(இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்)
‘மீ டூ’என்ற கோஷத்துடன் உலகில் உள்ள பல பெண்கள், வேலைசெய்யுமிடங்களிலும், படிக்குமிடங்களிலும்.அத்துடன் அவர்கள் நம்பிக்கையாகப் பழகும் ஆண்கள்; அவர்கள் அனுபவித்த பாலியல் கொடுமைகளைச் சொல்ல அக்டோபர் மாதம் 5ம் திகதி 2017ம் ஆண்டிலிருந்து முன்வந்திருக்கிறார்கள். 2017ம் ஆண்டு அமெரிக்காவின் ஹொலிவுட் படவுலகின் பிரபலமான ஹார்வி வெயின்ஸ்ரெயின் என்பரின் பாலியல்க் கொடுமைகளைச் சொல்வதை நியுயோர்க் டைம்ஸ் என்ற பத்திரிகை வெளியிட்டது. வேயின் ஸ்ரெயினின் காமலீலைகள் பற்றிய கொடுமைச் செயல்களை அமெரிக்க நடிகைகளான றோஸ் மக்கோவன்,ஆஷ்லி றட் என்ற நடிகைகள் அம்பலப் படுத்த முன்வந்தனர். அதைத் தொடர்ந்து பிரித்தானிய நடிகையான றொமெலா கைரி என்பவரும் 9.10.18ல் முன்வந்தார்.அதைத் தொடர்ந்து,மெரில் ஸ்ரிப், ஆன்ஜலீனா ஜோலி,க்னவுத் பாhல்ட்ரொவ் போன்ற நடிகைகளின் போராட்டக் குரல்களுக்கு, அமெரிக்க முன்னாள் ஜானாதிபதி பராக் ஓபாமா, ஹெலிவுட் நடிகர் லியனாடோ டிகாப்பிரியோ, பிரித்தானிய நடிகர் பெனிட்க்ட் கம்பபார்ச் என்போர் ‘மீ டூ’ பெண்களுக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவிக்க வெயின்ஸ்ரெயினுக்கு எதிர்ப்புக் குரல்களை எழுப்பினர். இதைத் தொடர்ந்து பாலியல் வன்முறைகளைத் தொடர்ந்து செய்த வெய்ன்ஸ்ரைன்மீது வழக்குப் பதிவானது.
வசதி படைத்தவர்கள், ஆதிக்க வலிமையுடையவர்கள்,அதிகாரத்தைத் தங்கள் கையில் வைத்திருப்பவர்கள்,சாதி மமதையுடன் வாழ்பவர்கள் என்ற பல ஆளுமைத் தகுதிகளையும்; கொண்டவர்களால், அவர்களுடன்; பணிசெய்யும்,அல்லது படிக்கும் அல்லது உதவிகேட்கும் நிலையில் இருக்கும்போது செய்யும் பாலியல் வன்முறைகளுக்கெதிராக அகில உலகிலும் பெண்கள் குரல் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தியாவிலும் இதன் பிரதிபலிப்பு ஒலித்தது.பல பெண்கள்,தங்களுடன் வேலை செய்யும்,பழகிய,தங்களுக்கு மேலிடத்திலிருக்கும் அதிகாரமுள்ள ஆண்களால் இழைக்கப் பட்ட பாலியல் வன்முறைகளை உலகுக்குச் சொல்ல 2006ம் ஆண்டிலிருந்து முன்வந்திருக்கிறார்கள். பிரபல பெண் எழுத்தாளரான அனுராதா ரமணன் என்பவர் சங்கராச்சாரியரில் ஒரு பாலியல் முறைப்பாடு வைத்த விடயம் இந்திய வாரப் பத்திரிகை ஒன்றில் வந்தது. அது பற்றிப் பெரிதாக யாரும் அலட்டிக் கொள்ளவில்லை. சங்கராச்சாரியார் ஒரு மேன்மைதங்கிய மதத்தலைவர் என்ற படியால் அந்த விடயம் சாதுர்யமாக மூடிமறைக்கப் பட்டிருக்கலாம்.
சில மாங்களுக்குப் பின் சிறி ரெட்டி என்ற தெலுங்குப்பட நடிகை தனக்கு இழைக்கப் பட்ட பாலியல் கொடுமைகளைச் சொல்லும்போத யாரும் பெரிதாக எடுத்துக் கொள்கிறார்கள் இல்லை என்ற ஆதங்கத்தில் பகிரங்க இடத்தில் அரைகுறை ஆடைகளுடன் போராட்டம் நடத்தினார். யாரும் கண்ட கொள்ளவில்லை.
