அதன்பின் ஒரு மாலைநேரம் ஜான்சுந்தர் அண்ணாவின் பழைய கற்றல்கூடமான ‘பாட்டுப்பட்டறை’யில் மித்ரனும் அவருடைய உதவி-இயக்குநர் நண்பர்கள் சிலரும் வந்துசேர்ந்தனர். அக்கணம்வரை அவர்கள் யார் எவரென்ற எவ்விபரமும் அறியாதிருந்தேன். கல்விகுறித்து ஒரு திரைப்படம் இயக்கவிருக்கிறார்கள் என்ற தகவல்மட்டுமே அறிந்தவனாயிருந்தேன். அத்தனைபேரும் அமர்ந்து உரையாட அவ்விடம் கொள்ளாத காரணத்தால், அனைவரும் கிளம்பி கோயம்புத்தூர் ரேஸ் கோர்ஸ் பகுதியில் நிறைய மரங்களடர்ந்த நடைபாதையில் உட்கார்ந்து பேசத் துவங்கினோம்.
கிட்டத்தட்ட மூன்றுமணி நேரத்திற்கும் மேலாக உரையாடல் வளர்ந்தது. கல்விசார்ந்த ஒரு படம் எடுப்பதாகவும், சிவகார்த்திகேயன் நடிப்பதாகவும் அப்பொழுது தெரியப்படுத்தினார்கள். கல்விகுறித்தும் அதற்கான மனிதர்கள் குறித்தும் அவர்கள் கேட்கக்கேட்க தொடர்ச்சியாக ஒவ்வொன்றுக்காக பதிலுரைத்து வந்தேன். நானறிந்த சில தகவல்களை அவர்களிடம் சொன்னேன். அவ்வுரையாடலில் ஒரு முக்கியமான மனிதரைப்பற்றி நான் எடுத்துச்சொன்னேன். அவர்தான் அனில் குப்தா.
‘சிம்பிள் லேப்ஸ்’ எனும் சிறு அறிவியல் நிறுவனத்தை நடத்திவரும் நண்பர் பிரகாஷ் மூலமாகத்தான் அனில் குப்தா எனக்கு அறிமுகமானார். அனில் குப்தா, அகமதாபாத்திலுள்ள இந்திய மேலாண்மைக் கழகத்தில் (IIM Ahmadabad) பேராசிரியராகப் பணிசெய்கிறார். அவரோடு இணைந்து ஒரு பத்துநாள் பாதயாத்திரைப் பயணமாக, மகாராஷ்டிராவின் விதர்பாவில் நடைபயணத்துக்குச் சென்றேன். இந்தியாவிலேயே விவசாயத் தற்கொலைகள் அதிகம் நிகழ்ந்த இடம் அது என அப்பொழுதான் அறிந்துகொண்டேன். அங்குள்ள மக்களின் உண்மைப் பிரச்சனை என்ன? அதற்கான தீர்வு என்ன? அம்மக்களிடமே நேரடியாகக் கேட்டறிந்து களஆய்வு செய்து அதற்கான தீர்வை அடைதலே அந்த நடைபயணத்தின் ஒற்றைநோக்கமாக இருந்தது.
பாதயாத்திரையாகிய அந்தப் பத்துநாட்களும் என் வாழ்க்கையில் எந்நிலையிலும் மறக்கமுடியாத நாட்கள். அதற்குக் காரணமிருக்கிறது, நாங்கள் சந்தித்த ஒவ்வொரு வீடும் ஒவ்வொரு மனிதர்களும் ஒரு துயர்கதையைச் சுமந்திருக்கிறார்கள். ஒரு கிராமத்தில் இருந்த நாற்பது வீடுகளில் இருபத்தியெட்டு வீடுகளில் தற்கொலை நடந்திருந்தது. வீடுகளுக்கு உள்ளே சென்று பார்த்தால் தெய்வப்படங்களுக்கு பக்கத்தில் அவர்களுடைய அப்பாவோ, கணவரோ, அண்ணனோ நெற்றிப்பொட்டோடு புகைப்படமாகத் தொங்குவார்கள். தற்கொலைக்கான இழப்பீடாக அரசுதருகிற தொகையும்கூட அங்கிருக்கிற கந்துவட்டிக்காரனுக்கோ அல்லது உரைக்கடைக்காரனுக்கோ போய்ச்சேருகிறது. அவர்கள் மீண்டும் மீண்டும் அதே கடனில் மூழ்கிப்போகிறார்கள், முடியாத கட்டத்தில் தங்களை முடித்துக்கொள்கிறார்கள். அக்கிராமங்களில் நான் சந்தித்த மனிதர்களின் அறம் என்பது நான் இதுவரை நேரிலுணராத ஒன்று.
