(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
உலகம் அமைதியை விரும்புகிறதா? அப்படியென்றால் எப்படியான அமைதியை விரும்புகிறது? போரற்ற சமத்துவத்தை முன்னிலைப்படுத்தும் அமைதியை விரும்புகிறதா? அல்லது சிலர் கட்டுப்படுத்துவதும் சிலரது நலன்களை முன்னிலைப்படுத்துவதுமான அமைதியை விரும்புகிறதா? உலகத்தின் விருப்பு என்பது யார் சார்ந்தது. வாழும் மக்கள் சார்ந்ததா, ஆட்சியாளர்கள் சார்ந்ததா? இக்கேள்விகளுக்கான பதில்கள் எமக்கு எளிதில் கிடைக்கமாட்டாதவை. ஆனால், எல்லோரும் உலக அமைதி பற்றியும் அதன் தேவை பற்றியும் பேசுவர்.
ஆப்கானிஸ்தானின் மீது போர் தொடுத்தபோது, அமைதியின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது. ஆனால், எதுவும் மாறவில்லை; களங்கள் மட்டும் மாறின. போரின் கொடுங்கரங்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து ஈராக்குக்கு மாறின.
ஈராக்கில் போர் நடந்தபோது, அமைதி பற்றி நிறையப் பேசப்பட்டது. அது லிபியா மீது போர் தொடுப்படுவதை நிறுத்தவில்லை. லிபிய அவலங்கள் சிரியாவில் அந்நியத் தலையீட்டைத் தடுக்கவில்லை. இப்போது சிரியாவிலிருந்து நகரும் போர் அடுத்து எங்கு மையம் கொள்ளும் என்ற வினாவை உலகு எதிர்நோக்குகிறது.
உலகின் முன்னிலை வார இதழான ‘த இக்கனொமிஸ்ற்’ (The Economist) முதலாளிய நோக்கில் உலகைப் பார்ப்பதாகும். அண்மையில் அது, எதிர்காலம் குறித்த அச்சம் மிகுந்த எதிர்வுகூறலை வழங்கியுள்ளது.
இவ்வாண்டின் முதல் இரண்டு இதழ்களும், போரின் எதிர்காலமும் அதில் தொழில்நுட்பத்தின் பங்கும் பற்றிச் சில முக்கிய தகவல்களைத் தருகின்றன. முதலாவது இதழ், ‘அடுத்த எல்லை: எண்ணங்கள் பொறிகளைக் கட்டுப்படுத்தும் போது’ (The next frontier: When thoughts control machines) என்ற தலைப்பில் வந்தது.
இரண்டாவது, ‘புதிய அசுரர்கள்: அவர்களை அடக்குவது எவ்வாறு’ (The new titans: How to tame them). இவை இரண்டும் தொழில்நுட்ப வளர்ச்சியையும் அது எவ்வாறு மனிதகுலத்தின் வளர்ச்சிக்குப் பங்களிப்பதோடு மனிதகுலத்தின் பெரிய எதிரியாக உருவெடுத்திருக்கிறது என்பதையும் விரிவாக ஆராய்கின்றன. மூன்றாவது இதழில், மேலும் தகவல்கள் உள்ளன.
கவனிக்க வேண்டியது யாதெனில், திறந்த சந்தைப் பொருளாதாரத்தையும் நவதாராளவாதத்தையும் ஊக்குவிக்கும் கருவியாக இயங்கிய ‘இக்கனொமிஸ்ற்’ இதழ், தொழில்நுட்பரீதியில் அளவுகடந்து வளர்ந்துள்ள கூகிள், பேஸ்புக், அமேசன் போன்ற பல்தேசியக் கம்பெனிகள் பற்றிய அபாயச் சங்கை ஊதுகிறது.
இன்னொருபுறம், முதலாளியம் எதிர்நோக்கும் நெருக்கடியின் விளைவால், ஒன்று மற்றொன்றைக் கைப்பற்றி, விழுங்கும் முதலாளிய விதிகளையே முதலாளியத்தின் ஆதரவாளர்கள் விமர்சிக்கிறார்கள்.
இவ்விடத்தில், ‘இக்கனொமிஸ்ற்’ பற்றிச் சில விடயங்களைச் சொல்வது தகும். அதை 1843ஆம் ஆண்டு, ஜேம்ஸ் வில்சன் என்ற பிரித்தானிய வணிகர் உருவாக்கினார். இறக்குமதி செய்யப்பட்ட சோளத்துக்கு விதித்த பெருந்தொகையான வரியை எதிர்த்த அவர், தனது கருத்துகளைச் சொல்ல இவ்விதழை உருவாக்கினார்.
