புத்தாண்டுக்கான பாராளுமன்ற அமர்வு நேற்றுமுன்தினம் (05) ஆரம்பமானது. அதில், அண்ணிய செலாவணியை ஈட்டிக்கொடுத்துக்கொண்டு, சம்பள உயர்வுக்காகவும் ஏனைய உரிமைகளுக்காகவும் போராடிக்கொண்டும், எப்போதுமே கையேந்திகொண்டிருக்கும் பெருந்தோட்டத்தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைத் தொடர்பிலும் பேசப்பட்டது.
அதுவும் குறைந்தபட்ச வேதனங்கள் (இந்தியத் தொழிலாளர்கள்) (திருத்தம்) சட்டமூலம் மீதான விவாதத்தின் கீழான அந்த விவாதத்தில் நிறைவுரை ஆற்றிய அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா, “ ரூ.1,000 கையில் கிடைக்கும்” எனக் கூறிமுடித்தமையின் உள்ளர்த்தம். அடிப்படை சம்பளம் ஆயிரம் ரூபாயாக இருக்காது என்பதை மறைமுகமாக கோடிட்டுச் சென்றிருக்கின்றது.
பெருந்தோட்டங்களில் வாழ்வோர் பெரும்பாலும் ‘இந்திய தமிழர்’ என்றே இன்றும் அழைக்கப்படுகின்றனர். ஆனால், அவர்களுக்கு இலங்கை பிரஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆகையால், அந்த திருத்த சட்டமூலத்தில், “இந்தியத் தொழிலாளர்கள்” என்ற சொற்பதத்தை நீக்க முடிந்திருந்தால், இந்நாட்டுப் பிரஜைகளென சட்டத்திலேனும் கூறப்பட்டுள்ளதென அச்சமூகம் சந்தோஷப்பட்டிருக்கும்.
ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பு விடயத்தின் பின்னால் ஆயிரமாயிரம் கட்டுக்கதைகளும் காலங்கடத்தல்களும் இடம்பெற்றதை யாரும் எளிதில் மறந்துவிடவே முடியாது. பொங்கல், தீபாவளி, புத்தாண்டென கானல் நீர்போலவே பெருந்தோட்டத் தொழிலாளர்கள், ஏமாற்றப்பட்டு வந்துள்ளனர்.
உரிமைகளை வென்றெடுப்பதற்கு போராட்டம்தான் ஒரே வழியென, சமூகத்தின்பால் அக்கறை கொண்டோரும் நலன்விரும்பிகளும் முன்வந்து போராட்டங்களை நடத்தினாலும், இறுதியில் அள்ளக்கையான சில அரசியல்வாதிகள் போராட்டத்துக்குள் புகுந்து, கூத்தாடிவிட்டுச் சென்றுவிடுவர் அவை கசப்பான வரலாறு.
சம்பள உயர்வு எனச் சொல்லப்படும் பேச்சுவார்த்தையின் மற்றுமொரு சுற்று, இன்று (07) நடைபெறுவதாகவே அறிவிக்கப்பட்டது. அதுவே இறுதி சுற்றாகி, அதில், இறுதியானத் தீர்வு எட்டப்படவேண்டும் என்பதே, அம்மக்களின் பெரும் எதிர்ப்பாப்பாக அமைந்துள்ளது. அப்படியானால்தான், ஜனவரிக்குள் சம்பள உயர்வு கிடைக்குமென்ற பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அறிவிப்பு அர்த்தபுஷ்டியானதாக அமையும்.
சம்பள உயர்வு விடயத்தில், எம்மக்கள் மீண்டும்ஏமாற்றப்பட்டு விடக்கூடாது என்பதில், அம்மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொண்டவர்கள் குரல்கொடுத்தனர். ஆனால், கடந்தகால ஆட்சியின் போது, அள்ளிவீசப்பட்ட பசப்புவார்த்தைகளை பின்னோக்கிச் சென்றுபார்க்கவேண்டும்.
ஜனாதிபதித் தேர்தலில் கூட, ‘1,000 ரூபாய்’, ‘ரூ.1,500’ என ஏலம்பேசப்பட்டன. இந்நிைலையில், அம்மக்களின் வாழ்வும் இன்னுமின்னும் மேம்படைய வேண்டுமாயின், சம்பள உயர்வை இழுக்கடிக்காது இறுதிச்செய்யவேண்டும் என்பதை நாமும் வலியுறுத்துகின்றோம்.