10 ஆண்டுகள் உருண்டோடி விட்டன!
யுத்தத்தினூடே தமிழச் சமூகம் புலமைத்துவ வறுமை கொண்ட சமூகமாக மாறியிருக்கிறது. தோழர் கேதீஸ் தேசிய இனப்பிரச்சனை மற்றும் பல்லினங்களின் நாடாக இலங்கையை மாற்றுவதற்கான கனவுகளுடன் வாழ்ந்தவர்.அவருடைய கட்டுரைகள் நூல்கள் மீள் வாசிக்கப்படவேண்டும். அறிவார்ந்த முறையில் பிரக்ஞை பூர்வமாக சமூகங்கள் மீள் இணைவதற்கான தேடலைப்பிரதிபலிப்பன. சமகாலத்தில் அவரின் வெற்றிடம் தமிழ் சமூகத்தில் நிரப்ப முடியாத ஒன்றாகவே எம்மால் உணரப்படுகிறது. இந்த கட்டுரை அவர் படுகொலை செய்யப்பட ஒரு சில நாட்களில் எழுதப்பட்டது. ஒருசில மாற்றங்களுடன் மீளவும் அந்தக்கணங்களின் உணர்வுநிலை -நினைவலைகள் சார்ந்தது.
(சுகு-ஸ்ரீதரன்)
தோழர் கேதீஸ் சில நினைவுகள்
1980 களின் முற்பகுதியில் யாழ்ப்பாணம் ஆடியபாதம் வீதியில் யாழ் பல்கலைகழக ஆசிரியர்களுக்கான விடுதியொன்றில் ஒரு இரவுப் பொழுதில் அவரை முதன் முதலில் நான் சந்தித்தேன். அப்போது அவர் எதிர்காலத்தில் எங்களுடன் இணைந்து செயற்பட போகிறார் முக்கியத்துவம் வாய்;ந்த வரலாற்றுப் பாத்திரமொன்றை அற்றப் போகிறார் என்று நான் கனவிலும் நினைத்திருக்கவில்லை. யாழ் குடாநாட்டு கிராமப் புறங்களில் வர்க்க ரீதியாகவும், சாதி ரீதியாகவும் ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக பொருளாதார மேம்பாடு தொடர்பாக அவருடன் பேசச் சென்ற கிராமிய உழைப்பாளர் சங்கம், ஈழ மாணவர் பொது மன்றம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவிலேயே நானும் சென்றிருந்தேன். தோழர் கேதீஸ் காலஞ்சென்ற இடதுசாரி புத்திஜீவி நியூட்டன் குணசிங்க இன்னுமொருவர் அவரை சரியாக ஞாபகமில்லை .யாழ்குடாநாட்டு செம்மண் பிரதேச வறிய கூலி விவசாயிகளின் வாழ்வை மேம்படுத்துவது எவ்வாறு என்பதே எமது கலந்துரையாடலில் கருப்பொருளாக இருந்தது. அவர்கள் நிலங்களுடன் கட்டப்பட்டிருப்பதில் இருந்தும் சமூக அடிமைத்தனத்தில் இருந்தும் விடுபடுவதற்கான மார்க்கம் பற்றி விவாதித்தோம். தோழர் கேதீஸ் சில மாற்று ஏற்பாடுகள் தொடர்பான முன்மொழிவுகளை முன்வைத்தார். விவசாய விளைபொருட்களை சைக்கிள்களில் கொண்டு சென்று தரகர்களுடாக அல்லாமல் நேரிடையாக விநியோகம் செய்வது சில உள்ளுர் வளங்களை கொண்ட தொழிலகங்களை நிறுவுவது பற்றியும்- ஒடுக்கப்பட்ட வறிய மக்கள் பிரிவினர் சுயமரியாதை கௌரவத்துடன் வாழ்வதற்கான வழிவகைகள் பற்றிய பேச்சு முதன்மை பெற்றிருந்தது. அப்போது அவர் இலங்கை சமூக விஞ்ஞானிகள் மன்றத்தின் அங்கத்தவராக இருந்தார். எங்களது பேச்சு சமூக பொருளாதார விடுதலையுடன் தேசிய விடுதலை பற்றிய எல்லைகளுக்கும் சென்றது. நியூட்டன் குணசிங்கா இலங்கையின சமூக பொருளாதார நிலைமைகள் இனங்களின் சுயநிர்ணய உரிமை பற்றி தெளிவான நிலைப்பாட்டைக் கொண்டிருந்த ஒரு இடதுசாரி கல்விமான். எங்களது பேச்சு சர்வதேச விவகாரங்களுக்கும் விரிந்தது. கெடுபிடி யத்தக்காலம் சோவியத் சார்பு அணி, அமெரிக்க சார்பு அணி என உலகம் இரண்டு முகாமாக இருந்த காலம் தொழிலாளர் வர்க்கத்தின் தாயகம் சோவியத் யூனியன் என்று கருதியிருந்த காலம். நியூட்டன் குணசிங்க அவர்கள் அவ்விடத்தில் நகைச்சுவையான கதையொன்றை கூறினார். பிரித்தானிய வெளிவிவகார அமைச்சராக இருந்த டக்ளஸ் கியூமும் சோவியத் யூனியனின் வெளிவிவகார அமைச்சராக இருந்த அன்ரி குரோமிக்கோவும் சந்தி;த்துக்கொண்ட போது டக்ளஸ் கியூம் கூறினாராம் தொழிலாளி வர்க்கத்தைப் பற்றி பேசுவதற்கு எனக்குத்தான் தகுதி உண்டு. நான் தொழிலாளி வர்க்கத்தில் இருந்து வந்தவன் நீர் முதலாளி வர்க்க பின்புலத்தை கொண்டவர் என்று;. அதற்கு குரோமிக்கோ அமைதியாக ஆம் நாங்கள் இருவருமே பிறந்த வர்க்கங்களுக்கு துரோகம் செய்து விட்டோம் என்று. இந்த நகைச்சுவை பலருக்கும் தெரிந்த பிரபலமான ஒன்றுதான். ஆனால் நான் அப்போதுதான் நான் அதை கேள்விப்பட்டேன். துவிர இந்தியாவின் சமீநிதாரி முறை நில உடைமை முறைகள் பற்றியெல்லாம் பேசப்பட்டது.