பொருளியலாளர் அடம் ஸ்மித், தத்துவவியலாளர் ஜோன் ஸ்ற்றுவட் மில் ஆகியோரின் சிந்தனைகளால் உந்தப்பட்டு, இதழின் தத்துவார்த்த தளமாக இருவரின் சிந்தனைகளும் அமைந்தன.
இப்போது அதன் உரிமையில் அரைவாசி, உலகின் மிக அறியப்பெற்ற குடும்பங்களில் ஒன்றான ரொத்ஸ்சைல்ட் குடும்பத்திடம் உள்ளது. நவீன உலக வரலாற்றில், அதிகூடிய தனிச்சொத்தையும் செல்வத்தையும் உடைய குடும்பமாக, ரொத்ஸ்சைல்ட் குடும்பம் கருதப்படுகிறது.
உலகின் செல்வத்தையும் நிதிநிறுவனங்களையும் மறைமுகமாகக் கட்டுப்படுத்திச் செல்வாக்குச் செலுத்தும் குடும்பமாக அது கருதப்படுகிறது. இது ஒருபுறமிருக்க, ‘இக்கனொமிஸ்ற்’ முதலாளிய நவதாராளவாதத்தின் முக்கியமான பொதுமுகமாகும். தத்துவார்த்த முறையில், அதன் பிரசாரக் கருவியுமாகும். கடந்த 175 ஆண்டுகளாக இது செயற்படுகிறது. இவ்விதழை நிதிமூலதனத்தின் ‘ஐரோப்பியப் பிரதிநிதி’ என்றும் ‘நிதியின் பிரபுத்துவ வெளிப்பாடு’ என்றும் கார்ல் மார்க்ஸ் வருணித்தார்.
கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் பிரதிகள் வாராவாரம் உலகெங்கும் விற்பனையாகின்றன. முதலாளியத்தையும் தாராளவாத்தையும் காவிச்செல்லும் இப்பிரசாரப் பீரங்கி, முதலாளியத்தின் தேவைகளைப் பேணும் தொழில்நுட்பம் அபயகரமானது என்று சொல்லும் அளவுக்கு நிலைமைகள் மோசமாக உள்ளமையை நாம் உணர வேண்டும்.
தொழில்நுட்பத்தால் என்ன மோசமான விளைவுகள் இருக்கலாம் என நீங்கள் எண்ணலாம். கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்ட மூன்றாவது இதழின் செய்தியைப் பார்க்குமுன், தொழில்நுட்பத்தின் அபத்தங்களையும் ஆபத்துகளையும் சுருக்கமாகப் பார்ப்போம்.
அவை, நம் எல்லோருக்கும் பொருந்துவன. ‘மெய்நிகர் வாழ்வு’ பற்றிய கனவில் இருப்போர், கட்டாயம் கவனிக்கவேண்டிய விடயங்கள் பல இங்குண்டு.
இணையத்தின் வளர்ச்சியும் கைத்தொலைபேசித் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியும் புதிய சாத்தியங்களை உருவாக்கியுள்ளன.
முதலாளியச் சந்தையின் ஆட்ட விதிகளை, இணையப் பரவலும் அதனால் குவியும் மின் தரவுகளும் தீர்மானிக்கின்றன. குரல் அழைப்புகள் மெல்ல மெல்ல மின் தரவுப் பொதிகளின் பரிமாற்றங்களாகின்றன. தொலைபேசி மட்டுமின்றித் தொலைக்காட்சிப் பெட்டி முதல் வீடுகளில் உள்ள மின்னணுவியல் சாதனங்கள் யாவும் திறன் சாதனங்களாவதும் (smart devices) அவை யாவும், இணையத்தின் மூலம் இணைவதுமான ஒரு நிலையை நோக்கித் தொழில்நுட்பம் முன்னேறுகிறது.
தொழிற்புரட்சியின் நவீன காலகட்டத்தை ‘நான்காம் தொழிற்புரட்சிக் காலம்’ என்பர். இணையப் பரவலும், இணையவழி இணைவுறும் பொருட்களின் தொகையும் பெருகுகையில், மின் தரவுகள் மலையாகக் குவியும் போக்கும் வலுக்கும்.
