– தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்க மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் கோபிநாத்
கிழக்கில் தமிழ் மக்களின் பிறப்பு வீதம் குறைவடைந்து செல்கின்றது. அதற்கான காரணம் வறுமை. அனைவருக்கும் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டாலே வறுமையை ஒழிக்கலாம் என்கிறார், தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளரும், கிழக்கின் இளைஞர் முன்னணி தலைவருமான க. கோபிநாத். முன்னாள் பிரதியமைச்சர் கோ.கணேசமூர்த்தியின் மகனான கோபிநாத், தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய பிரத்தியேக பேட்டி.
கேள்வி: கிழக்கிலுள்ள இளை ஞர், யுவதிகள் வேலைவாய்ப்பற்றிருக்கின்றார்கள் என பாரிய குற்றச்சாட்டு நிலவி வருகின்றது, இதனைத் தீர்ப்பதற்கு என்ன செய்யலாம்?
பதில் : இளைஞர் யுவதிகளின் வேலைவாய்ப்பின்மைக்குக் காரணம் எமது தமிழ் அரசியல் தலைமைகளே என நான் நினைக்கின்றேன். உதாரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் சகோதர இனத்தைச் சேர்ந்த 3 பேர் அமைச்சர்களாகவுள்ளனர், தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த 3 பேர் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவுள்ளனர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது 40000 வாக்குகள் வீணடிக்கப்பட்டன. அந்த வாக்குகள் ஆளும் கட்சியில் போட்டியிட்ட ஒருவருக்கு வழங்கப்பட்டடிருந்தால் மட்டக்களப்பில் தமிழர் ஒருவர் அமைச்சுப்பதவி பெற்றிருப்பார். அதுபோல் ஆளும் கட்சியில் இங்குள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றிருந்தால் அவர்களுக்கும் அமைச்சுப் பதவிகள் கிடைத்திருக்கும், அதனை வைத்துக் கொண்டு கிழக்கு மாகாணத்திலும், குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கியிருக்கலாம்.
மறுபுறம் இந்த தொழில்வாய்ப்பு பிரச்சினை தொடர்பில் தூர நோக்குடன் எமது அரசியல் தலைவர்கள் செயற்பட்டதாக கூற முடியாது. பாரிய ஆடைத்தொழிற்சாலை ஒன்று மட்டக்களப்பில் அமையப் பெற்றுள்ளது. அதில் பல இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக் கிடைக்கப்பெற்றுள்ளது. அதிலும் அவர்களுக்கு கிடைக்கப்பெறும் வருமானம் போதுமானதாக இல்லை ஆனாலும் தொழில் இல்லாமலுள்ளவர்களுக்கு அது ஒரு ஆதாரம் வழங்குகின்றது எனலாம்.
இது ஒருபுறமிருக்க மட்டக்களப்பு படுவாங்கரைப் பகுதியில் விவசாயத்தை மையமாகக் கொண்டு, பாரிய தொழிற்பேட்டைகளை அமைக்கலாம், இவற்றினைவிட அரசின் கைத்தொழில் அமைச்சு மற்றும் பொருளாதார அமைச்சு உள்ளிட்ட ஏனைய பல அமைச்சிக்களூடாகவும், தொழிற்பேட்டைகளையும், பண்ணை வசதிகளையும், அமைத்து அங்குள்ள இளைஞர் யுவதிகளின் வேலைவாய்ப்புப்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் என நான் நினைக்கின்றேன். தமிழ் மக்களுக்கு உரிமை வேண்டும், அதற்காக வேண்டி உரிமை கிடைப்பதற்கு போராடிக் கொண்டிருக்கும் அதேவேளை அபிவிருத்தியும் வேண்டும். அதற்காகவும் பாடுபட வேண்டியுள்ளது.
கேள்வி : வறுமை நிலையைக் குறைப்பதற்கு என்ன செய்யலாம்?
பதில் : கிழக்கில் தமிழ் மக்களின் பிறப்பு வீதம் குறைவடைந்து செல்கின்றது. அதற்கான காரணத்தை நோக்கினால் வறுமைதான் அதற்குக் காரணம் என தெரியவருகின்றது. கிழக்கில் நுண்கடனால் 60 பேர் தற்கொலை செய்துள்ளார்கள். இதனை நுண்கடனால் வந்த விளைவாக நான் பார்க்கவில்லை. வறுமையால் மரணிக்க வேண்டியவர் ஒருவர் கடன்பெற்று சிலகாலம் வாழ்ந்து விட்டு அதனை மீளச் செலுத்த முடியாமல் உயிரை மாய்த்துக் கொள்கின்றார். அனைவருக்கும் அரசாங்க தொழில் வாய்ப்புக்கள் வழங்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை, வறுமையை ஒழிக்க வேண்டுமாக இருந்தால் தொழில் வாய்ப்புக்கள் அதிகரிக்கப்பட வேண்டும், தொழிற் பேட்டைகள் உருவாக வேண்டும். என நான் நினைக்கின்றேன்.