தோழர் கேதீஸ் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை பற்றிய சில கருத்துக்களை தெரிவித்தார்.
நிரஞ்சனாவால் எழுதப்பட்ட “நினைவுகள் அழிவதில்லை” என்ற நாவல் எம்மால் ஓரளவுக்கு வாசிக்கப்பட்டிருந்தது. நாம் எமது வேலைகளிலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நின்ற அந்த கதாபாத்திரங்களால் வெகுவாக ஈர்க்கப்பட்டிருந்தோம். இந்த சந்திப்பிற்கு பின்னர் நாங்கள் ஈழ மாணவர் குரல் பத்திரிகை விநியோகிக்க வீடு வீடாக சென்றிருந்த சமயம் கோவில் வீதியில் அவரது நிறுவனம் ஒன்றிலும் அவரை சந்தித்தோம். ஈடுபாடும் ஈர்ப்பும் அதிகமாகியது. பின்னர் கோயில் வீதியில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்று கலந்துரையாடல்கள் நடத்தினோம். அப்போது பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் நிகழ்ந்து கொண்டிருந்த கைதுகள் ஒடுக்கப்பட்ட மக்களை அணிதிரட்டுவது எவ்வாறு என்பதெல்லாம் எமது கலந்துரையாடல் விடயங்களாக இருந்தன. அவர் எங்களை உற்சாகப்படுத்தினார். மனித உரிமைகளுக்கான சிறையில் இருந்து தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான எமது ஈழ மாணவர் பொதுமன்றத்தின் முன்னெடுப்புக்களுக்கு பகிரங்கமாகவும் பகிரங்கமில்லாமலும் உதவினார்.
பின்னர் யாழ் சிறாம்பியடி ஒழுங்கையில் அவரும் மறைந்த தோழர் தோழர் மனோராஜசிங்கமும் அபிவிருத்திக்கும்-ஆய்வு- கல்வி- தொடர்பாடல் ஆகியவற்றுக்கான நிறுவனமொன்றை நடத்தினார். அங்கு சமூக பொருளாதார விடயங்கள் பற்றிய பல கருத்தரங்குகள் நடந்து கொண்டிருந்தது. மணியம் கட்டிடத்தி;ல் மேல் தளத்தில் அந்த நிறுவனம் அமைந்திருந்தது. அந்தக் கட்டிடத்தில் எமது பல கருத்தரங்குகள் கூட்டங்கள் ஆகியவற்றை நடத்துவதற்கு தோழர் கேதீஸ் தாராளமாக அனுமதித்திருந்தார். நாங்கள் கூலி விவசாயிகள் தொழிலாளர்களுக்கான கருத்தரங்குகள் பெண்களுக்கான கருத்தரங்குகள் மாணவர்களுக்கான கருத்தரங்குகள் என எண்ணற்ற கூட்டங்களை நடத்தினோம். யாழ்ப்பாணத்தில் ஒட்டப்படும் அனேகமான சுவரொட்டிகள் அங்குதான் வரையப்பட்டன. அந்த வகையில் அது எம்மைப் பொறுத்தவரை ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடம். தெற்கில் இருந்து வந்த விவசாயிகள் சங்கத்தலைவர்கள் குருநாகல் திருத்தந்தை யோகான் தேவானந்தா தெற்கின் விவசாயிகளின் அனுபவங்களை எம்முடன் அங்கு வைத்து பகிர்ந்திருக்கிறார். அக்கால கட்டத்தில் கியூபாவிற்கும் பல லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கும் விஜயம் செய்துவிட்டு திரும்பியிருந்த தயான் ஜெயதிலக்க நிக்கரகுவாவின் சான்டினிஸ்டா இயக்கம் எவ்வாறு மக்களை அணிதிரட்டி ஒரு போராட்டத்தில் வெற்றி பெற்றது என்பது பற்றிய கருத்தரங்கொன்றை நடத்தினார். தோழர் வரதராஜப்பெருமாள் அப்போது யாழ் பல்கலைகழகத்தில் விரிவுரையாளராக இருந்தவர் அவரது உரையை மொழி பெயர்த்தார். தோழர் கேதீஸ் சட்டப்பூர்வமான சமூக பொருளாதார அபிவிருத்திக்காக தொடங்கியிருந்த அந்த நிறுவனம் ஏறத்தாழ எமது ரகசிய தலைமைக்காரியாலயம் போல் செயற்பட்டது. அவருடைய வீட்டிலும் நாங்கள் தெற்கிலிருந்து வந்த தோழர்களுடன் உரையாடல்களை நடத்தினோம். அன்று இது மிகவும் ஆபத்தான காரியம். தோழர் கேதீஸ் ஆபத்தை எதிர்நோக்குவதற்கும் தயாராக இருந்தார். அவருடைய யாழ்ப்பாணத்து செல்வாக்குமிக்க பின்புலத்தைச் சேர்ந்த யாரும் நினைத்துப்பார்க்க முடியாத காரியத்தை அவர் செய்து கொண்டிருந்தார். அவர் விடுதலையைப் பற்றி வாய்ச்சவாடல் விடும் புத்திஜீவியல்ல. அவர் நடைமுறை ரீதியான எண்ணங்களை கொண்டிருந்தார். அவர் தனது பின்புலங்களை துறந்து எங்களுடன் ஐக்கியமாக்கிக் கொண்டிருந்தார். 1982 ஒரு விடிகாலைப் பொழுதில் அவரது நிறுவனத்தில் இரவை கழித்து விட்டு நானும் தோழர் நாபாவும் சைக்கிளில் தோழர் கேதீஸின் விட்டிற்கு சென்றோம். தோழர் நாபா சைக்கிளை வலித்துக் கொண்டிருந்தார். நான் “பாரில்” அமர்ந்திருந்தேன். இடையில் கோவில் வீதியில் லங்காராணி அருளர் வீட்டில் இறங்கி அவருடைய மனைவி பிள்ளைகளிடம் சுகம் விசாரித்து விட்டு; தோழர் கேதீஸின் வீட்டிற்கு புறப்பட்டோம். அந்தக் காலத்தில் டெலிபோனில் நேரம் ஒழுங்கு செய்துவிட்டு செல்வது வழக்கமில்லை. அந்த வசதிகளும் இல்லை.
