இதில் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் – ஆய்வாளர்கள் பெருமளவில் கலந்தது கொண்டனர். இவர்களின் தாயகங்கள் பெரும்பாலும் 1950-களுக்கு பின்பு விடுதலை போராட்டங்கள் நடத்தப்பட்டதனால் கொலோனிய ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை அடைந்தவை.
ஆப்பிரிக்காவின் காலனித்துவ நீக்கம் 1951 இல் லிபியாவுடன் தொடங்கியது. 1950கள் 1960களில் பல நாடுகள் விடுதலை அடைந்தன. 1960ல் பிரெஞ்சு காலனித்துவதிலிருந்து மேற்கு ஆபிரிக்காவின் பெரும்பகுதி சுதந்திரம் அடைந்தன .
இருப்பினும் போர்த்துக்கல் போன்ற சில ஆதிக்க நாடுகள் தங்கள் மேலாதிக்கத்தை கைவிட தயக்கம் காட்டின. இது ஒரு தசாப்தம் அல்லது அதற்கும் மேலாக நீடித்த கசப்பான விடுதலைப் போர்களுக்கு வழிவகுத்தது. சுதந்திரம் பெற்ற கடைசி ஆப்பிரிக்க நாடுகள் கினியா-பிசாவ் (1974), மொசாம்பிக் (1975), அங்கோலா (1975) போர்ச்சுகலில் இருந்தும்; 1977 இல் பிரான்சில் இருந்து ஜிபூட்டி; 1980 இல் பிரிட்டனில் இருந்து ஜிம்பாப்வே; மற்றும் நமீபியா 1990 இல் தென்னாப்பிரிக்காவிலிருந்து. எரித்திரியா பின்னர் 1993 இல் எத்தியோப்பியாவிலிருந்து பிரிந்தது.
பெரும்பான்மையாக இடதுசாரிய கருத்துக்களை / கோட்பாடுகளை கொண்ட விடுதலை இயக்கங்களே மேற்படி நாடுகளின் விடுதலை போராட்டங்களை முன்னெடுத்தன.
ஆனாலும், இந்த இயக்கங்கள் தமது தேசங்களை கொலோனிய ஆதிகங்களிருந்து மீட்ட பின்பு, தமது மக்களுக்கு முற்றுமுழுத்தக்க சமூக, கலாச்சார , பாலின, பொருளாதார விடுதலையை – சுதந்திரத்தை பெற்றுக் கொடுக்கவில்லை. இவர்கள் அன்றிருந்த சர்வதேச நிலைமைக்கு தக்கியதாக( மேற்கு தலைமையிலான முதலாளித்துவ முகாம்- சோவிஜெட் தலைமையிலான “சோசலிச” முகாம்) பேசிய இடதுசாரிய கொள்கைகள்; விடுதலை அடைத்த பின்பு இவர்களினால் தூக்கி வீசப்பட்டது. தமது இயக்கத்தின் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக எல்லா வகை ஒடுக்குமுறைகளையும் செய்தார்கள்.
இன்றுவரை இந்த நிலை தான் தொடர்கிறது. தற்போது இந்த நாடுகளில் புதியவகை சமூக விடுதலைக்கான -ஜனநாயக விடுதலைக்கான சக்திகள் உருவாகி வளர்ந்து வருகின்றன.
இந்த சக்திகளில் பிரதி நிதிகளுடனேயே நான் மேற்படி விவாத அரங்கில் கலந்து கொண்டேன்.
இன்டெர்செக்ஸனாலிட்டி : என்பது ஒரு சமூக அறிவியல் கோட்பாடு. இது பல்வேறு வகையான அதிகார சக்திகள் மற்றும் சமூகத்தில் நிலவும் பாகுபாடுகள் எவ்வாறு ஒன்றுக்கொன்று தொடர்பு உள்ளவை என்பதை கண்டு கொள்வதற்கு பகுப்பாய்வு முறைமையாகும் /கட்டமைப்பாகும்.
1989-1991 இல் கறுப்பின பெண்ணிய அறிஞர் கிம்பர்லே கிரென்ஷாவால் வெளியிடப்பட்ட கட்டுரை தொடரில் இச்சொல்லைப் பயன்படுத்தினார். அவர், இன்டெர்செக்ஸனாலிட்டி என்ற சொல்லையும் அதன் உள்ளடக்கத்தையும் / கருத்தியலையும் சட்ட ஆய்வுத் துறையில் அறிமுகப்படுத்தினார்.
