எனினும் இந்த இயற்கை பசளை மற்றும் எண்ணை வகைகளைப் பயன்படுதி வருகின்றோம். ஆனாலும் அது இதுவரையில் பயிரில் எதுவித முன்னேற்றத்தையும் காட்டியதாகத் தெரியவில்லை. இதனை ஏனைய விவசாயிகள் பயன்படுத்தியபோது, அது பயிருக்கு தகுந்த வீரியத்தைக் கொடுத்ததாக தெரியவில்லை. களிப் பூமி என்றாலும் பரவாயில்லை.
எமது பகுதி மணல் தரைப் பகுதியாகும். இவ்வாறான நிலத்திற்கு இவ்வாறு நாம் பாவித்து வந்த செயற்கை உர வகைகளைத் தடுத்து நிறுத்தி இயற்கை உரத்தைப் பாவிக்கச் சொல்லியிருப்பதானது எதிர்காலத்தில் நான் நினைக்கின்றேன் சோமாலியா போன்றுதான் வரும் என எண்ணுகின்றேன்” என்கிறார் படுவாங்கரைப் பகுதியின் பாலையடிவட்டை சரஸ்வதி விவசாய அமைப்பைச் சேர்ந்த பேரின்பம் ஜீவரெத்தினம்.
உண்மையில், இயற்கை உரப்பாவனையை இந்த விவசாயிகள் முழுமையாக வரவேற்கின்றார்கள். ஆனால், படிப்படியாகத் தான் அந்த மாற்றத்துக்கு வந்திருக்க வேண்டும் என்கின்றார்கள். குறிப்பாக, ஒரு ஏக்கர் வேளாண்மைச் செய்கையை மேற்கொள்ளும் அரை ஏக்கருக்கு செயற்கை உரப்பாவனையையும் மற்றைய அரை ஏக்கருக்கு இயற்கை உரப் பாவனையையும், பயன்படுத்தி விவசாயச் செய்கையை மேற்கொள்ளுமாறு அரசாங்கம் அறிவுறுத்தல் வழங்கியிருக்குமாக இருந்தால், அதற்கு விவசாயிகளும் தலைவணங்கி இருப்பார்கள் என்பது அவர்களுடைய உரையாடல்களின் போது புரிந்துகொள்ள முடிந்தது.
இதுகுறித்து, சரஸ்வதி விவசாய அமைப்பைச் சேர்ந்த பேரின்பம் ஜீவரெத்தினம் மேலும் கூறியதாவது: ஒருவர் ஓர் ஏக்கர் வேளாண்மை செய்தால், அதில் அரை ஏக்கருக்கு இயற்கை மருந்துகளையும் மற்றைய அரை ஏக்கருக்கு செயற்கை மருந்துகளையும் பாவிக்குமாறு அரசாங்கம் கூறியிருக்குமானால் அது ஓரளவுக்கேனும் தாக்குப் பிடித்திருக்கும். ஆனால் திடீரென அனைத்தையும் நிறுத்தியதனால், விவசாயிகள் மிகுந்த நட்டத்தை அடையும் நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.
நாங்களும் எங்களிடமிருந்த முதலீடுகளைச் செலவு செய்து, எமது பரம்பரை வாழ்வாதாரத்தை மேற்கொண்டுள்ளோம். அது இம்முறையில் வெற்றியளித்தால் மிகவும் வரவேற்பாக இருக்கும். சோளன் செய்கைக்கும் பசளை தருவதாகச் அரச அதிகாரிகள் சொல்லியுள்ளார்கள். அது இன்னமும் கிடைக்கவில்லை. சோளன் செய்கையைத் தாக்கும் படைப்புழுவுக்குரிய மருந்து வகைகளும் யூரியாவும் எமக்குத் தந்தால் பெரும் உதவியாக அமையும் என பேரின்பம் ஜீவரெத்தினம் தெரிவித்தார்.
“மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வருடம் 67,415 ஹெக்டயரில் நெற்செய்கை பண்ணப்பட்டுள்ளது. தற்போது இயற்கை உரங்களையும் திரவப் பசளைகளையும் விவசாயிகளுக்கு வழங்கி வருகின்றோம். ஆனாலும் எமக்குக் கீழுள்ள சில கமநல கேந்திர நிலையங்களில் 90 சதவீதமான விவசாயிகளுக்கு இயற்கை உரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.
ஆனாலும் இன்னும் சில கமநல கேந்திர நிலையங்களுக்குட்பட்ட விவசாயிகளுக்கு முற்று முழுதாக இயற்கை உரங்களும், திரவப் பசளைகளும் வழங்கப்படவில்லை. எனினும், தற்போதுதான் பசளைகள் எமக்கு வந்துகொண்டிருக்கின்றன. அவற்றை விவசாயிகளுக்கு தொடர்ந்து வழங்கி வருகின்ற செயற்பாடுகளை துரிதப்படுதியுள்ளோம்.
