தொழில்நுட்பம், வர்த்தகத்தினதும் இலாபத்தினதும் முக்கிய பங்காளியாகிய நிலையில், மக்களிடமிருந்து அந்நியப்பட்டதாக மாறிவிட்டது. இன்று, பல்தேசியக் கம்பெனிகளின் கைகளில், தொழில்நுட்பம் தங்கிவிட்டது.
அந்தப் பல்தேசியக் கம்பெனிகள், அரசாங்கங்களைக் கட்டுப்படுத்துகின்றன. அரசாங்கங்களின் உதவியுடன், பல்தேசியக் கம்பெனிகள், தொழில்நுட்பத்தை நடைமுறைப்படுத்துகின்றன. இதன் ஆபத்துகள் பயங்கரமானவை.
உலகமே இப்போது, 5G தொழில்நுட்பத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. நான்காவது தொழிற்புரட்சியின், முக்கியமான அம்சமாக அமைந்துள்ள 5G தொழில்நுட்பம், புதிய வாய்ப்புகளையும் சாத்தியங்களையும் உருவாக்கியுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.
அதேவேளை, அதற்கு நாம் கொடுக்கும் விலை என்ன? அவ்வாறானதொரு விலையைக் கொடுத்து, இந்தத் தொழில்நுட்பத்தைப் பெறுவது பயனுள்ளதா? இந்தத் தொழில்நுட்பம் இல்லாமல் மனிதகுலத்தால் தப்பிப்பிழைக்க முடியாதா? இவை நாம் கேட்க வேண்டிய கேள்விகள்.
5G: சில அடிப்படைகள்
தொலைத்தொடர்புத் துறையில், 1970களில் முக்கியமான திருப்பமொன்று ஏற்பட்டது. அலைபேசிகளின் அறிமுகம், கம்பிகள் இல்லாத தொலைபேசி உரையாடலைச் சாத்தியமாக்கியது. இது ‘1ஜி’ எனப்பட்டது.
‘ஜி’ என்பது, தலைமுறையைக் குறித்தது (G- Generation). தொலைத்தொடர்புத் துறையில் ஏற்பட்ட வளர்ச்சி, அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்த்தியது. ‘அனலொக்’ தொழில்நுட்பத்தில் இருந்து, டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கான மாற்றம் ‘2ஜி’ எனப்பட்டது.
அதைத் தொடர்ந்து, திறன்பேசிகளின் வருகை, ‘3ஜி’யை நோக்கி நகர்த்தியது. வேகமான இணையப் பாவனையைத் சாத்தியமாக்கிய தொழில்நுட்ப மாற்றம், ‘4ஜி’ எனப்பட்டது.
இதன், அடுத்த கட்டமான நகர்வே ‘5ஜி’ ஆகும். இந்த 5G தொழில்நுட்பமானது, அதிவேக இணையப் பாவனைக்கு வழிவகுக்கிறது. இது அனைத்தையும் இணையத்தின் வழி செயற்படுத்துவதற்கு உதவும்.
பொருள்களின் இணையம் (Internet of Things – IOT), தானியங்கி வாகனங்கள், தீவிர உயர் வரையறை காணொளி (ultra high-definition video) உட்பட்ட பல நவீன தொழில்நுட்பங்களை, நடைமுறைப்படுத்துவதற்கான அடிப்படையே 5G ஆகும். இன்னும் தெளிவாகச் சொல்வதென்றால், நாம் தற்போது காண்கின்ற நான்காவது தொழிற்புரட்சியை, முழுமையாக நடைமுறைப்படுத்த 5G அவசியமானதாகும்.
அனைத்திலும் மெய்நிகர் உலகைப் படைப்பதற்கு, அதிவேக இணையம் அவசியம். அந்த மெய்நிகர் உலகம், யதார்த்தத்திலிருந்தும் நடைமுறையிலிருந்தும் மனிதர்களை அகற்றுகிறது. இந்த, மெய்நிகர் உலகைப் படைக்க வேண்டிய தேவை, பல்தேசியக் கம்பெனிகளுக்கும், அவை இயக்குகின்ற அரசாங்கங்களுக்கும் அத்தியாவசியமானது.
