எனினும், 2022ஆம் ஆண்டைப் போல், அந்த ஆண்டு முழுவதும் அரசியல், பொருளாதார நெருக்கடி நீடிக்கவில்லை. கடந்த ஞாயிற்றுக்கிழமை பிறந்த புத்தாண்டு, அந்த நெருக்கடிகளின் நீட்சியாக இருக்குமா அல்லது, அந்த நெருக்கடிகளுக்குத் தீர்வு காணும் வருடமாகுமா என்பதே, இப்போதுள்ள கேள்வியாகும்.
கடந்த ஆண்டு நாம், இரண்டு ஜனாதிபதிகளையும் மூன்று பிரதமர்களையும் இரண்டு மத்திய வங்கி ஆளுநர்களையும் கண்டோம். இவை, எவரும் விரும்பி இராஜினாமாச் செய்ததன் மூலம் ஏற்பட்ட பதவி மாற்றங்கள் அல்ல. ஒரு சந்தர்ப்பம் தவிர்ந்த ஏனைய சந்தர்ப்பங்களில் பொருளாதார நெருக்கடி, ஒருவரைப் பதவியிலிருந்து தூக்கியெறிந்துவிட்டு, மற்றவரைப் பதவியில் அமர்த்தியே இந்தப் பதவி மாற்றங்கள் இடம்பெற்றன.
எல்லாவற்றுக்கும் மேலாக, கடும்போக்குடையவர் என்று பெயர் பெற்ற ஒருவர், பொருளாதார நெருக்கடியால் வெறிகொண்ட இலட்சக்கணக்கான மக்களின் எழுச்சியைக் கண்டு பயந்து, இந்நாட்டை விட்டே ஓடி, பெரும் அதிகாரங்களையும் கொண்ட நிறைவேற்று ஜனாதிபதி பதவியையும் கைவிட்ட ஒரு வருடமாகும்.
இலங்கை, இது போன்றதொரு மக்கள் எழுச்சியைக் கண்டதேயில்லை. அம்மக்கள், கடந்த வருடம் ஜூலை, ஒன்பதாம் திகதி ஆயுதப் படைகளின் சகல தடைகளையும் உடைத்தெறிந்து, ஜனாதிபதியினதும் பிரதமரினதும் அலுவலகங்களையும் உத்தியோகபூர்வ இல்லங்களையும் கைப்பற்றிக் கொண்டனர்.
காலாட்படை, கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளையும் வைத்திருந்த புலிகளை அழித்து, 30 ஆண்டு காலப்போரை முடிவுக்கு கொண்டு வந்ததாக மார்தட்டிக் கொள்ளும் ஒரு பிரதமரை, இந்த மக்கள் எழுச்சி, பதவியை துறக்கச் செய்தமை, கடந்த ஆண்டின் மற்றொரு முக்கிய நிகழ்வாகும்.
இலங்கை, பல தசாப்தங்களாக வெளிநாடுகளிடம் பெற்ற கடனை செலுத்த முடியாது என்று உத்தியோகபூர்வமாக அறிவித்து, தாம் வங்குரோத்து அடைந்திருப்பதை உலகுக்கு அறிவித்த வருடமாகவும் 2022ஆம் ஆண்டு வரலாற்றில் எழுதப்பட்டுவிட்டது. கடந்த ஜூலை மாதம், அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, “இலங்கை வங்குரோத்து அடைந்தவிட்டது” என்ற வார்த்தைகளாலேயே பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
கடந்த வருடம் சட்டத்தை மீறாமல், ஜனநாயக மரபுகளைக் கேள்விக்கூத்தாக்கிய வருடமாகவும் குறிப்பிடலாம். கடந்த பொதுத் தேர்தலில், மாவட்ட ரீதியில் ஒரு பாராளுமன்ற ஆசனத்தையேனும் பெறாத ஒரு கட்சியின் தலைவர், அதே பாராளுமன்றத்தால், நாட்டின் மிகவும் உயர்ந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் என்றால், இங்கு நடைமுறையில் உள்ள ஜனநாயகத்துக்கு ஏதாவது அர்த்தம் உண்டா?
பொருளாதாரத்தை அழித்துவிட்டதாகவும் நாட்டின் இறைமையை வெளிநாட்டவருக்கு தாரைவார்த்துக் கொடுத்ததாகவும், மூன்று மாதங்களுக்கு முன்னர் வரை, பல தசாப்தங்களாக ஒன்றை ஒன்று குற்றஞ்சாட்டிய இரண்டு கட்சிகள் ஒன்றிணைந்தே, கடந்த ஜூலை மாதம் இந்த நகைச்சுவையான நிலைமையை உருவாக்கின.
