(SLM ஹனிபா)
1970ம் ஆண்டு சுதந்திர இலங்கையின் 7வது பொதுத் தேர்தல். அக்கரைப்பற்றிலிருந்து வெலிக்கந்தைக்கு மாற்றம் பெற்று வந்த ஓரிரு மாதங்களில் நிகழ்ந்தது. இந்த நாட்களில் தான் பொலன்னறுவை மாவட்டத்தில் TA ஆக கடமையாற்றிய உமா மகேஷ்வரன் அவர்களையும் மூன்று வருடங்களுக்கு முதல் காலமான திரு. அம்பிகை பாகன் (கூபா முதலாளி) அவர்களையும் சந்திக்கிறேன்.
உமா மகேஷ்வரன் பின்னாளில் Plot இயக்கத்தின் தலைவராகிறார், அது வேறு கதை. தேர்தல் கடமைக்காக வெலிக்கந்தையிலிருந்து 22 கிலோமீற்றர் வடக்கு நோக்கிய பயணத்தில் மாவலி ஆற்றின் கரையை அண்மித்த திருக்கோண மடு கிராமத்திற்கு முதல் தடவையாகச் செல்கிறேன்.
ஒரு ஜீப் வண்டியில் நானும் எனது மேலதிகாரியும். பொழுது பற்றைக்குள் மறையும் அந்தி நேரத்தில் அந்தக் கிராமத்தை அடைகிறோம். பாடசாலை என்ற பெயரில் ஒரு சிறிய கட்டிடம். எந்தப் பாதுகாப்பும் அங்கே இல்லை. எனவே ஊர் மக்களின் ஆலோசனையின் பெயரில் பாடசாலைக்கு முன்னாலிருந்து அந்த ஊரின் ஒரேயொரு பெரிய வீட்டில் அன்றிரவு தங்குவதாக ஏற்பாடு.
5 மணியளவில் அந்த ஊரின் கிராம விதானையார் எங்களைக் காண வந்தார். நான்கு அடி உயரம் ஒல்லியான உடல் வாகு அவரின் ஒரு கையில் அழகான பிரம்பும் மறு கையில் ஒரு பார்சலும் கிடந்தது. அந்த வீடுதான் விதானையாரின் காரியாலாயமாக திகழ்ந்ததை பின்னர் அறிந்து கொண்டோம்.
விதானையின் பெயர் தம்பி ராசா அவரின் சொந்த ஊர் திவுலான. ஆனாலும் அவர் முஸ்லிம். அந்த நாட்களில் இவ்வாறான பெயர்களில் அதிகமான முஸ்லிம் சகோதரர்கள் அழைக்கப்பட்டார்கள். நாங்கள் தங்கியிருந்த வீடும் ஒரு விதானையாரின் வீடு. அவர் ஓய்வு பெற்றதும் இவர் அந்தக் கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.
படத்தில் என்னோடு இருக்கும் சீமாட்டியை விதானைப் பொண்டில் என்றே அழைப்பார்கள். அந்தக் கிராமத்தில் பத்து ஏக்கர் வயலும் மூன்று ஏக்கர் புகையிலைத் தோட்டமும் அழைகான ஆட்டுப் பட்டியும் கொண்டவர். நான் அவரைச் சந்திக்கும் பொழுது 50 வயது இருக்கும். இப்போது 100 வயதை அண்மித்து விட்டார். நான் முகநூல் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள இருப்பது 48 வருடங்களுக்கு முதல் அவர் சமைத்துத் தந்த கோழிக்கறி…
நாளை கோழிக்கறி சமைப்போம்…
(Slm Hanifa)