள் எம்மை உணவளிக்க வரவேற்கும் அட்சய பாத்திரங்களாக மாற்றுவோம்