1986 மார்கழி 13: ஈபிஆர்எல்எவ் இயக்கத்தின் சுயாதீனமான செயற்பாட்டுக்கு புலிகள் தடை விதித்த நாள்!


இதன்போது ஏன் தாக்கப்படுகிறோம் என்று அறியாத, எந்தக் குற்றமும் இழைக்காத ஈபிஆர்எல்எவ் இயக்கத்தின் அங்கத்தவர்கள் பலர் புலிகளால் கொல்லப்பட்டனர். பெண்கள் உட்படப் பெருமளவானோர் சிறைப்பிடிக்கப்பட்டு புலிகளின் முகாம்களில் சித்திரவரைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர். அவதூறுகளுக்கும் அவமதிப்புக்களுக்கும் ஆளாயினர்.


புலிகளால் சிறைப்பிடிக்கப்பட்ட தோழர் கபூர் (பருத்தித்துறை), தோழர் பெஞ்சமின் (பொகவந்தலாவை), தோழர் கதிர் (கிளிநொச்சி), தோழர் தாசன் (மயிலிட்டி), தோழர் ஈஸ்வரன் (யாழ்ப்பாணம்), தோழர் அன்பரசன் (மலையகம்) ,குடும்பத்தவர்களால் புலிகளிடம் ஒப்படைக்கப்பட் தோழர் மஜித் (யாழ்ப்பாணம்) ஆகியோர் உயிருடன் திரும்பவில்லை.


மட்டக்களப்பை சேர்ந்த தோழர் சின்ன ரஞ்சித், தோழர் செல்றின் (இடைக்காடு) ஆகியோர் களுவாஞ்சிக்குடியில் புலிகளோடு இடம்பெற்ற துப்பாக்கிச் சமரின் போது கொல்லப்பட்டார்கள். ஈபிஆர்எல்எவ் இன் உருவாக்கத்திலும் அதன் வளர்ச்சியிலும் காத்திரமான பங்களிப்பை வழங்கியவர்கள். தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்காக தம்மை அர்ப்பணித்த, எந்தக் குற்றமும் இழைக்காத இந்தத் தோழர்களும் இங்கு பெயர் குறிப்பிடப்படாத இன்னும் பலரும் அநியாயமாகக் கொல்லப்பட்டார்கள்.


தமிழர் அரசியல் அரங்கில் தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ), தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) ஆகிய இயக்கங்களை புலிகள் தடைசெய்த பின் அடிப்படை ஜனநாய உரிமைகளை நிலைநிறுத்துவதில், மக்களுக்கு பின்பலமாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அடைக்கலமாகவும் இருந்து வந்த ஈபிஆர்எல்எவ் மீதான தாக்குதல் அநேகரது நம்பிக்கைகள் தகர்ந்து போக வழிவகுத்தது. தமிழ் மக்கள் மத்தியில் சுயாதீனமாக செயற்பட்டுவந்த அரசியல் இயக்கங்கள், வெகுஜன அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள் முடங்கிப்போகும் நிலை உருவானது.


ஈபிஆர்எல்எவ் மீதான தடையினைத் தொடர்ந்து வெகுஜன அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள் எல்லாமே ஒன்று புலிகளின் முன்னணி அமைப்பாக செயற்பட வேண்டியிருந்தது. அல்லது தமது பொதுப் பணியை கைவிட வேண்டியிருந்தது. தமிழர்களின் கருத்துச் சுதந்திரம் தமிழர்களின் விடுதலைக்காகப் போராடுவதாகக் கூறிக்கொண்ட புலிகளாலேயே பறிக்கப்பட்டது. இதனை எதிர்த்துக் குரல்கொடுக்க யாரும் இருக்கவில்லை.


புலிகள் சக இயக்கங்கள் மீது மேற்கொண்ட தாக்குதல்கள் நண்பர்களை எதிரிகளாக்கியது, விரோதத்திற்கு வித்திட்டது. ஈ.பிஆர்.எல்.எவ் இயக்கத்திற்குள்ளேயும் வலிமை பெற்றிருந்த ஜனநாயக விழுமியங்கள், கருத்துக்கள், அதுவரை பின்பற்றி வந்த நடைமுறைகள் வலுவிழக்கவும், தளர்வு ஏற்படவும் புலிகளின் இந்த தடை விதிப்பு காரணமாகியது. பிந்திய நாட்களில் இடம்பெற்ற பல்வேறு துயரச் சம்பவங்களுக்கும், விரும்பத்தகாத விளைவுகளுக்கும் மூல காரணமாகவும் அமைந்தது.


புலிகள் சக இயக்கங்களைத் தடைசெய்யும் அராஜகப் போக்கை, சகோதரப் படுகொலைகளை கண்டித்துத் தடுக்கத் தவறிய, கண்டும் காணாமலிருந்த தமிழ் சமூகம் ஏக பிரதிநிதித்துவம் என்ற ஜனநாயக விரோத போக்குக்கு ஆட்பட்டு, அடிமைப்பட்டு, வாயிருந்தும் ஊமைகளாய், கண்ணிருந்தும் குருடர்களாய் தமது விடுதலைக்காக ஏந்தப்பட்ட ஆயுதங்களின் முன்னாலேயே கூனிக்குறுகி அவலங்களை அனுபவிக்க நேர்ந்ததுடன், நியாயமான கோரிக்கைகள், உன்னத குறிக்கோள்களுடன் முன்னெடுக்கப்பட்ட தமிழர் போராட்டமும் பின்னடைவுக்கு உள்ளாகியது. சீரழிந்து சின்னாபின்னமாகிப் போகவும் நேர்ந்தது. அனைவரது தன்னலங்கருதாத உழைப்பும், ஆதரவும் விரயமாக்கப்பட்டது.