அங்கு அப்போதுதான் தோழர் நாபாவை தோழர் கேதீஸ் முதன் முதலில் சந்திக்கிறார். தோழர் நாபா நீண்ட உரைகளை ஆற்றுவதில்லை. சுருக்கமாக கனதியாக அமைதியாக பேசுவார். அந்தச் சந்திப்பு விவேகானந்தருக்கும் ரமணருக்கும் இடையே நிகழ்ந்த சந்திப்பு போல் அந்த வெயில் ஏறாத காலைப் பொழுதில் எனக்கு ஒரு உணர்வை ஏற்படுத்தியது.
தோழர் கேதீஸ் ஒருமுறை என்னுடைய பின்னணியில் ஒரு வரையறைக்கு மேல் வரமுடியுமா என்று அமைதியாக கேட்டார். 80 களின் முற்பகுதியில் வடக்கில் தேசிய ஒடுக்குமுறை அரச பயங்கரவாதம் தலைவிரித்தாடிய காலத்தில் தெற்கில் மக்களின் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டிருந்தன. வேலை நிறுத்தம் செய்த தொழிலாளர்கள் வேலையில் இருந்து வீதிக்கு விரட்டப்பட்டிருந்தார்கள். ஜனநாயக உரிமைகளுக்காக போராடுபவர்கள் கைது செய்யப்பட்டும், தாக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள். லங்கா சமசமாஜக் கட்சியின் சிரேஸ்ட அங்கத்தவரும் முன்னணி பெண்கள் உரிமை வாதியுமான விவியன் குணவர்த்தனா பொலிசாரால் தாக்கப்பட்டிருந்தார். இந்தச் சந்தர்;ப்பத்தில் தோழர் கேதீஸின் ஏற்பாட்டில் ஈழப் பெண்கள் விடுதலை முன்னணிக்கும் கொழும்பு கலாபவன மண்டபத்தில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின கருத்தரங்கிற்கு எமக்கு அழைப்பு வந்தது. அப்போது நான் வவுனியாவில் நின்றிருந்தேன். நானும் காலஞ்சென்ற தோழர் வேதநாயகம் பத்திமநாயகம் அய்யாவும் இன்னுமொரு காலஞ்சென்ற தோழரும் வவுனியாவில் இருந்து ரயில் ஏறி கொழும்பு புறப்பட்டோம். யாழ்ப்பாணத்தில் இருந்து மூன்று பேர் தோழர் தயாபரன் ,ஞானசக்தி உட்பட அப்போதுதான் உதயமாகியிருந்த ஈழ பெண்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த தோழர்கள் வந்திருந்தனர். விகாரமகாதேவி பூங்காவிற்கு அருகாமையில் உள்ள கலாபவனத்தின் முன்னால் தெற்கில் உள்ள பெண்கள் அமைப்புக்கள் எல்லாம் சேர்ந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வடக்கு கிழக்கில் மக்களுக்கு எதிரான தேசிய ஒடுக்குமுறைக்கு எதிராகவும் தெற்கில் ஜனநாயக உரிமைகளுக்காகவும் கோசங்கள் எழுப்பப்பட்டன. பின்னர் கலாபவனத்தில் சர்வதேச மகளிர் தின கூட்டம் நடைபெற்றது. அதில் வடக்கில் இருந்து வந்த ஒரேயொரு பெண்கள் அமைப்பான ஈழ பெண்கள் விடுதலை முன்னணியும் வந்திருந்தது. கொழும்பில் தலைமறைவாக நின்றிருந்த தோழர் நாபாவும் வந்திருந்தார். எமது வெகுஜன அமைப்புக்கள் ஒரு அரைபகிரங்க நிலையில் வேலை செய்யக்கூடிய சாத்தியம் இருந்தது.
இக் கூட்டத்தின் பின்னர் இலங்கையின் பிரபல சமூக ஆய்வாளரும், இடதுசாரியும் பெண்ணியவாதியுமான குமாரி ஜெயவர்த்தனவிடம் தோழர் கேதீஸ் எங்களை அழைத்துச் சென்றார். அவருடன் கலந்துரையாடுவதற்கு கேதீஸ் உதவி செய்தார். நாங்கள் அப்போது கொண்டிருந்த கருத்து நிலையின் அடிப்படையில் பெண் விடுதலை என்பது சோஷலிச புரட்சியின் ஒரு பகுதியே என்ற கருத்து என்னுள் வேரூன்றி இருந்தது. நான் இதனை குமாரி ஜெயவர்த்தன அவர்களிடம் தெரிவித்தேன். அப்படியானால் இலங்கையில் சோஷலிசம் வரும்வரை உங்கள் தேசிய விடுதலைப் போராட்டத்தை ஒத்திப்போட முடியுமா என குமாரி ஜெயவர்த்தன என்னிடம் வினவினார். நீண்ட பல வருடங்களுக்குப் பின்னர்தான் அவர் கூறியது எனக்கு புரிந்தது. அவர் கூறியது பெண்களின் சுதந்திரத்துக்கான இயக்கம் சுயாதீனமானது. அது தொடர்ச்சியானது. அதனை வேறு எந்த வேலைத்திட்டத்துடனும் இணைத்து ஒத்திப்போட முடியாது அதேபோல்தான் தேசிய இனங்களின் சுய நிர்ணயத்துக்கான கோரிக்கையும் என்பது பின்னாளில் எனக்குப் புரிந்தது.
