இலங்கையின் யுத்தவரலாற்றில் குறுகிய நேரத்தில் அதிக கொலைகள் இடம்பெற்ற நாளாகவும் பெருநிலப்பரப்பொன்றில் குறுகிய நேரத்தில் ரத்தபெருக்கெடுத்த நாளாகவும் ஏப்ரல் 10ம் திகதி பதிவாகியுள்ளது. ஆனால் மனித உரிமைகளின் காவலர்களோ சமாதானத்தின் தேவ – தேவதைகளோ இந்த கொடூரமான நாள் தொடர்பில் அவர்களது நாளேட்டில் எதையும் பதிவு செய்து கொள்ளவில்லை. “சகோதர யுத்தம் ஒன்றுக்கு இடமில்லை ,ஒரு துளி இரத்தம் கூட சிந்தாமால் இப்பிரச்சினையை தீர்த்து வைப்பேன்” பிரபாகரன்.பிரபாகரனின் இக்கூற்றை கிழக்கு போராளிகள் நம்பினார்கள்.
காரணம் , பிரபாகரன் மீது அவர்கள் வைத்திருந்த அளவுகடந்த நம்பிக்கையாகும், வன்னிப்புலிகளை விட கிழக்கு மாகாண போராளிகள் நம்பிக்கையானவர்கள் மட்டுமல்ல வீரமானவர்களும் கூட, பிரபாகரனையும் வன்னிப்புலிகளையும் இந்தியன் ஆர்மியிடம் இருந்தும் வெவ்வேறு சுற்றி வளைப்பில் இருந்தும் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் காப்பாற்றிய கருணா அம்மானும் கிழக்கு மாகாணப் போராளிகளும் திருப்பி அடிக்க நினைத்திருந்தால் வன்னிப்புலிகள் அன்றே காணாமல் போயிருப்பார்கள்.
புலிகளின் ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னாலும் இருப்பவர்கள் கிழக்குப் போராளிகளே ,சரித்தரமுக்கியத்துவம் வாய்ந்த வெற்றிகளை தேடித் தந்த பெருமை கிழக்குப் போராளிகளையேசேரும். புலிகள் அமைப்பு வலுவான ஒரு அமைப்பாக இருப்பதற்கு தூண்களாக இருந்தவர்கள் கிழக்குப் போராளிகளே என்று அடித்துக் கூறலாம்.புலிகளில் பாதிக்குமேல் கிழக்கு போராளிகளே இருந்தார்கள். இறந்த மாவீரர்களில் கிழக்குமாகாண போராளிகளே அதிகளவில் இருந்தார்கள், வடக்கு பகுதியினர் பெருன்பான்மையோர் வெளிநாடுகளுக்கு ஓட, கிழக்கு போராளிகள் வடக்கு நோக்கி ஈழ விடுதலை கனவுடன் பிரபாகரனை நோக்கி ஓடினர்.
கிழக்குப் போராளிகள் போராட்டகளத்தில் ஒரு ரோபோ போல முன்னரங்கு காவல் நிலைகளில் கிடக்க வடக்கு பகுதியினர் பெரும்பாலும் தளபதிகளாக பிக்கப் ட்ரக்கில் வலம் வந்தனர், கிழக்குப் போராளிகள் இல்லாமலிருந்திருந்தால் புலிகளின் வெற்றி வரலாறுகளெல்லாம் வேறுமாதிரியே எழுதப்பட்டிருக்கும், இவை எல்லாவற்றிக்கும் சேர்த்து பிரபாகரனும் வன்னிப்புலிகளும் கொடுத்த பரிசுதான் இந்த வெருகல் படுகொலை.2004 ஆம் ஆண்டு மார்ச் மாதம் புலிகளுக்குள் இருந்த பிரதேச ரீதியான பிரச்சனைகள் அம்பலத்துக்கு வந்தன.