எனவே, மின் தரவுகளைக் கட்டுப்படுத்துவதுடன் அதை வினைதிறனுடன் பகுப்பாய்வதன் அடிப்படையிலான செயற்பாடுகளே நான்காம் தொழிற்புரட்சியின் வெற்றி, தோல்விகளை நிர்ணயிக்கும்.
18ஆம் நூற்றாண்டில் இயந்திரங்களின், குறிப்பாக நீராவி இயந்திரங்களின் வருகையுடன் முதலாவது தொழிற்புரட்சி தொடங்கியது. 1780 முதல் 1840 வரை ஐரோப்பிய மறுமலர்ச்சியோடு இணைந்த தொழில் உற்பத்தி மாற்றங்கள், முதலாவது தொழிற்புரட்சி என அறியப்பட்டன.
1870 முதல் 1915ஆம் ஆண்டில் முதலாம் உலக யுத்தம் தொடங்கும் வரை, தொழிற்றுறை நவீனமடைந்தது. உற்பத்திச் சாதனங்கள், தொழில்நுட்ப உதவியுடன் புதிய பணிகளை வினைதிறனுடனும் வேகமாகவும் செய்தன. இது ‘இரண்டாவது தொழிற்புரட்சி’ எனப்பட்டது.
1970களில் தொடங்கி 1990களின் தொடக்கப்பகுதி வரை ஏற்பட்ட, மின்னணுவியல் தொழில்நுட்ப வளர்ச்சியும் கணினியின் விருத்தியும் இலத்திரனியல் தொடர்பாடலின் எழுச்சியும் தொழிற்றுறையைத் துரிதமாகக் கணினிமயமாக்கியது. அது உற்பத்தியை அளவிலும் வினைதிறனிலும் உயர்த்தியது. அது ‘மூன்றாம் தொழிற்புரட்சி’ எனப்பட்டது.
நான்காம் தொழிற்புரட்சி, மூன்றாம் தொழிற்புரட்சியின் நீட்சியாக வந்தது. கணினித் தொடர்பாடலின் விருத்திப் போக்கில் உருவான இணையத்தின் பரவலால், உற்பத்தியும் தொழிற்துறையும் பொருளாதாரமும் பாரிய மாற்றம் கண்டன. மிகப் பெருமளவில் விளைந்து துரிதமாகப் பரப்புறும் மின் தரவுகள் இப்புதிய போக்கை அடையாளம் காட்டுகின்றன.
மேலும், கணினித் துறையிலும் உற்பத்தித் துறையிலும் ஏற்பட்ட பாரிய வளர்ச்சிகளை இணையத் தொழில்நுட்பம் மையப்படுத்தி இணைக்கிறது. பொருட்களின் இணையம் (Internet of Things – IOT) எனும் அதன் புதிய போக்கு, ஏராளமான மின் தரவுகளைக் குவிக்கின்றது.
இவ்வாறு குவியும் மின் தரவுகள், பெரும் மின்தரவுகள் (big data) எனப்படுகின்றன. இம்மின் தரவுக் குவியலைப் பகுப்பாய்வது சந்தையைப் ‘விளங்குவதற்கும்’ நடப்பிலுள்ள தொழில்நுட்பங்களின் துல்லியத்தை மேம்படுத்தற்கும் உதவும் என்பதை கூகிள், ஐ.பி.எம், மைக்ரோசொப்ற் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்கள் விளங்கியுள்ளன.
இதே காலகட்டத்தில் உருவான ‘பெரும் தரவும் பகுப்பாய்வு’ (big data & analytics) தொழில்நுட்பம், நான்காம் தொழிற்புரட்சிக் காலத்தின் முக்கியமான நிகழ்வாகும். பின்வரும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் அதன் தனித்த அடையாளங்களாகும்.
மூன்றாம் தொழிற்புரட்சியின்போது உருவான ‘ரோபோட்டிக்ஸ்’ எனப்படும் தானியங்கிமுறை வளர்ந்து, பல்வேறு தொழில்களில் தானியங்கலை வலுவாக்கியுள்ளது. மீநுண் தொழில்நுட்பம் (nano-technology) அணு, மூலக்கூற்று, உபமூலக்கூற்றுப் பரிமாணங்களில் பொருட்களைக் கையாளும் தொழிற்கலை, அணு மற்றும் மூலக்கூற்றியல் விஞ்ஞானத்தில் வளர்ச்சிப் பாய்ச்சலை உண்டாக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேவேளை, நான்காம் தொழிற்புரட்சிக் கட்டத்தில் செயற்கை நுண்ணறிவுத் (artificial intelligence) துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியும், அவ்வளர்ச்சிக்குப் பெரும்மின்தரவுப் பகுப்பாய்வு ஆற்றியுள்ள பங்கு கணிசமானது. இத் தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்குப் பங்காற்றிய மின் தரவுகளின் திரட்சி இப்போது வியப்பூட்டும் அளவுகளை எட்டியுள்ளது.