1983 இற்குப் பிந்திய சூழலில் நெதர்லாந்தின் ஹெய்க்கிற்கு தனது புலமைசார் செயற்பாடுகளுக்காக சென்ற கேதீஸ் அங்கும் இலங்கையில் தேசிய ஒடுக்குமுறை மற்றும் சமூக செயற்பாட்டாளர்களுடன் தொடர்பு கொண்டார். பின்னர் சென்னையில் இருந்த தோழர் நாபாவுடன் தொடர்பு கொண்டு ஈ.பி.ஆர்;.எல்.எப் இல் முழுநேரமாக பணி செய்வதற்கான தனது விருப்பத்தை தெரிவித்தார். ஈழப் போராட்டத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப் இன் பங்களிப்பு என்ற ஒரு சிறு கைநூலை அவர் ஆங்கிலத்தில் எழுதியிருந்தார். அதில் வடக்கு கிழக்கில் நாங்கள் செய்த வெகுஜன வேலைகள் எதிர்ப்பு இயக்கங்கள் பற்றி கால வரிசைப்படி குறிப்பிட்டிருந்தார். அவர் சென்னைக்கு வர இருந்த சமயம் நான் சென்னையில் நின்றிருந்தேன். குறுகிய நாட்களில் நாடு திரும்பிவிட்டேன். திரும்பிய சில மாதங்களில் நான் மயிலிட்டியில் வைத்து இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டேன். 1986 களின் இறுதிப்பகுதி வரை இராணுவ முகாம்கள், வெலிகடைச்சிறை என காலம் ஓடிக்கொண்டிருந்தது. தோழர் கேதீஸ் எமது அமைப்பின் பேச்சாளராக செயற்பட்டுக் கொண்டிருந்தார். 1984 இல் நிகழ்ந்த எமது முதலாவது காங்கிரசில் அவர் பங்குபற்றியதையும் அவர் 1985 இல் திம்பு மாநாட்டில் வகித்த வரலாற்றுப் பாத்திரத்தையும் நான் சிறையில் இருந்தபோது ஓரளவு அறிந்து கொள்ள முடிந்தது. ஈழ தேசிய விடுதலை முன்னணியின் உருவாக்கத்தில் தோழர் கேதீஸின் பங்கு முக்கியமானது. பல கூட்டங்களில் பங்குபற்றியிருக்கிறார். தமிழகத்தின் இடதுசாரி தலைவர்கள் திராவிட இயக்கங்களைச் சார்ந்தவர்கள், கல்விமான்களை மாத்திரமல்ல டெல்லியிலும் அவர் ஈ.பி.ஆர்.எல்.எப் இற்கு பலமான ஒரு பரிச்சயத்தை ஏற்படுத்திக் கொடுத்தார். 1987 முற்பகுதியில் சிறையில் இருந்து விடுதலையாகி சென்னை சென்ற போது சென்னை சர்க்காரியா காலனியில் தோழர் நாபா உட்பட 13 பேர் கொல்லப்பட்ட அதே வீட்டில் அவரை நான் சந்தித்தேன். மிகவும் உணர்ச்சிகரமான கனங்கள் அவை. எமது இயக்கம் புலிகளால் தடைசெய்யப்பட்டு பல தோழர்கள் படுகொலை செய்யப்பட்டு நிர்க்கதியாக இருந்த சூழலில் ஒரு துயரமான மனோநிலை நிலவிய காலத்தில் நான் அவரை சந்தித்தேன். தோழர் பத்மநாபா நாட்டில் எமது தோழர்களுக்கு நிகழ்ந்த அனர்த்தங்கள் காரணமாக அவர்களுக்கு உதவுவதற்கான செயன்முறைகளில் ஈடுபட்டிருந்தார். அவர் இராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து எமது நாட்டிலுள்ள தோழர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கான பணிகளில் ஈடுபட்டிருந்தார்.
தோழர் கேதீஸின் வீடு சர்க்காரியா காலனியில் எமது காரியாலயத்துக்கு அருகாமையில் ஒரு மாடி குடியிருப்பில் அமைந்திருந்தது. அன்று மாலை அவருடைய வீட்டிற்குச் சென்றிருந்தேன். அவர மனைவி அப்பலோ மருத்துவமனையில் மிகவும குறைந்த சம்பளத்தில் ஒரு வரவேற்பாளராக வேலை செய்து கொண்டிருந்தார்.அதில் தோழர் கேதீஸின் துணைவியாரான பவானி அவர்களின் பங்களிப்பு மகத்தானது. அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் நேசித்த அமரத்துவமான தம்பதிகள். அந்த சம்பளத்தில் வறுமையில் செம்மையாக வாழ்ந்து கொண்டு செயற்பட்டார். இயக்கம் அவ்வப்போது எதையும் உதவிகளை செய்யக்கூடியதாக இருந்ததே தவிர தொடர்ச்சியாக செய்யக்கூடியதாக இருக்கவில்லை. தோழர் கேதீஸ் தான் போக்குவரத்து செய்வதற்கு அந்தக் கால ரி.வி.எஸ் சைக்கிள் ஒன்றை வைத்திருந்தார். அவர் தனியாக சகல இடங்களுக்கும் சென்று பலரையும் சந்தித்து வந்தார். அந்த வாழ்க்கையை அவர் மனதார ஏற்றுக் கொண்டார். உலகின் ஏதோவொரு மூலையில் உட்கார்ந்து கொண்டு சௌகரியமாக இருந்திருக்கலாம். ஆனால் சக தோழர்களின் இன்ப துன்பங்களுடன் தானும் ஒருவராக வாழ்ந்தார். தன்னம்பிக்கையும் சவால்களும் இழப்புக்களும் முரண்பாடுகளும் ஐக்கியமும் என்று ஈ.பி.ஆர்;.எல்.எப் யதார்த்தமான ஒரு சமூக இயக்கம் என்ற வகையில் பயணப்பட்டுக் கொண்டிருந்தது. 1987 இந்திய இலங்கை ஒப்பந்தத்தை ஏற்று செயற்படுவது பற்றிய மத்தியகுழு கூட்டங்களில் இறுதியாக நடைபெற்றக் கூட்டத்தில் அத்தினத்தில் அன்றே அவருடைய தாயார் வேறு நாடொன்றில் மரணித்திருந்தார். கூட்டத்தின் இறுதியில்தான் அவர் இதனைத் தெரிவித்தார். இதன் பின்னர் அவர் தனது புலமைத்துவ செயற்பாடுகளை தொடர கட்சிப் பணிகளில் இருந்து ஒதுங்குவதற்கு அனுமதி கோரினார். அது ஏற்றுக்கொள்ளப்பட்டது. மேற்கு வங்கத்தில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விப்ளோதாஸ் குப்தா என்ற இவரது பல்கலைகழக சகா. இந்திய மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியகுழு உறுப்பினராக இருந்தவர். சமகாலத்திலேயே இருவரும் இவ்வாறான ஒரு புரட்சிகர அரசியல் சக்தியின் தலைமைத்துவத்திற்கு வந்திருப்பதாக அவர் நினைவு கூர்ந்தார்.
