பொறுப்புள்ள பதவிவகித்த ஒருவரான விக்கி, உண்மைக்குப் புறம்பான ஒரு தகவலை, எந்த அடிப்படையில் முன்வைத்தார் என்பதுதான் இங்கு முன்வைக்கப்படுகின்ற முதலாவது கேள்வியாகும். இந்த வினாவுக்கு, அவர் இந்த நிமிடம் வரை பதிலளிக்கவும் இல்லை; தான் தவறாகக் கூறிவிட்டதாக, மறுத்துரைக்கவும் இல்லை என்பது கவனிக்கத்தக்கது.
இலங்கையில் இனக்கலவரங்கள் ஏற்பட்டதற்கும் இனவுறவு வீழ்ச்சியடைந்ததற்கும் ஆயுததாரிகள், அரசியல்வாதிகளின் கடந்தகால செயற்பாடுகளே முக்கிய பங்கெடுத்துக் கொண்டன எனக் குறிப்பிடலாம். தவிர, உண்மைக்கு உண்மையான, அசலான தமிழர் விடுதலைப் போராட்டமோ, அல்லது முஸ்லிம்கள் நடத்திய ஒலுவில் பிரகடனம் போன்ற வெகுஜனப் போராட்டங்களோ (அவை வேறு திசைக்கு திருப்பப்படாத வரைக்கும்) காரணங்களல்ல என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
ஏதோ தற்சார்பு நியாயங்களின் அடிப்படையில், ஒரு கட்டத்தில் விடுதலை இயக்கங்கள் வடக்கு, கிழக்கில் முஸ்லிம்களை அச்சுறுத்த தலைப்பட்ட போது, அதைத் தட்டிக்கேட்கத் திராணியற்று, தமிழ் தேசிய அரசியல்வாதிகள் மௌனம் காத்த போதுதான், தமிழ், முஸ்லிம் உறவு விரிசலடையத் தொடங்கியது.
அதற்குப் பின்னரான, தமிழ் அரசியல்வாதிகளின் அரசியல் நகர்வுகள், கருத்துகள் மற்றும் அப்போதிலிருந்து தனிவழியில் பயணப்பட்ட முஸ்லிம் அரசியலின் போக்குகள் போன்றன, மேற்படி உறவைப் பிரித்தாளுவதிலேயே இன்பம் கண்டன. அதற்கான மூலதனமாக ஓர் இனம்சார்ந்து, அவர்கள் வெளியிடும் கருத்துகள் அமைந்திருந்தன எனலாம்.
அப்படிப்பட்ட கருத்துகளில் ஒன்றாகவே, மட்டக்களப்பு மாவட்டத்தில் விக்கினேஸ்வரன் அண்மையில் வெளியிட்ட கருத்தையும் முஸ்லிம் சமூகம் நோக்குகின்றது.
நியாயபூர்வமாகச் சில விடயங்களைக் குறிப்பிட்ட சி.வி,“கிழக்கில் 300 தமிழ், தமிழ்ப் பெயர்களைக் கொண்ட கிராமங்கள் முஸ்லிம், முஸ்லிம் பெயர்களைக் கொண்ட கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளன” என்று சொல்லியுள்ளார். இது மிகவும் பாரதூரமான ஒரு தகவலாகும்.
உண்மையில் அப்படி எதுவும் நடந்ததாக, இதற்கு முன்னர் எந்தத் தமிழ் அரசியல்வாதியும் கூறவில்லை. இப்போது, முன்னாள் நீதியரசர் ஒருவர் கூறியிருக்கின்றார். எந்த ஆதாரத்தை வைத்துக் கொண்டு, முஸ்லிம்கள் மீது இப்படியொரு பழியை அவர் போட்டிருக்கின்றார்?