கேள்வி : யுத்ததத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு படுவாங்கரைப் பிரதேசத்தில் தொழிற்பேட்டை அமைப்பதற்கு அரசியல்வாதிகளும், அதிகாரிகளும், பல முயற்சிகள் எடுத்தும், அது இதுவரையில் கைகூடவில்லை அப்பகுதியில் தனியார் துறையினரை கால் பதிக்கச் செய்வதற்கு என்ன செய்யலாம்?
பதில் : அதற்கு உட்கட்டமைப்பு வசதிகளை அரசாங்கம் செய்து கொடுக்க வேண்டியுள்ளது. படுவாங்கரைப் பிரதேசத்தில் பல வீதிகள் பழுதடைந்து காணப்படுகின்றன. குடிநீர் பிரச்சினை அதிகளவு காணப்படுகின்றன. இவ்வாறான பல உட்கட்டமைப்பு வசதிகளையாவது அரசு மேற்மேற்கொண்டால்தான் அப்பகுதியில் தனியார் துறையினலும் தொழிற்பேட்டைகளை அமைக்க முன்வருவார்கள். இதனை அடிப்படையில் முன்னெடுக்கடிவேண்டிய கடப்பாடு அரசியல்வாதிகளுக்கு இருக்கின்றது. எனவே முன்னேற்றம் காணுவதற்கு உட்கட்டுமான வேலைத்திட்டங்களை பூர்த்திசெய்ய வேண்டும்.
அகதி முகாம்களில் எமது மக்கள் வாழ்ந்த காலத்தில் எவ்வாறு தாங்கிகளில் குடிநீர் வழங்கப்பட்டதோ அதேபோன்றுதான் இன்றும் அம்மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டுக் கொண்டு வருகின்றன. அகதிமுமாம்களில் வாழ்வது போன்றுதான் எமது மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
கேள்வி : யுத்ததிற்குப் பின்னரான செயற்பாடுகளை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
பதில் : யுத்தத்திற்குப் பின்னர் பல அபிவிருத்திகள் நடைபெற்றுள்ளன. இல்லை என கூற முடியாது. ஆனாலும் யுத்தம் முடிவுற்றது என நாம் கூறுகின்றோம்.
படுவாங்கரை மக்களுக்கு இன்றும் அவர்களது வாழ்வு யுத்தமாகத்தான் இருந்து கொண்டிருக்கின்றது. குடிநீரில்லாத பிரச்சினை, தினமும் காட்டு யானைகளின் பிரச்சினை, கல்வியிலும் நாம் இன்னும் பின்னடைவில்தான் இருக்கின்றோம். இதற்காக வேண்டி நான் கிழக்கின் இளைஞர் முன்னணி எனும் ஓர் அமைப்பை உருவாக்கி படுவாங்கரைப் பிரதேசத்திலுள்ள அனைத்து மாணவர்களுக்கும், இலவச கல்விக் கருத்தரங்குகளையும், மேலதிக மாதிரிப் பரீட்சைகளையும் மேற்கொண்டு வருகின்றேன். எனவே எமது சமூகத்தின் மத்தியில் கல்வியை வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பு அனைவரிடமும் சுமர்த்தப்பட்டுள்ளது.
அனைவரும், பிரச்சினைகளை இனம் காணுகின்றார்கள் அதனை ஏனைய இடங்களில் கதைக்கின்றார்கள் ஆனால் தீர்வுகள் எதுவும் எட்டப்படுகின்றதில்லை. பாடசாலைகளைக் கட்டுவதால் மாத்திரம் கல்வி வளர்ச்சியடையாது. அதற்கு மேலாகச் சென்று உள்ளார்ந்த ரீதியா நோக்கி பிரச்சினைகளை முன்னின்று தீர்த்து வைக்கின்றவர்களாக தலைவர்கள் மாற வேண்டும்.
கேள்வி : தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்க மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளீர்கள். உங்களது அமைச்சினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் என்ன?