அவரது கட்டுரையொன்றில், கறுப்பின பெண்ணியம் பற்றி விவாதிக்கிறார். ஒரு கறுப்பின பெண்ணாக இருப்பதன் அனுபவத்தை கறுப்பு”இனம்” “தோல் நிறம்” சார்ந்த அடையாளத்தையோ அல்லது பெண் என்ற பாலின அடையாளத்தையோ தனி தனி பகுப்புகளாக கொண்டு விளங்கிக் கொள்ள முடியாது வாதிடுகிறார். மாறாக, கறுப்பின பெண்கள் பற்றிய புரிதல் இந்த இரண்டு அடையாளங்களுக்கிடையேயான தொடர்புகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். இந்த இரு அடையாளங்களும், ஒன்றையொன்று புரிந்து கொள்வதற்கு – வலுப்படுத்துவதற்கு சமூகநீதி அரசியலில் உபயோகப்படுத்துதல் வேண்டுமென பதவிடுகிறார்.
தற்காலத்தில், இன்டெர்செக்ஸனாலிட்டி சமூக அறிவியல் கோட்பாடானது பெண்ணிய விடுதலை சித்தனையுடன் நெருங்கிய தொடர்புடையதாக விளங்குகிறது. அறியப்படுகிறது. இன்டெர்செக்ஸனாலிட்டி என்ற கருத்தியல் தற்போது பரவலாக பெண்ணியத்திற்கான கோட்பாட்டு அடிப்படையாகவும் உள்ளது. இது 1990 களில் இருந்து கல்வியியல் பெண்ணியம்(academic feminism), பெரும்பாலான நவீன பெண்ணிய கருத்தியல் மரபுகள் மற்றும் மேற்கத்தைய நாடுகளில் நடைமுறைப்படுத்தப்படும் பாலியல் சமத்துவ அரசியலுக்கான உத்தியோகபூர்வ கொள்கைகளில் ஆதிக்கம் செலுத்துகிறது.
இன்டெர்செக்ஸனாலிட்டி கண்ணோட்டம் தற்போது ஒடுக்கப்பட்ட சாதிய சமூக பெண்ணியவாதிகளினால் தென்னிந்தியாவில் பரவலாக பயன்படுத்துவதை கவனிக்கலாம். ஒரு ஒடுக்கப்பட்ட “பெண்ணை விளங்கிக் கொள்வதானது ” அவரின் பாலின, சாதிய பின்னணி , வர்க்க பின்னணி, இன ரீதியிலான அடையாளம் போன்றவற்றின் ஒன்றுக்கொன்று உள்ள தொடர்புகளின் அடிப்படையிலான புரிதல் என விளக்கம் கொடுக்கின்றனர்.
இதே, நிலைப்பாட்டை நாம் இலங்கையில் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள், அத் தேசிய இனங்களின் ஒடுக்கப்பட்ட பெண்கள் பற்றிய புரிதலை பெற்று கொள்வதற்கும் உபயோகிக்கலாம்.
யாழ்ப்பாணத்தில் ஒரு ஒடுக்கப்பட்ட சாதிய சமூகத்து பெண்ணின் வாழ்வியலை விளங்கிக் கொள்ள : அவர் தமிழ் தேசிய இனம் என்பதனால் அவரின் தேசிய இன அடையாளம், அவரின் ஒடுக்கப்பட்ட சாதிய சமூகத்து அடையாளம், பொருளாதாரத்தில் தாழ்த்திருந்தால் அவரின் வர்க்க அடையாளம் – அவர் பெண் என்பதனால் ஆணாதிக்கத்தினால் அனுபவிக்கும் ஒடுக்குமுறைகள் போன்ற அடிப்படைகளை கொண்டு – இந்த அடிப்படைகளுக்கு / அடையாளங்களுக்கு இடையிலான தொடர்புகளை கொண்டு விளங்கிக் கொள்ளலாம்.
மேற் கூறியுள்ள ஒடுக்குமுறை வடிவங்களை ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாமல் பார்க்கும் கண்ணோட்டமே இன்று பரவலாக உள்ளது.
“முதலில் தமிழ் ஈழத்தை பிடிப்போம். அதன் பின்பு பெண் விடுதலையை தலைவர் கொடுப்பார் ” .