பல்தேசியக் கம்பெனிகள், செயற்கை நுண்ணறித் தொழில்நுட்பத்தையும் தானியங்கல் தொழில்நுட்பத்தையும் அறிமுகப்படுத்துவதன் மூலம், ஏராளமான வேலையிழப்புகளைத் தோற்றுவித்துள்ளன. இதன் விளைவால் ஏற்படக்கூடிய அமைதியின்மையையும் எழுச்சிகளையும் தடுப்பதற்கான வழிகளையும் தொழில்நுட்பத்தின் உதவியுடனேயே, இந்தக் கம்பெனிகள் உருவாக்கியுள்ளன. அதில் ஒன்றே மெய்நிகர் உலகு.
5G: ஆபத்துகள்
5G பற்றிய எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், பல நாடுகளின் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், இத்தொழில்நுட்பத்தை நடைமுறைப்படுத்தத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில், 5Gயை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அதற்கு ஆதரவு திரட்டும் இயக்கமொன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவர்களால், ‘மண்ணிலும் விண்ணிலும் 5Gயை நடைமுறைப்படுத்துவதைத் தடுப்பதற்கான சர்வதேச அழைப்பு’ (International Appeal to Stop 5G on Earth and in Space) விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அழைப்பில், இதுவரை 187 நாடுகளைச் சேர்ந்த ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கையொப்பம் இட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக தகவல்களை www.5gspaceappeal.org என்ற இணையத்தளத்தில் காணமுடியும்.
5G தொழில்நுட்பமானது, மக்களை மின் உணர்திறன்மிக்கவர்களாக (electro-hypersensitive EHS) மாற்றிவிடும். மின்காந்தப் புலத்தின் (Electromagnatic Field -EMF) தாக்கத்துக்கு உள்ளாகுபவர்கள், மின் உணர்திறன் மிக்கவர்களாக மாறுகிறார்கள்.
இதனால் ஏராளமான பாதிப்புகள் ஏற்படுகின்றன. மறதி, கவனஞ்செலுத்த இயலாமை, இதயத்துடிப்பு அதிகரித்தல், சோர்வும் களைப்பும், காது, கண் போன்றவற்றில் வலி ஏற்படுதல், வீங்குதல் போன்றன இதன் சில பாதிப்புகள் ஆகும். இதன் ஆபத்து யாதெனில், இது பலசமயங்களில் நிரந்தரமான உடலியல் உபாதைகளுக்கு வழிவகுக்கும்.
தொலைத்தொடர்பு துறையில் ஏற்பட்டுவரும் நவீனமயமாக்கலின் விளைவால் மின்காந்தப்புலம், வானொலி அதிர்வெண் (Radio Frequency – RF) கதிர்வீச்சு, தொடர்ச்சியான அதிகரித்து வந்துள்ளது. வலுவான தொலைத்தொடர்பு சைகைகள், வேகமான இணையம் போன்றன அதிகரித்த வானொலி அதிர்வெண் மற்றும் மிகை அளவிலான மின்காந்தப்புலம் ஆகியவற்றின் விளைவாலேயே சாத்தியமாகின. ஆனால் இதனால் ஏற்படும் மருத்துவஞ்சார் பிரச்சினைகள் குறித்துப் பேசப்படுவது குறைவு.
2015ஆம் ஆண்டு, தொலைத்தொடர்புத் துறையினர் பொறுப்பற்ற முறையில் அலைக்கற்றையின் அளவை அதிகரிப்பதானது சாதாரண மக்களுக்கு ஏராளமான நோய்களையும் நிரந்தரக் குறைபாடுகளையும் ஏற்படுத்தும் என மின்காந்தப்புலத்தின் நிபுணத்துவம் பெற்ற 230 சர்வதேச விஞ்ஞானிகள், ஐக்கிய நாடுகள் சபைக்கு கடிதம் எழுதினார்கள். அதில், ‘மின்காந்தப்புலமானது மனிதர்களின் உடற்பகுதிகளில் நிரந்தரமான உடற்பாதிப்புகளை ஏற்படுத்தி விடுகிறது என்பதை, அறிவியல் ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.
