(சிரேஷ்ட பத்தியெழுத்தாளர் டி.பீ.எஸ்.ஜெயராஜ், டெய்லிமிரர் பத்திரிகையில் கடந்தவாரம் எழுதிய பத்தியின் தமிழாக்கம் இது. தமிழாக்கம்: சண்முகன் முருகவேல்)
சிரேஷ்ட ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவால் நடாத்தப்படும் சமுதிதவுடன் உண்மை நிகழ்ச்சிக்கு ஜனாதிபதி சட்டத்தரணியும் அரசியல்வாதியுமான சுமந்திரன் வழங்கிய யூடியூப் நேர்காணலே சர்சைக்குரிய காரணமாகக் காணப்படுகிறது. சிங்களத்திலுள்ள சில கேள்விகளும், பதில்களும் தமிழ் ஊடகத்தின் பகுதியொன்றால் எடுக்கப்பட்டு வேண்டுமென்றே சுமந்திரனின் கருத்துகளைப் போலியான திருப்பங்கள், குறும்புக்கார தகவல்களுடன் பிழையாக மொழிபெயர்த்ததாகத் தெரிகிறது. இது இலங்கைக்குள்ளும் வெளியேயும் பிரதான தமிழ் ஊடகங்கள், சமூக வலைத்ததளங்களில் சுமந்திரனுக்கெதிராக அவர் குறிப்பிட்டது போன்றதற்கு கோபாவேசக் குரல்களுக்கு வழிவகுத்தது. கோபாவேசமாக சுமந்திரன் தாக்கப்பட்டிருந்தார்.
சுமந்திரனுக்கெதிரான அரசியல் தாக்குதல்கள் புதியவையல்ல. தாராள, ஏறத்தாழ மிதவாதக் கொள்கைகளுடைய சுமந்திரன், இனப் பிரிப்பின் இரண்டு பக்கத்திலும் விருப்பத்துக்குரிய இலக்காகக் காணப்படுகின்றார். தமிழர்களைப் பொறுத்தவரையயில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு/ தமிழரசுக் கட்சிக்குள்ளேயும், வெளியேயுமுள்ள பல அரசியல்வாதிகளின் இதயங்களில், பொறாமைக் கண் கொண்டு பார்க்கப்படுபவராக சுமந்திரன் காணப்படுகின்றார். தமிழ், தேசிய அரசியலில் குறுகிய காலத்தில் சுமந்திரனின் குறிப்பிடத்தக்களவு வளர்ச்சியே இதற்கான காரணமாகும். எனவே குறித்த நேர்காணலானது தங்களது தாக்குதல்களை இணைந்து சுமந்திரன் மீது மேற்கொள்ள வாய்ப்பை வழங்கியிருந்தது.
விடயங்கள் குறித்து தெளிவுபடுத்தாமல் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா உள்ளிட்ட சுமந்திரனின் முன்னாள் சக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமந்திரனைச் சாடும் அறிக்கைகளை வெளியிட்டிருந்தனர். இதைத் தொடர்ந்து சுமந்திரனைக் கட்சியின் பேச்சாளர் மற்றும் தமிழரசுக் கட்சியிலிருந்து அகற்றுவது குறித்து த.தே.கூவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே மாவையால் தொடர் கலந்துரையாடல்கள் ஒழுங்கமைக்கப்பட்டனவென தமிழ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. தவிர, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சுமந்திரனுக்கிடையிலான திட்டமிடப்பட்ட சந்திப்பொன்றை நிறுத்துவதற்கான தோல்வியில் முடிவடைந்த முயற்சியொன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இறுதியாக யூடியுப் காணொளியொன்றை வெளியிட்டிருந்த சுமந்திரன், தனது நேர்காணலானது தன்னைத் தாக்குவதற்காக எவ்வாறு மாற்றப்பட்டது என விளக்கமொன்றை வழங்கியிருந்தார். தவிர, மாவை உள்ளிட்ட தனது சகபாடிகள் தன்னிடம் விளக்கத்தைக் கோராமல் தன்னைச் சாடி அறிக்கைகளை வெளியிட்டது குறித்து மனம் வருந்தியிருந்தார்.