இங்கு, மின்தரவுகள் பற்றிச் சுருக்கமாகச் சொல்ல வேண்டும். பேஸ்புக், ட்விட்டர், வட்ஸ்-அப் போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவேறும் புகைப்படங்களும் நிலைத்தகவல்களும் தொட்டு, குறிப்பிட்ட சமூகவலைத்தளங்களில் நாம் எதைப் பார்க்கிறோம், எதற்கு விருப்புக் காட்டுகிறோம், எவரெவரைப் பின்தொடர்கிறோம் என்பவை உள்ளிட்டு, எப்போது எங்கே பயணிக்கிறோம் போன்ற விவரங்கள் மின் தரவுகளாகச் சேமிக்கப்படுகின்றன.
அதைவிட, இணையத்தில் பொருட்கள் வாங்குதலும் இணைய மூலம் பணப்பரிவர்த்தனைகளில் ஈடுபடுதலும் யூடியூபில் வீடியோக்கள் பார்ப்பதும் வரை, நமது செயல்கள் பற்றிய அனைத்து விவரங்களும் மின்தரவுகளாகச் சேமிக்கப்படுகின்றன.
உதாரணமாக யூடியூபில் ஒருவர் எவ்வளவு நேரம் காணொளிகள் பார்க்கச் செலவிடுகிறார்? எந்த மாதிரியான காணொளிகளைப் பார்க்கிறார்? எந்த வரிசையில் பார்க்கிறார்? எவற்றுக்கு விருப்பம் தெரிவிக்கிறார்? எவற்றைப் பகிர்கிறார் போன்ற விவரங்களும் மின் தரவுகளாகச் சேமிக்கப்படுகின்றன.
மேலும், இணையத்துடன் இணைத்த மருத்துவ உபகரணங்கள், உணரி (sensor) பொருத்திய வாகனங்கள், வீடுகளிலுள்ள திறன் தொலைக்காட்சி (smart TV), பிற திறன் சாதனங்கள் என இணைய இணைப்புப் பொருட்கள் (IOT) யாவும் மின்தரவுகளைப் பிறப்பிக்கின்றன.
சமூக வலைத்தளச் செயல்கள், படங்கள், காணொளிகளைப் பகிர்தல், விருப்புத் தெரிவித்தல், இணைய உரையாடல், யூ-டியூப் போன்ற தளங்களில் காணொளிகள் பார்த்தல் யாவையும் பற்றிய விவரங்கள் உலகளவில் திரளும் மின் தரவுகளின் மிக முக்கியமான மூலங்களாம்.
இதன் வழி, ஒருவர் இணையத்தில் செலவிடும் நேரமும் அந்த நேரத்தில் அவர் பார்க்கும், கேட்கும், படிக்கும் விடயங்களும் அவ்விடயங்களின் அரசியல், சமூக, வணிகப் பெறுமதிகளையும் செயற்கை நுண்ணறி இயந்திரங்கள் துல்லியமாகக் கணிக்கின்றன.
மேலும், ஒருவரின் ஓய்வு நேரத்தையும் அந்த நேரத்தை அவர் எதில் செலவிடுகிறார் என்பதையும் கொண்டு அவரின் ஆளுமையைத் துல்லியமாகக் கணிக்கலாம். அதன் வழி ஒருவர் விரும்புவதை இணையம் பல்வேறு வழிகளில் தொடர்ந்து வழங்கும்.
ஓவ்வொரு தனிமனிதரும் தனக்கு வேண்டிய அனைத்தையும் இணைய மூலமே செய்வதால் அவர்கள் தனியர்களாகி, மக்களிடமிருந்தும் சமூகத்திலிருந்தும் அந்நியமாகின்றனர். மக்களிடமிருந்து துண்டிக்கப்பட்டு எப்போதும் இணைய மூலமாகவே அரசியல் கதைக்கும் ஒருவர் விரைவில் ஒரு நச்சுவட்டத்துக்குள் அகப்படுகிறார்.
