(அ. ராமசாமி)
ஜனநாயகத்தை உருவாக்கும் தேர்தலில் வாக்களிக்கும் அனுபவத்தைவிடக் கூடுதலான அனுபவத்தை எனக்கு உணர்த்திய தேர்தல் 2006 சட்டமன்றத் தேர்தல். அந்தத் தேர்தலில் நண்பர் ரவிக்குமார் வேட்பாளராகக் களத்தில் இறங்கினார். அவரது தேர்தல் பிரசாரத்தின்போது அவர் போட்டியிட்ட தொகுதியில் குறுக்கும்நெடுக்குமாகப் பயணம் செய்தேன். அந்தப் பயணங்களின்போது நான் பெற்ற அனுபவங்களை அப்போதே காலச்சுவடு இதழில் எழுதியிருக்கிறேன். அப்போது தொடங்கிய பணநாயகம் இப்போது பன்மடங்காகவும் பல பரிமாணங்களை அடைந்திருக்கிறது.
2006 தேர்தலில் ஐம்பது லட்சம் முதல் ஒரு கோடி வரை பணம் செலவழித்த வேட்பாளர்களைப் பற்றிக் கதைகள் கிளம்பியிருந்தன. எங்கள் கிராமத்துக்கு ஏதாவது செய்யுங்கள் ; சாவடி கட்டுங்கள்; கோயில் கட்ட நிதி உதவி செய்யுங்கள் என்றுதான் அப்போது கேட்டார்களே தவிர என்னுடைய ஓட்டுக்கு இவ்வளவு பணம் தாருங்கள் என்று கேட்கும் மனம் உருவாகியிருக்கவில்லை. வாக்களிக்கும் வாக்காளர்கள் வேட்பாளரிடமிருந்து பணத்தை எதிர்பார்த்து நிற்கவில்லை என்பது அன்றைய உண்மை. வாக்களிப்பதற்குப் பணம் வாங்குவது குற்றம் என்றே பெரும்பாலான வாக்காளர்கள் கருதினார்கள். தனிநபர் ஒழுக்கத்தை- பணம் சார்ந்து மதிப்பீடுகளை இழந்துவிட கிராமத்து மனிதர்கள் தயாராக இருந்ததில்லை. ஆனால் அந்த மக்களின் பெயரைச் சொல்லிக் கட்சிக்காரர்கள் என்ற அடையாளம் பூண்ட அரசியல்வாதிகள் தான் தேர்தல் காலத்தைப் பணம் புரளும் காலமாக ஆக்கினார்கள். பணத்தை எதிர்பார்த்து, பணத்தை மையப்படுத்தி வேலை செய்வதிலாவது சிறிய கட்சி, பெரிய கட்சி என்ற வேறுபாடுகள் இருக்கும் என்று நினைத்தேன். அந்த வேறுபாட்டை இல்லாமல் ஆக்கினார்கள் கட்சிக்காரர்கள் என்ற பெயரோடு அலைந்த தொண்டர்கள். பணத்தை மையப்படுத்திப் பணியாற்றுவது என்ற போக்கு பரவியிருந்தது. அது ஒட்டு மொத்தச் சமூகத்தையும் பணம்சார்ந்த மதிப்பீடுகளே நிறைத்துள்ளன என்ற அபாயத்தைத் தெரிவிக்கும் குறியீடாகப் புரிந்துகொண்டேன்.
அரசாங்கத்திடம் அதிகம் எதிர்பாராத மனிதர்களான கிராமத்து அப்பாவிகளின் போக்கிலிருந்து முற்றிலும் மாறுபட்டவர்கள் நடுத்தரவர்க்கத்து நகரவாசிகள். சம்பளங்கள், சலுகைகள் எனப் பணமாகவும், வளர்ச்சிகள், வாய்ப்புகள், ஆடம்பரங்கள், அழகுணர்வு வெளிப்பாடுகள் என அரசாங்கத்தின் வருமானத்தைப் பெருமளவு உரிமையாக்கிக் கொள்ளும் இவர்களின் தேர்தல் பங்களிப்புகூட முழுமையானதல்ல. கருத்துக் கணிப்புகளில் கவனம் செலுத்தும் அளவுக்குக்கூட வாக்களிப்பதில் கவனம் செலுத்துவதில்லை. அரசாங்கத்திடம் எதிர்பார்த்த வாக்காளர்கள், இப்போது வேட்பாளர்களிடமே எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.
2016 இல் – இந்தப் 10 ஆண்டுகளில்- வேட்பாளர்களின் செலவுத்தொகை 10 மடங்கு அதிகமாகியிருக்கிறது. வேட்பாளர்கள் தேர்தல் காலப் பிரசாரத்திற்குச் செய்யும் செலவுத்தொகையைவிடப் பலமடங்கு தொகையை வாக்காளர்களுக்குத் தருவதற்காகச் சேமித்து வைத்திருக்கிறார்கள். தன்னுடைய வாக்கை அதிக விலைக்கு விற்றுவிட வாக்காளர்களும் தயாராகவே இருக்கிறார்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போதே பணப்பட்டுவாடா திட்டமிட்ட முறையில் செய்யப்பட்டதை நேரடியாகக் கண்டவன் நான். நகரமென்றால் ஒவ்வொரு தெருவுக்கு ஒருவர் எனக் கணக்கிட்டு நேரடித் தொடர்புகள் உருவாக்கப்பட்டு எந்தக் கட்சிக்கு அந்தக் குடும்பம் வாக்களிக்கும் என்பதை உறுதிசெய்யும் நடவடிக்கையைக் கட்சிகள் செய்தன. தங்களுக்கு வாக்களிக்கும் குடும்பத்தில் இருக்கும் வாக்கு எண்ணிக்கைக்கேற்பப் பணம் பட்டுவாடா செய்யப்பட்டது.
கைநீட்டிப் பணத்தைப் பெற்றுக்கொண்டால் பால்மாற மாட்டான் அப்பாவி வாக்காளன் என்று கட்சிகள் நினைக்கின்றன. எனவே ஒரு தொகுதியில் வெற்றிக்குத் தேவையான வாக்காளர்களின் எண்ணிக்கையைவிடக் கூடுதலாகப் பத்துசதவீதம் மனிதர்களுக்குப் பணம் கொடுத்தால் போதும் என்ற நினைப்பு இருக்கிறது. இந்தத் தேர்தலில் இரண்டு லட்சத்திற்கும் கூடுதலாக இருக்கும் தொகுதிகளில் ஒன்றரை லட்சம் பேருக்கும் மேல் பணம் கொடுத்துவிட வேண்டும் என்ற கணக்கு இருக்கிறது. அதிகப் பணம் தருபவர்களுக்கு வாக்களிக்கலாம் என்று மக்கள் நினைப்பார்கள் என்ற நம்பிக்கை இந்தத் தேர்தலில் மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறது. மாறவேண்டும்