இந்தக் கட்சிகளின் தலைவர்கள், மற்றைய கட்சியைப் பற்றிக் கூறியவற்றை நம்பிய அவற்றின் ஆதரவாளர்கள், விழிபிதுங்கிப் பார்த்துக் கொண்டு இருக்கும் நிலை உருவாகியிருக்கிறது.
பொருளாதார நெருக்கடியின் உச்சக்கட்டத்தின் போது, நாட்டில் 13 மணித்தியாலங்கள் வரை மின்வெட்டு அமலாக்கப்பட்டது. பல மைல் நீளமான வரிசைகளில், எரிவாயுக்காகவும் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களுக்காகவும் மக்கள் காத்திருந்தனர். விலைவாசி கிடுகிடுவென வேகமாக உயர்ந்தது. தற்போது அவ்வாறான மின்வெட்டு அமலில் இல்லை; வரிசைகளும் காண்பதற்கில்லை.
ஆனால், நாட்டில் மேற்கூறப்பட்ட அத்தனை அரசியல் மாற்றங்களையும் தோற்றுவித்த பொருளாதார நெருக்கடி இன்னமும் தீரவில்லை. உலக வங்கி வழங்கிய 70 மில்லியன் டொலர் பணத்தைக் கொண்டு, அரசாங்கம் எரிவாயுவை இறக்குமதி செய்தது. அதனால், இப்போது எரிவாயுவுக்கு வரிசைகள் இல்லை. அந்தப் பணம் முடிவடைந்ததன் பின்னர், அரசாங்கம் என்ன செய்யப்போகிறதோ தெரியாது. அதேபோல், எரிபொருள் விநியோகத்தை ‘கியூஆர்கோட்’ மூலம் சீராக்கியதால், தற்போது எரிபொருளுக்கான வரிசைகளும் இல்லை.
அதேபோல், வெளிநாடுகளிடம் பெற்ற கடனுக்கான வருடாந்தத் தவணைப் பணமும் வட்டியுமாக வருடமொன்றுக்கு சுமார் 6 பில்லியன் டொலர் வெளிநாடுகளுக்கு செலுத்த வேண்டும். கடந்த ஏப்ரல் மாதம் முதல், அரசாங்கம் முன்னர் பெற்ற வெளிநாட்டு கடன்களை மீள செலுத்தவுமில்லை. அந்தப் பணமும் அரசாங்கத்திடம் இருக்கிறது. அதெல்லாமல், பொருளாதார நெருக்கடி தீரவில்லை. இந்த நிலையிலேயே நாடு, இன்னொரு புதிய ஆண்டில் காலடி எடுத்துவைத்திருக்கிறது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2025ஆம் ஆண்டு, அரசாங்கம் மிகை வரவு செலவுத் திட்டமொன்றை (Surplus budget) சமர்ப்பிக்கும் என்றும் 2048 ஆம் ஆண்டு, இலங்கை சுதந்திரத்தின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் போது, இலங்கை பூரண அபிவிருத்தியடைந்த நாடாக இருக்கும் என்றும் கடந்த வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது கூறினார். ஆனால், அதற்கான திட்டவரைபை அவர் முன்வைக்கவில்லை. எனவே அது அவரது வெறும் கனவாகவே, இப்போதைக்கு இருக்கிறது.
தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு, அவர் சர்வதேச நாணய நிதியத்தையே நம்பியிருக்கிறார். இப்போதைக்கு அரசாங்கமும் சர்வதேச நாணயநிதியமும், அதிகாரிகள் மட்ட உடன்பாடொன்றுக்கு வந்துள்ளன.
அதை நிதியத்தின் நிறைவேற்றுச் சபை அங்கிகரித்தால், நான்கு வருடங்களுக்கு நிதியம் இலங்கைக்கு 2.9 பில்லியன் டொலரை கடனாக வழங்கும். அத்தோடு, இலங்கைக்கு வழங்கப்பட்டு இருக்கும் வெளிநாட்டுக் கடன்களை மறுசீரமைக்க, அதாவது திருப்பிச் செலுத்துவதை நீண்ட காலத்துக்கு ஒத்திப்போட்டு, கடன் தொகையில் ஒரு பகுதியை இரத்துச் செய்ய நிதியம் உதவும்.