20.12.16ல் இந்தியாவிலுள்ள அரியலூர் என்னுமிடத்தில் நந்தினி என்ற ஒடுக்கப் பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண் அவளின் காதலனாலும் அவனின் சினேகிதர்களாலும் பாலியற் கொடுமை செய்யப் பட்டுப் பயங்கரமாகக் கொலை செய்யப்பட்டு கிணற்றில் எறியப் பட்டிருந்தாள். அவளுக்காக ‘மீ டூ’ சொல்லிப் போராட்டம் நடக்கவில்லை.
31.5.17ல் இலங்கை மூதுர் பகுதியைச் சேர்ந்த, 5.7 வயதுடைய மூன்றுசிறு தமிழ்க்குழந்தைகள் முஸ்லிம்களால் பாலியற் கொடுமை செய்யப் பட்ட கேஸ் கோர்ட்டுக்கு வந்தபோது அவர்களுக்காக வாதாட யாருமேயில்லை. அவர்களுக்காக,’மீ டூ’ போராட்டம் நடக்கவில்லை.
இந்தியாவின் வடக்கில் ஆஷிபா என்ற முஸ்லிம் இளம்பெண் இந்துமதவாதிகளால் பாலியல்க் கொடுமைசெய்து கொலை செய்யப்பட்டபோது ,’மீடூ’ கோஷம் ஒலிக்கவில்லை.
இந்த நிகழ்வுகள் வறுமையான பெண்களை வசதிபடைத்த பிறமதத்தவர் எவ்வளவு சீரழித்தாலும்,அரசியல்,மதத் தலைமைகள் தலைமை வாய் மூடியிருக்கும் என்பதைப் புலப்படுத்தியது.
பிரித்தானியா,அமெரிக்கா,அவுஸ்திரேலியா அயர்லாந்து போன்ற நாடுகளில் கத்தோலிக்கப் பாதிரிகளால் பல்லாயிரக்கணக்கான இளம் ஆண்களும் பெண்களும் பல்லாண்டுகளாகப் பாலியற் கொடுமைகளுக்கானார்கள் பல தடவைகள் புகார்கள் வந்திருக்கின்றன. புனித பாப்பாண்டவர் என்ன நடவடிக்கை எடுத்தார்? இந்த அப்பாவிக் குழந்தைகளின் எதிர்காலம் மதத் தலைவர்களாற் சீர்குலைக்கப்பட்டது.மத ஆணவம் இன்னும் கொடிகட்டிப்பறக்கிறது.
3.10.2005ம் ஆண்டு யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் ‘பொங்குதமிழ்’ ரி. கணேசலிங்கம் என்பரால்,முள்ளியவளையைச் சேர்ந்த 13 வயது வேலைக்காரப் பெண்ணான யோகேஸ்வரி என்பவர் 7 வயதிலிருந்து 40 தடவைகள் பாலியற் கொடுமை செய்ததாக வழக்கறிஞர் திரு றெமேடியஸ் அவர்களால் வழக்குத் தொடரப் பட்டபோது அன்று கோர்ட்டுக்கு ஆயிரக் கணக்கான பெண்கள் அந்தப் பாலியல் கொடுமையை எதிர்த்துக் கோஷம் போட்டார்கள்.ஆனால் அவர் இன்று மதிப்புக்குரிய விரிவுரையாளராகத்தான் பணி புரிந்துகொண்டிருக்கிறார். யோகேஸ்வரி இருந்த இடமே யாருக்கும் தெரியாமல் ‘புதைக்கப்’ பட்டவிட்டது.இதுதான் அதிகாரமுள்ளவர்களின் வெற்றி. இதுதான் இலங்கை இந்தியாவில் இன்னும் தொடர்ந்து கொண்டு வருகிறது.
ஆனால் மேற்கு நாடுகளில் இப்படியான செயல்களைத் தண்டிக்கப் பல சட்டங்கள் இயற்றப் பட்டிருக்கின்றன.ஆனால் அதிகாரமும் ஆதிக்கமும் இருந்தால் பெரும்பாலானவர்கள்; எப்படியும் தப்பித்துக்கொள்வார்கள் என்பதும் பலருக்கும் தெரியும்.
சில தினங்களுக்குமுன் ஹடஸ்லி என்ற பிரித்தானிய நகரிலுள்ள 11-15 வயதுள்ள பல சிறுமிகளைப் போதைப் பொருள் மதுபானங்கள் கொடுத்துப் பாலியல் கொடுமை செய்ததாற்காக 20 பாகிஸ்தானிய முஸ்லிம்கள் 225 வருடங்களுக்குச் சிறையிலடைக்கப் பட்டிருக்கிறார்கள்.இந்தச் சிறுமிகள் வறுமையான ஆங்கிலேயக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.இவர்களுக்கு நடந்த கொடுமையை வெளிக் கொண்டுவர முற்போக்காக பலர் கூக்குரல் போட்டதால் மிக நீண்டகாலத்தின்பின் அவர்களின் கதை வெளியில் வந்தது.
