இன்று ஜே வீ, பீ ஸ்தாபகத் தலைவர் இலங்கை அரச படையினரால் படுகொலை செய்யப்பட்டு 30 வருடங்கள். மூன்று தசாப்தத்தின் பின் இப்படத்தின் வழியாக ரோஹண விஜேவீரவையும் , அவர் தம் தோழர்களையும் மட்டுமல்ல, அவர்களது கருத்து நிலையையும் , அக்காலத்தினையும் சந்திக்கிறோம். இந்த 30 வருட காலத்தில் உலக அளவிலும், இலங்கை அளவிலும் எவ்வளவு விடயங்கள், மாற்றங்கள், நடந்தேறி விட்டன.
இலங்கை ஒடுக்குமுறை அரசுக்கு எதிராக அரசியல் ரீதியாக மக்களைத் திரட்டி போராடிய பல தலைவர்களும் படுகொலை செய்யப்பட்டு விட்டனர். ரோஹண விஜேவீர மட்டுமல்ல, குட்டிமணி , தங்கத்துரை, சிறிசபாரத்தினம், தோழர் பத்ம நாபா, அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் , உமாமகேஸ்வரன் , பாலகுமார், , வே. பிரபாகரன், எம்.எச்.எம் அஷ்ரப் என ஒரு பட்டியலே உள்ளது. இவர்கள் எல்லோரையும் யார் படுகொலை செய்தார்கள், எல்லாப் படுகொலைகளையும் இலங்கை அரசு மட்டும் செய்யவில்லை என்பதும் நமக்குத் தெரிந்த கதைதான். இது ”The Frozen Fire – உறைந்த நெருப்பு ” படத்தினைப் பற்றிய குறிப்பு என்பதால் தோழர் விஜேவீராவை கொன்றொழித்தது இலங்கையின் ஒடுக்குமுறை அரசு என்பது இங்கு கவனப்படுத்தத்தக்கது.
இப்படம் இலங்கையின் அரசியல் வரலாற்றில், இலங்கை மக்களுக்குள் இருந்து , ஒடுக்குமுறை அரசுக்கு எதிராக போராடி அழிக்கப்பட்ட 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிங்கள, தமிழ், முஸ்லிம் ஜே.வி.பி முழு நேர உறுப்பினர்கள், பகுதி நேரச் செயற்பாட்டாளார்கள், ஆதரவாளர்கள், அப்பாவி மக்களின் இழப்பின் அரசியல் சூழலை குறிகாட்டுகிறது.அக்காலகட்டங்களில் நிலவிய அரசியல் கருத்து நிலை, தீவிர இடதுசாரிகளின் அரசியல் நிலைப்பாடு என்பன இப்படத்தின் அரசியல் அடித்தளமாக இருக்கிறது.
நவதாராளவாதப் போக்கினை இலங்கைக்குள் கொண்டு வந்த ஜே.ஆர் ஜெயவர்த்தனாவின் அரசுக் காலகட்டமது. தமிழ் மக்கள் தமது அரசியல் கோரிக்கைகளை முன்வைத்து சாத்வீகமாக போராடிய பாராளுமன்ற அரசியல் பலவீனமடைந்து , தமிழ் , இளைஞர் யுவதிகள் ஆயுதப் போராட்டத்திற்கு திரும்பும் காலகட்டமது. சோசலிச ஜனநாயகக் குடியரசு யாப்பின் மூலம் ஜனநாயக நிறுவனங்களையும் , தொழிற்சங்கங்களையும் ஒடுக்கி, உள்ளூர் பொருளாதார வளங்களை முதலாளித்துவத்திற்கு தார வார்க்க தொடங்கும் காலகட்டமது. தர்மிஸ்டர் என்கிற பெயரில் சர்வ நிறைவேற்று அதிகாரத்தினை தன்னகத்தே கொண்ட ஜனநாயகத் தோற்றப்பாடுடைய ஆனால் முழு சர்வாதிகாரியின் அரசியல் பலம் பெறும் நேரமது. இந்த நேரத்தில்தான் ஜே.வி.பீயினரும் அரசியல் ரீதியான ஒரு தீர்மானத்திற்கு வருகிறார்கள், ஜே.ஆரின் இந்த அரசியலை எதிர் கொள்ள தங்கள் முன்னுள்ள ஒரே வழி , இலங்கையின் பிரதான மைய நீரோட்ட அரசியலுக்குள் தாங்களும் வருவதன் மூலம், மக்களை அரசியல் ரீதியாக அணி திரட்டி இந்த அரசியலுக்கு எதிர்வினை செய்ய பயன்படுத்துவதே அவர்களின் அரசியல் தீர்மானமாக அமைகிறது. இதுவரை புரட்சிகர மார்க்சிச அமைப்பாக இருந்த மக்கள் விடுதலை முண்ணனி , வாக்கு அரசியலில் தன்னை மக்கள் பலமாக்க முடிவு செய்கிறது
