(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
இன்னோர் ஆண்டு எம்மைக் கடந்து போகிறது. முந்தைய ஆண்டுகளைப் போலவே, இவ்வாண்டும் ஏராளமான அல்லல்களையும் ஆச்சரியங்களையும் தந்துவிட்டு அப்பால் நகர்கிறது. இதன் தாக்கம், இனிவரும் ஆண்டுகளிலும் செல்வாக்குச் செலுத்தும் என்பதில் ஐயமில்லை. இது, இவ்வாண்டை எவ்வாறு நினைவுகூருவது என்ற வினாவை எழுப்புகிறது.இந்த ஆண்டு, உலக அரசியல் அரங்கில் ஏற்படுத்திய தாக்கம் என்ன? இவ்வாண்டில், உலக அரசியல் அரங்கில் செல்வாக்குச் செலுத்தக்கூடிய நிகழ்வுகள் ஏதாவது நடைபெற்றுள்ளனவா ஆகிய இரு கேள்விகளுடன், இவ்வாண்டின் இறுதிக் கட்டுரைக்குள் நுழைகின்றேன்.
இவ்வாண்டை எதிர்கூறி, நான் எழுதிய முதலாவது கட்டுரையின் நிறைவுப்பகுதியை மீள்நினைவுகூர்வதே, இக்கட்டுரைக்குப் பொருத்தமான தொடக்கமாக இருக்கவியலும். அவ்வகையில் அக்கட்டுரை பின்வருமாறு நிறைவெய்தியது:
“இவ்வாண்டில் செல்வாக்குச் செலுத்தக்கூடிய இரண்டு சிந்தனையாளர்களைக் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன். முதலாமவர் 88 வயதான யேர்ஹான் ஹபமாஸினால் (Jürgen Habemas). இவரது பொதுவெளி (Public Sphere) என்றக் கருத்தாக்கம், மேற்குலகச் சிந்தனை வட்டங்களில் முக்கியக் கவனம் பெறும். ஹபமாஸின் பொதுவெளி என்ற கருத்தாக்கமானது, மக்கள் தங்களது கருத்துகளைச் சுதந்திரமாகத் தெரிவிக்கவும் கருத்துப் பரிமாற்றங்களில் ஈடுபடவும், அதனடிப்படையில் பொது முடிவுக்கு வந்து, அதை அரசியல் நடவடிக்கையாக்குவதற்கான களமாகும். அவ்வகையில் ‘ஜனநாயகம்’ என்ற கருத்து, நெருக்கடிக்கும் கேள்விக்கும் உள்ளாகியுள்ள நிலையில், ஜனநாயகத்தை மீட்பதற்கான நடவடிக்கையாகவேனும், பொதுவெளியை முன்னிலைப்படுத்த வேண்டிய நிலை உருவாகும். அவ்வகையில், இவ்வாண்டு ஹபமாஸின் சிந்தனைகள் முன்னிலைபெறும்.
இவ்வாண்டு கவனம் பெறும் இரண்டாவது சிந்தனையாளர் கொன்பூசியஸ். இவரை சீன ஜனாதிபதி ஜீ ஜின்பிங் அடிக்கடி மேற்கோள் காட்டுவார். இவரது சிந்தனைகள் சீனாவின் கொள்கை உருவாக்கத்திலும் முடிவுகளிலும் செல்வாக்குச் செலுத்துவதையும் இவ்வாண்டு காண முடியும்”.
ஜனநாயகத்துக்குப் பிந்தைய உலக ஒழுங்கு
எதிர்வுகூறியது போலவே ஜனநாயகம் மிகப் பெரிய சோதனைக்குள்ளாகிய ஆண்டாகவும், இன்னொரு வகையில் சொல்வதனால் ஜனநாயகத்துக்குப் பிந்தைய உலக ஒழுங்கைப் (post-democratic world order) பற்றிப் பேசத் தொடங்கிய ஆண்டாக இவ்வாண்டு இருக்கிறது.