திரவ பசளைகளை விசிறுவதால் விவசாயிகளுக்கு சுகாதார ரீதியாக பாதிப்புகள் வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அது தொடர்பில் வைத்தியத்துறையினுடாகத்தான் நோக்க வேண்டியுள்ளது. எனினும், எமக்கு இது தொடர்பில் விவசாயிகளிடமிருந்தோ, வேறு எவரிடமிருந்தும் எழுத்து மூலமான முறைப்பாடுகள் எதுவும் கிடைக்கவில்லை.
இவ்வருடம் முற்று முழுதாக இயற்கை உரங்க ளையும் இயற்கை திரவப் பசளை யையும் பாவிக்கப்படு வதனால் இதன் பயன்பாடு பற்றி விளைச்சலின் பின்னர்தான் தெரியவரும்” என மட்டக்களப்பு கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் கே.ஜெகநாத் தெரிவித்தார்.
எனினும், இதுவரைகாலமும் தாம் பழக்கத்திலும் புழக்கத்திலும் நடைமுறையிலும் மேற்கொண்டு வந்த விவசாயச் செய்கையை இவ்வருடம் அரசாங்கம் திடீரென இயற்கை உரப்பாவனைக்கு மாற்றியதால் பயிர்கள் அனைத்தும் வீரியத்துடன் வளரவில்லை.
உண்மையிலேயே இயற்கை உரப்பாவனை வரவேற்கத் தக்கதாக அமைந்தாலும் அதற்கு படிப்படியான மாற்றத்திற்குக் கொண்டு வந்திருக்க முடியும். குறிப்பாக ஒரு ஏக்கர் வேளாண்மைச் செய்கையை மேற்கொள்ளும் விவசாயி ஒருவருக்கு அரை ஏக்கருக்கு செயற்கை உரப் பாவனையையும், மற்றைய அரை ஏக்கருக்கு இயற்கை உரப் பாவனையையும், பயன்படுத்தி இவ்வருடம் அனைவரும் தத்தமது விவசாயச் செய்கையை மேற்கொள்ளுமாறு அரசாங்கம் அறிவுறுத்தல் வழங்கியிருக்குமாக இருந்தால் அதற்கு விவசாயிகளும் தலைவணங்கி புதியதொரு இந்த முயற்சிக்கு வரவேற்பளித்து, முன்னின்று செய்திருப்பார்கள்.
இந்த முயற்சியின் முடிவில் அதாவது பயிர் அறுவடையின்போது, மேற்படி ஒரு ஏக்கரில் இரு பிரிவுகளாக இரு வெவ்வேறு உரப்பாவனைகளையும் மேற்கொண்டு செய்கை பண்ணப்பட்டிருந்த பகுதிகளின் விளைச்சலை உற்று நோக்கி ஏற்றத்தாழ்வுகளை தீர்மானித்திருக்க முடிந்திருக்கும்.
அதன் பின்னர் தொடர்ந்து வரும் பயிர் செய்கைப் போகங்களில் உண்மையி லேயே இயற்கை உர வகைகளா? அல்லது செயற்கை உர வகைகளா? தமத்குத் தேவை என்பதை அரசாங்கத்திடம் விவசாயிகளே முன்வைத்திருப்பார்கள் என்பது யதார்த்தமானதாகும்.
இதனைவிடுத்து தாம், தமக்கு நடைமுறைச் சாத்தியமாக செய்கையை மேற்கொண்டு வருகின்ற இந்நிலையில், அதனை மாற்றியமைக்குமாறு அரசாங்கம் கோரியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் போராட்டங்களை மேற்கொண்டிருந்தனர். அதற்குரிய இயற்கை உரங்களையும் திரவ உரங்களையும் வழங்கி அதுவும் பயிர்களுக்கு பாவித்து, திருப்தியில்லாத நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளமை. தமது பரம்பரை விவசாயத் தொழிலை கேள்விக்குட்படுத்தும் நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக விவசாயிகள் கருதுகின்றனர்.
எனவே, விவசாயிகள் தமது அனுபவம் உள்ளிட்ட சாத்தியவள அறிக்கைகளைப் பெற்று, இனிவரும் காலங்களில் விவசாயிகள் மத்தியில் இவ்வாறான புதிய புதிய செயற்றிட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்பதையே விவசாயிகள் உள்ளிட்ட பலரதும் எதிர்பார்ப்பாகும்.