புலிகளின் உருவாக்கம்
சுமந்திரனுக்கெதிரான நாடகத்தில் சுட்டிக்காட்டப்பட்ட முக்கியமான விடயமொன்று த.தே.கூவின் தோற்றமாகும். புலிகள் மூலமாக த.தே.கூ தோற்றுவிக்கப்பட்டதாக சமுதித சமரவிக்கிரம தனது ஆக்ரோஷமான கேள்விகள் மூலம் நிரூபிக்க முயன்றார். த.தே.கூவின் ஆரம்பக் கூட்டத்துக்கு தலைவர் பிரபாகரன் தலைமை தாங்கியதாகக் கூறியிருந்தார். குற்றச்சாட்டுகளைச் சுமந்திரன் நிராகரித்ததுடன், கூட்டமைப்பானது புலிகளால் 2001ஆம் ஆண்டு உருவாக்கப்படவில்லை என வலியுறுத்தியிருந்தார்.
இது சுமந்திரனுக்கெதிரான முகாமுக்கு மேலும் தாக்குதல் நடத்த சந்தர்ப்பத்தை வழங்கியிருந்தது. கூட்டமைப்பானது பிரபாகரனால் உருவாக்கப்பட்டதாக அவர்கள் கூறியிருந்தனர். புலிகளால் கூட்டமைப்பு உருவாக்கப்படவில்லை என அதன் தலைவர் சம்பந்தன் தொடர்ச்சியாகக் கூறிவருகின்றபோதும், புலிகளின் உருவாக்கமே கூட்டமைப்பு என கூட்டமைப்பின் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், கூட்டமைப்பானது புலிகளாலேயே உருவாக்கப்பட்டதாக அதன் சில உறுப்பினர்கள் தெரிவிப்பது நிலைமையை சிக்கலாக்கிறது. இந்நிலையில், கூட்டமைப்பு 2001ஆம் ஆண்டு உருவாக்கும்போது புலிகளின் பிரிவு கூட்டமைப்பு எனத் தெரிவிக்கும் பல கூட்டமைப்பு உறுப்பினர்கள் இருந்திருக்கவில்லை.
அப்பிடியெனில் எது உண்மை? பொதுவான நம்பிக்கைக்கு மாறாக கூட்டமைப்பு புலிகளின் உருவாக்கமல்ல. புலிகளின் மறைமுக ஆதரவில் சுயாதீனமாகக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டிருந்தது. பின்னர் புலிகள் பொறுப்பெடுத்துக் கட்டுப்படுத்தியிருந்தனர்.
தேவை கருதி 2001ஆம் ஆண்டு கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இலங்கையரசு, அதன் ஆயுதப்படைகளுக்கெதிராக தமது இராணுவ நடவடிக்கையை புலிகள் தொடர்ந்திருந்தனர். சில தமிழ் அரசியல் இயக்கங்கள் ஆளும் அரசாங்கங்களுடன் தம்மை இணைத்துக் கொண்டிருந்தன. சில ஏனைய புலிகளல்லாத அரசியல் கட்சிகள், இருந்த கட்டுப்படுத்தப்பட்ட அரசியல் இடைவெளியில் ஜனநாயக அரசியலில் ஈடுபட்டன. எனினும் அவை புலிகள், அரசாங்கத்தால் ஆதரவளிக்கப்படும் துணை இராணுவக் குழுக்களால் ஆபத்தை எதிர்நோக்கியிருந்தன. தவிர தமிழ்த் தேசியத்துக்கான இக்கட்சிகளின் ஆதரவு பிளவுபட்டிருந்தது. இதனால் வாக்குகள் பிரிவடைந்து, நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் உடைந்தது. ஐக்கிய தேசிய கட்சி, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆகிய பெரிய கட்சிகள், தமது தமிழ் சகபாடிகளுடன் இணைந்து ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தனர். மேலதிக வாக்குகள், தமிழ்த் தேசிய சக்திகளுக்குப் போதுமான பிரதிநிதித்துவத்துக்கு அரசியல் ஒற்றுமை தேவை என பல தமிழர்கள் உணர்ந்தனர்.