மாட்டின் மூக்கணாங்கயிறு வாசத்தை வைத்து அந்த மாட்டுக்கு என்ன நோயென்று கண்டுபிடித்து அதற்கு மருந்து தருகிற கிராம மனிதரையும், யாருக்கேனும் முதுகெலும்பு உடைந்தால்கூட அதைச் சீரமைத்து குணப்படுத்துகிற தொன்னூறு வயது வைத்தியரான ஒரு தாத்தாவையும் அங்கு கண்டேன். சிகிழ்ச்சைக்கு ஒரு பைசா வாங்குவதில்லை அவர். தன் சிகிழ்ச்சைக்கான காணிக்கையாக அவர் கேட்பது ஒன்றே ஒன்றுதான். உடம்பு முழுவதும் குணமான பிறகு, பயனாளியும் அவருடைய உறவினர்களும் சேர்ந்து அருகிலிருக்கும் ஏதாவதொரு தலித் குடியிருப்புப் பகுதியில் சிறியதாக கிணறு ஒன்றை வெட்டித்தர வேண்டும். அப்படி கிணறு வெட்டிக் கிளம்பும் சுனைத்தண்ணீரை கொண்டுவந்து, அம்முதியவர் கட்டியிருக்கும் சிறுகோவிலின் குறுந்தெய்வத்துக்கு ஊற்ற வேண்டும். இதுவே அவருடைய பிரார்த்தனை வழி.
இப்படியாக வெவ்வேறு விதமான மனிதர்களை சந்திக்க நேர்ந்த அரும்பயணமாக அது அமைந்தது. அப்பயணம் முழுவதிலும் சாலையிலேயே கிடந்து தங்கிக்கொள்ள வேண்டும். கிராமவாசிகள் தரும் ஆகாரம் மட்டும்தான் நம் பசிக்கு. ஒருவகையில் அது பிச்சைப்பயணமும்கூட. அப்படியான பயணத்தின் ஏழாவதுநாள் பின்னிரவு பதினோரு மணியளவில், எல்லோரும் நடந்தயர்ந்த களைப்பில் படுத்துறங்கிக் கிடக்க, அனில் குப்தா மட்டும் ஒரு சிறுவனோடு பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். வெகுநேரமாக அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். என் நண்பர் பிரகாஷ் அங்கு போய் பார்க்கலாம் என என்னை அழைத்துப்போனார். அருகில்சென்று அச்சிறுவனைப் பார்த்தேன். உடம்போடு தோல் ஒட்டிய கறுப்பான ஒல்லித்தேகம் அவனுக்கு. ஆனால் அவன் கண்களை என்னால் மறக்கவே முடியாது. அப்படியானதொரு விசைவிழி.
அச்சிறுவன் தன் கையில் ஒரு குட்டி இயந்திரத்தை வைத்து அனில் குப்தாவிடம் விளக்கிக் கொண்டிருந்தான். அந்த இயந்திரம், கறுப்பு அரிசியையும் கற்களையும் பிரிக்கும் ஒரு இயந்திர வடிவமைப்பு. முழுக்க முழுக்க அவனே வடிவமைத்தது. யாரிடமிருந்தோ, எங்கிருந்தோ கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் அறிவியலை அணுகிற என் புத்தியிலிருந்து எள்ளலான ஒரு கேள்வியை அவனிம் அந்த இயந்திரம்பற்றி கேட்டேன். அவன் அதற்கு ஒரு பதில் சொன்னான், “அண்ணா, இல்லண்ணா. எங்க அம்மாவுக்கு கண்ணுத் தெரியாது. அரிசியையும் கல்லையும் பிரிக்க அவங்க தடவித்தடவி ரொம்ப கஷ்டப்படுவாங்க அண்ணா. அதப் பாத்துபாத்துதான் இந்த மிசின கண்டுபிடிச்சேன் அண்ணா”.