அதனை அடிப்படையாகக் கொண்டு மாபெரும் கிழக்கு பிளவு நிகழ்ந்தது. புலிகளின் சுமார் ஆறாயிரம் போராளிகளைக் கொண்ட மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களின் சிறப்புத் தளபதியான கேணல் கருணா அம்மான் மார்ச் மாதம் 03 ஆம் திகதி இந்த கிழக்குப் பிரிவினையை பகிரங்கமாக அறிவித்தார். புலிகளின் புதிய நிர்வாகக் கட்டமைப்பிற்காக நியமிக்கப்பட்ட 32 துறைச் செயலாளர்களிலும் ஒருவர் கூட கிழக்கு மாகாணத்தில் இருந்து தெரிவு செய்யப்படவில்லை என்பது முதற்கொண்டு கிழக்கு மாகாணத்து போராளிகளும் கிழக்கு மாகாண மக்களின் நலன்களும் புறக்கணிக்கப்படுகின்றனர் எனும் பல அதிருப்திகள் கேணல் கருணா அம்மானால் முன்வைக்கப்பட்டது.
இந்த குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ள மறுத்த புலிகளின் தலைமை கேணல் கருணா அம்மான் மீது வழக்கமாக சூட்டும் துரோகப்பட்டத்தைச்சூட்டி கிழக்கு மாகாணப் போராளிகள் மீது படைஎடுத்தனர் வன்னியில் இருந்து சொர்ணம்,பானு, ஜெயம் , தீபன் தலைமையில் திருகோணமலையை வந்தடைந்த புலிகள் ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி அதிகாலைப் பொழுதில் வெருகல் ஆற்றினை கடந்து மட்டக்களப்பு மண்ணில் நிகழ்திய கொலைவெறியில் சுமார் 210 கிழக்கு போராளிகள் கொன்றொழிக்கப்பட்டனர்.
எதிரியான இராணுவம் கூட செய்யத் தயங்குகின்ற முறையில் இந்த வெருகல்படுகொலை நிறைவேற்றப்பட்டது. பாலியல் கொடூரங்களை நிகழ்த்தி கிழக்குமாகாண பெண்போராளிகள் மீது வன்னிப்புலிகள் அரங்கேற்றிய இப்படுகொலையானது இந்திய இராணுவத்தால் செய்யப்பட்டதாக கூறப்பட்டவையை விட மோசமானதாகும் ,அவை எழுத்துகளால் விபரிக்கத்தக்கனவல்ல. கிழக்கின் மக்கள் வரலாற்றில் கண்டிராத சமர்க்களம் ஒன்றை கண்டனர். உடலங்கள் துண்டுதுண்டாக சிதறின. சிதறும் உடலங்கள் தமது சதோதர சகோதரியரது என புலிகள் சிறிதும் கவலைகொள்ளவில்லை. உயிர் தப்பியுள்ளோரை சரணடையுமாறு ஒலிபெருக்கி மூலம் அறிவித்தல் விடுக்கப்பட்டது அவ்வாறு சரணடந்தவர்கள் சிலர் அவ்விடத்தே சுட்டுக்கொல்லப்பட்டனர், பலர் தெரு நாய்கள் போல் சங்கிலிகளினால் பிணைக்கப்பட்டனர்.
அத்துடன் கருணா அம்மானின் முக்கிய தளபதிகளது குடும்பத்தினர் தேடித்தேடி வேட்டையாடப்பட்டனர். அவர்களும் சங்கிலிகளில் பிணைக்கப்பட்டனர். அவ்வாறு சங்கிலிகளில் பிணக்கப்பட்ட போராளிகள் மற்றும் தளபதிகளின் குடும்ப அங்கத்தினர் சுமார் 500 பேர் உடனடியாக கால்நடையாக வன்னிக்கு துப்பாக்கி முனையில் நகர்த்தப்பட்டனர். சிலர் அதிவேக படகுகளில் கொண்டு செல்லப்பட்டனர்.பொழுதுவிடிந்து வெளியே வந்த மக்கள் தமது உடன்பிறப்புக்கள் உடல் சிதறிக்கிடக்க கண்டனர்.