ஒக்டோபர் 10, 2000 தேர்தல்
2000ஆம் ஆண்டு ஒக்டோபர் 10ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தலில் எச்சரிக்கை மணிகள் உரத்து ஒலித்தன. வட-கிழக்கில் முடிவுகள் தமிழர்களுக்குப் பொதுவாகவும், சில தமிழ்க் கட்சிகளுக்கு குறிப்பாகவும் அதிர்ச்சியையளித்திருந்தன. அரசியல் ரீதியாக முக்கியத்துவமிக்க திருகோணமலை மாவட்டத்தில் சம்பந்தன் உட்பட எந்தத் தமிழரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. மட்டக்களப்பில், தமிழர் விடுதலைக் கூட்டணியிலிருந்து இரண்டு தமிழர்கள் மாத்திரமே தேர்ந்தெடுக்கப்பட்டனர். அந்நேரம் கூட்டணியானது தமிழரசுக் கட்சியையும், தமிழ் காங்கிரஸின் முன்னாள் உறுப்பினர்கள் சிலரையும் உள்ளடக்கியிருந்தது. தற்போது தமிழரசுக் கட்சியை தனது முன்னைய கட்சியாக கூட்டணி நோக்குகிறது. ஆளும் மக்களின் கூட்டணியிலிருந்து 2000ஆம் ஆண்டுத் தேர்தலில் மட்டக்களப்பில் இன்னொரு தமிழர் வென்றிருந்தார். அம்பாறையில் ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியால் ஆதரவளிக்கப்பட்ட தமிழரொருவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.
வன்னி மாவட்டத்திலுள்ள ஆறு ஆசனங்களில் மக்கள் கூட்டணி, ஐ.தே.கவிலிருந்து இரண்டு சிங்களவர்களும், ஒரு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தமிழீழ விடுதலைக் கழகத்திலிருந்து மூன்று தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கபட்டனர். யாழ்ப்பாணத்தில் ஒன்பது ஆசனங்களில், போனஸ் ஆசனத்துடன் நான்கை ஈ.பி.டி.பி பெற்றது. கூட்டணி மூன்றைப் பெற்றது. தமிழ் காங்கிரஸ் ஒன்றைப் பெற்றது. ஐக்கிய தேசிய கட்சி ஒன்றைப் பெற்றது. 48 ஆண்டுகளின் பின்னர் யாழ்ப்பாணத்தில் ஐ.தே.க வென்றது. 1952ஆம் ஆண்டு சேர் பொன் இராமநாதனின் மருமகன் சுப்பையாப்பிள்ளை நடேசன் வென்றிருந்தார். 2000ஆம் ஆண்டு தியாகராஜா மகேஸ்வரன் வென்றிருந்தார்.
தேசியப்பட்டியல் ஆசனமொன்றைப் பெறுவதற்கு போதுமான வாக்குகளை எந்த தமிழ்க் கட்சியும் பெறவில்லை. 2000ஆம் ஆண்டு வட-கிழக்கில் தமிழர்கள் குறைவாக பிரதிநிதித்துவப்படுத்தியிருந்ததுடன், சிங்களம் ஆதிக்கம் செலுத்தும் தேசிய கட்சிகளும், அரசாங்கத்துடன் இணைந்த ஈ.பி.டி.பி போன்ற தமிழ்க் கட்சிகளும் சிறப்பாகச் செயற்பட்டன.
கிழக்கு பல்கலைக்கழக செயலமர்வு
நிலைமையின் மோசமானது ஏறத்தாழ ஒரே குழுமத்தைக் கொண்ட வடக்கை விட இனப்பல்வகைமை கொண்ட கிழக்கிலேயே உணரப்பட்டது. நிலைமையை ஆராயும் செயலமர்வொன்று கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இதற்கு சிரேஷ்ட ஊடகவியலாளர் சிவராம் தலைமை தாங்கியிருந்தார். சில விரிவுரையாளர்கள், ஊடகவியலாளர்கள், ஆசிரியர்கள், தொழில்துறையினர், சமூகப் பணியாளர்கள், பட்டதாரிகள் மற்றும் அரசியல் பிரதிதிகள் கலந்துகொண்டிருந்தனர். அந்தவகையில், வாக்குகள் பிரிவதைத் தடுப்பதற்காக ஒரு குடை நிறுவனத்தின் கீழ் எதிரணியிலுள்ள வெவ்வேறான அரசியல் கட்சிகள் திரள வேண்டும் என குறித்த மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது. புலிகளுக்கு ஆதரவாக அவ்வாறானதொரு நிறுவனம் இருக்க வேண்டும் என உணரப்பட்டது. இந்நகர்வுக்கு புலிகளின் அனுமதியைப் பெற வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. இவ்விடயத்தை நிறைவேற்றுவதை ஒருங்கிணைக்க மூன்று இணைத்தலைவர்களைக் கொண்ட வழிநடத்தல் குழு உருவாக்கப்பட்டது.