நோர்வேயில் தனது பல்கலைகழக படிப்பு விரிவுரை நேரங்கள் போக மிகுதி நேரத்தில் கட்சி பணியாற்றினார். 1988 இன் இறுதிவாக்கில் அவர் திருமலை வந்து எம்மையெல்லாம் சந்தித்து சென்றார்.
நோர்வேயில் புலி பாசிஸ்டுக்களின் ஏஜண்டுகளால் கூட்டமொன்றில் வைத்து தாக்கப்பட்டார்.
1990 இல் வடக்கு கிழக்கு மாகாணசபை புலிகள் பிரேமதாசா கூட்டு சதியினால் சீர்குலைக்கப்பட்டு இந்திய அமைதிகாப்பு படை வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தோழர்கள், ஆதரவாளர்கள் குடும்பங்கள் இந்தியாவிற்கு புலம் பெயர்ந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
தோழர் பத்மநாபாவின் அழைப்பின் பேரில் இயக்கம் கடுமையான நெருக்கடிகளை எதிர்நோக்கிய காலத்தில் தனக்கு நோர்வேயில் கிடைத்த வசதி- வாய்ப்புக்களை- சௌகரியமான வழக்கை -மனை எல்லாம் துறந்து டெல்லியில் வந்து கட்சிப் பணியாற்றினார்.
இக்காலகட்;டத்தில்தான் தோழர் பத்மநாபா சென்னையில் 1990 ஜூன் 19 படுகொலை செய்யப்பட்டார். அவர் உடனடியாகவே விரைந்து வந்து அவரின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சிகளில் பங்குபற்றியதோடு கட்சியின் எதிர்காலம் தலைமைத்துவம் பற்றிய கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.
தோழர் நாபாவின் நினைவு மலர் தயாரிப்பதில் அதற்காக இரங்கல் செய்திகளை இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், கல்விமான்கள், பத்திரிகையாளர்களிடம் அனுதாபச் செய்திகளை சேகரித்து அனுப்பி நினைவு மலரின் கனதியை அதிகரித்தார். அவர் இலங்கைக்கோ அல்லது சென்னைக்கோ தொலைபேசி எடுப்பதானால் தற்போதைய வசதிகள் எதுவும் கிடையாது. தொலை பேசி நிலையங்களுக்குச் சென்றோ அல்லது ரூபா நாணயங்களை போட்டு பேசும் சில பிரத்தியேகமான தொலைபேசிகளுக்கு சென்றோ தகவல்களை, செய்திகளை பரிமாறிக்கொள்வார். சௌகரியமில்லாத வீதியோரங்களில் நின்று இக் காரியத்தை அவர் வழமையாக நேர்த்தியாக செய்தார்.
1992 இல் இலங்கை வந்த தோழர் கேதீஸ் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் சார்பில் தனது செயற்பாடுகளை கொழும்பை மையமாக வைத்து மேற்கொண்டார். அவருக்கு கொழும்பில் உள்ள புலமைசார் செயற்பாட்டாளர்கள் இராஜதந்திர வட்டாரங்களிலும் இடதுசாரி கட்சிகள் ஏனைய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மத்தியிலும் பரிச்சயம் ஏற்பட்டது. பல புதுப்பிக்கப்பட்டன. தமிழ் கார்டியன் என்ற ஆங்கில மாதாந்த பத்திரிகையொன்று அவரால் கட்சிக்காக கொண்டுவரப்பட்டது. அவர் இனப்பிரச்சினை தீர்வுக்காக உருவாக்கப்பட்ட மங்கள முனசிங்க குழுவிலும் அங்கத்துவம் வகித்தார். அதிகார பகிர்வினூடு இலங்கை ஒரு தேசமாக பரிணமிப்பதே அவருடைய அரசியல் புலமைத்துவ அக்கறைக்குரிய விடயமாக இருந்தது.
ஏகபிரதிநிதித்துவத்தையோ அல்லது ஏகமாற்று அல்லது அரைகுறை ஜனநாயகத்தையோ அவர் ஏற்றுக்கொண்டது கிடையாது. கூட்டு முடிவுகளில் அவர் நம்பிக்கை கொண்டிருந்தார். ஜனநாயகம், மனித உரிமைகளை அடிப்படையாக கொண்ட சமூகத்தை அவர் அவாவுற்றிருந்தார். கட்சியின் பத்திரிகையை அதிகார பகிர்வு தொடர்பான ஆவணங்களையோ அவர் செல்லும் கருத்தரங்குகளில் அல்லது வேறு நிகழ்ச்சிகளில் விநியோகிப்பதிலும் அவர் ஒரு கட்சி ஊழியர் போல் செயற்பட்டார்.