‘மீ டூ’ இயக்கத்தின் பின், இலங்கை,இந்தியா போன்ற நாடுகளில் ஒருசில பெண்கள் தங்களுக்கு நடந்த பாலியற் கொடுமைகளைப் பகிரங்கமாகச் சொல்ல முன்வந்தாலும் கோடிக்கணக்கான பெண்கள், தங்களின் குடும்ப கவுரவம், சமுதாயத்தில் தங்களுக்குள்ள அந்தஸ்துகளைப் பாதுகாத்துக் கொள்ள மவுனமாகத் தங்கள் வாழ்க்கையைத் தொடர்கிறார்கள்.
அதிலும் சினிமாத் துறையைப் பொறுத்தவரையில்’ பாலியல் ‘கொடுக்கல் வாங்கல்கள்’அந்தத் தொழிலின் பரிமாணத்தில் ஒரு அங்கமாகப் பார்க்கப் படும்போது,ஒரு நடிகையோ அல்லது பாடகியோ தங்களுக்கு நடந்த பாலியற் கொடுமைகளைச் சொல்லும்போது அந்த விடயம் சரியாகக் கையாளப்படாமற் தட்டிக்கழிக்கப் படுகிறது.
இந்திய, இலங்கைப் படையினராலப் பாலியற் கொடுமைகளுக்குள்ளான பல இலங்கைத் தமிழ்ப் பெண்கள் ‘மீ டூ’ கோஷம் போட்டு நீதிகேட்டுப் போராடுவார்களா?தமிழ் அரசியல் ஆளுமைகள் உதவி செய்வார்களா?
தேசியத்தின் பாதுகாப்பு என்ற பெயரில்,காஷ்மிர், நாகலாந்து போன்ற பல பகுதிகளால் இந்திப் படையினரின் பாலியற் கொடுமைக்காளாகும் பெண்களுக்காக யார்,’மீ டூ’ கோஷம் போடுவார்கள்?
இந்தியக் கலாச்சாரத்தில் அவர்களின் புராண இதிகாசங்களில் ,ஆண்களின் திருப்திக்காகப் பெண்கள் பட்ட கொடுமைகளுக்காக,’மீ டூ’ சொல்ல ஒரு பிரமாண்டான அறிவுப் புரட்சி வரவேண்டும். தேவலோகத்து இந்திரனே காமவெறியில் அகலியைக் கொடுமை செய்ய அதைப் பார்த்திருந்த அவள் கணவன் அவளைக் கல்லாகச் சபித்து விடுகிறார். தனது மனைவியின் பெண்மை, பாதுகாப்பு பற்றி அங்கு அவர் எந்தக் கவலையும் படவில்லை.
சூர்ப்பனகை தன்னைப்பார்த்து ஆசைப்பட்டதற்காக அவள் மூக்கையும் முலையையும் வெட்டித்தள்ளுகிறான் இலக்குமணன்.ஆனால் திரவுபதியைப் பகிரங்கமாக நிர்வாணமாக்கிப் பாலியல் கொடுமைக்கு அனுமதியளித்த ‘தர்மன்’ஆண்கள் பார்வையில் கதாநாயனாகிறான்.இப்படிப் பல மாறான தத்துவங்களைக் கொண்டது இந்திய சமயப் பாரம்பரியம்.
பல கோபிகளுடன் பாலியல் சல்லாபம் செய்யும் கண்ணன்’கடவுளாக’ வழிபடப்படுகிறான். கோயில்களில் ஒரு குலப் பெண்களைத் ‘தேவதாசிகளாக்கிப்’பாலியற் கொடுமைகள் செய்தவர்கள் பார்ப்பனர்களும் பணக்காரர்களும். பிரித்தானியரால் அந்தக் கொடுமை சட்டவிரோதமானது.
இப்படியான மத,கலாச்சாரப் பின்னணியில் வளர்ந்த ஆண்கள் பெண்களைத் தங்களின் இன்பப் பொருட்களாக நடத்திக் கொடுமை செய்வது தொடர்கிறது. மனிதன் கற்பனையிற் படைத்த கடவுள் அவதாரங்களை வைத்து அரசியல் வியாபாரம் செய்பவர்கள் ‘சமத்துவத்திற்கான’ பகுத்தறிவை முன்னெடுக்கப் போவதில்லை என்பது சபரிமலை விபகாரத்திலிருந்து தெரிகிறது. மதம் என்பது ஆண்களினால் ஆண்களின் திருப்திக்காக வரையறைசெய்யப்பட்ட ஒரு கோட்பாடாகும்.அங்கு பெண்களின் சமத்துவத்திற்கு இடமில்லை;அவளின் உடல்,பொருள் அத்தனையும் ஆணின் சொத்தாக மதிக்கப்படுகிறது.