நடவடிக்கை மூன்று விடயங்களைக் கொண்டிருந்தது. முதலாவது புலிகளின் அனுமதி, ஆதரவைப் பெற்றுக் கொள்வது. அதில், எதிரணியிலுள்ள தமிழ் அரசியல்வாதிகளை புலிகள் கொல்ல மாட்டோம் என அவர்களிடம் பாதுகாப்பு உறுதிமொழியைப் பெற வேண்டும். பதிலாக, குறித்த தமிழ்க் கட்சிகள், எந்தவொரு பேரம்பேசலிலும் புலிகளைத் தமிழர்களின் தனிப் பிரதிநிதியாக அங்கிகரிப்பதோடு, அவர்களின் முன்னிலையை ஏற்க வேண்டும்.
இரண்டாவதாக, ஆயுதக்குழு வரலாற்றொன்றுடனுள்ள ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, புளொட், டெலோ போன்ற அரசியல் கட்சிகள், தாங்கள் ஆயுதங்களைக் கீழே போடுவதாகவும், புலிகளை அழிப்பதில் அரசுடன் இணையக்கூடாது எனவும் பிரகடனப்படுத்த வேண்டும். கிழக்கிலுள்ள ஈ.பி.ஆர்.எல்.எஃப் ராசிக் குழு, புளொட் மோகன் குழு, டெலோ ரஞ்சன் குழு போன்ற துணை இராணுவக் குழுக்களுடன் மேற்குறித்த அரசியல் கட்சிகள் தொடர்புகளைத் துண்டிக்க வேண்டும்.
மூன்றாவதாக, கூட்டணி, தமிழ் காங்கிரஸ் போன்ற ஆயுதக்குழுக்களற்ற அரசியல் கட்சிகள் பொது நோக்கத்துடன் முன்னாள் ஆயுதக்குழுக்களுடன் பணியாற்ற வேண்டும். முன்னாள் ஆயுதக்குழுக்களின் கைகளில் இரத்தம் படிந்துள்ளன என கூட்டணியும், தமிழ் காங்கிரஸும் தயங்கின. தவிர கூட்டணி, தமிழ் காங்கிரஸுக்கிடையே நீண்ட காலப் பகை காணப்பட்டது.
உத்தியோகபற்றற்ற முறையில் கரிகாலன் பங்கெடுப்பு
பேரம்பேசல் நடைமுறையில் வன்னியிலுள்ள உயர் மட்டம் நேரடியாகப் பங்கேற்கவில்லை. எனினும், மட்டக்களப்பு-அம்பாறைக்கான புலிகளின் முன்னாள் அரசியல் பொறுப்பாளர் கரிகாலன் ஆதரவாக இருந்ததுடன், உத்தியோகபூர்வமற்ற முறையில் பங்கெடுத்திருந்தார். பேச்சுகள் நடைபெற்றபோது ஆரியம்பதி பிரேதேச சபையின் டெலோ தலைவர் றொபேர்ட்டை புலிகள் கொலை செய்திருந்தனர். இதன் காரணமாக பேச்சுகளிலிருந்து வெளியேற விரும்பியது.