சாட்சியங்களின் அடிப்படையில் தீர்ப்பளித்த முன்னாள் நீதியரசரான விக்கி, ஆதாரம் எதுவுமில்லாமல் இக்கருத்தை வெளியிட்டிருக்க முடியாது. எனவே, அதற்கான ஆதாரங்களை அவர் முன்வைக்க வேண்டும். அல்லது தவறான இக்கருத்தைக் கூறிவிட்டதாக, அவர் மறுத்துரைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
வடக்கிலும் கிழக்கிலும் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக, பல இடம்பெயர்வுகள் இடம்பெற்றன. முஸ்லிம்கள் பாரம்பரியமாக வாழ்ந்த வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இன்னும் கணிசமான நிலப்பகுதி அவர்களுக்கு மீளக் கிடைக்கவில்லை. அவ்வாறே, கிழக்கில் விடுதலைப் புலிகள், ஏனைய ஆயுதக் குழுக்களுக்குப் பயந்து பல முஸ்லிம்கள் வேறு கிராமங்களுக்கு இடம்பெயர்ந்தனர். அதன்பிறகு அக்கிராமங்களில் சில, வேறு இனங்கள் வசமாகின. அதேபோல, தமிழர்கள் ஆண்டாண்டு காலமாக வாழ்ந்த சில இடங்களில் இருந்து அவர்கள் வெளியேறினார்கள். முஸ்லிம்களுக்கு, இராணுவத்துக்குப் பயந்து அவர்கள் வெளியேறினார்கள் எனலாம். அதன்பிறகு அதில் சில கிராமங்களில் முஸ்லிம்களின் ஆதிக்கம் அதிகரித்திருக்கலாம். அதேபோல், தமிழர்கள், முஸ்லிம்கள் காணிகளைக் கொள்வனவு செய்யும் போது, அப்பிரதேசம் அந்த இனத்துக்கான நிலமாக மாறுவதைத் தடுக்கவியலாது. அதுகூட 300 கிராமங்களாக இருக்க முடியாது.
ஆனால், முன்னாள் வடக்கு முதலலமைச்சர் இவ்விடயத்தை தெளிவாகச் சொல்லவில்லை. 300 தமிழ் கிராமங்களை, முஸ்லிம்கள் வலுக்கட்டாயமாக, முஸ்லிம் கிராமங்களாக மாற்றிவிட்டார்கள் என்ற தோரணையிலேயே அவரது கருத்து, பரவலாக விளங்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
நூற்றுக்கணக்கான கிராமங்கள் முஸ்லிம் கிராமங்களாகின என்பது உண்மையென்றால், தமிழர்கள் அதற்கெதிராகவே முதலில் போராடியிருப்பார்கள் என்பதை விக்கி போன்றோர் விளங்கிக் கொள்ள வேண்டும்.
தமிழ், சிங்கள அரசியல்வாதிகள் மாத்திரமன்றி, முஸ்லிம் அரசியல்வாதிகள் கூட, ஆதாரமற்ற கதைகளை மேடைகளில் பேசுவதுண்டு. இது முற்றுமுழுதாக மக்களைக் கவர்வதற்காகவும் வாக்குவேட்டையாடுவதற்காகவும் என்பது பொய்யல்ல. அப்படியான நிறைய உதாரணங்களை நாம் தொடர்ச்சியாகக் கண்டு வருகின்றோம்.
பேரினவாத அரசியல் சக்திகள், சிங்கள மக்களின் வாக்குகளைச் சூறையாடுவதற்காகத் தமிழர்கள் தொடர்பில் போலிப் பிரசாரங்களை முன்னெடுத்தன. அதைத் தொடர்ந்து அவ்விதமான ஓர் அணுகுமுறையை முஸ்லிம்கள் விடயத்தில் கையாண்டு வருகின்றன. தமிழர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக, மக்களால் புறக்கணிக்கப்பட்ட பெயர் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய அரசியல்வாதிகள் பலர், தம்மைத் தமிழர்களின் பாதுகாவலர்களாக காண்பிக்கும் நோக்கத்துடன் முஸ்லிம், சிங்கள இனங்களுக்கு எதிராக, ஆதாரமற்ற கதைகளைக் கூறி வருவதைக் காண்கின்றோம். முஸ்லிம் அரசியலிலும் இது நடக்கின்றது என்பதை மறுக்க முடியாது.
உயர்ந்த மட்டத்தில் எழுத்தறிவும் கல்வி அறிவும் உள்ள இலங்கையில், எந்த இனத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகள் என்றாலும் சரி, மேடைகளில் கருத்துகளைக் கூறும்போது, பலமுறை அதன் உண்மைத்தன்மையை அறிய வேண்டும். அது, எவ்விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் சிந்திக்கத் தவறக் கூடாது.
ஆனால், ஒன்றை நூறாக்கி, இல்லாத ஒன்றை இருப்பதாகக் காட்டி, மக்கள் முன்னிலையில் கூறுகின்ற சில கருத்துகள், உண்மையில் சமூக நலனைக் காட்டிலும் தமது அரசியல் இருப்புக்காக, அவர்கள் சொல்லும் பொய்கள் என்பதை மக்கள் நன்கறிவார்கள்.