ஜனநாயகத்துக்குப் பிந்தைய உலக ஒழுங்கு என்ற உரையாடலே அரசியல் ரீதியாகச் சிக்கலானதும், நெருக்கடியானதுமான ஒரு சித்திரத்தை எமக்குத் தருகிறது என்பதை மறுப்பதற்கில்லை.
பெர்லின் சுவரின் தகர்ப்பு, சோவியத் யூனியனின் அஸ்தமனத்துடன் முடிவுக்கு வந்த கெடுபிடிப்போரின் பிந்தைய உலக ஒழுங்கின் உயர்நிலை ஆட்சிமுறையாகவும் அரசியல் ஒழுக்கமாகவும், சமூகங்களை அளவிடும் அளவுகோலாகவும் கடந்த மூன்று தசாப்தங்களாக கோலோட்சுவது ஜனநாயகம் என்ற எண்ணக்கருவாகும்.
அந்த எண்ணக்கரு காலாவதியாகிவிட்டது என்ற எண்ணம் முன்னெப்போதையும் விட, இவ்வாண்டு மேலோங்கியுள்ளது. முதன்முறையாக ஜனநாயகத்துக்குப் பிந்தைய உலக ஒழுங்கு பற்றிப் பேச ஆரம்பித்துள்ளார்கள். இது இவ்வாண்டு ஏற்பட்ட மிக முக்கியமான மாற்றமாகும்.
ஒருபுறம் தீவிர வலதுசாரி வேட்பாளர்கள் தேர்தல்களில் வெற்றிபெறுவதும், அவர்களது எண்ணவலைகள் அரசியல் அரங்கில் செல்வாக்குச் செலுத்துவதும் நடந்துள்ளன. மறுபுறம் மக்கள் பாரம்பரிய ஜனநாயக அமைப்புகளையும் முறைகளையும் புறந்தள்ளித் தமக்கான புதிய ஒழுங்கமைப்புகளையும் போராட்டங்களையும் முன்னெடுக்கிறார்கள். இரண்டுமே வெவ்வேறு வகைகளில் ஜனநாயகத்தைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளன.
ஒதுக்கப்படும் அமெரிக்காவும் ஒதுங்கும் வெளியுறவுக் கொள்கையும்
இவ்வாண்டு மே மாதம் ஈரானின் அணுசக்தி உடன்படிக்கையிலிருந்து விலகிக் கொள்வதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்தார். அதேவேளை ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை மீண்டும் விதிப்பதாகவும் ஈரானை முடக்கும் பொருட்டு மேலதிகத் தடைகளை விரைவில் விதிக்கவிருப்பதாகவும் அறிவித்தார். இவ்வுடன்படிக்கையிலிருந்து விலகுவது, மிகவும் ஆபத்தானதும் பொறுப்பற்றதுமாகும் என, அமெரிக்காவின் கூட்டாளிகளான ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய வலியுறுத்தியிருந்த நிலையில், ட்ரம்ப் இம்முடிவை எடுத்தார். இம்முடிவானது, அமெரிக்க – ஐரோப்பிய ஒன்றிய உறவில் ஏற்பட்டுள்ள நெருக்கடியின் தன்மையை வெளிப்படுத்தி நின்றது.
இவ்வாண்டு நடுப்பகுதியில், அமெரிக்கா விதித்த உருக்கு மற்றும் அலுமினிய இறக்குமதி வரிகள் ஐரோப்பா மற்றும் கனடாவுடன் நேரடியான வர்த்தகப் போருக்கான முதலடியாகும்.
இது குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுக்கு இடையே பதட்டங்களைத் தீவிரப்படுத்தி உள்ளது. இதைப் பரந்த நோக்கில் சிந்தித்தால், முதலாளித்துவ அமைப்புமுறையின் ஓர் உலகளாவிய நெருக்கடியின் உச்ச நிலையில், அமெரிக்காவானது, அதன் நெருக்கடியை அதன் பிரதான போட்டியாளர்கள் மீது சுமத்தும் ஒரு முயற்சியின் ஒரு பகுதியாக, இவ்வர்த்தகப் போர் முறைகளைப் பயன்படுத்தி வருகிறது.