சிதறிய உடற்பாகங்களை அணுக எவரும் அனுமதிக்கப்படவில்லை. நாய்களும் நரிகளும் தங்கள் பாட்டுக்கு புகுந்து விளையாடின. பிரதேசமெங்கும் இரத்தவாடை வீசியது. புலிகளின் ஆக்கிரமிப்பு படையினர் வீடுவீடாக சென்று சல்லடைபோட்டு தேடுதல் நடாத்தினர். கொழுத்தும் வெயிலில் வெந்துவேகிய உடல்கள் நாற்றமெடுக்க தொடங்கின. சடலங்களைக் அணுகக்கூட உறவினர்கள் அனுமதிக்கப்படவில்லை மயான பூமியில் பிண மற்றும் இரத்தவாடைக்குள் மக்கள் திறந்தவெளிக்கைதிகளாக வைக்கப்பட்டனர்,அந்த பிரதேசத்து கிராமவாசிகள் எல்லோரும் துரத்தியடிக்கப்பட்டு எவரது உடல்களும் புதைக்கப்படாமலும் அடையாளம் காணப்படாமலும் சுமார் ஒரு வாரத்துக்கு வெருகல் பிரதேசம் நாற்றமெடுத்து கிடந்தது.தங்களது உடன்பிறபுகள் உடல்சிதறிக்கிடக்க இறுதிக்கடமைகள்கூட செய்யமுடியாத அடிமைகளாக அவர்கள் ஆயுதமுனையில் வைக்கப்பட்டிருந்தனர்.
மறுநாள் 11ம் திகதி பிற்பகல் புலிகள் வெந்துவெதுங்கி நாற்றமெடுத்துக்கிடந்த உடல்களை ட்ரக்; ரக வாகனங்களில் அள்ளிச்சென்று கதிரவெளிக்காட்டுக்குள் நூற்றுக்கணக்கான சடலங்கைளை பாரிய படுகுழிகளில்போட்டு புதைத்துள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கான சடலங்கள் வெருகல் ஆற்றின் மறுகரைக்கு எடுத்துச்செல்லப்பட்டு புதைக்கப்பட்டுள்ளது. உறவினர்களுக்கு ஆகக்குறைந்தது புதைக்கப்பட்ட இடம்தொடர்பான தகவல்கூட வழங்கப்படவில்லை.
நயவஞ்சகத்தனமாக வலையில் சிக்கவைத்து சரணடைய பண்ணிய முக்கிய தளபதிகள் பலரை புலிகளின் மட்டக்களப்பு புலனாய்வுப் பொறுப்பாளராகவிருந்த கீர்த்தி என்பவன் பாரமெடுத்தான். புலிகளமைப்பில் முக்கிய தளபதிகளாகவிருந்த ராபட், ஜிம்கெலித்தாத்தா, துரை, ஸ்ரேன்லி உட்பட பல தளபதிகள் , பொறுப்பாளர்கள் , சிறந்த போராளிகள் எனச் சுமார் 130 பேர்வரை கீர்த்தியின் இலுப்படிச்சேனை சித்திரவதை முகாமில் வைத்து சித்திரவதை செய்யப்பட்டனர். கைகள் பின்னே கட்டப்பட்டு கண்கள் கட்டப்பட்ட நிலையில் பலத்த சித்திரவதையின் பின்னர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
குற்றுயிரும் குறையுயிருமாக கிடந்த பெண்போராளிகளின் உடைகளை களைந்தெறிந்து அசிங்கப்படுத்தியுள்ளனர். இச்செயலை வடக்கிலிருந்து வந்திருந்த புலிகளே மேற்கொண்டதாக உறுதியாக கூறப்படுகின்றது.இலங்கையில் கொல்லப்பட்டவர்கள் யாவரையும் பட்டியலிட்டு நீதிகோரும் தமிழ் சமூகம் புலிகளால் கிழக்கில் வாழ்வுரிமை மறுக்கப்பட்டவர்கட்கு வாழத்தகாதவர்கள், துரோகிகள் என்று தீர்ப்பெழுதிவைத்துள்ளது. இவர்களுக்கு கருணை காட்டுவதற்கு எவரும் இல்லை.