” சோஷலிச தமிழ் ஈழத்தில் சாதிய பிரச்சனை இருக்காது. பொருளாதார பிரச்சனை இருக்காது . எல்லா பிரச்னைக்கும் சோசலிசம் தீர்வு கண்டு விடும். ஆகவே, இப்போ நாம் சோஷலிச தமிழ் ஈழத்துக்காக போராடுவோம் ”
” முதலில் நாம் இலங்கைக்கான புரட்சிக்காக போராடுவோம். சிறுபான்மை தேசிய இனங்களில் சுயநிர்ணய உரிமையை புரட்சிக்கு பின்னால் பேசுவோம் ”
இவையெல்லாம் நாம் நமது தேசத்தின் அரசியல் களத்தில் இன்றுவரை சாதாரணமாக கேட்க கூடிய கருத்துக்கள். இக் கருத்துக்கள் இன்டெர்செக்ஸனாலிட்டி கண்ணோட்டதிலிருந்து மாறுபட்டவை . முற்றுமுழுதான கண்ணோட்டத்தை – holistic perspective மறுப்பவை. ஒருவகை ஒடுக்குமுறையை முக்கியமானதாக கருதி, அதற்கு கீழ்ப்படதாக மற்ற ஒடுக்குமுறைகளை ஒதுக்கி வைப்பவை .
கருத்தரங்கின் இறுதி பகுதியில், எரித்ரியாவை சேர்ந்த பிரதிநிதி ஒருவர், என்னை பார்த்து, இலங்கை சேர்ந்த தமிழ் மக்கள் பல வருடங்கள் தமது விடுதலைக்காக போராடி வருகின்றனர்.
உனது நாட்டில் போராடிய இயக்கங்கள் – தலைவர்களில் யாராவது, ஒடுக்குமுறைகள் பற்றிய முற்றுமுழுதான கண்ணோட்டத்தை கொண்டவர்கள் இருக்கிறார்களா ? என என்னை வினவினார்.
நான் பல கோட்ப்பாடுகள் பற்றி தெரிந்து வைத்திருந்தாலும் – இலங்கையில் அரசியல் – தமிழ் தேசிய விடுதலை போராட்டம் பற்றியெல்லாம் ஓரளவுக்கு அறிவு எனக்கிருந்தாலும், உடனடியாக என்னால் அவருக்கு சரியான பதிலை கூற முடியவில்லை.
என்னை தடுமாற வாய்த்த அந்த கேள்விக்கு உடனடியாக பதில் கூற முடியாத நான் ” அன்றய காலத்தில் இன்டெர்செக்ஸனாலிட்டி கண்ணோட்டம் பற்றியெல்லாம் எந்த விவாதமும் இருக்கவில்லை. 1990- காலத்துக்கு பின்பு தானே இன்டெர்செக்ஸனாலிட்டி கண்ணோட்டம் வந்தது ” என்று கூறி சடைந்தேன்.
எனக்கு உண்மையில் அவர் கேட்ட கேள்வி நன்றாக விளங்கியிருந்தது. இன்டெர்செக்ஸனாலிட்டி என்ற விடுதலை கோட்பாடு 1970-80 களில் இயக்கங்கள் உருவாகிய காலத்தில் இருக்கவில்லை . என்றாலும், சமூக -தேசிய-வர்க்க-பாலின – சாதிய அடிப்படையிலான ஒன்றுக்கொன்று சம்பந்தமான பார்வையை கொண்ட இயக்கங்கள். அவற்றினை தலைமை தாங்கிய தலைவர்கள் இருந்தார்களா ? என்பதே அந்த எரித்திரியா தோழனின் கேள்வியின் உள்ளடக்கம்…. .
…..
கருத்தரங்கு முடிந்த பின் வீடு வந்த பின்பும் மேற்படி கேள்வியிலிருந்து என்னால் வெளிவர முடியவில்லை. இலங்கையின் இடதுசாரி இயக்கத்தின் வரலாறை தட்டி பார்த்த போது:
1960-களில் சாதிய விடுதலைக்காக இடதுசாரிய சக்திகள் போராடியுள்ளனர். ஆனாலும், வர்க்க விடுதலைக்கு இடக்காக சாதிய பிரிவினை இருந்ததனால், அவர்கள் சாதிய ஒடுக்குக்குறைக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்தார்கள். வர்க்க விடுதலைக்கு ஆள் திரட்ட அந்த போராட்டம் உதவியது என்பதும் உண்மை. இதற்கு வெளியில், தேசிய சிறுபான்மையினர் பற்றி கூட இடதுசாரிகள் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. பெண்ணிய விடுதலை பேசியதாக எனக்கு எங்கும் கண்ணில் படவில்லை.
தொடர்ந்த தேடலில் பல இயக்கங்களில் அரசியல் வேலை திட்டங்களை தேடி படித்தேன்.
1980- களின் EPRLF என்ற இயக்கம் ஒப்பீட்டளவில் சமூக/சாதிய -தேசிய-வர்க்க- பாலின அடிப்படையிலான ஒடுக்குமுறைகளை ஒன்றுக்கொன்று சம்பந்தமான பார்வையை கொண்ட திட்டத்தை கொண்டிருந்ததை கவனித்தேன்.