இதே வகையான ஒரு நெருக்கடியை, அமெரிக்கா 1930களில் எதிர்கொண்டது. அது, இரண்டாம் உலகப் போராக மிளிர்ந்தது. அவ்வகையில் இன்னொரு நீண்ட கொடியப் போருக்கான விதைகள் இவ்வாண்டு தூவப்பட்டன.
ஒருபுறம் அமெரிக்க ஜனாதிபதி முழு அளவிலான ஒரு வர்த்தகப் போரைக் கட்டமைக்கையில், மறுபுறம் ஜேர்மன் சான்சலர் மேர்க்கெல் இப்போது அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவிடமிருந்து சுதந்திரமாக, ஜேர்மன்-பிரெஞ்சு தலைமையின் கீழ், ஐரோப்பா ஓர் இராணுவ பலம் வாய்ந்த அணியாக ஸ்தாபிக்கப்பட வேண்டுமென அறிவுறுத்துகிறார். இவை இரண்டும், தவிர்க்கவியலாமல், உலகை அமைதியின் பாதையில் எடுத்துச் செல்லவில்லை.
அமெரிக்காவின் தற்போதைய முக்கியமான கவலை, ரஷ்யா ஒரு இராணுவ வல்லரசாக மீள்வதையும் சீனா ஒரு பொருளாதார வல்லரசாக எழுவதையும் பற்றியது. ஏனெனில், அவை அமெரிக்காவின் உலக ஆதிக்கத்துக்குக் கடுஞ் சவால்களாக அமைகின்றன. பெரிய கடனாளி நாடான அமெரிக்கா, உலகின் அதி வலிய பொருளாதாரம் என்றத் தகுதியைத் துரிதமாக இழந்து வருகிறது. அரசியற் செல்வாக்காலும், தன் உலக ஆதிக்கத்தைத் தக்க வைக்க இயலாததால், அது தன் இராணுவ வலிமையிலேயே தங்கவேண்டியுள்ளது.
சீனாவும் ரஷ்யாவும், மேலும் வலிமையடைய முன்பே, அவற்றைத் தனிமைப்படுத்திப் பலவீனப்படுத்தும் அமெரிக்கத் திட்டத்தின் பகுதியாகவே, அமெரிக்காவின் ஐரோப்பிய ஆசிய நகர்வுகளை நோக்க வேண்டும்.
அதேவேளை அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் மூலதனம் இலாப நோக்கில், தனது தொழில் உற்பத்தியை மலிவான கூலி உழைப்புள்ள நாடுகளுக்கு இடம்பெயர்த்ததால், தன் உற்பத்தித் தளங்களை இழந்த மேற்குலகு, மூன்றாமுலக நாடுகளின் உற்பத்திகளில் பெரிதும் தங்கியுள்ளது.
சீனாவின் இன்றைய தொழில் வளர்ச்சி, இவ்வாறான ஏற்றுமதிப் பொருளாதாரத்தைச் சார்ந்து விருத்தி பெற்றது. அதன் பயனாகத் தனது மூலவளங்களுக்கு ஆபிரிக்க, தென்னமெரிக்க நாடுகளில் மிகவும் தங்கியுள்ள சீனா, தென்னமரிக்காவிலும் ஆபிரிக்காவிலும் நேரடி, மறைமுக முதலீடுகளில் மிகுந்த அக்கறை காட்டுகிறது. அங்கு சீன அணுகுமுறை மேலை நாடுகளின் அணுகுமுறையினும் வெற்றியளிக்க முக்கிய காரணம், நாடுகளின் உள் அலுவல்களில், சீனா குறுக்கிடாமை எனலாம்.