நீதிபெற தகுதியற்றவர்களாகவே காணப்படுகின்றார்கள். வழக்கமாக புலிகள் செய்யும் கொலைகளை மறைக்கும் விபச்சார ஊடகங்கள் அன்றைய காலகட்டத்தில் இந்த படுகொலையையும் மூடி மறைத்தன.சமாதான காலத்தில் படைகளை நகர்த்துவதோ, ஆயுதங்களை இடம்மாற்றுவதோ, எடுத்து செல்வதோ அரச-புலிகள் இருதரப்பினருக்கும் தடை செய்யப்பட்ட ஒன்றாகவிருந்தது.
ஆனால் அந்த சமாதான காலத்தில் யுத்தநிறுத்த மீறல்களை செய்து வன்னியிலிருந்து வடக்கு புலிகள் ஓமந்தை சோதனை சாவடிகளை தாண்டி வெருகலாற்றங்கரையில் தரையிறக்கப்பட்டனர். *இது எப்படி சாத்தியம்?*பலநூறு புலிகளை ஓமந்தையை தாண்டி ஐந்து பஸ்கள் நிறைய ஆயுதங்களுடன் 150கிலோ மீற்றர்கள் பயணித்து வெருகல் வரை செல்ல அனுமதி வழங்கியவர்கள் யார்? *அந்த பேரம்பேசலில் அன்றைய ஒற்றைக்கண் ஜனாதிபதி சந்திரிகாவுடன் புலிகளுக்காக தமிழ் செல்வனின் ரகசிய செய்திகளுடன் பேரம்பேசலில் ஈடுபட்ட தமிழ் தலைவர் யார்? *வெருகல் தாக்குதல் இடம்பெறுவதற்கு முதல் நாளே ஏன் நோர்வே தலைமையிலான சமாதான செயலகம் கிழக்கு மாகாணத்திலுள்ள அலுவலகங்களை தற்காலிகமாக மூடிவிட்டு சென்றனர்?
இது சமாதானம் பேச வந்த மேற்கத்தேய மத்தியஸ்தர்களின் படுகொலைக்கு உடந்தைனான செயற்பாடு இல்லையா?*இதனை சர்வதேசத்தின் எந்தமனிதாபிமான தார்மீக செயலில் அடக்க முடியும்?எனவேதான் நோர்வே-இலங்கையரசு ஆதரவுடனேயே புலிகள் வெருகல் படுகொலையை நிகழ்த்தினர் என்பது புலனாகின்றதல்லவா? சகோதர யுத்தத்தை ஊக்குவித்து புலிகளின் பலத்தை சரிபாதியாக குறைப்பதில் அவர்கள் போட்ட கணக்கு வென்றது.ஆனால் இந்த அகோரமான வெருகல் படுகொலையை நடத்தியவர்களுக்கு காலம் தீர்ப்பளித்தது.வெருகல் ஆற்றில் சிந்திய கண்ணீருக்கும் இரத்தத்திற்கும், நந்திக் கடலில் கலந்த கண்ணீருக்கும், இரத்தத்திற்கும் ஓரு எந்தவொரு வித்தியாசமும் இல்லை.ஆம் வெருகல் படுகொலையை நிகழ்த்திய அன்றே புலிகளின் இறுதி நாள் தீர்மானிக்கப்பட்டுவிட்டது.