இந்தக் கோணத்திலேயே சி.வி. விக்கினேஸ்வரனின் கருத்தும் இன்று நோக்கப்படுகின்றது. சில முஸ்லிம் கிராமங்களும் சில தமிழ்க் கிராமங்களும் மாறுதலுக்குள்ளாகி இருக்கின்றன என்பதுதான் நிதர்சனம். ஆனால், 300 தமிழ்க் கிராமங்கள் அப்படியே முஸ்லிம் கிராமங்களாக மாறிவிட்டன என்பது எந்த வகையிலும் உண்மையாக இருக்க முடியாது. இருப்பினும், முன்னாள் நீதியரசரான விக்கினேஸ்வரன், சாதாரணமான அரசியல்வாதிகள் போல, ஆதாரம் எதுவும் இல்லாமல் இக்கருத்தைக் கூற முடியாது என்ற அடிப்படையில் நோக்கினால், அவர் அதற்கான ஆதாரங்களை முன்வைக்க வேண்டும் என்பதே, முஸ்லிம்களின் கோரிக்கையாகும். அல்லது, தான் கூற வந்தது, என்ன என்பதைத் தெளிவுபடுத்த வேண்டியது அவசியம்.
அவ்வாறு அவர் செய்யத் தவறுவாராயின், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஏற்கெனவே இருக்கத்தக்கதாகப் புதிய கூட்டணி ஒன்றை உருவாக்கியுள்ள முன்னாள் வடக்கு முதலமைச்சர், ஏனைய அரசியல்வாதிகளைப் போல, தமது கூட்டணி அதிகாரத்தைப் பெறுவதற்கும் அதனூடாகத் தமிழர் அரசியலில் இன்னுமொரு சுற்று வருவதற்குமாக, இந்த 300 கிராமங்கள் அழிந்த கதையை கூறியிருக்கின்றார் என்றே முஸ்லிம்கள் கருதுவார்கள்.
தமிழ்த் தரப்பிலிருந்தோ, முஸ்லிம்கள் பக்கத்திலிருந்தோ முன்வைக்கப்படும் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள் இன்னும் தமிழ்-முஸ்லிம் உறவை அதளபாதாளத்துக்கே இட்டுச் செல்கின்றன என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக, முஸ்லிம்களின் மதிப்பைப் பெற்றிருந்த வடக்கின் முன்னாள் முதலமைச்சர், முஸ்லிம்களை நில ஆக்கிரமிப்பாளர்கள் போல பேசியிருப்பதானது, முஸ்லிம்களின் மனங்களில் நாவால் சுட்ட புண்ணாக ஆகியிருக்கின்றது.
இலங்கை அரசியலில், சண்டியர்கள் இருக்கின்றார்கள்; போதைவஸ்துடன் தொடர்புள்ளவர்கள் உள்ளனர்; கடத்தல் காரர்கள், மாதுப் பிரியர்கள், சமூக விரோதிகள் இருக்கின்றனர்.
நாடாளுமன்றத்தில் இருக்கின்ற பலருக்குப் போதிய கல்வித் தகைமை இல்லையென்ற தகவல்களும் பகிரங்கமாகி இருக்கின்றன. அப்படிப்பட்ட பேர்வழிகள் வேண்டுமென்றால் ஆதாரமற்ற, இனவாதத்தைத் தூண்டும் கருத்துகளைச் சொல்லி விட்டுப் போகலாம்.
ஆனால், படித்தவர்கள், நாட்டைப் பற்றிச் சிந்திப்பவர்கள், நடுநிலை அரசியல்வாதிகள், இனம் கடந்து பணியாற்றுபவர்கள், விக்கினேஸ்வரன் போல மீயுயர் பதவிகளை வகித்து, முஸ்லிம்களின் அபிமானத்தைப் பெற்றவர்கள் வெளியிடுகின்ற கருத்துகள் மிகவும் கவனமானவையாகவும் இன உறவைக் காயப்படுத்தாத அளவுக்கு பக்குவமானவையாகவும் அமைதல் இன்றியமையாதது.
அந்த வகையில், 300 தமிழ்க் கிராமங்கள், முஸ்லிம் கிராமங்களாக மாறியதாக அவர் கூறியிருக்கின்ற பாரதூரமான கருத்து, தமிழ் கடும்போக்குச் சக்திகளைத் தூண்டிவிட்டுள்ளதுடன், முஸ்லிம்கள் தம்மீது அபாண்டங்கள் சுமத்தப்படுவதாக விசனமுற்று இருக்கின்றனர். எனவே, அவரே இந்தக் கருத்தின் ஆழஅகலங்கள், உள்ளர்த்தங்களைத் தெளிவுபடுத்தி, அன்றேல் மறுத்துரைத்து, இவ்விவகாரத்துக்குப் பிராயச்சித்தம் தேடுவது நல்லது.
கல்முனை: எல்லோருக்கும் சமகாலத்தில் தீர்வு?
