(சாகரன்)
இரண்டு நாள் நிகழ்வாக ஜுன் 2, 3ம் திகதிகளில் நடைபெற்று முடிந்திருகின்றது. பார்வையாளனாக கலந்துகொள்ளும் வாய்பு எனக்கு கிடைத்தது. கடந்த வருடம் மலையகத்தில் நடைபெற்ற போது நான் இலங்கையில் நின்றிருந்து போது நிகழ்வில் நேரடியாக கலந்து கொள்ளும் விருப்பு இறுதியாக நேரடிக் காணொளியில் காணும் வாய்பிற்குள் சுருங்கிப் போய்விட்ட வருத்தத்தை இம்முறை நீக்கிவிட்ட உணர்வு எனக்குள் ஏற்பட்டது.
நிகழ்வுகளில் சம அளவிற்கு மேல் பெண்கள் கலந்துகொண்டதும் அதிலும் பல இளையோர் தமது முதன்மை மொழிப் புலமை ஆங்கிலமாக இருந்தாலும் தமிழிலும் அதேயளவு புலமையையும் காட்டி தமது நிகழ்ச்சிப் பங்களிப்புகளை செய்தது மகிழ்வாகவும் நம்பிக்கை ஊட்டுவதாகவும் நிறைவாகவும் இருந்தது.
காலணி ஆதிகத்திற்கு உள்ளான தூர தேசத்து ஆசிய நாடுகளில் அவ் நாடுகளின் வளங்களை சுரண்ட மேற்கத்தய தேசத்தினர் கடல் வழிப் பயணம் மேற்கொண்டு இலங்கை உட்பட்ட தூர தேசத்து ஆசிய நாடுகளில் மேற்கொண்ட காலனியாதிக்கம் இன்று நாம் இந்த மேற்குலகத்தினாரால் உருவாக்கப்பட்ட இன முரண்பாட்டினால் உருவான யுத்தம் தற்போது கனடா போன்ற நாட்டிற்கு எம்மை குடியேற்றவாசிகளாக்கியது.
கிட்டத்தட்ட சமகாலத்தில் இதே மேற்கத்திய தேசத்தவரால் வட அமெரிக்காவில் உள்ள கனடாவிற்கு நிலங்களை அபகரித்தல் என்ற நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட காலனி ஆதிகம் அங்கு பத்தாயிரம் வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வந்த பூர்வீக குடிகளை நிலமற்றவர்கள் ஆக்கிய நிகழ்வுகளுக்கும் இடையேயான ஒருமைப்பாட்டை தெளிவுபடுத்தும் முன்னிலைச் செயற்பாடுகள் இந்த இரு நாட்கள் நிகழ்வின் சிறப்பு அம்சம் என்று என்னால் உணரப்பட்டது.