மறுநாள் காலை, நடைபயணம் போய்க்கொண்டிருக்கையில் அனில் குப்தா என்னிடம் ஒரு தகவலைச் சொன்னார். ‘வருடாவருடம் இந்தியா முழுக்க இருக்கிற இந்தமாதிரி இளம் விஞ்ஞானிகள் நிறையபேரை வரவழைத்து, டெல்லி ஜனாதிபதி மாளிகையில் ஒரு அறிவியல் கண்காட்சியை வழக்கமாக நாங்கள் நிகழ்த்துவோம். ஜனாதிபதி அக்கண்காட்சியை திறந்துவைத்து அந்தச் சிறார்களுக்கு பரிசும் சான்றிதழும் வழங்குவார்’ என.
தேசியக் கண்டுபிடிப்புக் கழகத்தின் (national innovation foundation- NIF) தலைவராக இருப்பவர் ஜனாதிபதி. அக்கழகத்தின் முதன்மைச்செயலாளர் அனில் குப்தா! மெல்லமெல்ல குழந்தைகள் குறித்தும் அவர்களுடைய கண்டுபிடிப்புகள் குறித்தும் அவர் உரையாடிக்கொண்டே வந்தார். அப்பொழுது அவர் சொன்னார், ‘இத்தகையக் கண்டுபிடிப்புகள் எல்லாமே ஏதோவொருவகையில் கார்ப்பரேட் கண்களுக்கு அகப்பட்டால், இதை ஒரு கம்பெனியாக அவர்கள் மாற்றிவிடக்கூடிய அபாயம் இருக்கிறது. இச்சிறுவர்களின் சொந்த அறிவு அந்த பெரும் முதலாளிகளுக்கு வளர்ச்சியைத் தரும். அப்படி நடந்துவிடக்கூடாது. இக்கருவிகள் அனைத்தும் எளிய மக்களிடம் சென்றடையக்கூடியதாக இருக்க வேண்டும். இக்கருவிகளுக்கான பயன்பாட்டு உரிமை அவர்களின் கையில்தான் இருக்க வேண்டும்’.
அக்கணம்தான் அனில் குப்தா என்கிற மாபெரும் ஆளுமையின் முழுமையான பக்கத்தை அறிந்தேன். அனில் குப்தாவின் தலையாயப்பணி என்பது ‘காப்புரிமைகளை குழந்தைகளுக்குப் பெற்றுத்தருவது’. அதாவது, இளம் விஞ்ஞானிகள் உருவாக்குகிற அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமையை அவர்களின பெயரிலேயே அரசிடமிருந்து சட்டப்பூர்வமாகப் பெற்றுத்தருதல். ‘அறிவுத்திருட்டைத் தடுத்தல்’ இதுதான் அனில் குப்தாவின் இலக்கு, கனவு, இயக்கம், உழைப்பு, ஆசை, இன்னபிற இத்யாதி எல்லாம்.
அனில் குப்தாவோடு நான் உரையாற்றிய எல்லா தகவல்களையும் நான் மித்ரனிடத்தும் அவருடைய உதவி-இயக்குநர்களிடத்தும் பகிர்ந்தேன். அதேபோல விக்யான் கேந்திராவைப்பற்றியும் அவர்களுக்கு எடுத்துச்சொன்னேன். கணவன் மனைவி இருவருமே தங்கள் வேலையைத் துறந்துவிட்டு, இடைநின்ற குழந்தைகளுக்கான ஒரு பள்ளிக்கூடத்தை நடத்திவருகிறார்கள். எளிய விக்யான் கேந்திராவிலிருந்து படித்துவந்த இளைஞர்கள்தான் இன்று மிகப்பெரிய பாலங்கள், அணைகள் உள்ளிட்ட பெரும் கட்டுமானங்களை சுற்றுச்சூழலுக்கு குறைவாகத் தீங்கிழைக்கும் வகையில் வடிவமைக்கும் ஆய்வுகள் அனைத்தும் நிகழ்த்திக்காட்டுபவர்களாக இருக்கிறார்கள்.