தொலைத்தொடர்புத் துறையின் நவீனமயமாக்கலின் பெயரால் பொறுப்பற்ற முறையில் அதிகளவிலான மின்காந்தப்புலமானது உமிழப்படுகிறது. இது புற்றுநோய், உயிர்மப் பாதிப்புகள், மரபணுச் சிதைவுகள், மீள்உற்பத்திச் செயன்முறையில் நிரந்தரமான கட்டமைப்பு மற்றும் செயற்பாட்டு மாற்றங்கள் என்பவற்றை ஏற்படுத்தும். இதன் பாதிப்புகள் மனிதகுலத்துக்கு மட்டுமன்றி, தாவரங்கள், விலங்குகள், பறவைகள் என மொத்தப் பூமிப்பந்தையே பந்தாடவல்லன.’ குறிப்பிட்டுள்னர்.
5Gயை நடைமுறைப்படுத்துவதை உடனடியாக நிறுத்தக்கோரி, 2017 செப்டெம்பரில் 35 நாடுகளைச் சேர்ந்த 180 விஞ்ஞானிகளும் மருத்துவர்களும் அழைப்பொன்றை விடுத்திருந்தார்கள். அவ்வழைப்பில் ‘மின்காந்தப்புலமானது மோசமான பாதிப்புகளை மனிதகுலத்துக்கு ஏற்படுத்தும் என்பது, விஞ்ஞான ரீதியாக நிறுவப்பட்டுள்ள நிலையில், 5Gயை நடைமுறைப்படுத்துவதால் ஏற்படப்போகும் ஆபத்துகளை முழுமையானதும் சுதந்திரமானதுமான விசாரணை மூலம் அறிக்கைப்படுத்தும் வரை 5G நடைமுறைப்படுத்தல் தள்ளிவைக்கப்பட வேண்டும்.இந்த விசாரணை, தொலைத்தொடர்புத் தொழிற்றுறையால் அன்றி, சுயாதீனமாகச் செய்யப்பட வேண்டும்’ என்றும் கோரியிருந்தார்கள்.
5G நடைமுறைப்படுத்தல் குறித்து கருத்துரைத்துள்ள ஹவார்ட் பல்கலைக்கழகத்தின் பிரயோகப் பௌதீகவியல் விஞ்ஞானி ரொனால்ட் பவல், “மனிதகுலச் சூழலில், பாதுகாப்பான முறையில் 5Gயை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியம் இல்லை. ஆனால், இதை நடைமுறைப்படுத்துவதற்கான ‘மோசமான’ மற்றும் ‘மிகமோசமான’ வழிமுறைகள் உள்ளன. எனவே, பாதுகாப்பான 5G நடைமுறைப்படுத்தல் என்பது மோசடியே” என்று தெரிவித்துள்ளார்.
சட்டரீதியாக இதைக் கையாள்வதற்கான வழிவகைகள் குறைவானவே காணப்படுகின்றன. பல மேற்குலக நாடுகளிலேயே, தொலைத்தொடர்பு தொடர்பான சட்டங்கள் மிகப் பழையனவாக இருந்து வந்துள்ளன. எனவே, அதன் துணையுடன் 5Gயின் பாதிப்புகளை அறியும்வரை, அதைத் தடுப்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது. பெல்ஜியம், சுவிஸ்லாந்து போன்ற நாடுகள் 5G நடைமுறைப்படுத்தலைப் பிற்போட்டுள்ளன.