கட்சியில் நிலவும் தவறான போக்குகளை அவ்வப்போது விமர்சிக்கவும் தவறவில்லை. தலைமைத்துவ பாங்கு ,நிதி ஆதாரங்களை கையாள்வது ,கூட்டு செயற்பாடு தொடர்பில் அவர் பல விடயங்களை வலியுறுத்தி இருக்கிறார். ஜனநாயகவாதிகள் அவருக்கு பக்கத்துணையாக நின்றார்கள். பேராசையையும் சுயநலமும் தனிநபர் வழிபாட்டு ஊக்குவிப்பும் அவருக்கு அறவே பிடிக்காத விடயங்கள். பரிவாரங்கள் வைத்து நடத்தும் அரசியல் அவருக்கு ஒத்துவராது. கட்சியினுள் அவ்வப்போது இத்தகைய ஆட்களின் சுய உருவங்கள் வெளிப்பட்டபோது தயவுதாட்சணியமில்லாத விமர்சனங்களை முன்வைத்தார்.
ஆங்கிலத்தில் கடந்த 20 ஆண்டுகளில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினால் வெளியிடப்பட்ட அறிக்கைகள் கைநூல்கள் அனைத்திலும் தோழர் கேதீஸின் செல்வாக்கு இருக்கவே செய்யும். அவர் கொழும்பில் வேலை செய்த காலத்தில்கூட பாதுகாப்பை பெற்றுக் கொண்டவரல்ல. ஒருபுறம் புலிகளின் ஊடுருவலும் மறுபுறம் பிரேமதாசா அரசின் மனித உரிமை மீறல்களும் என்றிருந்த காலத்தில் கூட அவர் தனக்கென பாதுகாப்பை ஏற்படுத்திக் கொண்டவரல்ல. அவர் எந்த வீட்டு வாசலில் வைத்து படுகொலை செய்யப்பட்டாரோ அதேவீட்டில் இருந்துதான் தனது அரசியல் புலமைத்துவ கடமைகளுக்காக வௌ;வேறு இடங்களுக்கு சென்று வந்தார்.
1994 இல் கட்சியில் இருந்து விலகி தமது புலமைத்துவ செயற்பாடுகளுக்காக சென்ற இடங்களில் எல்லாம் அவர் தனித்துவமாக மிளிர்ந்தார். முதலில் கொழும்பு பல்கலைகழக அரசியல் விஞ்ஞான பீடத்தில் அதிகார பகிர்வு தொடர்பான ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டார். பின்னர் மாற்றுக் கொள்கைக்கான நிலையத்தில் இணைந்து பணியாற்றினார். இன முரண்பாடுகள் தொடர்பான ஆய்வு பிரிவிற்கு அவர் தலைவராக இருந்தார். மாற்றுக் கொள்கைக்கான நிலையத்தில் அவர் வேலை செய்யும் போது அவர்களால் நடத்தப்பட்ட பல கருத்தரங்குகளில் அவர் தனித்துவமாக மிளிர்ந்தார். அவர் மிக கூரிய அவதானிப்பாளர் என்றும் மிகத்துல்லியமாக தர்க்க வலுவுடன் கருத்துக்களை வைப்பவர் என்றும் கருதப்பட்டார். இத்தகைய கருத்தரங்குகளில் அவர் அதிகார பகிர்விற்கான பொறிமுறைகள் கொள்கைகள் தொடர்பாக மாத்திரமல்ல ஏகபிரதிநிதித்துவம் மாற்றுக் கருத்துக் கொண்டோர் படுகொலை செய்யப்படுவது முஸ்லீம் மக்களின் தனித்துவம் தொடர்பாகவும் அவ்வப்போது அவர் கருத்தரங்குகளிலும் தனது கட்டுரைகளிலும் வலியுறுத்தி வந்தார். யாருக்கும் அஞ்சி எதையும் பூசி மெழுகும் பழக்கம் அவரிடம் கிடையாது. எதுவும் நெற்றிக்கு நேரே தீட்சணியமாக நிகழும். அவர் கட்சியிலிருந்து தனது புலமைத்துவ செயற்பாடுகளுக்காக சென்றிருந்தாலும் தான் ஒரு பின்புலத்தில் செயற்பட்டு வந்தவர் என்பதை எப்போதும் மறந்தது கிடையாது. நாங்கள் எமது பத்திரிகையில் எழுதும் விடயங்களிலும் சரி நாங்கள் விடுக்கும் அறிக்கைகளிலும் சரி அல்லது எமது நடவடிக்கைகளிலும் சரி அவர் ஒரு அவதானிப்பை எப்போதும் வைத்திருந்தார். அவருக்கு விமர்சனங்கள் இருப்பின் உடனடியாகவே தொலைபேசி ஊடாக எம்மிடம் அதனை விமர்சனமாகவோ அல்லது தவறுகளை திருத்துவதற்கான ஆலோசனைகளாகவோ முன் வைப்பார்.
தோழர் றெபேட் யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்டபோது தொலைபேசி ஊடாக அந்த செய்தியை அவருக்கு தெரிவித்தபோது அவர் உடனடியாக அழுதுவிட்டார். பின்னர் யாழ்ப்பாணத்தில் இருந்து தோழர் றொபேட்டின் உடல் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டபோது தான் முதலில் அவரை பார்க்க வேண்டும் என்று ஜயரட்னா மலர்சாலைக்கு வந்து அஞ்சலி செலுத்திச் சென்றார். தோழர் றெபேட்டின் பூதவுடலுக்கு அருகே தோழர் பத்மநாபாவின் படத்தை வைக்குமாறு என்னிடம் கேட்டுக் கொண்டார்.