அமெரிக்காவின் ஒதுங்கும் வெளியுறவுக் கொள்கையின் ஒருபகுதியாக, இவ்வாண்டின் நடுப்பகுதியில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையிலிருந்து அமெரிக்கா வெளியேறுவதாக, வெளிப்படையாக அறிவித்து பேரவையிலிருந்து விலகியது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை ‘அரசியல் பாகுபாடு மிகுந்த சாக்கடைக் குழி’ என்றும் இப்பேரவையானது, பாசாங்குத்தனம் மிகுந்த தன்னாட்சி அமைப்பாகி, மனித உரிமைகளை எள்ளி நகையாடுகிறது’ என்றும் அமெரிக்க விமர்சித்தது.
எந்த அமைப்பில் இலங்கைக்கு எதிரான மனித உரிமைக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, இலங்கையைப் பதிலளிக்க அமெரிக்கா கோரியதோ, இன்று அதே அமைப்பையே அமெரிக்கா கேலிக்குரியதாக்கியது.
ஒருபுறம் தனது வெளியுறவுக் கொள்கைவகுப்பின் விளைவால், உலக அலுவல்களிலிருந்து விலகியிருக்க, அமெரிக்க முனைகிறது என்பதைக் காட்டும் ஆண்டாக இவ்வாண்டு உள்ளது. குறிப்பாக, சிரிய யுத்தத்தில் அமெரிக்கா கண்டுள்ள பின்னடைவு, உள்நாட்டு விவகாரங்களில் பொருளாதார ரீதியாக அமெரிக்கா எதிர்நோக்குகின்ற நெருக்கடி என்பன, உலக அலுவல்களில் அமெரிக்க வகித்த வகிபாகத்தை மெதுமெதுவாக இல்லாமல் செய்கிறது. மனித உரிமைப் பேரவையிலிருந்து அமெரிக்காவின் வெளியேற்றம் என்பது இயலாமையின் வெளிப்பாடு.
அதேவேளை, உலக அலுவல்களில் இருந்து அமெரிக்கா ஒதுக்கப்படுகின்றது. அமெரிக்காவின் பங்குபற்றுதல் இன்றி எத்தனையோ விடயங்கள் நடக்கின்றன. அமெரிக்காவின் கூட்டாளிகளே, அமெரிக்காவின் இயலாமையை உணர்கிறார்கள். இதனால், அமெரிக்கா தவிர்ந்த அமைப்புகளும் உலக ஒழுங்கும் சாத்தியமாகி வருகிறன. இதைக் கொஞ்சங்காலம் முன் நினைத்துப் பார்த்திருக்கக் கூட முடியாது.
அமெரிக்கா அற்ற உலக அலுவல்கள் என்பதற்கான தொடக்கப்புள்ளி, இவ்வாண்டு இடப்பட்டுள்ளது. இது, எவ்வாறு உலக அரசியலின் திசைவழியில் செல்வாக்குச் செலுத்தும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
கெடுபிடிப்போர் 2.0
இவ்வாண்டு அமெரிக்க வெளியுறவுக் கொள்கை வகுப்பில் முக்கியமான ஆண்டாகும். 2001ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் என்ற கருத்துருவை (War on Terror Doctrine), அமெரிக்கா முடிவுக்குக் கொண்டுவந்த ஆண்டு 2018 ஆகும்.
அவ்வகையில், அமெரிக்கா தனது ‘அமெரிக்கா முதல்’ என்ற கொள்கையின் அடிப்படையில், தனது எதிரி நாடுகளைப் பொருளாதார ரீதியாகத் தாக்குவதற்கான முதல் அடிகளை மேற்கொண்ட ஆண்டாகும். அவ்வகையில், சீனாவுக்கு எதிரான வர்த்தகப் போரும் இறக்குமதி வரி அதிகரிப்புகளும், பொருளாதாரத் தடைகளும் என அமெரிக்கா கெடுபிடிப்போர் 2.0 (Cold War 2.0)க்குத் தயாரான ஆண்டாக 2018ஐக் கொள்ளலாம்.