இந்த முடிவு எடுக்கப்படும் நேரம் ஜே.ஆர் 1982 இல் ஜனாதிபதித் தேர்தலை அறிவிக்கின்றார். இத் தேர்தலில் ஜே.வீ.பீ யின் வேட்பாளராக ரோஹண விஜேவீர போட்டியிட்டு கிட்டத்தட்ட 3 இலட்சம் வாக்குகளை பெறுகிறார். இந்த 3 இலட்சம் வாக்கு என்பது குறைந்த வாக்காக இருந்தாலும், இந்த பிரச்சாரத்தின் மூலம் ஜே.வீ.பீயின் அரசியல் செல்வாக்கு நாட்டு மக்களிடையே எதிர்காலத்தில் அதிகரிக்கும் என்பதும், அவர்கள் தமக்கு எதிரான அரசியல் சக்தியாக இலங்கையில் மேற்கிளம்புவர் என்பதை ஜே.ஆர் . இத் தேர்தலில் மூலம் உணரத் தலைப்படுகிறார். சிறிமா குடியுரிமை பறிக்கப்பட்டு அரசியல் அரங்கிலிருந்து முற்றாக அகற்றப்பட்டு சிறிலங்கா சுதந்திரக் கட்சி முற்றாக ஜே.ஆரால் பலமிழக்கப்பட்டிருந்த சூழலது. ஆகவே ஜே.வீ.பீயை அழித்தொழிப்பதற்கான தருணத்தினை ஜே.ஆரின் நரி மூளை தேடிக் கொண்டிருந்தது.
இந்த நேரத்தில் ஜே.வீ.பியும் தனது அரசியல் பிரச்சாரத்தினையும், கட்சி அமைப்பையும் நாடு பூராகவும் பலப்படுத்தும் வேலைகள் மும்மூரமாக இறங்கி இருந்தது. இலங்கையில் இருந்த பாரம்பரிய இடதுசாரி கட்சிகளுக்கு இல்லாத ஒருவித ஜனரஞ்சக ஆதரவினை ஜே.வி.பீயியும், தோழர் ரோஹண விஜேவீரவும் பெறத் தொடங்கினர்.இக் காலத்தில் அவர்களின் அரசியல் பிரச்சாரத்தினூடாக…
*. ஜே.ஆரின் முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கையை தீவிரமாக எதிர்த்தனர்.
- ஜே.ஆரின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை சர்வாதிகாரத்திற்கு வழிவகுக்குமென கூறி , ஜே.ஆரை ஒரு சர்வாதிகாரியாக சித்தரித்தனர்.
*உழைக்கும் தொழிலாள மக்களை , விவசாயிகளை , பல்கலக்கழக மாணவர்களை அணி திரட்டுவதன் வழியாக ஜே.ஆரின் ஆட்சியை வீழ்த்த முடியும் என நம்பினர்.
*தமிழ் மக்கள் தேசிய இனப்பிரச்சினையை முன்னிருத்தி பிரிந்து போவதை ஏற்க முடியாது என்கின்றனர். - இலங்கையில் உள்ளது இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் அல்ல, அது வர்க்கப் பிரச்சினைதான் என்கிற அரசியல் நிலைப்பாடு ( இந்த நிலைப்பாடு ஜே.வீ.பீ யிடம் மட்டும் இருக்கவில்லை, பெரும்பாலான சிங்கள, தமிழ் இடதுசாரிகளிடம் அன்று இருந்தது.)
இந்த விடயங்கள் The Frozen Fire படத்தின் காலத்தினையும் , அன்றைய மொத்த அரசியல் சூழலையும் , ஜே.வீ.பீ யின் அரசியல் நிலைப்பாட்டினையும் புரிந்து கொள்ள நமக்கு உதவும். இந்த நிலையில் திருநெல்வேலி கண்ணிவெடித் தாக்குதலை காரணமாக வைத்து ஜே.ஆர் அரசு தென்னிலங்கையில் அரச பயங்கரவாதத்தின் மூலம் தமிழ் மக்கள் மீதான ஜூலைப் படுகொலையை நாடாத்துகிறது. தமிழ் மக்களுக்கு எதிரான இந்த படுகொலை, வன்முறையை ஜே.ஆர் அரசு ஜே.வீ.பிதான் முன்னெடுக்கிறது எனச் சொல்லி ஜே.வீ.பியை அரசியல் ரீதியாக தடைசெய்கிறது. இந்த தடையின் வழியாக ஜே.வி.பீயிக்கு தலைமறைவு அரசியலுக்கு செல்வதைத் தவிர வேறு எந்த வழியும் இருக்கவில்லை என்பதை இப்படம் நமக்கு மிக தெளிவாக சொல்கிறது.