இப்பள்ளி குறித்தும், அடுத்தடுத்து அவர்கள் கேட்ட தொடர்கேள்விகளுக்கும் என்னனுபவங்களுக்கு உட்பட்டத் தகவல்களை நான் பகிர்ந்துவந்தேன். மூன்றுமணி நேரத்தைத்தாண்டி உரையாடல் நீண்டுகொண்டே சென்றது. அவ்வுரையாடல் முழுவதையும் உடனிருந்த உதவி-இயக்குநர்கள் குறிப்பெடுத்துக் கொண்டனர். குரல்பதிவுக்கருவி வாயிலாகவும் இக்கதைகளையும் தகவல்களையும் பதிந்துகொண்டனர். கல்வி மற்றும் பள்ளிக்கூடங்கள் குறித்தும் குழந்தைகள் அறிவியில் குறித்தும் வெவ்வேறுவிதமான கேள்விக்கு நிதானமாக ஒவ்வொரு பதில்களாக அளித்துவந்தேன்.
இச்சந்திப்புக்கு பத்துநாட்கள் கழித்து, மித்ரன் குக்கூ காட்டுப்பள்ளிக்கு வந்திருந்தார். அப்பொழுது நான் பள்ளியிடத்தில் இல்லை. அங்கு தங்கியிருந்து, பள்ளிக்கூடத்தின் கட்டுமானங்கள், நடைமுறைகளை புகைப்படங்களாகவும், காணொளிகளாகவும் புகைப்படக்கருவியில் பதிந்துகொண்டனர். சின்ன இசைக்கருவி ஒன்றைச் செய்திருந்த இரமேஷ் வரைக்கும் எல்லாவற்றையும் அவர்களின் ஆவணத்துக்காகப் பதிந்தபின் கிளம்பிச்சென்றனர்… பெருந்தயக்கத்துக்குப் பிறகு எழுதும் நீளமான இப்பதிவுக்கு ஒரு காரணமிருக்கிறது.
ஹீரோ படம்பார்த்தேன். அர்ஜீன் கதாபாத்திரம் அப்பட்டமாக அனில் குப்தா தான். படத்தில் காட்சியாகிற நர்சரியின் வடிவத்தோற்றம் குக்கூ நிலத்திலுள்ள விதைநாற்று வளர்ப்பகத்தின் அதே தோற்றம். எல்லாவற்றையும் தாண்டி, படத்தின் மையக்கருவாக நிற்பது அனில் குப்தாவின் அர்ப்பணிப்பான வாழ்வு. வெப்பநிலத்தில் வெறுங்கால்களால் நடந்த வாழ்வுதான் வேர்விரித்த பேராலமரமாக அவரை பெருந்தோற்றம் கொள்ளச்செய்திருக்கிறது. இப்படம் முழுக்க முழுக்க அனில் குப்தாவின் வாழ்வுச்சம்பவங்களை இணைத்து இணைத்துப் பின்னப்பட்டிருக்கிறது. படத்தின் ஒட்டுமொத்த மையம் அனில் குப்தா. அவருடைய செயல்பணிகள் படக்காட்சிகளாக திரைப்படுத்தப்பட்டுள்ளது.
எனக்குத் தெரிந்தவரை அனில் குப்தாவின் உறக்கநேரம் வெறும் மூன்றுமணி நேரங்கள் மட்டுந்தான். மற்ற நேரங்களிலெல்லாம் அவருடைய மனம் சிந்திப்பது ஒன்றைப்பற்றி மட்டுமே. அது, ‘எங்கோ தூரத்தில் இருக்கும் ஒரு கிராமக்குழந்தையின் அறிவியல்கனவு குறித்துதான்’. சாதாரணமாக இணையத்தில் தட்டிப்பார்த்தால் அனில் குப்தாவால் காப்புரிமை பெற்றுத்தரப்பட்ட அத்தனை அறிவியில் கண்டுபிடிப்புகளின் காணொளிகள் கடகடவென கணிணித்திரையில் கொட்டுவதைக் காணலாம்! எல்லாமே குழந்தைகள் உருவாக்கிய கண்டுபிடிப்புகள்! அவைகளுக்கு எப்படி காப்புரிமம் பெற்றார் என்பவை தொடர்பான தகவல்கள்! அவரைப்பற்றி அறிந்த யாராலும் புறக்கணிக்கவே முடியாத ஆளுமை ‘பத்மஸ்ரீ’ அனில் குப்தா. ஆனால் ஹீரோ படத்தில்?