ஆனால், நிதியத்திடம் இருந்து அந்தக் கடனைப் பெறுவதற்கும், கடன்களை மறுசீரமைக்கவும் பல முன்நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும். பிரதானமாக கடன் மறுசீரமைப்பு விடயத்தில், கடன் வழங்கிய நாடுகளை இணங்கச் செய்ய வேண்டும்.
அதேவேளை அரசாங்கத்தின் செலவை குறைக்கவும் வருமானத்தை அதிகரிக்கவும், உள்நாட்டில் பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதாவது வரிகளை அதிகரிக்க வேண்டும்; புதிய வரிகளை அறிமுகப்படுத்த வேண்டும். அரச ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். அது இப்போது நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அரச வருமானத்தை அதிகரித்து, வெளிநாட்டுக் கடன்களை திருப்பிச் செலுத்துவதை நீண்ட காலத்துக்கு ஒத்திப் போட்டு, நாணய நிதியத்திடம் இருந்து வருடத்துக்கு சுமார் 750 மில்லியன் டொலர் வீதம் கடன் பெற்றால், அரசாங்கத்தின் மீதான தற்போதைய நெருக்குவாரம் குறைந்து, மூச்செடுக்க அவகாசம் கிடைக்கும்.
மூச்செடுக்க கிடைக்கும் இந்த அவகாசத்தைப் பாவித்து, அரசாங்கம் வெளிநாட்டு கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கும் நுகர்வுக்காக தொடர்ந்து வெளிநாட்டுக் கடன் பெறாத வகையிலும், நாட்டின் வெளிநாட்டு செலாவணி கையிருப்பை பலப்படுத்த வேண்டும்.
ஏற்றுமதித்துறை, உல்லாசப் பிரயாணத்துறை, வெளிநாட்டு முதலீடுகள் போன்றவை, வெகுவாக விரிவுபடுத்தப்பட்டால் இந்த இலக்கை அடைய முடியும். ஆனால், அதற்கான எந்தவொரு திட்டமும் அரசாங்கத்திடம் இருப்பதாகத் தெரியவில்லை.
அதேபோல், நாடு இந்த நிலையில் இருந்தாலும் அரசியல்வாதிகளும் உயர் அதிகாரிகளும் பாரிய அளவிலான ஊழலை கைவிடத் தயாராகவும் இல்லை. இதேகாரணத்தால்த்தான் இதற்கு முன்னர் 16 முறை சர்வதேச நாணய நிதியத்திடம் உதவி பெற்றும், நாடு பொருளாதார அபிவிருத்தியை அடையவில்லை.
சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டாலும் நிலைமை மாறப் போவதில்லை. ஏனெனில், தமது திட்டங்களையே ஜனாதிபதி அமல் செய்வதாக அக்கட்சியினர் கூறுகின்றனர்.
அதேபோல், ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கடந்த அரசாங்கத்தின் காலத்தில், மத்திய வங்கி பிணைமுறி மோசடி போன்ற ஊழல்கள் இடம்பெறும் போது மௌனமாக இருந்தும், வேறு வழிகளிலும் அதனை நியாயப்படுத்தியவர்களே அக்கட்சியிலும் இருக்கிறார்கள்.
நாட்டின் இயற்கை மற்றும் மனித வளங்களைப் பயன்படுத்தி, பொருளாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பான உட்கட்சி கலந்துரையாடல் ஒன்று இடம்பெறுவதாக இருந்தால், அது மக்கள் விடுதலை முன்னணிக்குள் மட்டுமே ஆகும்.
அக்கட்சித் தலைவர்களுக்கு எதிராக, ஊழல் குற்றச்சாட்டுகளும் இல்லை. ஆனால் அதே காரணத்தால், இந்நாட்டு அதிகார வர்க்கம் அவர்கள் அதிகாரத்துக்கு வருவதை விரும்பமாட்டார்கள். அவர்கள் அதிகாரத்துக்கு வந்தாலும், இந்த அதிகார வர்க்கம் அவர்களது திட்டங்களை குழப்பலாம். அதனை முறியடிக்கும் அளவுக்கு அக்கட்சியைச் சார்ந்த தொழில்சார் நிபுணர்கள் இருக்கிறார்களா என்பதும் சந்தேகமே.
இந்த நிலையில் தான், பொதுமக்கள் இவ்வருடம் தமது எதிர்காலத்தைப் பற்றிய முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கிறது. அம்மக்களும் தற்போதைய பொருளாதார நெருக்கடியால், அரசியல் பாடங்களை கற்றார்களா என்பதும் சந்தேகமே!