எனினும் தமது நடவடிக்கைகளை தொடர்ந்ததுடன், கிழக்கிலிருந்த புலிகளின் இராணுவத் தலைமைக்குக் கோரிக்கை விடுத்திருந்தது. கிழக்கு பிராந்திய தளபதி அப்போது கேணல் கருணா ஆவார். புலனாய்வுப் பிரிவுக்கும், அரசியல் பிரிவுக்குமிடையிலான தொடர்பாடல் இடைவெளி காரணமொன்று காரணமான தவறொன்றால் கொலை இடம்பெற்றதாகப் புலிகள் விளக்கமளித்திருந்தது. தொடர்ந்து டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எஃப்பின் முன்னிலை உறுப்பினர்கள் இரகசியமாக கரிகாலனைச் சந்தித்து விடயங்களைக் கலந்துரையாடியிருந்தனர். உறுதிமொழிகள் பெறப்பட்டிருந்தன. இதேபோல கூட்டணி உறுப்பினர்களும் புலிகளின் தலைவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர்.
ஆரம்பத்தில் இரண்டு தடைகள் காணப்பட்டன. சித்தார்த்தனால் தலைமை தாங்கப்பட்ட புளொட்டானது ஒன்றிணைப்புக்குத் தயாராகவிருந்தபோதும், வவுனியாவிலிருந்த புளொட் போராளிகள், வவுனியாவில் பலமாகவிருந்த டெலோவுடன் இணைய சம்மதிக்கவில்லை. இதேபோல, வன்னியில் ஆதரவு அழிவடைந்துவிடும் என்ற அச்சத்தில் புளொட்டுடன் இணைய டெலோ உயர்மட்டம் தயங்கியது. இறுதியில் புளொட்டோ அல்லது அதன் அரசியல் கட்சி ஜனநாயக மக்களின் விடுதலை முன்னணி பங்கேற்கவில்லை.
இரண்டாவது, தமிழரசுக் கட்சியும், அதன் பின்னையநாள் கூட்டணி மீதான தமிழ் காங்கிரஸின் நீண்ட கால பகையாகும். கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தை விட கூட்டணியின் சைக்கிள் சின்னத்தின் கீழ் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய தமிழ் காங்கிரஸ் விரும்பியது. காங்கிரஸில் ஆதிக்கம் செலுத்துபவராக இருந்த குமார் பொன்னம்பலத்தின் மனைவியான யோகலக்ஷ்மி பொன்னம்பலத்தின் இல்லத்தில் நடைபெற்ற கலந்துரையாடல்களின் பின்னர் ஒன்றிணைய, உதயசூரியன் சின்னத்தின் கீழ் போட்டியிட அனுமதி வழங்கியிருந்தார். இதேபோல கூட்டணியின் பழைய உறுப்பினர்கள், காங்கிரஸ், ஏனைய ஆயுதக் குழுக்களுடன் இணையத் தயங்கிய நிலையில் பின்னர் அவர்கள் சம்மத்தினர் அல்லது அமைதியாக்கப்பட்டனர்.
இரண்டு சமாந்தர நடைமுறைகள்
மேற்குறித்த கலந்துரையாடல்கள் தொடர்ந்து கொண்டிருந்தபோதே இரண்டு சமாந்தர நடவடிக்கைகள் நடைபெற்றன. ஒன்று, அறியப்படாத சங்கிலியன் படை, குளக்கோட்டன் படை, வன்னியன் படை பெயரில் ஊடகங்களுக்கு தமிழ் ஒற்றுமையை வலியுறுத்தியும், இணங்காதவர்களுக்கு நடவடிக்கை என எச்சரித்தும் அறிக்கைகள் வெளியாகியிருந்தன. இவைகளுக்கு தமிழ் பத்திரிகைகளில் பரவலாக முக்கியத்துவம் வழங்கப்பட்டது.
அடுத்த சமாந்தர நடைமுறையாக ஒட்டுமொத்த தமிழ் ஒன்றிணைப்பு தொடர்பாக கொழும்பைத் தளமாகக் கொண்ட பிரபலமான தமிழர்களால் நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டன. அதில், வர்த்தகர்கள், தொழில்முனைவோர், சமூகப் பணியாளர்கள் அடங்கியிருந்தனர். இதில் சில ஒன்றிணைவுக்காக மட்டக்களப்பிலுள்ள தமது சகபாடிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர். கொழும்பைத் தளமாகக் கொண்ட குறித்த தமிழர்களின் நடவடிக்கைகளானவை ஒன்றிணைந்த பேச்சுகளில் பிரதான வகிபாகமொன்றை வகித்திருந்தன.