எனக்கு இப்படத்தின் இயக்குநர் மித்ரன் குறித்தோ அல்லது இதன் திரைவெளிப்பாடு குறித்தோ எவ்விதக் கேள்விகளோ குற்றச்சாட்டுகளோ இல்லை. ஆனால் நெஞ்சறுக்கும் ஒரு வருத்தம் இருக்கிறது மித்ரன், உங்கள்மீதும் இப்படத்தின்மீதும்.
இந்தப்படம் சுயகல்வி குறித்தும், அதிகாரச் சுரண்டல் பற்றியும், அறிவுத்திருட்டு குறித்தும் பேசுகிறது. ஆனால், இவையெல்லாம் பேசுகிற இவர்கள் இப்படத்துக்கான உயிர்க்கருவாக அமைந்த ஒரு உண்மை ஆளுமைக்கு துளியும் நேர்மைகாட்டாமல் இருட்டடிப்பு செய்ததை என்னால் ஏற்றுக்கொள்ளவே இயலவில்லை. இப்பொழுது சொல்லுங்கள், இப்படம் அறிவுத்திருட்டு பற்றி பேசுகிறது. ஆனால், இது யாருடைய உழைப்பை எடுத்துக்கொண்டு தனக்கு வேடமிட்டுக்கொள்கிறது? அனில் குப்தாவினை கதாபாத்திரமாக்கியதில் மகிழ்ச்சி. ஆனால், அவருக்காக ஒரு சிறிய மரியாதை வார்த்தைகளையோ நன்றிகூறல்களையோ இப்படத்தில் சொல்லவேயில்லை. அவருடைய நிஜப்புகைப்படம்கூட படம்துவங்குவதற்கு முன்னரோ பின்னரோ திரையில் காட்டப்படுவதில்லை. இது அறிவுத்திருட்டு ஆகாதா?
ஒரு தனிப்பட்ட மனவருத்தமும் எனக்கிருக்கிறது மித்ரன். நீங்கள் ஒரு சிறுதகவலாவது எனக்கு அளித்திருக்கலாம். நீங்கள் படம்பிடித்துக்கொண்டிருப்பது குறித்தோ அல்லது அது நன்முறையில் படம் நிறைவுற்றது குறித்தோ ஒரு சிறிய தகவல்பகிர்வை நீங்களோ அல்லது அன்றுவந்த உங்களுடைய அத்தனை நண்பர்கள் யாரேனுமாவது அழைத்துப்பேசியோ அல்லது குறுஞ்செய்தி மூலமாகவோ தெரியப்படுத்தியிருக்கலாம். அப்படி யாருமே செய்யவில்லை. முதல் சந்திப்புக்கு அத்தனைமுறை அழைத்து நட்புபழகிய உங்கள் குரல், அதற்கடுத்து இப்பவரை ஒரு அழைப்பில்கூட வரவில்லை. படத்தைக் காணும்வரை எனக்கும் இத்தகவல்கள் வந்துசேரவில்லை. ஒரு நண்பனாக இந்த ஏமாற்றத்தை நான் கடந்துவிடுவேன். ஆனால், ஒருமுறை கேட்டபின் வாழ்வில் மறக்கமுடியாத ஆளுமையாக, உங்கள் படைப்பில் உயிராக இறங்கிநிற்கும் அனில் குப்தாவுக்கு என்ன நேர்மை செய்ததாக நீங்கள் நம்பிக்கொண்டிருக்கிறீர்கள் திரு. மித்ரன்?
படத்தின் மிகமுக்கிய காட்சியில் வரக்கூடிய மோட்டார் இன்ஜின் வரைக்கும்… அறிவியல் கவுன்சிலில் பேசும் அந்த வசனங்கள் வரைக்கும்… அத்தனையும் அனில் குப்தாவின் அச்சு அசல் நகலெடுப்பு மற்றும் நாம் பேசிய உரையாடலில் நான் உங்களிடம் பகிர்ந்தவை. இப்படம் வெளிவந்திருக்கும் இக்காலகட்டத்தில் யாரோ ஒருவர் இத்திரைப்படத்தின் கதை திருடப்பட்டதாக வழக்குத் தொடுத்துள்ளதாக அறிகிறேன். அந்த நண்பருக்கான வாழ்வு வேறொரு திரைப்பட வாய்ப்பாக செயல்கனிய பிரபஞ்சத்தைப் பிரார்த்திக்கிறேன். வெளித்தெரிய வேண்டிய சமூக உதாரணங்கள், கலைப்படைப்புகளால் காயமடைவதும், காயடிக்கப்படுவதும் மீண்டும் மீண்டும் நடக்கிறது. இந்த அசட்டையான துணிவு எங்கிருந்து பிறக்கிறது?