எதிர்பார்க்கப்படுகின்றக் கெடுபிடிப்போர் முந்தையதைப் போலன்றி ‘நண்பர்கள் யாருமில்லை, யாவரும் எதிரிகளே’ என்ற ‘அமெரிக்கா முதல்’ கொள்கையின் அடிப்படையில் முன்னெடுக்கப்படுகிறது. இந்தப் போர், வேறெதையும் விடப் பொருளாதார நோக்கங்களையே அடிப்படையாகக் கொண்டது.
முதலாளித்துவப் பொருளாதாரத்தின் நெருக்கடி தவிர்க்கவியலாமல், உலக நாடுகள் அனைத்தின் மீதான தவிர்க்கவியலாத போருக்கு வழி வகுத்துள்ளது. இதற்கு பல காரணங்கள் உண்டு.
உலகப் பொருளாதார நெருக்கடி தொடங்கிப் பத்தாண்டுகள் முடிவடையும் நிலையில், உலகம் இன்னமும் தீராதப் பொருளாதார நெருக்கடியிலேயே சிக்கியுள்ளது. கடந்த பத்தாண்டில் உலக பொருளாதாரத்தின் தன்மை மிகப்பெரிய மாற்றத்துக்குள்ளாகியுள்ளது.
பொருளாதார வளர்ச்சியானது, உற்பத்தி வளர்ச்சி மற்றும் புதிய முதலீடுகளின் மூலமாக நடைபெறவில்லை; மாறாக பணமானது, ஊகவணிக நடவடிக்கை மூலம் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு பாய்ந்ததன் மூலமாக நடைபெற்றுள்ளது.
சர்வதேச நிதியியலுக்கான அமைப்பு வழங்கியுள்ள புள்ளிவிவரங்களின்படி, 30 மிகப்பெரிய எழுச்சி பெற்று வரும் சந்தைகளின் ஒருங்கிணைந்த கடன்நிலையானது, 2011ஆம் ஆண்டின் இறுதியில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 163 சதவீதமாக இருந்தது. இவ்வாண்டின் முதல் காலாண்டு நிறைவில், 211 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதன் ஆபத்தான நிலையை பணத்தில் அடிப்படையில் நோக்கினோமானால், இது எழுச்சி பெறும் பொருளாதாரங்களின் கடன்களில் 40 ட்ரில்லியன் டாலர் அதிகரிப்பாகும்.
முதலாளித்துவ அமைப்பு முறை சுரண்டலின் மூலமே தன்னைத் தற்காத்துக் கொள்ள விளையும். இதனால் நாடுகளிடையேயான முரண்பாடு தவிர்க்கவியலாதது. எனவே அமெரிக்கா தனது நலன்களுக்கான முதலாளித்துவ முறையின் விதிமுறைகளை மீறும். இது வெவ்வேறுபட்ட நெருக்கடிகளுக்கு வழிசெய்யும். இதனை தனது செயல்கள் மூலம் அமெரிக்கா இவ்வாண்டு கோடு காட்டியுள்ளது.
நிறைவாக,
இந்த ஆண்டுப் போராட்டங்களோடு தொடங்கி போராட்டங்களோடு நிறைவுபெறுகின்றது.
உலகின் 1% மானவர்கள் செல்வச் செழிப்போடு தங்கள் செல்வங்களைப் பல்மடங்காக்குகையில் எஞ்சிய 99% பேர் மேலும் ஏழைகளாகவும் இயலாதவர்களாகவும் சுரண்டப்படுபவர்களாகவும் மாற்றப்படுகிறார்கள். இதற்கெதிரான போராட்டங்கள் இவ்வாண்டு முழுவதிலும் உலகெங்கிலும் நடந்துள்ளன.