இது ‘ரொறன்ரோ’ என்ற நகரத்தின் பூர்வீக பெயரை ‘ரகறொன்ரோ’ என்று அழைப்பிதழில் பதிவு செய்தது ஆகட்டும்….. பூர்வீக குடியின் பிரநிதியை ஒருவரை அழைத்து அவரின் கருத்தை கேள்விகளுக்கான பதில்களை அறிந்ததாக இருக்கட்டும்…. எமது பாரம்பரிய கலையான பரதம் மூலம் இந்த மேற்கத்திய ஆக்கிரமிப்பை வெளிப்படுத்தும் நாட்டிய நடன சொல்லாடல் ஒளிப்பதிவு முயற்சியாக இருக்கட்டும்….. கூடவே எமது தாயகத்தில் எமக்கு ஏற்பட்ட ஏற்பட்டுவரும் நில அபகரிப்பும் இதனைத் தொடர்ந்த பூர்வீக குடிகளின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை கனடா போன்ற நாடுகளில் நடைபெற்ற நடைபெற்று வரும் பூர்வீக குடிகளின் நில அபகரிப்புடன் கூடிய செயற்பாடுகள் இந்த இனக் குழுமங்களின் இருப்புக்களை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளுடன் ஒப்பிட்டு ஆதாரங்களுடன் வெளிப்படுத்திய ஆய்வறிக்கை ஆகட்டும்…. சுpறப்பு. என்னைப் பொறுத்தவரை நான் தேடிக் கொண்டிருந்த முக்கிய ஆவணங்களில் ஒன்றாகவே இவற்றை பார்க்க வைத்திருக்கின்றது. இலக்கிய சந்திப்பொன்றின் முக்கிய பயனாளியாக அவற்றை நான் உணர்கின்றேன். நிகழ்ச்சி பங்காளர்களுக்கு வாழ்த்துகள்
கனடிய மண்ணில் எமது மொழிசார்ந்த கலைகளான நாடகம் கூத்து சினிமா போன்றவற்றின் வளர்ச்சி பற்றி குறுக்குவெட்டு முகப்பார்வையில் எமது அனுபவ வித்தகர்களின் ஆய்வுரை எம்மை விழிப்படையச் செய்திருக்கின்றது. குறிப்பாக கனடிய தமிழ் சினிமா பற்றி பார்வை. நாடகத்தில் அதிக கவனம் செலுத்துவது நாம் செலுத்தும் உழைப்பிற்கு ‘அதிக’ பிரயோசனங்களைத் தரும் என்ற வாதம் அர்த்தங்கள் நிறைந்தவை. குளியல் அறைக்குள் கமரா என்ற சொல்லாடல் மோசமான சினிமாவின் வக்கிரங்கள். தோலுரித்து காட்டியமை நாகரீக சமூகத்தின் அடையாள வெளிப்பாடு. நிகழ்ச்சி பங்காளர்களுக்கு வாழ்த்துகள்.
புலம் பெயர் தேசங்களில் இளையோருக்கும் தமது பெற்றோருக்கும் இடையிலான கலந்துரையாடல்களின் அவசியமும். இளையோர் தமது மனக் கிடக்கையும் தமது செயற்பாடுகளில்(குறிப்பாக கல்வி, வேலை) கிடைக்கும் வெற்றி தோல்விகளில் தமது பெற்றோரை மகிழ்சிப்படுத்தும் நோக்குடன் செயற்படும் போக்கும் இதில் உள்ள இடைவெளிகள் இளையோர் தமது மன உழைச்சல்களை ‘கொட்டி’த் தீர்க்க முடியமால் தவிக்கும் சூழல்களையும் எடுத்தியம்பியிருக்கும் ஆய்வறிக்கை மேலும் கலந்துரையாடலுக்குள் உள்படுத்தப்பட்டு கவனத்தில் எடுத்து செயற்பட வேண்டிய அவசிய அவசரமான செய்தியை கூறி நிற்பதாக நான் உணர்ந்தேன். கூடவே பெற்றோர் தரப்பு ‘எதிர்பார்புகள்’ எம் பேசப்பட வேண்டியவை. வாழ்த்துகள் நிகழ்வில் நேரடியாக கலந்து கொண்டவர்களுக்கு.
எல்லா நிகழ்சிகளையும் காண்பதற்குரிய நேர அட்டவணையை நான் கொண்டிருக்கவில்லை என்ற குற்ற உணர்வு என்னை ஆக்கிரமிக்காமல் இல்லை. இதனால் முழமையான விடயங்களை என்னால் தெரியப்படுத்த முடியவில்லை.
நிகழ்ச்சியின் சிகரம் ‘இன்றைய ஸ்பெஷல் மாட்டிறைச்சி கொத்து’ மாட்டிறச்சி மறுப்பு இந்துத்துவாவாதிகளுக்கு சமர்பணம். விருந்தோம்பல் சிறப்பிலும் இதுவே ‘சேதி’ கூறும் சிறப்பு.
June 03, 2018