பதில் : எமது அமைச்சின் அமைச்சர் மனோ கணேசன் அவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல இடங்களுக்கும் விஜயம் செய்து மக்களின் நிலமைகளை அவதானித்துள்ளார். அதற்கிணங்க மாவட்டத்தில் பல இடங்களில் நடமாடும் சேவைகளை நடாத்தியதன் நிமிர்த்தம் ஆயிரக்கணக்கான மக்கள் நன்மை பெற்றுள்ளார்கள். படுவாங்கரைப் பிரதேசத்திலுள்ள 400 மாணவர்களுக்கு பனிரெண்டு இலட்சம் ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்களை வழங்கிளிருந்தோம், செங்கலடியில் அமைந்துள்ள பொதுச் சந்தைத் தொகுதியை அபிவிருத்தி செய்ய 2 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தவிரவும் அமைச்சரிடம் நான் முன் வைத்த வேண்டுகோளிற்கிணங்க கோவில்போரதீவு விவேகானந்தா வித்தியாலயத்திற்கு 3 மாடிக் கட்டடம் அமைப்பதற்கு ஒன்றரைக்கோடி ரூபா நிதியும், பழுகாமம் கண்டுமணி மகாவிதியாலயத்திற்கு பாடசாலைக் கட்டடம் அமைப்பதற்கு 80 இலெட்சம் ரூபா நிதியும், அம்பிளாந்துறையில் கலாசார மண்டபம் அமைப்பதற்கு ஒரு கோடி ரூபா நிதியும், பண்டாரியவெளி நாகதம்பிரான் பாடசாலைக் கட்டடம் அமைப்பதற்கு முதற்கட்டமாக ஐம்பது லட்சம் ரூபா நிதியும், கிராங்குளம் தருமபுரத்தில் அமையப்பெற்றுள்ள பாடசாலைக்கு முதற் கட்டமாக 50 இலட்சம் ரூபா நிதியும், பெரியகல்லாறு மைதானத்தில் ஸ்ரேடியம் அமைப்பதற்கு 20 இலட்சம் ரூபா நிதியும் ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்று பல அபிவிருத்திகளை மாவட்டத்தில் மேற்கொள்வதற்காக அமைச்சரிடம் முன் வைத்துள்ளேன்.
கேள்வி: வாழ்வாதார ரீதியாக மக்களை முன்னேற்றுவதற்கு என்ன செய்யலாம்?
பதில்: நாங்கள் நினைத்ததைக் கொண்டு மக்களிடம் கொடுத்துவிட்டு வருவது வாழ்வாதாரம் அல்ல. மக்களின் தேவைகளை முதலில் ஆராய வேண்டும். முன்னாள் போராளிகள், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள், இளைஞர் யுவதிகள், சிறு தொழில்களை நடாத்திக் கொண்டு வருபவர்கள், என பல தரப்பட்டோர் வாழ்ந்து வருகின்றார்கள். உதாரணமாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்த ஒருவர் இரண்டு கண்ணும் பார்வை அற்றவர் ஒருவர் விளக்குமாறு செய்து விற்பனை செய்து வருகின்றார். இதனால் அவருக்கு கிடைக்கும் வருமானம் ஒரு விளக்குமாறிலிருந்து 30 ரூபா இலாபம் கிடைக்கின்றது. ஒரு நாளைக்கு 10 விளக்குமாறு செய்தால் 300 ரூபாத்தான் அவருக்கு இலாபம் கிடைக்கும். இவ்வாறானவர்களுக்கு, மற்றும் சிறிய தொழில் முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டு அதனை மேலும் விஸ்த்தரிக்க முடியாதல் அவதியுறுவர்களுக்கும் நான் அடையாளம் கண்டு வாழ்வாதார உதவிகளை மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக மேற்கொண்டு வருகின்றேன்.
கேள்வி : புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுக்கு என்ன கூறுகின்றீர்கள்?
பதில் : புலம்பெயர்ந்து வாழும் பல தமிழ் மக்கள் மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு மாத்திரமின்றி வடக்கு கிழக்கு மக்களுக்கு பல உதவிகளை மேற் கொண்டு வருகின்றார்கள். நான் சில வாழ்வாதார உதவிகளை மேற்கொண்டு வரும் நிலையில் என்னுடனும் அவுஸ்ரேலியாவிலிருந்து ஒருவர் தொடர்பு கொண்டு உங்களது சேவை தொடரட்டும் எனது உதவிகளையும் நான் உங்களூடாக மேற்கொள்ள விரும்புகின்றேன் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் புலம் பெயர் மக்கள் நமது மக்களுக்கு உதவிகளை மேற்கொள்ள காத்திருக்கின்றார்கள். ஆனால் இங்கு நல்லதொரு அரசியல் தலைமை இல்லாமலிருக்கின்றது.
நம்மவர்களிடத்தில் தகுந்த திட்டங்கள் இல்லை, தரவுகள் இல்லை, தகுந்த திட்டங்கள் இருந்தால் அரசாங்கம் செய்யாவிட்டாலும், சர்வதேச நிறுவனங்களிடம் தகுந்த முறையில் வழங்கினால் திட்டங்களைக் கொண்டு வரலாம். நீரும், மின்விளக்குகளும், எமது மக்களுக்கு இல்லாமலிருப்பதுதான் வேதனையாகும்.
தீர்வை நோக்கிக் கொண்டுதான் நாம் நகர வேண்டும். வாழ்க்கை பூராகவும் நீர்த் தாங்கிகளை மாத்திரம் நம்பியிருக்க முடியாது. இவ்வாறான விடையங்களையும் கருத்தில் கொண்டுதான் எதிர்காலத்தில் மக்கள் தமது பிரதிநிதிகளைத் தெரிவுசெய்ய வேண்டும்.