ஆனால் அதுவல்ல நாங்கள் இங்கு முறையிட்டுக்கொண்டிருப்பது. இதன் உள்ளாழத்தை முதலில் நீங்கள் மனமேற்க வேண்டும். அதுமட்டுமல்ல மித்ரன், இத்திரைப்படம் குறித்த உங்களுடைய நேர்காணல் ஒன்றையும் பார்த்தேன். ‘இந்தத் திரைக்கதை வேறொரு நண்பருடையது’ என்பதற்கான விவாதபதிலில் கொஞ்சமும் பதட்டமற்று, அவ்வளவு குரலுயர்த்திப் பேசுகிற உங்கள் தோரணையில் உண்மையின் பெருவிரிசல் இருப்பதையும் நேர்மைப்பிறழ்வு உள்ளதையும் என்னால் நிச்சயம் சொல்ல முடியும்.
2019ல் ஹிந்தி திரைத்துறையில் ஹிரித்திக் ரோஷன் நடித்த ‘Super 30’ என்றொரு படம் வெளிவந்தது. பாட்னாவில் வசிக்கும் கணித ஆளுமை ஆனந்த் குமாரின் வாழ்க்கைவரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்ட படம். துடிப்புள்ள எளிய இளைஞர்களை, இந்தியக் கல்வியின் உயரம்தொடவைக்கும் கதைக்களம். அப்படத்திலும், அப்படம் வெளிவந்தபின்னும் அதன் நிஜக்கதாபாத்திரமான ஆனந்த் குமார் இந்தியாவெங்கும் அறியப்பட்ட ஆளுமையானார். திரைப்பட விமர்சனத்தோடு எல்லா மொழிகளும் அவருடைய முன்னுதாரண வாழ்வு லட்சக்கணக்கானோரை ஊக்கப்படுத்தியது. ஒரு நேர்மையுள்ள படைப்பாக, அது தனது மைய ஆன்மாவின் உண்மையான முகத்தை எளிய இந்தியவாசிகளுக்குத் தெரியவைத்தது. காட்சி ஊடகத்தின் பெரும்பலம் அது. ஆனால், இந்த மொத்தத் திரைப்படத்திலும் ‘அனில் குப்தா’ பற்றிய குறியீடுகள்கூட வைக்கப்படவில்லை. நிழலின் சாம்பல்பரவல் நிஜத்தை மறைத்துப் புதைத்திருக்கிறது.
நீங்கள் எடுத்த ‘ஹீரோ’ படத்தில் ஒரு வசனம் வருகிறது. ‘ஹூரோக்கள் சினிமாவில் வேண்டுமானால் ஜெயிக்கலாம். ஆனால், நிஜத்தில் வில்லன்கள்தான் ஜெயிப்பார்கள்’ என. அந்த உண்மையின் சிறுபகுதி இப்படத்திற்கும் பொருந்திப்போவதை உங்களால் உணரமுடிகிறதா?
பொதுவாகவே ஒரு நவீனப்போக்கு உருவாகிவருகிறது. மாற்று வாழ்வியல், கல்வி, விவசாயம், தலித்தியம், பெரியாரியம், சுற்றுச்சூழல் மற்றும் காந்தியம் என எல்லா நற்கருத்துகளையும், தானறிந்த தகவல்பக்கங்களை மட்டும் மிகைப்படுத்தி அதன் உண்மைகளை மறைத்துப் புனிதப்படுத்தும் ஒரு பிரிவரசியல் சினிமாவுக்குள் இப்பொழுது பகிரங்கமாகப் பரவிவருகிறது. கதாபாத்திர நாயகர்களுக்காக நிஜ மனிதர்களின் வாழ்வுத்தவம் வளைக்கப்படுவதும் தட்டையாக்கப்படுவதும் சகஜமாகிவிட்டது. பயன்படுத்தித் தூக்கியெறியும் அளவுக்கு அனில் குப்தா வெற்றாளுமை அல்ல என்பதை நிறுவவே என்னுடைய இத்தனைச் சொற்களும்.