இறுதிக்கு முந்தைய கட்டங்களில் வன்னியிலுள்ள புலிகள் நேரடியாகப் பங்கேற்றிருந்தனர். கூட்டணி, காங்கிரஸ், டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எஃப்பின் சில தலைவர்கள் அலைபேசியில் தொடர்பு கொள்ளப்பட்டு, ஒன்றிணையுமாறும், உதயசூரியன் சின்னத்தின் கீழ் போட்டியிடுமாறும் வலியுறுத்தப்பட்டிருந்தனர். புலிகள் காரணமாக பேரம்பேசும் கட்சிகளின் பேச்சுகள் வெற்றிகரமாக முடிவடைந்தன.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு
கூட்டணி, காங்கிரஸ், ஈ.பி.ஆர்.எல்.எஃப்க்குமிடையே தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்ற அறியப்பட்ட கூட்டணியை உருவாக்க இணக்கம் ஏற்பட்டது. கூட்டணியின் சின்னத்தின் கீழ் கூட்டமைப்பு போட்டியிடும். வெவ்வேறு தேர்தல் மாவட்டங்களில் ஒவ்வொரு கட்சியிலிருந்தும் எத்தனை பேர் போட்டியிடுவதும் இணங்கப்பட்டது. வர்த்தகர் வீ.ஆர். வடிவேற்கரசனின் கொழும்பு வதிவிடத்தில் ஆரம்பக் கூட்டம் நடைபெற்றது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கமானது ஊடக வெளியீட்டொன்றின் மூலம் 2001ஆம் ஆண்டு ஒக்டோபர் 22ஆம் திகதி அறிவிக்கப்பட்டது. குறித்த ஊடக வெளியீடானது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கமானது கூட்டணி, காங்கிரஸ், டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எஃப்பை பிரதிநிதித்துவப்படுத்தியோரால் கைச்சாத்திடப்பட்டது. சம்பந்தன், குமரகுருபரன், ஶ்ரீகாந்தா, சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரே குறித்த கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தியவர்கள் ஆவர். கூட்டமைப்பின் இணக்கத்தின் சரத்துகளாக நான்கு விடயங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.
முதலாவது, எவ்வாறு நான்கு கட்சிகளுக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளர் பட்டியல் ஒதுக்கப்படுகின்றது என்பதை வெளிப்படுத்தியிருந்தது. அதன்படி,
யாழ்ப்பாணம்: கூட்டணி – 7; காங்கிரஸ் – 3, டெலோ – 1, ஈ.பி.ஆர்.எல்.எஃப் – 1
வன்னி: கூட்டணி – 3; காங்கிரஸ் – 1; டெலோ – 4; ஈ.பி.ஆர்.எல்.எஃப் – 1
மட்டக்களப்பு: கூட்டணி – 5; காங்கிரஸ் – 1; டெலோ – 2; ஈ.பி.ஆர்.எல்.எஃப் – 1
திருகோணமலை: கூட்டணி 3; காங்கிரஸ் – 1; டெலோ 2; ஈ.பி.ஆர்.எல்.எஃப் – 0
அம்பாறை: கூட்டணி 5; காங்கிரஸ் – 1; டெலோ – 1; ஈ.பி.ஆர்.எல்.எஃப் – 0
இரண்டாவது விடயமானது தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தெரிவு தொடர்பானது. முன்னுரிமையானது கூட்டணி, காங்கிரஸ், டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எஃப் என்ற முன்னுரிமையில் வழங்கப்படும்.
மூன்றாவது விடயமானது பங்காளிக் கட்சிகள் ஒன்றையொன்று பொதுவெளியில் தாக்கவோ அல்லது விமர்சிக்கவோ கூடாது. குறிப்பாக தேர்தல் பிரசாரத்தில் சக பங்காளிக்கட்டிக்கெதிராக விமர்சனம், எதிர்விமர்சனம் செய்வது தொடர்பில் சிறப்புக் கவனம் எடுக்கப்படும்.
