ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும், மேஜர் பிரபாத் புலத்வத்த என்ற இராணுவப் புலனாய்வு அதிகாரி, மீண்டும் இராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டிருப்பது இன்னொன்று.
சாதாரணமானதொரு சூழ்நிலையில் இந்த இரண்டும் நிகழ்ந்திருந்தால், அது பெரிய எதிர்விளைவுகள், போராட்டங்கள், சர்ச்சைகளை ஏற்படுத்தி இருக்கும்.
ஆனால், ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களின் பின்னரான நிலைமை, இவர்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகளை, நியாயப்படுத்துவதாக மாறியிருக்கிறது.
குண்டுத் தாக்குதல்களுக்குப் பின்னரான நிலைமைகளைக் கையாளுவதற்கு, இவர்களின் உதவி தேவை என்றொரு நிலை அரசாங்கத்துக்கும் இராணுவத்துக்கும் வந்திருப்பது போல காட்டப்படுவது, வேடிக்கை.
வெசாக் பண்டிகையை முன்னிட்டு, ஒரு தொகுதி கைதிகளை பொதுமன்னிப்பில் விடுவிக்க உத்தரவிட்ட ஜனாதிபதி, வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு சென்று, கைதிகள் விடுவிப்பு நிகழ்விலும் பங்கேற்றார். கைதிகள் விடுவிப்பில் ஜனாதிபதி பொதுவாகப் பங்கேற்பதில்லை.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெலிக்கடைச் சிறைக்குச் சென்றது, கைதிகளை விடுவிக்கும் நோக்கத்துடன் அல்ல; அங்கு, தண்டனை அனுபவித்து வரும், ஞானசார தேரரைச் சந்திப்பதற்காகவே வெலிக்கடைக்குச் சென்றிருந்தார் என்ற சந்தேகம் தோன்றுகின்றது.
நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட குற்றவாளி ஒருவரைச் சந்திக்க, நாட்டின் ஜனாதிபதி சிறைக்குச் சென்றார் என்ற வரலாறு எழுதப்படுவதை மறைக்கவே, அவர் வெசாக் கைதிகள் விடுதலையைப் பயன்படுத்திக் கொண்டார்.
வெலிக்கடைச் சிறைச்சாலையில் உள்ள மருத்துவமனையில் ஞானசார தேரரை சந்தித்து உரையாடினார். இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கு எதிரான போரை, எப்படி முன்னெடுப்பது, எப்படிக் கையாளுவது என்பது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டது.
ஞானசார தேரரின் விடுதலை பற்றி பேசப்படவில்லை என்று, ஜனாபதிபதி செயலக வட்டாரங்கள் கூறிய போதும், கடைசியில் அதுவே உண்மையாகிப் போனது. இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, ஞானசார தேரரைப் பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்வதற்கான ஆணையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதன்கிழமை (22) மாலை ஒப்பமிட்டார்.
முன்னதாக, ஞானசார தேரரை விடுவிக்க வேண்டும் என்று பௌத்த அமைப்புகள் கோரியபோது, அதற்குக் கடும் எதிர்ப்புகளும் எழுந்தன. நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில், தண்டனை விதிக்கப்பட்டவருக்கு, பொதுமன்னிப்பு அளிப்பது, நீதித்துறையை அவமதிக்கும் செயல் என்று வாதிடப்பட்டது,
ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர், பௌத்த அமைப்புகள், ஞானசார தேரரை விடுவிக்காவிட்டால் போராட்டம் வெடிக்கும் என்று, எச்சரிக்கின்ற நிலைக்குச் சென்றார்கள். ஏனென்றால், இப்போதுள்ள சூழலில் இஸ்லாமிய அடிப்படைவாதம், தீவிரவாதம் ஆகியவற்றுக்கு எதிராக, தீவிரமாகச் செயற்படக் கூடியவர் அவர். பல ஆண்டுகளாகவே அவர், அதைத் தான் முன்னெடுத்து வந்தார். இஸ்லாமிய தீவிரவாதம் பற்றி, அதிகம் எச்சரித்தவர் ஞானசார தேரர் தான்.
ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு அறிவிக்கப்படுவதற்கு முன்னர், புதன்கிழமை (22) காலை, வெலிக்கடைச் சிறைச்சாலைக்குச் சென்றிருந்த அமைச்சர் ரவி கருணாநாயக்கவும் ஞானசார தேரரைச் சந்தித்திருந்தார். “அடிப்படைவாத தீவிரவாதத்தை அகற்றி, எப்படி நாட்டை முன்னே கொண்டு செல்லலாம் என்று கலந்துரையாடினோம்” என, வெளியே வந்து கொடுத்திருந்த பேட்டியில் அமைச்சர் கூறினார். ஜனாதிபதியும் அமைச்சர்களும் ஞானசார தேரரிடம் போய், எப்படி இஸ்லாமியத் தீவிரவாதத்தை அடக்கலாம் என்று ஆலோசனை கேட்கின்ற நிலை வந்திருக்கிறது. அதற்காகவே, அவருக்குப் பொதுமன்னிப்பு அளித்து விடுவிக்கப்படுகிறார் என்பது போன்ற சூழல், உருவாக்கப்பட்டிருக்கிறது.
தமிழ், ஆங்கில சினிமாக்களில், பலமுறை கண்டுள்ள காட்சிகள், இப்போது நினைவுக்கு வருகின்றன. முன்னர் இராணுவத்திலோ, பொலிஸிலோ அல்லது வேறு முக்கிய துறைகளிலோ, திறமையாகப் பணியாற்றிய கதாநாயகன், ஏதோ ஒரு காரணத்துக்காகச் சிறைக்குள் அடைக்கப்பட்டிருப்பார்.
பாரிய அச்சுறுத்தலில் இருந்து நாட்டைக் காப்பாற்றுவதற்காக, அவர் ஒருவரால் தான் முடியும் என்ற நிலை வரும். அரச இயந்திரம், சிறைக்குள் இருக்கும் அந்தக் கதாநாயகனிடம் போய் மண்டியிடும். அவர் வெளியே வந்து எதிரிகளைத் துவம்சம் செய்வார். இது, சினிமாவில் மாத்திரமன்றி, உண்மையாகவும் நடக்கும் என்பதைத் தான், ஞானசார தேரர், மேஜர் புலத் வத்தை விவகாரங்கள் எடுத்துக் காட்டுகின்றன. மேஜர் பிரபாத் புலத்வத்தவும் கூட, இதுபோன்று தான் மீண்டும் இராணுவத்துக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறார்.
மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் இராணுவப் புலனாய்வுப் பிரிவு வலிமையானதாக,அதிகாரங்கள் நிரம்பியதாக இருந்தது. இரகசிய நிகழ்ச்சி நிரல்களுக்காக அவர்கள், கோட்டாபய ராஜபக்ஷவால் தயார்படுத்தி வளர்க்கப்பட்டிருந்தார்கள்.
மேஜர் பிரபாத் புலத்வத்த என்ற இராணுவப் புலனாய்வு அதிகாரியே, ‘திரிபொலி’ என்ற இரகசிய நடவடிக்கைகளுக்கான ஒரு கட்டளை மய்யத்தின் தளபதியாக இருந்தவர் என்று கூறுகிறது பொலிஸ் தரப்பு.
இந்த இரகசிய அணியால்த் தான், ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்டார் என்றும் ஊடகவியலாளர் உபாலி தென்னக்கோன் தாக்கப்பட்டார் என்றும் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலையிலும் இவர்களுக்குத் தொடர்புள்ளதாகக் குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன.
இவ்வாறான சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளில், முக்கியமான சந்தேக நபராகக் குறிப்பிடப்பட்டு, கைது செய்யப்பட்டு, பல மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார் மேஜர் பிரபாத் புலத்வத்த. பிணையில் வெளியே வந்த பின்னரும், அவரை இராணுவத்தில் சேர்த்துக் கொள்ளவில்லை. ஆனால், ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களுக்குப் பின்னர், மேஜர் பிரபாத் புலத்வத்த மீண்டும் இராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டு, முக்கிய பொறுப்பு ஒன்றில் அமர்த்தப்பட்டிருக்கிறார்.