நண்பர்கள் எல்லோரும் இப்படம் பார்த்து ஒரு வாரம் ஆகிவிட்டது. இப்போது இந்தப் பதிவை எழுதுவதற்குப் பின்காரணமாக இருப்பது சில நண்பர்களின் உண்மையுறுத்தும் மனது. சாதாரண உதிரியாக சினிமாவை மட்டும் நம்பி குடும்பம், பிள்ளைகள், உறவுகள் அனைத்தையும் விட்டுவந்த யாரோ ஒருத்தன் நிச்சயம் இப்பெருங்கூட்டத்துக்குள் தவித்துக்கிடப்பான். இங்கிருந்து ஒருகுரல் அவனுக்கு எச்சரிக்க வேண்டியுள்ளது. எப்பாதிப்பும் அவனுக்கு நேர்ந்துவிடக்கூடாது என்ற அகத்தவிப்பு உறுத்துகிறது.
இப்பதிவுக்கு இன்னொரு அவசியமும் உள்ளது. மனதின் ஆழத்திலுள்ள ஒற்றைவரியை மெல்ல ஒரு கதையாக வளர்த்தெடுத்து, திரைப்பட வாய்ப்புக்காக துயர்பொறுத்துக் காத்திருக்கும் ஒரு அறமான படைப்பாளி சில நிராகரிப்புகளால் சிதைந்துபோய்விடக் கூடாது என்ற அச்சநடுக்கம் என்னைத் துளைக்கிறது. ‘ஹீரோ’ படம் எனக்கு இன்னொரு மீள்நினைவைத் தந்தது.
பல வருடங்களுக்கு முன்னால், சென்னையில் சினமா, இலக்கியம், பத்திரிகை என அலைந்துதிரிந்த நாட்களில் ‘அவள் அப்படித்தான்’ ருத்ரய்யாவை ஐந்து அல்லது ஆறுமுறை சந்தித்திருப்பேன். ஒருநாள் இரவில் சென்னையின் ஒதுக்குப்புற கடற்கரையில், மிதமான போதையில் ருத்ரய்யா இருக்கையில் அவரிடம் ஒரு கேள்விகேட்டேன், “ஏன்யா இப்ப படம் எடுக்கிறதில்ல?”. அந்நிலையில் அவர் நெகிழ்ந்துருகி ஒரு பதில் சொன்னார், ” எல்லாரும் இந்தக் காலகட்டத்துக்கு தகுந்தமாதிரி ஒரு படம் கேக்குறாங்க”. உடனே நான், “அய்யா புதுசா வந்திருக்க ஒரு பத்து படத்தப் பாத்தா இந்த காலகட்டத்தோட டிசைன் நமக்கு தெரிஞ்சிரும்ல. அதிலயிருந்து ரெபரென்ஸ் எடுத்து நீங்க ஒரு படம் பண்ணிருலாம்ல அய்யா” என்றேன். அதற்கு அவர், “அய்யோ… வாழ்நாள்ல அப்படி நாம பண்ணிடவே கூடாது. ரெபரென்ஸ் எடுத்துப் படம்பண்ணா அது என்னோட சுயத்துல இருந்து வந்ததா இருக்காது. அதுல பிரசவம் நிகழாது, சாவுதான் நிகழும்” என்றார். ஏனோ தெரியவில்லை. ருத்ரய்யாவின் அந்தச் சொல் எனக்குள் திரும்பத்திரும்ப கேட்கிறது.
அனில் குப்தாவை நாங்கள் மீண்டும் மீண்டும் நினைவேற்றிக்கொள்வதற்கும், ஒரு திரைப்படம் அவருக்கு தராத உரிய மரியாதையை இந்நினைவுகள் வழியாக நாம் எல்லோரும் அவருக்குக் கொடுப்பதற்கும் இந்த மனவலி எழுத்துக்கள் உங்கள் இருதயத்தில் சிலகணங்கள் தோன்றியழிந்து போகட்டும்.