அரசாங்கப் படையினருக்கும் தமிழீழ விடுதலை புலிகளுக்கும் இடையிலான போரின் இறுதிக் கட்டத்தின்போது, இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் விடயத்தில், பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்தும் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகள் இடம்பெற வேண்டுமா என்ற சர்ச்சை மீண்டும் தலைதூக்கியுள்ளது.
அண்மையில், அந்த விடயம் தொடர்பாகச் சில ஊடக செய்திகள் வெளிவந்த போதிலும், கடந்த மூன்றாம் திகதி, நல்லிணக்கப் பொறிமுறைகளைக் கூட்டிணைக்கும் செயலணி, அதன் அறிக்கையை, முன்னாள் ஜனாதிபதியும் ‘ஒனூர்’ எனச் சுருக்கமாக அழைக்கப்படும், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்துக்கான அலுவலகத்தின் தலைவியுமான சந்திரிகா குமாரதுங்கவிடம் ஜனாதிபதி செயலகத்தில் வைத்துக் கையளிக்கப்பட்டதை அடுத்தே, அந்த விடயம் சூடு பிடித்தது.
அந்த அறிக்கையில், பரிந்துரை செய்யப்பட்டுள்ள விடயங்களில், பொறுப்புக் கூறல் பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகள் உள்ளடக்கப்பட வேண்டும் என்பது பிரதான விடயமாகும். ஆனால், அரசாங்கமே நியமித்த அந்தச் செயலணியின் அந்தப் பரிந்துரையை, அரசாங்கம் உடனடியாகவே நிராகரித்துள்ளது.
இது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட, கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினதும் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவினதும் அறிக்கைகளை ஞாபகப்படுத்துகிறது. அந்த அறிக்கைகளும் அந்த ஆணைக்குழுவையும் குழுவையும் நியமித்த அரசாங்கத்தினாலேயே நிராகரிக்கப்பட்டன.
நல்லிணக்க ஆணைக்குழு, 2002 ஆம் ஆண்டு போர் நிறுத்த உடன்படிக்கை ஏன் தோல்வியடைந்தது என்பதை ஆராயவே மஹிந்தவினால் நியமிக்கப்பட்டது. அந்தக் குழு, போர் நடைபெற்ற காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, என்ன செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தது.
ஆனால், மஹிந்தவின் அரசாங்கம் அந்த அறிக்கையைக் கிடப்பில் போட்டது. அதேபோல், இனப்பிரச்சினைக்கான தீர்வைச் சிபார்சு செய்வதற்காகவே, பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண தலைமையிலான சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு நியமிக்கப்பட்டது. அதிகாரப் பரவலாக்கலை, மேலும் சீர்செய்ய வேண்டும் என, அக்குழு பரிந்துரை செய்ததாகக் கூறப்பட்டது. ஆனால், அதன் அறிக்கையும் மஹிந்தவின் ஆட்சிக் காலத்திலேயே காணாமல் போய்விட்டது.
அதேபோல், சட்டத்தரணி மனோரி முத்தெட்டுவேகமவின் தலைமையிலான நல்லிணக்கப் பொறிமுறைகள் தொடர்பான செயலணியின் தற்போதைய அறிக்கை சந்திரிகாவிடம் கையளிக்கப்பட்டவுடனேயே, அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித்த சேனாரத்ன, அரசாங்கத்தின் சார்பில் வெளிநாட்டு நீதிபதிகள் தொடர்பான அதன் பரிந்துரையை நிராகரித்தார்.
சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பை ஜனாதிபதி மைத்திரிபல சிறிசேன, ஏற்கெனவே நிராகரித்துள்ளதாகவும் ஐ.நா மனித உரிமை உயர்ஸ்தானிகர் செய்த் அல் ஹூஸைன், கடந்த வருடம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டபோது, அவரும் ஜனாதிபதியின் நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டதாகவும் ராஜித்த கூறினார்.
நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ, அந்தச் செயலணியின் மீது, தமக்கு நம்பிக்கை இல்லை எனக் கூறியிருந்தார். மற்றொரு அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவும் அந்தப் பரிந்துரையை ஜனாதிபதி நிராகரித்ததாகக் கூறினார்.
ராஜித்தவின் கூற்றுக்குப் பதிலளிக்கும் வகையில், கடந்த ஐந்தாம் திகதி ஐ.நா மனித உரிமை பேரவை, தனது ‘டுவிட்டர்’ கணக்கில் ஒரு கருத்தைப் பதிவு செய்திருந்தது. செய்த் அல் ஹூஸைன், எப்போதும் இலங்கையின் பொறுப்புக் கூறல் பொறிமுறையையே வலியுறுத்தினார் எனக் குறிப்பிடப்பட்டு இருந்த அந்தப் பதிவில், அதனை உறுதிப்படுத்தும் வகையில் ஹூஸைன், இதற்கு முன்னர் அது தொடர்பாக மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பித்த அறிக்கையினதும், அந்த அறிக்கை தொடர்பாக அப்பேரவை வெளியிட்டு இருந்த செய்தியொன்றினதும் இணைய இணைப்புகளையும் வழங்கியிருந்தது.
மனோரி முத்தெட்டுவேகமவின் தலைமையிலான செயலணி, அரசாங்கம் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தப் பாடுபடுகிறது என்பதை உலகத்துக்கு உறுதிப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட பல நடவடிக்கைகளில் ஒன்றாக நிறுவப்பட்டது என்பதும், பிரதமரின் அலுவலகத்தின் கீழ் இயங்கும் வகையில் அது நியமிக்கப்பட்டது என்பதும், அதன் அறிக்கை ஜனாதிபதி செயலகத்தில் வைத்தே முன்னாள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினதும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும் தலைமையிலான அரசாங்கம், ஆரம்பம் முதல் இந்த விடயத்தில், சர்வதேச நீதிபதிகளை ஏற்றுக் கொள்வதில்லை என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தால், இப்போது அதனை மீண்டும் அலசி ஆராய்வதற்குப் புதிதாக எதுவும் இருக்காது.
ஆனால், அரசாங்கம் சர்வதேச சமூகத்துக்கு ஒன்றை வாக்குறுதியளித்துவிட்டு, இப்போது மற்றொன்றைக் கூறும் போது, அரசாங்கத்தின் நேர்மைத் தன்மையைப் பற்றி அச்சமூகத்துக்கு மத்தியில் பல சந்தேகங்கள் எழுவதைத் தவிர்க்க முடியாது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம், மனித உரிமை விடயத்தில் சர்வதேச சமூகத்தை ஏமாற்ற முயற்சித்ததால், அச் சமூகம், அந்த அரசாங்கத்தைத் தண்டிக்க முற்பட்டது.
அதன் பிரகாரமே இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமைப் பேரவையில், தொடர்ச்சியாக 2012, 2013 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் மூன்று பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டு, இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமைகள் தொடர்பாகச் சர்வதேச விசாரணையொன்றும் நடத்தப்பட்டது.
அதன்பின்னர், 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், ஜனாதிபதி மைத்திரிபாலவின் தலைமையிலான அரசாங்கம் பதவிக்கு வந்தது. அந்த அரசாங்கம் பதவிக்கு வந்து இரண்டு மாதங்களில், அதாவது 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மனித உரிமை பேரவை கூடியது.
தமது அரசாங்கம் முன்னைய அரசாங்கத்தைப் போல் நடந்து கொள்வதில்லை என்றும் தமது நாட்டின் கடந்த காலத்தை வைத்து, தற்போதைய அரசாங்கத்தை எடைபோடாது, இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளை வைத்து எடைபோடுமாறும் வெளிநாட்டு அமைச்சர் மங்கள சமரவீர, அந்தக் கூட்டத்தில் உரையாற்றும்போது, சர்வதேச சமூகத்திடம் கேட்டுக் கொண்டார்.