அவர் மீண்டும் இராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளதால், ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் வழக்குகளுக்குப் பாதிப்பு ஏற்படும், விசாரணைகளுக்குப் பின்னடைவு ஏற்படும் என்று, சர்வதேச ஊடக சுதந்திரத்துக்கான அமைப்புகளும் சட்ட நிபுணர்களும் மாத்திரமன்றி, குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் கூடத் தெரிவித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிழக்கு மாகாணம் தொடர்பான துல்லியமான தகவல்களை வைத்திருக்கின்றவர் மேஜர் புலத்வத்த. இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் பற்றிய தகவல்களும் அவற்றுடன் நெருக்கமானவர்களுடனான தொடர்புகளும் அவரிடத்தில் இருக்கின்றன.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில், இஸ்லாமிய அமைப்புகளை ஒருங்கிணைத்துப் பயன்படுத்துவதில், இராணுவப் புலனாய்வுத்துறை முக்கியமான வெற்றிகளைப் பெற்றிருந்தது. அந்தத் தொடர்புகளை வைத்துக் கொண்டு, இப்போதைய அச்சுறுத்தல்களை எதிர்கொள்வது தான் இராணுவத் தளபதியின் திட்டம். அதற்காக மேஜர் புலத்வத்தவைத் தனது நேரடிக் கண்காணிப்பின் கீழ் முக்கிய பொறுப்பில் அமர்த்தியிருக்கிறார், இராணுவத் தளபதி.
இந்த நடவடிக்கை, கடுமையான விமர்சனங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் உள்ளாகியுள்ள போதும், மேஜர் புலத்வத்தவை வைத்துத்தான், இஸ்லாமியத் தீவிரவாதத்தை அழிக்க முடியும் என்ற தொனியில் இராணுவத் தளபதி பேசி வருகிறார்.
கடந்த வாரம், ஆங்கில வாரஇதழுக்கு இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க அளித்திருந்த செவ்வியில், “மேஜர் புலத்வத்தவிடம் ஒரு திறமை இருந்ததால், அதனை இந்த நேரத்தில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்துள்ளேன். அவருக்குப் பொறுப்புகளோ, அதிகாரங்களோ கொடுக்கப்படவில்லை. நான் என்ன கேட்கிறேனோ, அவர் அதைச் செய்கிறார். நாங்கள் ஒரு நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறோம். இந்த முக்கியமான தருணத்தில் எங்களுக்கு, துடுப்பெடுத்தாடக் கூடிய ஒரு வீரர் தான் தேவை. எனக்கு இப்போது, ஒரு பந்து வீச்சாளரோ, களத்தடுப்பாளரோ தேவையில்லை. எனக்கு, விளையாடுவதற்கு குறிப்பிட்ட சில ஓவர்கள் மட்டும் தான் உள்ளன” என்று நியாயப்படுத்தி இருக்கிறார்.
அதாவது இப்போதைய நிலையில், இஸ்லாமியத் தீவிரவாதத்தை அடக்குவதற்கு, மேஜர் புலத்வத்த என்ற ஒற்றை மனிதனே தேவை என்றளவு நிலை, உருவாக்கப்பட்டிருக்கிறது. அவரைக் கொண்டு, எல்லாவற்றையும் சாதித்து விடலாம் என்று இராணுவத் தளபதி நம்புவது, சினிமாக்களைப் போலவே தெரிகிறது.
இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு எதிரான இலங்கையின் போர், இந்த இரண்டு தரப்புகளின் மீதுள்ள குற்றச்சாட்டுகளின் நியாயத்துக்கு அப்பால், அவர்களை வெளியே கொண்டு வருவதே இப்போது முக்கியமானது என்று காட்டுவதற்கு உதவியிருக்கிறது.
இந்த இடத்தில் தான் இலங்கையின் நீதித்துறை மீண்டும் தோல்வியைச் சந்தித்திருக்கிறது.