அவர் தனது புலமைத்துவ செயற்பாடுகளில் ஈடுபட்டபோது அவருடனான தொடர்புகளை வைத்திருப்பதில் மிக அவதானமாக இருந்தோம். நாங்கள் மிகவும் அன்னியோன்னியமானவர்களாக இருந்தபோது பகிரங்கமான இடங்களில் ஒரிரு புன்முறுவலுடன் நிறுத்திக் கொண்டோம்.
ஒரு விஸ்தாரமான ஜனநாயக மாற்று அமைப்பொன்று ஏற்பட வேண்டும் என்பதில் அவர் தனது இறுதி நாட்களில் தீவிர அக்கறை கொண்டிருந்தார். இயக்கங்கள், இயக்கங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் முற்போக்காளர்கள் ஜனநாயகமனித உரிமைவாதிகள் துடிப்பும் ஆர்வழும் அறிவும் கொண்ட புதிய தலைமுறையினர் என பலரையும் இணைத்து ஒரு பரந்த ஜனநாயக ஸ்தாபனம் -அமைப்பு நிறுவப்பட வேண்டும் என்பதில் அவர் தனது புலமைத்துவ செயற்பாடுகளுடன் தனது கருத்தை வழங்கிக் கொண்டிருந்தார். அவருடைய “இழந்த சந்தர்ப்பங்கள்” என்ற நூலும் “சத்தியா” என்ற பெயரில் அவர் “டெயிலி மிரரில்” எழுதிய கட்டுரைகளும் அவர் 80 களின் முற்பகுதியில் இருந்து வௌ;வேறு காலகட்டங்களில் எழுதிய குறிப்புக்கள் கைநூல்களும் மீள் வாசிக்கப்படுவதும் எதிர்காலத்தில் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு நாகரீகமான அரசியல் செயற்பாட்டை முன்னெடுத்துச் செல்வதற்கு அவசியமாகும். அவர் “மரணத்தை அல்ல வாழ்க்கையை கொண்டாடுவோம்” என்று எழுதிய கட்டுரை எமது தற்போதைய சமூக அவலத்தை சுட்டிநிற்கிறது. தோழர் பத்மநாபாவின் நினைவு நூலில் எங்களது தலைவரும் வழிகாட்டியும் என்ற மகுடம் அவரால் இடப்பட்டது. அவர் தோழர் பத்மநாபா நீலன் திருச்செல்வம் தோழர் றொபேட் பற்றி ஞாபகார்த்த கட்டுரைகளை வரைந்துள்ளார்.
மிகவும் எளிமையானதும் சிக்கனமானதும் அவரது வாழ்க்கை அவருக்கு சில உடல் ரீதியான பிரச்சினைகள் இருந்த போதும் அவரது கட்டுப்பாடான வாழ்க்கை முறையினாலேயே அவரால் கடுமையாக உழைக்க முடிந்தது. அவர் வெறும் இன அடையாளங்களுக்குள் தன்னை அடக்கிக் கொண்டவரல்ல. அவர் ஒரு சர்வதேசவாதியாக ஒரு மானிடனாக தன்னை அடையாளப்படுத்தி இருந்தார்.
இலங்கையில் மாத்திரமல்ல ஐரோப்பாவில் வட அமெரிக்காவில் அவர் பல கருத்தரங்களில் பங்குபற்றியிருக்கிறார். படுகொலை செய்யப்பட்ட முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களையும் ராமமூர்த்தி சுர்ஜித் கலியாணசுந்தரம் போன்ற மார்க்சிய கட்சி தலைவர்களையும் ஹக்சர் போன்ற சரித்திரவியலாளர்களையும் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக ஆசிரியர்கள் மாணவர்கள் என அவர் சந்தித்து கலந்துரையாடியிருக்கிறார்.
1990 இல் சென்னையில் இருந்து என்னையும் காலம்சென்ற தோழர் இளங்கோவையும் டெல்லிக்கு அழைத்திருந்தார். இந்திய அரசியல் கட்சிகளின் தலைவர்கள், ஊடகவியலாளர்களை சந்திப்பதற்கான ஒருவார செயற்பாடாக அமைந்திருந்தது. அவர் இந்திய மார்க்சிய கட்சியின் அகில இந்திய செயலாளராக இருந்த சுர்ஜித் அவர்களையும் அப்போதைய பேச்சாளரான பிரகாஸ்கரட் அவர்களையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்த பரதன் அவர்களையும் எமக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அப்போது மத்திய அமைச்சராக இருந்த தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ்காரரான ப.சிதம்பரத்தின் வீட்டிற்கும் நாங்கள் சென்றோம். நாராயணசாமி உள்ளிட்ட ஊடகவியலாளர்களையும் நாம் சந்தித்தோம் அக்காலகட்டத்தில் இலங்கையில் புலிகள் முஸ்லீம்களை வடக்கை விட்டு விரட்டிக் கொண்டிருந்தார்கள். அவர் டெல்லியில் இந்திய மார்க்சிய கட்சியுடன் ஏற்படுத்திய உறவு கேரளாவிலும் எமக்கு ஒரு ஆதரவு தளத்தை உருவாக்கியது.
தோழர் பத்மநாபா மரணத்திற்குப் பின்னர் 1992 இல் சென்னை புழல் அகதி முகாமில் நிகழ்ந்த இரண்டாவது காங்கிரஸில் தோழர் கேதீஸ் பங்குபற்றியிருந்தார். இரண்டாவது காங்கிரஸின் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட அறிக்கை அவரால் மொழி பெயர்க்கப்பட்டது. அவர் அந்த காங்கிரஸிலும் ஒரு ஜனநாயக நிறுவனமாக ஈ.பி.ஆர்.எல்.எப் ஐ தகவமைப்பதிலும் தூர நோக்குடன் செயற்படுவதற்குமான பங்களிப்பை வழங்கினார். ஆக்க சக்திகளை எப்போதும் ஊக்குவித்தார். அதற்கான உள்ளுணர்வும் தெளிவும் புரிதலும் அவருக்கு இருந்தது.