ஆதிக்கமும் அதிகாரமும் பெண்மையைச் சூறையாடுவதை சமுதாயம் தெரிந்து கொள்ளாமல் தன்பாட்டுக்கு நகர்ந்து கொண்டிருக்கிறது.
ஆண்கள் மட்டும்தான் தங்கள் அதிகாரத்தை வைத்துப் பெண்களைப் பாலியல் சுரண்டல்கள் செய்கிறார்கள் என்பதைத் தொடர்ந்து,ஆதிக்கத்திலுள்ள பெண்களும் தங்களின் தரத்திற்குக் குறைவான ஆண்கள்; பாலியல் கொடுமை செய்ததாகப் பழி சொல்லும்பொது ஒரு ஏழைப் பெண்ணுக்கு இரங்காத ஆதிக்கவர்க்கம் எப்படி அந்த ஒடுக்கப் பட்ட இனத்தைச் சேர்ந்த ஆணைப்பழிவாங்கும் என்பதை 1960ம் ஆண்டு அமெரிக்கப் பெண் எழுத்தாளர் ஹார்ப்பர் லீ எழுதிய ‘டு கில் எ மொக்கின் பேர்ட்’என்ற நாவலிற் காணலாம். இந்நாவல் படமாக வந்தது.ஓரு கறுப்பு ஆணுக்குகெதிராகச் செக்ஸ் கொடுமை செய்தான் என்ற பெயரில் ஆதிக்கசாதி வெள்ளையினப் பெண் கொண்டு வந்த பொய்யான கோர்ட் கேஸ் அமெரிக்காவில் பல அரசியல் மாற்றங்களையுண்டாக்கியது. அமெரிக்காவில் கறுப்பு இனமக்கள் தொடங்கிய சமத்துவப் போராட்டத்திற்கு இந்நாவலும் ஒரு உந்துதலாகவிருந்தது.
இலங்கையில் பல பெண்கள் தேயிலைத் தோட்டங்களில், வேறு பல தொழிற்சாலைகளில், பாடசாலைகளில் பல்கலைக்கழகங்களில் என்று பல இடங்களில் நாளாந்தம் பாலியற் தொல்லைக்குள்ளாகிறார்கள். இவர்கள் தங்களுக்கு நடக்கும் கொடுமைகளை வெளியிற் சொல்லப் பெண்கள் அமைப்புக்கள் உதவவேண்டும்.
இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் பெண்கள் இருபாலாரும் வெளியிற் சென்று உழைத்துத்தான் குடும்பத்தைப் பராமரிக்கவேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப் பட்டிருக்கிறார்கள்.
ஒருகாலத்தில் திருமணமானதும் பெண்கள் வேலைக்குச் செல்வதும் குழந்தை பிறந்தவுடன் வேலைக்குச் செல்வதை நிறுத்திவிடுவது அல்லது பகுதி நேர வேலை மட்டும் செய்வது வழக்கமாகவிருந்தது. இன்றைய வாழ்க்கை நிலையில் முடியுமானவரை பெண்களும் வேலைசெய்வது தவிர்க்க முடியாததாகவிருக்கிறது. பொருளாதார, கல்வி நிலை,சமுதாய நிலை ,வாழ்க்கைநிலை என்பவற்றில் பன்முக மாற்றங்கள் வந்தாலும் பெண்கள் பற்றிய ஆண்களின் பார்வைகள்,கருத்துக்கள்.பழக்கவழக்கங்கள் பெரும்பாலான மாற்றங்களைக் காணவில்லை என்பது ஆண்களினால் பாலியல் தொந்தரவுக்குள்ளாகும் பெண்களின் நிலைகளைவைத்துக் கணிக்கும்போது தெரியவரும.;
படிக்குமிடங்களிலும் வேலைசெய்யுமிடங்களிலும் பெண்களுக்குப் பாதுகாப்பான சட்டங்கள் வந்து அமுல் நடத்தப்படும்வரை இப்படியான கொடுமைகள் தொடரும். ஆண்களும் பெண்களும் ஒன்று சேர்ந்து கவுரமான எதிர்காலத்தை உருவாக்கப்பாடுபடுதல் கட்டாயமாய முன்னெடுக்கப்படவேண்டிய விடயமாகும்.இதற்குப் பெண்களும் ஆண்களும் சேர்ந்த விழிப்புணர்வுப் போராட்டங்கள் மிக அத்தியாவசியமானவை.