ஈழவிடுதலை போராட்டம் அவசரகதியில் ஆயுதபோராட்டமாக மாறவேண்டிய சூழ்நிலை ஏற்ப்பட்ட போது அதுவரை மக்களை அரசியல் மயப்படுத்தி, மக்கள் போராட்ட பாதை பற்றிய செயல் திட்டத்தில் இருந்த ஈழமாணவர் பொதுமன்றம் அதன் அரசியல் ஸ்தாபனமாக இருந்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி இரண்டிற்கும் அது ஒரு சவாலான விடயமாக இருந்தது.
காரணம் மக்களுடன் வாழ்ந்து அவர்கள் இடையே காணப்பட சமூக சமய சாதிய பிரச்சனைகள் பற்றிய கருத்தரங்குகள், கலந்துரையாடல் மாணவர் முகம் கொடுத்த பிரச்சனைகள் என ஒரு பரிணாம வளர்ச்சி வேலைத்திட்டத்தில் ஈடுபட்டிருந்த தோழர்கள் திடீரென ஆயுதங்களை கையேந்த வேண்டிய சூழ்நிலை. அதற்கான பயிற்சிகளை பெற கடல்கடந்து தமிழகம் செல்லவேண்டிய கட்டாய நிலை.
அதுவரை தங்கள் வீடுகளிலும் நண்பர்களின் வீடுகளிலும் தங்கி இருந்து, தமது அரசியல் வேலைத் திட்டங்களை செய்ததால் ஓரளவு பொருளாதார கஷ்டம் இருந்தபோதும் சமாளிக்க முடிந்தது. ஆனால் நூற்றுக்கணக்கானவர் திடீரென ஓரிடத்தில் அணிதிரள, தங்குமிடம் உட்பட உணவு மற்றும் அடிப்படை தேவைகள், ஆயுத பயிற்சியும் பெறல் என்பது சாத்தியம் இல்லாத அளவு மோசமான பொருளாதார நிலை.
அந்த நிலைமையை மாற்றி அமைத்து எம் இலட்சிய பயணத்தில் முதலாவது அத்தியாயத்தை எழுத உறுதுணையாக தோழர் நாபாவுக்கு தோள் கொடுத்தவர் தான் எங்கள் ஸ்டாலின் அண்ணா. எம்மை ஆதரிக்கவோ அல்லது அனுசரணை வழங்கவோ அண்ணாவுக்கு எந்த தேவையும் இருக்கவில்லை. எம்மை வைத்து பணம் பண்ணவோ அல்லது அரசியல் செல்வாக்கு பெறவோ நாம் ஒரு பொருட்டே அல்ல.
இருந்தும் எம் இலட்சிய பயணத்தின் நோக்கம் அறிந்து இனத்தால் மொழியால் தான் வரித்துக்கொண்ட மாக்சிச கொள்கையால் மட்டுமே அண்ணா எங்களை அரவணைத்தார். திராவிட பாரம்பரியத்தில வந்த அவரின் செல்வாக்கு கும்பகோணத்தில் அவர் கண் அசைவில் செயல்ப்படும் ஆயிரக்கணக்கான நல்ல இதயங்களை அவருடன் இணைத்து வைத்திருந்தது. அண்ணாவின் விரல் அசைவில் விடயங்கள் நடந்தன.
சிவபுரத்தில் இருந்த தன் பயன் தரும் நிலத்தை பயிற்சி பாசறை அமைக்க என மனமுவந்து தந்தார் அண்ணாவின் ஏவல் கண்ணையன். தனது குடும்ப வியாபார நிலையம் உட்பட தான் குடியிருந்த வீடு மற்றும் ஆதனங்களை ஈடு வைத்து எம் அடிப்படை தேவைகளை ஆரம்பத்தில் ஈடு செய்தார் அண்ணா. அவரின் இந்த செயல் கண்டு அவரின் நண்பர்கள் பலரும் முன்வந்து உதவினர். அதனால் அண்ணா எமக்கு இந்திய பிதாமகன் ஆனார்.
அண்ணாவின் அறிமுகத்தை நாபாவுக்கு ஏற்ப்படுத்தி கொடுத்த வள்ளிநாயகம், நாபாவின் வாகன சாரதி கணேஷ், ஆயுத பட்டறைய கண்ணன், பேட்டை குமார், பக்கிரி மற்றும் அரசியல் தலைவர்களான வேதாரணியம் மீனாட்சி சுந்தரம், கும்பகோணம் கோசி மணி தஞ்சாவூர் எல் கணேசன் என எத்தனையோ அன்பர்கள் அண்ணாவுக்கு அரணாக நின்று எம்மை கும்பகோணத்தில் நிலைக்க செய்தனர்.
2016 ஜூன் 1ம் திகதி அண்ணா மறைந்தார். அவர் உடலால் இந்த உலகை விட்டு மறைந்து போனார். ஆனால் எங்கள் அனைவரின் உள்ளத்திலும் அவர் நினைவுகள் என்றென்றும் நிலைத்திருக்கும். எமது விடுதலை போராட்டம் சிதறுண்டு போயிருக்கலாம். நாமும் தனிநபர் செயல்களால் திசை மாறி, பலவாகி போயிருக்கலாம். ஆனால் எம் தோள் சுமந்த கனவை நனவாக்க முனைந்து முன்வந்த, அண்ணா அவர்களின் நினைவுகள் என்றும் பசுமரத்து ஆணிபோல் எம் இதயத்தில் இறுதிவரை இருக்கும்.
உலகில் நீங்கள் எங்கு வாழ்ந்தாலும், எந்த அணியில் இருந்தாலும் உங்கள் அனைவரின் வீர வணக்கம் அண்ணா வுக்கு அஞ்சலி ஆகட்டும். தியாகிகள் தின மாதத்தில் அணைந்த தியாக தீபம், எங்கள் இந்திய பிதாமகன், கும்பகோணம் தந்த தவ புதல்வன், பெரியார் பாசறையில் விளைந்த, தன் நலன் கருதாத எங்கள் அண்ணா ஸ்டாலின் BA BL அவர்களின் நினைவு நாளான ஜூன் 1ம் திகதி, ஒரு தீபம் உங்கள் இல்லங்களில் அவர் நினைவாக ஒளிரட்டும்.
(ராம்)