அதற்கமைய, புதிய அரசாங்கத்துக்குத் தமது நேர்மையைக் காட்டுவதற்கு, சந்தர்ப்பம் வழங்கும் பொருட்டு அந்தக் கூட்டத்தின்போது, இலங்கை தொடர்பாக எவ்விதப் பிரேரணையும் நிறைவேற்றப்படவில்லை.
அது, அந்த வருடம் செப்டெம்பர் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது. புதிய அரசாங்கம் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இராணுவ ஆளுநர்களுக்குப் பதிலாக சிவிலியன் ஆளுநர்களை நியமித்தது. வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த சில காணிகளை விடுவித்தது. வெளிநாட்டுத் தமிழ் அமைப்புக்கள் மீது இருந்த தடைகளை நீக்கியது.
இதுபோன்ற நல்லிணக்கத்தை நோக்கிதான அரசாங்கத்தின் நடவடிக்கைகளை அடுத்து, சர்வதேச சமூகமும் இலங்கைக்குப் பல சலுகைகளை வழங்கியது. ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத் தலைவர்கள், சர்வதேச அரங்குகளில் வைத்து வெகுவாகப் பாராட்டப்பட்டனர்.
ஆனால், 2014 ஆம் ஆண்டு முன்னாள் மனித உரிமை உயர்ஸ்தானிகர் நவநீதம் பிள்ளையின் அலுவலகத்தினால் நடத்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணையின் முடிவுகள் அந்த ஆண்டு வெளியாகியது.
புதிய உயர்ஸ்தானிகர் அல் ஹூஸைன், அதனை அடிப்படையாகக் கொண்டு 2015 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதப் பேரவைக் கூட்டத்தின்போது, தமது அறிக்கையைச் சமர்ப்பித்தார்.
அதில்தான், அவர் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, நீதி விசாரணை செய்வதற்காகத் தேசிய மற்றும் சர்வதேச நீதிபதிகளைக் கொண்ட சர்வதேச, கலப்பு நீதிமன்றமொன்றை நிறுவ வேண்டும் என வலியுறுத்தினார்.
2014 ஆம் ஆண்டு, மனித உரிமை மீறப்பட்டுள்ளதா என்ற பொதுவானதோர் விசாரணையே நடத்தப்பட்டது. அது நீதி விசாரணையாக இருக்கவில்லை. குறிப்பிட்ட சம்பவங்களை விசாரிக்கும் நீதி விசாரணைக்காகவே ஹூஸைன், கலப்பு நீதிமன்றமொன்றை நிறுவ வேண்டும் என்றார். இதனை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ அல்லது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவோ ஏற்றுக் கொள்ளவில்லை.
செய்த்தின் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட 2015 ஆண்டு செப்டெம்பர் மாதப் பேரவை அமர்வின்போதே, அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள், இலங்கை தொடர்பாக மற்றொரு பிரேரணையை சமர்ப்பிக்கத் தயாரானது. அதிலும் இந்தக் கலப்பு நீதிமன்ற ஆலோசனை உள்ளடக்கப் படவிருந்தது.
ஆனால், வெளிநாட்டு அமைச்சர் மங்கள சமரவீர, அமெரிக்க ராஜதந்திரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின் பேறாக, அந்த ஆலோசனையில் சிறிய மாற்றம் செய்யப்பட்டது.
அதன்படி, கலப்பு நீதிமன்றம் என்பதற்கு பதிலாக வெளிநாட்டு நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் உள்ளடக்கப்பட்ட தேசிய நீதிமன்றம் ஒன்றின் மூலம் மனித உரிமை மீறல்களை விசாரிக்க வேண்டும் எனப் பிரேரணையில் இறுதியாகக் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த உடன்பாட்டின் அடிப்படையில் இலங்கை, அந்தப் பிரேரணைக்கு அனுசரணை வழங்கவும் முன்வந்தது.
மஹிந்த ராஜபக்ஷ அணியினரையும் மக்கள் விடுதலை முன்னணியினரையும் தவிர்ந்த, பிரதான அரசியல் கட்சிகள் எதுவுமே இந்தப் பிரேரணையை எதிர்க்கவில்லை. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அதனை எதிர்க்கவில்லை.
வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்ட தேசிய நீதிமன்றம் ஒன்றின் மூலம் விசாரணை செய்வதால் தற்போது மனித உரிமைகளை மீறியதாக முப்படைகளுக்கும் எதிராச் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டிலிருந்து அப்படைகள் மீட்கப்பட்டு, அப் படைகளிலுள்ள சில விஷமிகள் மட்டும் குற்றவாளிகளாவர் என்றும், இதன் மூலம் முப்படைகளின் கௌரவம் பாதுகாக்கப்படும் என்றும் அரசாங்கம் வாதிட்டது உண்மையும் அதுவே.
அரசாங்கத்துக்கும் ஐ.நா சபைக்கும் அவ்வாறானதோர் சுமுக நிலை உருவாகியிருந்த நிலையிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 2015 ஆம் ஆண்டு இறுதியில் நடைபெற்ற ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அதில் கலந்து கொண்டுவிட்டு, நியூயோர்க் நகரிலிருந்து அவர் நாடு திரும்பும் போது, ‘முப்படையினரின் கௌரவத்தைப் பாதுகாத்த ஜனாதிபதியை வரவேற்போம்’ என்ற வாசகங்களுடன் கொழும்பிலும் மேலும் பல இடங்களிலும் சுவரொட்டிகள் காணப்பட்டன. வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்ட தேசிய நீதிமன்றம் என்ற நிலைப்பாட்டுக்காகவே ஜனாதிபதி அவ்வாறு பாராட்டப்பட்டார்.
ஆனால், 2016 ஆண்டு ஜனவரி மாதம், ஜனாதிபதி இந்த நிலைப்பாட்டிலிருந்து விலகினார். ஜனவரி 21 ஆம் திகதி, பிபிசியின் சிங்கள சேவையான சந்தேசயவுக்கு அளித்த பேட்டியொன்றின் போது, தாம் வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்பை ஏற்றுக் கொள்வதில்லை எனக் கூறினார்.
இன்று, வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை என்று வீராப்புப் பேசும் ராஜித்த, லக்ஷ்மன் யாப்பா மற்றும் விஜேதாச போன்ற அமைச்சர்களும் அதுவரை வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்ட, தேசிய நீதிமன்றம் என்ற நிலைப்பாட்டுக்கு எதிராக ஒரு வார்த்தையேனும் கூறவில்லை.
அதேஆண்டு, பெப்ரவரி மாதம் செய்த் அல் ஹூஸைன், இலங்கைக்கு விஜயம் செய்தார். அப்போது, அவர் ஜனாதிபதியின் கருத்து மாற்றத்தைக் கண்டிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், மாறாக ஹூஸைன்தான் மாறியிருந்தார்.“போர்க் குற்றங்களைப் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் நீதித்துறை நடைமுறைகள் தொடர்பாகவோ அல்லது வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்பைப் பற்றியோ மனித உரிமை உயர்ஸ்தானிகரின் அலுவலகம் பரிந்துரையொன்றைச் செய்தபோதிலும், அதனைப் பற்றி முடிவெடுப்பது இலங்கையின் இறைமைக்குரிய உரிமையாகும்” என அவர் தமது விஜயத்தின் இறுதியில் நடத்திய ஊடகவியலாளர்கள் மாநாட்டின்போது கூறினார்.
அதாவது, இலங்கை அரசாங்கம் விரும்பினால் வெளிநாட்டு நிதிபதிகள் இல்லாமலும் பொறுப்புக் கூறல் தொடர்டபான நீதி விசாரணைகளை நடத்தலாம். இதனைத்தான் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன இப்போது குறிப்பிடுகிறார்.
ஆனால், பின்னர் ஹூஸைன் ஜெனிவா சென்ற பின், மீண்டும் வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்ட தேசிய நீதிமன்றம் என்ற நிலைப்பாட்டை வலியுறுத்த ஆரம்பித்தார்.