தமிழ் மக்கள் இந்தத் துயரங்களிலிருந்து எதைக் கற்றுக்கொண்டார்கள்? விளைவுகளை எண்ணி வேதனைப்படும், விமர்சனம் செய்யும் எவரும் இந்த விளைவுகளுக்குக் காரணமான செயல்கள் குறித்தும் ஆராய்ந்து பார்த்தால் அதன் மூலம் பல படிப்பினைகளை, எதிர்காலத்தை செப்பனிடுவதற்கான அனுபவங்களை பெற்றுக்கொள்ள முடியும்.
ஆனால் தமிழ் ஊடகவியலாளர்கள் பலரும், புத்திஜீவிகள் பலரும் புலிகளின் இந்த அராஜகப்போக்கை இயக்க மோதல் என வர்ணித்து புலிகளின் தவறுகளை மூடிமறைக்கவே முயன்று வருகின்றனர். பிரபாகரனின் அதிகார வெறியும், ஆசையுமே சக விடுதலை இயக்கங்களை தடைசெய்யவும், அந்த இயக்கங்களின் தலைவர்களை அழித்தொழிக்கவும் வைத்தது என்ற உண்மை.

உணரப்படவில்லை.சமூக விரோதிகள் என்றும் தேசத்துரோகிகள் என்றும் புலிகளை அழிக்கத் திட்டமிட்டிருந்தார்கள் என்றும் பழி சுமத்தி புலிகள் சக இயக்கங்களின் அரசியல் நடவடிக்கைகளுக்குத் தடை விதித்தார்கள். தமது கபடத் தனத்தை மூடிமறைத்து மக்களையும் நம்பச் செய்தார்கள். பல ஊடகவியலாளர்களும், புத்தி ஜீவிகளும் கூட இதற்குத் துணைசெய்தார்கள்.


சமூகவிரோதிகள், துரோகிகள் என்று ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளை கொன்றொழித்த புலிகள் அந்த இளைஞர் யுவதிகளை வழி நடத்திய அதே இயக்கங்களின் தலைவர்களுக்கு மக்களை வாக்களிக்கச் செய்து தமது ஊதுகுழல்களாகப் பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்ததை நாம் அனைவரும் தரிசிக்க முடிந்தது. குறித்த தலைவர்களும் புலிகளால் அநியாயமாகக் கொல்லப்பட்ட இயக்க அங்கத்தவர்கள், இயக்கத் தலைவர்களின் சடலங்களை தாண்டிச் சென்று தமது பதவிகளை தக்கவைத்துக் கொண்டார்கள். புலிகள் யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்ட பின் இப்போது தமது முன்னாள் தலைவர்களுக்கு அஞ்சலி நிகழ்வுகளை நடாத்தி ஆதாயம் தேட முற்பட்டுள்ளார்கள்.


எல்லா சந்தர்ப்பங்களிலும் புலிகளுக்கு தமது இயக்கத்தின் நலனே பிரதானமாயிருந்தது. மக்களின் நலனை, போராட்டத்தின் நலனை முதலிடத்தில் வைத்திருந்தால் அவர்கள் ஒரு போதும் இத்தகைய தவறான பாதையைத் தேர்ந்தெடுத்திருக்க மாட்டார்கள்.
இப்போதும் தமது சொந்த நலன்களை முதலிடதில் வைத்துக்கொண்டிருப்பவர்களாலேயே தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு எட்டாக்கனியாய் இருக்கிறது. கிடைக்கின்ற சந்தர்ப்பங்கள் வீணடிக்கப்படுகின்றது. தமது பிரதிநிதிகளின் சொல்லுக்கும் செயலுக்கும் இடையிலான இடைவெளியை மக்கள் கண்டுகொள்ளவில்லை. நமது ஊடகங்களும், நமது புத்திஜீவிகளும் இப்போதும் கூட இதையிட்டு கேள்வி எழுப்புவதில்லை.

இது தொடர்பாக மக்களிடையே எற்படும் விழிப்புணர்வே எதிர்காலத்தைச் செம்மைப்படுத்தும் கடந்த கால சம்பவங்களிலிருந்து அனுபவம் பெற்றுக்கொள்வதற்காகவே நாம் வரலாற்றை திரும்பிப் பார்க்கிறோம்.


1986 மார்கழி 13 இல் ஈபிஆர்எல்எவ் இயக்கத்தை முடக்கிவிடும் நோக்கில் புலிகள் போலிக் குற்றச்சாட்டுக்களை சுமத்தி ஈபிஆர்எல்எவ் மீது தாக்குதல் தொடுத்தார்கள். புலிகளின் எண்ணம் ஈடேறவில்லை. புலிகளின் அத்தனை அழித்தொழிப்புக்கள், கெடுபிடிகள், அச்சுறுத்தல்களுக்கும் முகங்கொடுத்தவாறே ஈபிஆர்எல்எவ் இன் கருத்துக்கள், புலிகளால் கொல்லப்பட்ட தோழர்களின் நம்பிக்கைகள் சுமந்துவரப்பட்டிருக்கின்றன. மக்களின் நலனை முன்நிறுத்தி அவற்றை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வோம்