தோழர் ரோஹண திருமணம் செய்து கொள்கிறார், மனைவி கர்ப்பமாக இருக்கிறார், மிக வெளிப்படையாக எல்லோரும் பொது , அரசியல் பணியில் இருக்கின்றனர். அவர்களிடம் தலைமறைவு அரசியலுக்கான எந்த திட்டமும் இல்லை, படத்தில் ஜே.ஆரின் இந்த தடை உத்தரவினை அவரது தோழர்கள் வந்து வீட்டிலிருக்கும் தோழர் ரோஹணவிடம் சொல்லும் போது அவர் நிலைகுலைந்து போவதையும், அடுத்த கட்டம் எது என்பதை தீர்மானிக்க முடியாது தடுமாறுவதையும் நாம் காணலாம். 1987 இல் இந்தியப்படை இலங்கைக்குள் வருகிறது, நாட்டை இந்தியாவின் ஆக்கிரமிப்பிலிருந்து காப்பாற்ற தேச ப்பற்றுமிக்க போராட்டம் என தனது முதல் அரசியல் இலக்கை முன்வைக்கிறது… அதன் பின் முழுப்படமும் அரச பயங்கரவாதம் ஜே.வீ.பியை ஒடுக்கும் கதையாகவும் , முழு மத்திய குழு உறுப்பினர்களையும் தேடி அழித்து, ஈற்றில் தோழர் ரோஹணவை அவரது குடும்பத்துடன் இருக்கின்ற போது அரசபடை கைது செய்வதுடன் படம் முடிகிறது.
*அரசியல் ரீதியாக தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக ஏற்காத நிலை விமர்சனத்திற்குரியது.
*தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தினை முழு பயங்கரவாதமாக பார்க்கும் அரசியல் பார்வை விமர்சனத்திற்குரியது.
*தோழர் லயனல் போபேகே போன்றவர்கள் மேற்சொன்ன விவகாரத்தில் மாற்று நிலைபாட்டினை வைத்திருப்பதை படத்தில் மெல்லியதாக காணக்கிடைக்கிறது, போபேகே புளெட் இயக்கத்துடன் உறவு வைத்து பேசிக் கொண்டிருப்பதை, ஜே.ஆர் அரசு தடையை அறிவித்தவுடன் கைது செய்த போபேகேயை விசாரிக்கும் அதிகாரிக்கு அவர் வழங்கும் வாக்குமூலத்தில் காட்டப்படுகிறது.
*போபேகே போன்றவர்கள் இல்லாத முழு மத்திய குழுவும் சிங்கள நிலைப்பட்ட , ஒரு வித இனவாத நிலையில் இருப்பது தெரிகிறது.
*சமஷ்டி தீர்வை, நாட்டைப்பிரிப்பதற்கான அரசியல் தீர்வு என சொல்வதன் மூலம் , தங்களை இலங்கையின் தேச பக்தர்களாக ? நிலைனிறுத்தும் அரசியல் வெளிப்படுகிறது.
- ஆனால் சிங்கள தேசியவாத நிலைப்பாட்டிற்கும்., தமிழ் தேசிய நிலைப்பாட்டிற்கும் இடையே ஒரு பொதுப்புள்ளியும் இங்கு இருக்கிறது. அதுதான் இந்திய ஆக்கிரமிப்புக்கு எதிராக நிலை.
*கட்சியின் மத்திய குழுவிலோ, முக்கிய பொறுப்புகளிலோ எந்த தமிழ், முஸ்லிம்களும் இல்லாத உண்மை.
இப்படத்தில் வெளிப்படும் இவைகள் , முற்று முழுதாக இடதுசாரி முகத்துடன் ஜே.வீ.பீயை ஒரு இன வாத , சிங்கள தேசிய அமைப்பாகவே காட்சிப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. அந்த நேரத்தில் ஜே.வீ.பி அப்ப்டித்தான் இருந்திருக்கிறது, ஆனால் இவைகளை மட்டும் வைத்துக் கொண்டு மட்டும் ஜே.வீ.பீயின் அரசியல் பாத்திரத்தினை நாம் மதிப்பிட முடியாது. இவைகள் ஒரு பகுதிதான்.