போராட்டங்களின் உலகமயமாக்கல் நிகழ்ந்த ஆண்டாக, இவ்வாண்டைக் கூறவியலும். குறிப்பாக இவ்வாண்டு போராட்டங்களால், ஐரோப்பா அதிர்ந்திருக்கிறது. அமெசன் தொழிலாளர்கள், ரயன் எயார் விமான சேவைத் தொழிலாளர்கள் தொடங்கி, இப்போது ஐரோப்பாவெங்கும் தீயெனப் பரவும் ‘மஞ்சள் மேற்சட்டைப்’ போராட்டக்காரர்கள் வரை மக்கள் போராடுகிறார்கள்.
பாரம்பரிய அரசியல் அமைப்புமுறைகள், நிறுவனங்களுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுகிறார்கள். மாற்று அரசியலின் தேவையை நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மோசடியாக முகத்தை வெளிக்கொணர்ந்துள்ளார்கள். அவ்வகையில் எதிர்வுகூறியது படி ஹபமாஸின் பொதுவெளி முக்கிய பேசுபொருளானது.
உலக அலுவல்களில் சீனாவின் இடம் தவிர்க்க முடியாதாகிவிட்டது. குறிப்பாக புத்தாக்கம், கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பம் சார் விடயங்களில் இன்று முதன்மையான இடம் சீனாவுக்கு உண்டு.
இது பலரும் எதிர்பாராதது. தொழிநுட்ப விடயங்களில் அமெரிக்காவும் ஐரோப்பாவும், முன்னிலையில் இருக்கின்றன. இதுதான் அமெரிக்காவினதும் ஐரோப்பாவினதும் முதன்மையான நிலைக்குக் காரணம் என்ற பிம்பம் முழுவதுமாக இவ்வாண்டு சிதைந்துள்ளது. இந்த முதன்மை நிலையை சீனா சத்தமில்லாமல் சாதித்துள்ளது.
இதைப்போலவே தனது அயலுறவுக் கொள்கையிலும் சீனா வெற்றியடைந்துள்ளது. குறிப்பாக இவ்வாண்டு அயலுறவுக் கொள்கையளவில் மிகுந்த வெற்றிகரமான நாடாக சீனாவைச் சொல்ல முடியும். பகை நாடாக எந்த நாடையும் அறிவிக்காமல் அனைத்து நாடுகளிலும் தனது செல்வாக்கை சீனா செலுத்திக் கொண்டிருக்கிறது.
இதன் பின்புலம் சீனக் கொள்கை வகுப்பில் கொன்பூசியஸின் தாக்கம் ஆகும். இதைப் பல உதாரணங்களுடன் நோக்கவியலும். ‘அமைதியாகவும் மெதுவாகவும் வினைத்திறனுடனும் விடாமல் கருமம் ஆற்றுவது’ என்ற கொன்பூசியத் தத்துவமே சீனாவின் கொள்கைவகுப்பின் அச்சாணியாகவுள்ளது.
இந்தத் தத்துவத்தின் வெற்றியின் பலன்களை சீனா இவ்வாண்டு அனுபவித்ததை மறுக்கவியலாது.
கடந்து போகும் இவ்வாண்டு பலவழிகளில் ஜனநாயகம் குறித்த கேள்விகளை எழுப்பிச் செல்கிறது.
சமூகநல அரசுகள் அதன் மரணப் படுக்கையில் இருப்பதை உணர்த்துகின்றன. நிச்சயமின்மையின் நிச்சயத்தைச் சொல்கின்றன. தொழில்நுட்பம் அன்றாட அலுவல்களில் ஆற்றவுள்ள ஆபத்தான பணியின் சித்திரத்தை வரைகிறது.
உலக அரசியல் அரங்கு பாரம்பரிய கூட்டணிகள், அமைப்புகள், கோட்பாடுகள், அறங்கள் என அனைத்தையும் தாண்டி புதிய நிலைக்குள் புகுவதற்கான ஒரு கட்டத்தை நோக்கி நெருங்குவதை 2018 கோடு காட்டிச் செல்கிறது.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.