உதாரணமாக, பேஸ்புக் ஒரு பயநரின் விருப்பத்தை அறிந்து, தொடர்ந்து அதற்கு உடன்பாடான ஒற்றைப்பரிமாண நோக்குடைய தகவல்களை அவரது இணையப்-பக்கத்தில் காட்சிப்படுத்தும். சமூக வலைத்தளங்களின் பின்னுள்ள செயற்கை நுண்ணறி நிரலி அவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களின் மேற்படி வடிவமைப்பு, அத் தளங்களில் தொடர்ந்து இயங்கும் பயநர்களைச் சில மாதங்களுள்ளேயே மேலும் தீவிரமாகவும் வரட்டுத்தனமாகவும் முட்டாள்தனமாகவும் கூடச் சிந்திக்கச் செய்கின்றது. இவ்வகையில், பெருந் தொகுதியானோரின் கருத்துகளை வடிவமைக்கவும் குறித்த திசைகளில் செலுத்தவும் சமூக வலைத்தளங்கள் ஆளும் வர்க்கங்களின் கைகளில் ஆயுதமாகின்றன.
நிறப்புரட்சிகளுக்கு மக்களைத் தயார்படுத்துவதில் சமூக வலைத்தளங்களே முதன்மைக் கருவிகளாகப் பயன்பட்டன. அரபு வசந்தத்திலும் சமூக வலைத்தளங்கள் இதையே செய்தன என்பதை நினைவூட்டத் தகும். தனி ஒருவரின் ஆளுமையைச் சமூக வலைத்தளங்கள் வடிவமைப்பதும், தொடர்ந்து, போதைப் பழக்கத்தைப் போன்று அடிமையாக்குவதும் இவ்வாறே நடக்கிறது.
இணையத் தேடுபொறி இயந்திரமான கூகுள் மற்றும் சமூக வலைத்தளக் கூட்டாண்மையான பேஸ்புக் போன்ற நிறுவனங்கள் பெரும்மின்தரவுகளின் அடிப்படையிலான பகுத்தாய்தலையும் செயற்கை நுண்ணறித் தொழில்நுட்பத்தையும் வெற்றிகரமாகப் பயன்படுத்துகின்றன.
சமூக வலைத்தளச் செயற்பாடுகள் யாவும் மின்தரவு மூலங்களாகின்றன. சமூக வலைத்தளங்கள் மூலமும் இணையம் மூலமும் சேகரிக்கும் தரவுகளே பெரும்-மின்தரவின் விற்பனைப் பொருளாகின்றன. அவ்வகையில் தரவுகளின் ஊடு, இவை உலகைக் கட்டுப்படுத்த உதவுவன.
இப் பின்புலத்தில் கடந்தவார ‘இக்கனோமிஸ்ற்’ இதழின் தலைப்பு ‘அடுத்த போர்: தொழில்நுட்ப, பூகோள-அரசியற் பெயர்வுகள் மிரட்டலைப் புதுப்பிக்கும் விதம்’ (Next war: How shifts in technology and geopolitics are renewing the threat).
இந்தத் தலைப்பு அச்சுறுத்துவது. தொழில்நுட்ப வளர்ச்சி நவீன போர் ஆயுதங்களையும் இராசயன, உயிரியல் ஆயுதங்களின் நவீனமயமாக்கலையும் இயலுமாக்கியுள்ளது. அதேவேளை உலக அமைதிக்கான அறிகுறி ஏதும் இல்லாத நிலையில், அமெரிக்க ஜனாதிபதி போர்முரசை அறைவது போரைத் தவிர்க்க அரிதாக்குகிறது.
இதை அறிவிக்கும் ‘இக்கனொமிஸ்ற்’ புதிய உலக ஒழுங்கின் மிகப்பெரிய பயனாளியான அமெரிக்க அவ்வொழுங்கைத் தக்கவைக்கக் கடும் முயற்சி எடுக்க வேண்டியிருக்கும் எனக் கணிப்பதோடு, அதை உடன் செய்யாவிடின் அமெரிக்காவும் அதன் சகாக்களும் நீண்ட துன்பத்துக்கு ஆளாக நேரும் எனவும் எச்சரிக்கிறது. மக்களைப் பொறுத்தவரை ஆறுதலடைய எதுவுமில்லை. அஞ்ச நிறைய உள்ளன.