தோழர் கேதீஸ் எம்முடன் செயற்பட்டது எமக்கெல்லாம் ஒரு பெருமிதத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்துவதாக அமைந்திருந்தது. அவருடைய மொழிப் புலமை, கருத்துவளம் ,விவாத ஆற்றல் நோத்தியான செயல் திறன் என்பன இங்கு குறித்துரைக்கப்பட வேண்டியன. குழந்தைகள் மீது அவர் பேரன்பு செலுத்தினார். அவர்களுடன் உரையாடும் போது தானும் ஒரு குழந்தையாக மாறிவிடுவார்.
மாற்றுக் கொள்கைக்கான நிலையத்தின் கருத்தரங்குகளின் போது அவர் வௌ;வேறு கருத்து நிலைகளின் பிரசன்னத்திற்கான இடைவெளி இருக்க வேண்டும் என்பதில் ஆழமான நம்பிக்கை கொண்டிருந்தார். 2002 சமாதான ஒப்பந்தத்தின் பின்னர் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக மிகுந்த விசனமும் வேதனையும் கொண்டிருந்தார். நோர்வே தரப்பினரிடம் வடக்கு கிழக்கில் ஜனநாயகத்திற்கான இடைவெளி தொடர்பாக அவர்களுடைய விழிப்புணர்வின்மை குறித்து நேரிடையாகவே தனது விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார்.
சமாதான செயலகத்தில் அவர் பணியாற்ற சென்ற போது இதில் உங்களது அபிப்பிராயம் என்ன என்பதையும் கேட்டார். அவர் யுத்தமற்ற பாதையில் இந்த நாடு செல்ல வேண்டும் தனது அதிகாரப் பகிர்வினூடான ஐக்கியமான இலங்கை கட்டியெழுப்பப்படுவதற்கான பங்களிப்பை தான் இதில் வழங்க முடியும் என கருதியிருந்தார். சவாலான பணியை அவர் முன்னெடுத்திருந்தார். தமிழ் பாசிசம் சிங்கள அதிதீவிரவாத சக்திகள் இவற்றின் விசச்சுழல் வன்முறைகளுக்கிடையே தனது பணியை முன்னெடுத்தார். அது ஒரு புலமைத்துவ பணியாகவே அமைந்திருந்தது. அதிகார பகிர்ந்தளிப்பிற்கான கட்சிகளின் பிரதிநிதிகளின் குழுவிற்கும் அவர் தலைவராக இருந்தார். இனப்பிரச்சினையில் துறை தோய்ந்த அனுபவம் வாய்ந்தவர்கள் இல்லாதவொரு பெருங்குறை இருந்த இடத்தில் அவரது பணி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.
மனித உரிமை மீறல்கள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பில் அவ்வப்போது தொலைபேசியூடாக கேட்டுக்கொள்வார். அவர் மரணித்த அன்று காலையில் கூட ஊர்காவற்றுறையில், மண்டைதீவில் என்ன நடைபெறுகிறது என்று கேட்டிருந்தார். அந்த நேரத்தில் அப்பகுதியில் சண்டைகளும் மரணங்களும் மக்கள் இடம்பெயர்வும் அப்பகுதிகளில் நிகழ்ந்து கொண்டிருந்தது. அன்றைய தினம்தான் அவருடைய குரலை நான் இறுதியாக கேட்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. தனது பிரியாவிடையை அவர் அறிவித்தாரோ என அன்று இரவு அவரது மரணச் செய்தி கேட்டு என் மனம் துன்புற்றது. அவரது மரணச்செய்தி ஒரு பாரிய வெறுமை உணர்வை ஏற்படுத்தியது. கால்மார்க்ஸ் மரணித்தபோது ஏங்கல்ஸ் ஒரு உலகின் மாபெரும் சிந்தனையாளன் இன்று தான் சிந்திப்பதை நிறுத்திக் கொண்டான் என்று அந்த மரணத்தின் இழப்பை ஒரு வார்த்தையில் விபரித்திருந்தார். எம்மை பொறுத்தவரை கேதீஸின் மரணமும் அவ்வாறுதான். எமது சமூகத்தின் எதிர்காலம் நல்வாழ்வு தொடர்பில் இதயபூர்வமாக அக்கறை செலுத்திய ஒரு உன்னத மனிதன் உலகமானிடன் 2006 ஆகஸ்ட் 12 இல் தனது சிந்தனையை நிறுத்திக் கொண்டார்.
இந்த சமூகத்திற்கு என்ன நடந்திருக்கிறது தான் எதை இழந்திருக்கிறது என்பதை புரியாததுதான் மிகவும் அவலமானது. இவ்வாறு எத்தனையோ மனிதர்கள் எமது சமூகத்தில் உயிரை மாய்த்திருக்கிறார்கள். இவர்களை நாம் வரலாற்றின் தோள்களில் சுமந்து செல்வோம். சமகாலத்தில் வாழ கிடைத்தவர்கள் என்ற பெருமித உணர்வு எமக்கு என்றைக்கும் உண்டு.
தோழர் கேதீஸ் மெலிந்த உடல்வாகு கொண்ட மென்மையாக பேசும் கம்பீரமான மனிதர். அவரது கண்ணில் மனிதத்தை நேசிக்கும் தீட்சணியம் இருந்தது. ஒளிவீசும் அகன்ற நெற்றி. உன்னதமான மானிடன்.
ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்று வாழ்ந்து காட்டிச் சென்ற மனிதன். தோழரே உங்கள் பணியை நாம் தொடர்ந்து முன்னெடுப்போம். நீங்கள் எங்கள் இதயங்களில் வீற்றிருக்கிறீர்கள். பெருந்துயருடன் எம் பிரியாவிடை.
சுகு-ஸ்ரீதரன்