கல்முனை முஸ்லிம், தமிழ் மக்களுக்கு இடையிலான பிரதேச செயலக விவகாரம், அதேபோன்று கல்முனை – சாய்ந்தமருது மக்களுக்கு இடையிலான உள்ளூராட்சி சபை இழுபறி ஆகியவற்றுக்கு சமகாலத்தில் தீர்வு காண்பது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன. எல்லோருடைய அபிலாஷைகளும் நியாயமான அடிப்படையில், நல்லதொரு தீர்வு கிடைக்க வேண்டும் என்பதாகவே இருக்கின்றன.
சாய்ந்தமருது மக்கள் கடந்த பல வருடங்களாகத் தமக்கு தனியான ஒரு நகரசபை வேண்டுமென்று கோரி வருகின்றனர். ஒன்றரை வருடங்களாக வெகுஜனப் போராட்டங்களை நடத்தி, பல வாக்குறுதிகளைக் கேட்டு, கிட்டத்தட்ட மனம் வெறுத்த நிலையில் இருப்பதாகச் சொல்ல முடியும்.
விடயத்துக்குப் பொறுப்பாகவிருந்த அமைச்சர் மட்டுமல்ல, நாட்டின் பிரதமர் கூட, நேரில் வந்து வாக்குறுதி அளித்திருந்தும், சாய்ந்தமருது மக்களின் தனியான நகர சபைக் கனவு இன்னும் நிறைவேறவில்லை.
மறுபக்கத்தில், கல்முனையில் இயங்கிவந்த கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தைத் தனியான அந்தஸ்துள்ள பிரதேச செயலகமாகத் தரமுயர்த்த வேண்டுமென்று கோரி, தமிழ் மக்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். தேரர்கள் சிலரும் இதற்கு ஆதரவளித்திருந்த நிலையில், ஞானசார தேரரின் வாக்குறுதியை அடுத்து உண்ணாவிரதம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.
உத்தியோகபூர்வ அதிகாரம் எதுவுமற்ற மேற்படி தேரரின் வாக்குறுதியைத் தமிழர் தரப்பு நம்பியபோதும் அவர் சொன்ன ஒரு மாதகாலம் முடிவடைந்த பின்னர் கூட, தமிழர்களின் தனிப் பிரதேச செயலக கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்பது தனிக்கதை.
இவ்வாறான நிலையிலேயே, முஸ்லிம் காங்கிரஸ் சார்பான குழுவினர் விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் வஜிர அபேவர்தனவைச் சந்தித்து, இவ்விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.
இக்கூட்டத்தில், கல்முனை பிரதேச செயலக எல்லையை யாருக்கும் பாதிப்பில்லாத வகையில் மூன்று பிரிவுகளாகப் பிரிக்க இணக்கம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, (இருக்கின்ற கல்முனை பிரதேச செயலகத்துக்கு மேலதிகமாக) தமிழர்கள் கோரிய கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தையும் மருதமுனை மற்றும் நற்பிட்டிமுனை பிரதேசங்களை இணைத்து மருதமுனை பிரதேச செயலகத்தை உருவாக்குவதற்கும் முஸ்லிம் காங்கிரஸ் தரப்பில் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில், தமிழர் தரப்புடன் அமைச்சர் வஜிர பேசுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. அப்படியாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதற்கு மாற்றமான நிலைப்பாடுகளை எடுக்குமாயின் மூன்று பிரதேச செயலக எல்லைகளை வகுப்பதில் தாமதம் அல்லது தடங்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.
இதேவேளை சமகாலத்தில், சாய்ந்தமருது மக்களின் கோரிக்கையாக இருக்கின்ற தனியான நகர சபையை உருவாக்குவதற்கும் முன்மொழியப்பட்டதாக அறிய முடிகின்றது. முன்னதாக, சாய்ந்தமருது முக்கியஸ்தர் குழுவினர் மு.கா தலைவரைச் சந்தித்தமை இங்கு நினைவு கொள்ளத்தக்கது.
எச்.எம்.எம்.ஹரீஸ் எம்.பி உள்ளிட்ட முஸ்லிம் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களே இவ்விடயத்தில் இணக்கம் கண்டுள்ளார்கள் என்றாலும், சாய்ந்தமருதுக்குத் தனியான உள்ளூராட்சி சபை வழங்குவதும், உப பிரதேச செயலகத்தைத் தமிழர்களுக்கு கொடுப்பதும் தமக்குச் சாதகமாக அமையாது என்று ஆரம்பத்திலிருந்து குரல் கொடுத்து வந்த கல்முனை செயற்பாட்டாளர்கள் இவ்விடயத்தை எவ்வாறு நோக்குவார்கள் என்பதை, அனுமானிக்க முடியாதுள்ளது.
எது எப்படியோ, நடப்பு ஆட்சிக்காலத்தின் இறுதித் தறுவாயில் நாடு இருக்கின்ற நிலையில், இதுவெல்லாம் நடந்தால்தான் உண்மை!