வொஷிங்டன் பல்கலைக்கழக மருத்துவ இரசாயனவியல் பேராசிரியர் மார்ட்டின் போல், இந்த மின்காந்தப்புல கதிர்வீச்சுகள் என்ன வகையான இரசாயன மாற்றங்களை உடலுக்கு ஏற்படுத்துகின்றன என்பதை, ஆய்வு செய்து வெளியிட்டுள்ளார். நாம் பயன்படுத்தும் அலைபேசிகள், இணையத்தைப் பெறப் பயன்படுத்தும் ‘ரவுட்டர்கள்’ என்பவற்றின் கதிர்வீச்சானது, எமது இழையங்களில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இந்தக் கதிர்வீச்சானது எமது இழையங்களுக்கு, அசாதாரண அளவிலான கல்சியத்தை உட்செலுத்தி, அதன்மூலம் நைட்ரிட் ஒக்சைட்டையும் மிகைதிறன் ஓக்சைட்டையும் உருவாக்குகின்றன. இது உடலில் பெரொக்ஸி நைட்ரேட்ஐ உருவாக்குகிறது. இது மிகவும் மோசமான விளைவாகும் என்பதோடு, இன்று ஏற்படும் மோசமான பல நோய்களுக்குக் காரணமாக அமைகிறது. இதைச் சக்தி குறைந்த வானொலி அலைகளே செயற்படுத்தும். எனவே, சக்தி கூடிய கதிர்வீச்சானது, இதன் பாதிப்புகளைப் பன்மடங்காக்கும்.
5G radiofrequency கதிர்வீச்சானது மூன்று வகையான கதிர்வீச்சுகளைப் பயன்படுத்துகிறது. முதலாவது, குறைந்த சக்தியுள்ள வானொலி அலைகள். இரண்டாவது, அதைவிட அதிக சக்தியுள்ள நுண்ணலைக் கதிர்வீச்சு. மூன்றாவது, மிக அதிக அளவில் சக்தியைக் கொண்ட மில்லிமீற்றர் அலைகள்.
இதில் கவனிக்க வேண்டியது யாதெனில், மில்லிமீற்றர் அலைகள், 5ஜியிலேயே முதன்முறையாகப் பயன்படுத்தப்படுகின்றன. 4Gயானது 6 GHz வரையான அதிர்வெண்களைப் பயன்படுத்துகிறது. அதேவேளை, 5Gயானது 30 GHz முதல் 100 GHz வரையான அதிர்வெண் அளவில் செயற்படுகிறது. மனிதகுலம், இதுவரை இவ்வளவு அளவிலான அதிர்வெண்ணுக்கு உட்பட்டது கிடையாது.
குறிப்பாக, இவ்வளவு அதிகளவிலான அதிர்வெண்ணைச் சாத்தியமாக்கும் மில்லிமீற்றர் அலைகள், மனித உடலின் தோலின் இழையத்தின் உள்ளே, 2 மில்லிமீற்றர் வரை ஊடுருவக் கூடியவை. இவை, உடலில் எரிவை ஏற்படுத்தும் உணர்வை ஏற்படுத்த வல்லவை. இதனாலேயே மேற்குலக நாடுகளில் கலகத் தடுப்பு நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் மில்லிமீற்றர் அலைகளைக் கொண்டவை. அதேவேளை, விமான நிலையங்களில் உள்ள முழுஉடலையும் ‘ஸ்கான்’ செய்யும் கருவிகளும் இதையே பயன்படுத்துகின்றன. மில்லிமீற்றர் அலைகள் மிகவும் ஆபத்தானவை. இன்றுவரை 5G ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்த செய்திகள் எதுவும் பொதுவெளியில் பரவாமல் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பார்த்துக் கொள்கின்றன. 5G உலகையே மாற்றிவிடும் என்ற பிம்பம் கட்டியெழுப்பப்பட்டுள்ளது.
இதன் மிகப்பெரிய ஆபத்து யாதெனில், கதிர்வீச்சோ, மின்காந்தப்புலமோ, அதிர்வெண்ணோ எம் கண்களுக்குத் தெரிவதில்லை. எனவே, எதையும் கட்டுப்படுத்தும் வலு எம்மிடம் இல்லை. 5Gயின் பெயரால் மனிதகுலத்துக்கு எதிரான சத்தமில்லாத போர் அரங்கேறுகிறது. இலாபவெறியும் அதிகார வேட்கையும் இதைச் சாத்தியமாக்குகின்றது.