பேசும் தாய்மொழியாம் தமிழால் மாத்திரமன்றி, கலாசாரத்தால், வாழ்விட அமைப்பால், பண்பாட்டுப் பின்னணிகளால் எனப் பல கோணங்களில் ஒற்றுமையைக்கொண்ட இரண்டு சகோதர இனங்கள் வஞ்சகர் விரித்த சதிவலைக்குள் சிக்குண்டோ அல்லது பிரித்தாள சூழ்ச்சி செய்தோர் திட்டமிட்டு வெட்டிவைத்த குழிகளுக்குள் தம்மையுமறியாமல் மூழ்கடிக்கப்பட்டோ கடந்த சில காலங்களில் கொஞ்ச தூரமாய் விலகியிருந்த நிலைமையை மாற்றி, இனி எப்போதும் எல்லா சூழ்நிலைகளிலும் இணைந்தே பயணிப்போம் என்பதற்கான தொடக்கமாக இன்றைய ஹர்த்தால் இருக்க வேண்டுமென்பதே தமிழ்-முஸ்லிம் உறவை யாசித்து நிற்போரின் எதிர்பார்ப்பாகும்.
பல்வேறு சந்தர்ப்பங்களில் தமிழ்-முஸ்லிம் உறவுக்காக,சங்கமத்துக்காக,மீளெழுச்சிக்காக எழுதியும் பேசியும் வந்திருக்கும் சமூக ஆர்வலர்களுக்கும் இனவொற்றுமை விரும்பிகளுக்கும் இன்றைய நாள் மிக்க திருப்தியைத் தருமெனத் திடமாக நம்ப முடியும்.
இன்றைய ஆரம்பம் இனி முடிவற்ற தொடர்ச்சியாக நீள வேண்டும். நன்மைகளைக் கொண்டாடுவதிலும் தீமைகளைத் துண்டாடுவதிலும் இரு சமூகங்களின் கரங்களும் மனங்களும் என்றுமே பிரிக்க முடியாத அளவிற்குப் பின்னிப் பிணைய வேண்டும். இதுவே இனியான காலத்திற்கான சுலோகமாக, மாற்ற முடியாத மந்திரமாக, கற்களில் செதுக்கப்படும் அழியாத விதியாக அமைய வேண்டும்.
இன்றைய ஹர்த்தால் வெற்றி தழுவட்டும்!