கடந்த வருடம் ஜூன் மாதம் அவர், இலங்கை தொடர்பாக மனித உரிமை பேரவையில் சமர்ப்பித்த அறிக்கையில், இவ்வாறு கூறப்பட்டுள்ளது.“நீதித்துறை பொறிமுறையில் வெளிநாட்டு நிதிபதிகள், வழக்குத் தொடுநர்கள், விசாரணை அதிகாரிகள் மற்றும் சட்டத்தரணிகள் ஆகியோரின் பங்களிப்பைப் பற்றிய முக்கிய பிரச்சினையொன்று இருக்கிறது.
மே மாத இறுதியில், பெருந்திரளான உயர் இராணுவ அதிகாரிகள் மத்தியில் உரையாற்றிய பிரதமர், இலங்கையின் உள்ளக பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்பை நிராகரித்தாக செய்திகள் கூறின.
இலங்கையின் நீதித்துறை நிறுவனங்கள் நம்பிக்கையைப் பெற்றுக் கொள்ளத் தேவையான நம்பகத்தன்மையை இழந்துள்ளதால், பொறுப்புக் கூறல் என்ற பொறிமுறையில் சர்வதேச பங்களிப்பானது பாதிக்கப்பட்டவர்களின் பார்வையில், அப்பொறிமுறையின் சுயாதீனத் தன்மைக்கும் நடுநிலைக்குமான அத்தியாவசிய உத்தரவாதமாகும்”
அதாவது, உயர்ஸ்தானிகர் தமது இலங்கை விஜயத்தின்போது, ஊடகவியலாளர்களுக்கு என்னதான் கூறினாலும், அவரும் மனித உரிமை பேரவையும் 2015 ஆம் ஆண்டு இலங்கையின் அனுசரணையுடன் அப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள்.
தாமே அனுசரணை வழங்கிய பிரேரணையென்பதால் அது பிழை என்றோ, அதனால் இலங்கையின் இறைமை பாதிக்கப்படப் போகிறது என்றோ, அது, இலங்கையின் மீது வலிந்து திணிக்கப்பட்ட பிரேரணையென்றோ அரசாங்கத்தினால் கூற முடியாது.
தாம் அப்பிரேரணைக்கு இணங்கியது மட்டுமல்லாது அதற்கு அனுசரணையும் வழங்கிவிட்டு, இப்போது அதன் உள்ளடக்கத்தின் மிகவும் முக்கிய விடயமான வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்பை நிராகரிப்பதானது, புதிய அரசாங்கத்தின் நம்பகத்தன்மைக்கு குந்தகம் விளைவிப்பதாகும்.
பழைய வரலாற்றைக் கொண்டு எம்மை எடைபோடாதீர்கள், எமது தற்போதைய செயல்களைக் கொண்டு எம்மை எடைபோடுங்கள் என்றுதான் வெளிநாட்டமைச்சர் மங்கள சமரவீர அரசாங்கம் பதவிக்கு வந்தவுடன் ஐ.நா மனித உரிமைப் பேரிவையிடமும் அதன்மூலம் சர்வதேச சமூகத்திடமும் வேண்டுகோள் விடுத்தார்.
இப்போது தாமே அனுசரணை வழங்கிய பிரேணைக்கு முரணாகவே அரசாங்கம் நடந்து கொண்டால் அப்பேரவையும் சர்வதேச சமூகமும் புதிய அரசாங்கத்தை எவ்வாறு எடைபோடும்?
அரசாங்கம் ஆரம்பத்திலிருந்தே தொடர்ச்சியாக வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்பை எதிர்த்திருந்தால், மனித உரிமை பேரவையுடன் மோதல் நிலை ஏற்பட்டு இருக்குமே தவிர, நம்பகத்தன்மைப் பற்றிய பிரச்சினை எழுந்திருக்காது. இப்போது நம்பகத்தன்மைப் பற்றிய பிரச்சினையும் மோதல் நிலையும் இரண்டும் ஏற்படப்போகிறது.
(எம்எஸ்எம். ஐயூப்)