ஏற்கனவே, ஓரளவுக்கு அந்த இயக்கம் பற்றி நான் தெரிந்திருந்தும், அவர்களின் திட்டத்தின் உள்ளடக்கம் பற்றிய தெளிவு எனக்கு இருந்ததில்லை. இதனால், நான் வாசித்த திட்டத்தின் நடை முறை பற்றிய விபரங்களை தொகுக்க முன்னாள் EPRLF அமைப்பினர் சிலருடன் தொடர்பு கொண்ட போது கிடைத்த தகவல்கள் வருமாறு
1. கட்சியில் இருந்த அனைவரும் எல்லாவகை ஒடுக்குமுறைகளுக்கு எதிராக வேலை செய்ய பணிக்க பட்டிருந்தனர்
2. குறிப்பாக ஆண்களுக்கு, பெண் ஒடுக்குமுறை பற்றிய வகுப்புகள் எடுக்கப்பட்டது
3. பெண்களுக்கென – பெண் விடுதலை சிந்தனையை முன்னெடுக்க தனியாக பெண்கள் அமைப்பு உருவாக்க பட்டது . ஆனாலும், அமைப்பின் எல்லா தரப்பினரும் பெண் விடுதலைக்கான பிரச்சாரத்திலும் – நடை முறை வேலை திட்டத்திலும் பங்கெடுக்க பணிக்கப்பட்டது .
4. இதே போன்றே சாதியத்துக்கு எதிராக அமைப்பில் அனைத்து மட்டங்களிலும் இருந்த உறுப்பினர்களுக்கு கல்வி அறிவு வழங்கப்பட்டது. நடைமுறையில் சாதியத்துக்கு எதிராக போராட, சாதியத்தினால் பாதிக்கப்பட்ட மக்களிடையே சீவிக்கவும் – அரசியல் பணி செய்யவும் உறுப்பினர்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது .
ஒரு தேசிய இன விடுதலைக்காக வர்க்க விடுதலை பார்வையை கொண்ட EPRLF – சமகாலத்தில் எல்லாவகை ஒடுக்குமுறைகளுக்கு எதிராக நடைமுறையில் போராட முயற்சிகளை மேற்கொண்ட தகவல் எனக்கு புதிதாகவும் – புதினமாகவுமே பட்டது . இந்த வகை வேலை திட்டத்தை தான் நாம் இப்போ இன்டெர்செக்ஸனாலிட்டி வகை வேலைத்திட்டமென்கிறோம். இந்த வகை வேலை திட்டத்தை, இன்டெர்செக்ஸனாலிட்டி என்றால் என்னவென்று தெரியாத காலத்திலேயே EPRLF இயக்கம் நடைமுறைப்படுத்த முயற்சித்திருக்கிறது.
இந்த முயற்ச்சியின் பிதாமகராக கூறப்படுபவர் அந்த அமைப்பின் தலைவரான திருவாளர். பத்மநாபா அவர்களாவர். அவரின் சர்வதேச தொடர்புகள், கல்வி பின்னணி, ஐரோப்பிய நாடொன்றில் வாழ்த்த காலம், PLA – பயிற்சிக்கலாம் என்பவையும் – இக் காலத்தில் அவருக்கு கிடைத்த தத்துவ ஞானமும் – அனுபவமும் இந்தவகை அரசியல் திட்டத்தை உருவாக்க கூடிய பின்னணியை கொடுத்ததாக அவருக்கு நெருங்கியவர்கள் கூறுகின்றனர் .
அதேவேளை, அவரின் இயக்கத்து தலைமைக்கு உள்ளேயே இதற்கு நேர் முரணான சக்திகளும் – மக்கள் விரோத சிந்தனையாளர்களும் இருந்தார்கள் என்பதும் EPRLF – இயக்கத்தின் வரலாறு கூறுகிறது .
பத்மநாபாவின் விடுதலை சிந்தனையின் பாற்பட்ட திட்டங்கள் – இன்றுள்ள இன்டெர்செக்ஸனாலிட்டி பார்வையிலான அடிப்படையில் மறுபடியும் நமது சமூகத்தில் விடுதலைக்கு வழிகாட்ட வரவேண்டுமென்ற விருப்பத்தை மட்டுமே என்னால் இப்போ தெரிவிக்க முடியும். பத்மநாபாவின் விடுதலை சிந்தனை பற்றிய தகவல்கள் தொகுக்கப்பட்டு அவரின் ஆதரவாளர்கள் அவரை சமூக விவாதத்திற்கு உட்படுத்தும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.
20.05.2023 .
(Newton Marianayagam)