நான்காவது விடயமானது கூட்டமைப்புக்குள் ஏற்படும் பிரச்சினைகள். பிரச்சினைகள் ஏற்படுமிடத்து பங்களாளிக் கட்சிகள் தமக்கிடையே அமைதியான முறையில் கலந்துரையாடி பெரும்பான்மை வாக்கின் மூலம் பொருத்தமான தீர்வுக்கு வர வேண்டும். அது சாத்தியமில்லாத பட்சத்தில் வெளி அனுசரணையாளர் குழுவொன்று பிரச்சினையைத் தீர்க்க உதவ வேண்டும்.
ஆறு நபர் அனுசரணையாளர் குழு
- வீ. கைலாசப்பிள்ளை
- கந்தையா நீலகண்டன்
- வீ.ஆர். வடிவேற்கரசன்
- நிமலன் கார்த்திகேயன்
- எஸ். தியாகராஜா
- கே. ஜெயபாலசிங்கம்
கொழும்பைப் பிரதானமாக தளமாகக் கொண்ட தமிழ் சமூகத்தின் மதிக்கப்படும் அங்கத்தவர்களே அனுசரணையாளர்கள் ஆவர். இவர்கள் பிரதானமாக தொழில் நிபுணர்கள் அல்லது வெற்றிகரமான வர்த்தகர்கள். தியாகாராஜா மாத்திரம் கூட்டணியின் பொருளாளர். ஏனையவர்கள் எந்த அரசியல் கட்சியையும் சேர்ந்தவர்கள் அல்லர்.
குறித்த நிலைமைகளின் கீழ் கட்சி யாப்பு அல்லது கட்டமைப்பில்லாம பலவீனமாகவே கூட்டமைப்பு பிறந்தது. 2001ஆம் ஆண்டு டிசெம்பர் ஐந்தாம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றபோது தேர்தல் பிரசாரம் இடம்பெற்றபோது கூட்டமைப்புக்கு புலிகள் வெளிப்படையாக ஆதரவளிக்கவில்லை. பிரசாரமானது புலிகளின் பங்களிப்பில்லாமல் நடைபெற்றது. புலிகளின் வன்முறை அச்சமில்லாமல் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் பிரசாரம் மேற்கொண்டது அவர்களுக்கு பெரும் சாதகமானதாகக் காணப்பட்டது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்போது, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட கூட்டமைப்பு சிறந்த முடிவுகளைப் பெற்றிருந்தது.
யாழ்ப்பாணத்தில் ஒன்பது ஆசனங்களில் ஆறு ஆசனங்களை கூட்டமைப்பு பெற்றிருந்தது. வன்னியில் ஆறு ஆசனங்களில் மூன்று ஆசனங்களைப் பெற்றிருந்தது. கிழக்கில் திருகோணமலையில் ஒன்றையும், அம்பாறையில் ஒன்றையும், மட்டக்களப்பில் மூன்றையும் கூட்டமைப்பு பெற்றிருந்தது. பெற்ற வாக்குகளின் பலத்தில் கூட்டமைப்புக்கு தேசியபட்டியலில் ஓர் ஆசனம் கிடைத்தது. 14 தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களையும், ஒரு நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரையும் 2001ஆம் ஆண்டில் கூட்டமைப்பு பெற்றிருந்தது. 15-இல், கூட்டணி ஏழு, டெலோ நான்கு, காங்கிரஸ் மூன்று, ஈ.பி.ஆர்.எல்.எஃப் ஒரு ஆசனங்களைக் கொண்டிருந்தது.
கூட்டமைப்பின் புலிமயமாக்கம்
இதுதான் அப்போது கூட்டமைப்பு 2001ஆம் ஆண்டு எவ்வாறு உருவாக்கப்பட்டது அப்போதைய கதை. புலிகள் ஆதரவளித்திருந்ததுடன், மறைமுகமாக உத்தரவிட்டிருந்தபோதும் கூட்டமைப்பின் உருவாக்கத்தில் அவர்கள் நேரடியான எவ்வகிபாகத்தையும் கொண்டிருக்கவில்லை. 2001ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிக்கனியைக் கூட்டமைப்பு சுவைத்த பின்னரே கூட்டமைப்பைப் புலிமயமாக்கல் புலிகளால் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. படிப்படியாக கூட்டமைப்பைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் புலிகள் கொண்டு வந்திருந்தனர்.