அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பாக ஊடகவியலாளர்களைத் தெளிவுபடுத்தும் நோக்கில் வெகுஜன ஊடகத்துறை அமைச்சு கொழும்பு விசும்பாயவில் செயலமர்வொன்றை ஏற்பாடு செய்திருந்தது. இதில் அரசியலமைப்பு சட்டத்தரணியும், 2000ஆம் ஆண்டு அரசியலமைப்பு திருத்த தயாரிப்பில் முன்னிலை வகித்தவரும், தற்போதைய அரசியலமைப்பு மறுசீரமைப்புப் பணியில் முக்கிய நபராகவும் விளங்கும் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்ன விசேட விரிவுரையொன்றை நடத்தியிருந்தார். அதன் முழுவிபரம் வருமாறு:
தனிநபர் ஒருவருக்கு கூடுதல் அதிகாரங்கள் கிடைக்கும் வகையில் 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை காணப்படும் நாடுகள் போலன்றி அதிகாரத்தை தமக்கு நினைத்தவாறு பயன்படுத்தும் வகையில் இது அமைக்கப்பட்டது. நிறைவேற்று அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த அரசியலமைப்பின் அடித்தளம் இன்று ஆட்டம் கண்டுள்ளது.
13 வது திருத்தச் சட்டமூலம் ஏற்படுத்தப்பட்டதன் ஊடாக நிறைவேற்று அதிகாரத்தினதும், பாராளுமன்றத்தினதும் சில அதிகாரங்கள் மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டன. இதனால் நிறைவேற்று அதிகாரத்தின் சில அதிகாரங்கள் குறைந்தன. அன்று தொடக்கம் இன்று வரை ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு அரசாங்கமும் இச்சரத்தில் உள்ள முற்றுப்புள்ளிகளையும், அரைமாத்திரை , கால்மாத்திரை என்பவற்றையும் பயன்படுத்தி அந்த அதிகாரங்களை மீளப்பெற்றுக் கொண்டன. மத்திய அரசாங்கத்தின் ஆட்சி முறையும், மாகாண சபைகளின் ஆட்சி முறையும் ஒன்றுக்கொன்று முரணாகவே அமைந்திருக்கின்றன. மத்திய அரசாங்கம் நிறைவேற்று அதிகார முறையையும், மாகாண அரசாங்கங்கள் பாராளுமன்ற ஆட்சிமுறையையும் கொண்டுள்ளன.
உலகில் அதிகாரம் பகிரப்பட்ட ஒவ்வொரு நாட்டிலும் ஒரே மாதிரியான ஆட்சி முறையே பின்பற்றப்படுகிறது. இலங்கையில் மாத்திரமே மத்திய அரசு ஒரு வகையான ஆட்சிமுறையையும், பிராந்திய அரசு பிறிதொரு வகையான ஆட்சி முறையையும் பின்பற்றுகின்றன. இந்தியாவில் மத்திய அரசும், பிராந்திய அரசும் ஒரே வகையிலான ஆட்சி முறையினையே பின்பற்றுகின்றன.
18 வது திருத்தத்தின் ஊடாக உலகிலேயே மிகவும் பலம் பொருந்திய நிறைவேற்று ஜனாதிபதி முறை இலங்கையில் ஸ்தாபிக்கப்பட்டது. ஆரம்ப அரசியலமைப்பில் இருந்த எல்லைகள் மற்றும் கட்டுப்பாடுகள் யாவும் இதனூடாக அகற்றப்பட்டன. அந்த அடித்தளம் 19 வது திருத்தத்தின் ஊடாக முழுமையாக மாற்றப்பட்டது.
இதனூடாக நிறைவேற்று அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட அரசியலமைப்பின் அடித்தளம் வெகுவாக ஆட்டம் கண்டது. இந்த நிலையில் 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பை மையாக வைத்து அரசியலமைப்பைத் திருத்துவதில் எந்தப் பயனும் இல்லை. அதனாலேயே புதிய அரசியலமைப்பொன்றை புதிய அடித்தளத்துக்கு அமைவாக உருவாக்கவேண்டியுள்ளது.
1972 மற்றும் 1978ஆம் ஆண்டு அரசியலமைப்புகள் தொடர்பில் பாரிய சிக்கல்கள் காணப்படுகின்றன. 72ஆம் ஆண்டு யாப்பு தயாரிப்பதற்கு மக்களின் அபிப்பிராயங்கள் ஓரளவுக்குப் பெறப்பட்டன. அரசியலமைப்புக் குறித்து வெளிப்படையாக ஆராயப்பட்டது.
ஆனால் இதன் உள்ளடக்கம் அன்றிருந்த அரசாங்கத்துக்குத் தேவையானவாறே அமைந்திருந்தது. ஆனாலும் இதில் சாதகமான பல விடயங்களும் உள்வாங்கப்பட்டிருந்தன. இது பிரித்தானிய ஆதிக்கத்திலிருந்து மீண்டிருந்ததோடு, மனித உரிமையைப் பாதுகாக்கும் விடயங்களும் உள்ளடக்கப்பட்டிருந்தன.
அரசாங்கங்களுக்குக் கிடைக்கும் அதிகாரத்துக்கு இயைபாகவே கடந்த காலத்தில் அரசியலமைப்புக்கள் உருவாக்கப்பட்டன. 1977 பொதுத் தேர்தலின் போது தமிழ் மக்களுக்குப் பிரச்சினை இருப்பதை ஜே.ஆர்.ஜயவர்த்தன பகிரங்கமாக ஏற்றுக் கொண்டார். அந்தப் பிரச்சினை தீர்க்கப்படாததாலேயே பிரிவினைவாதத்தின் பக்கம் தமிழ் மக்கள் தள்ளப்பட்டதாகவும், வட்டமேசை பேச்சுவார்த்தை மூலம் இப்பிரச்சினையைத் தீர்ப்பதாகவும் கூறியிருந்தார்.
ஆனால் இத்தேர்தலில் ஆறில் ஐந்து பெரும்பான்மை பெற்ற போதும் வட்டமேசை அமைக்கப்படவில்லை, பேச்சுவார்த்தையும் இடம்பெறவில்லை. தமக்குத் தேவையான அரசியலமைப்பை உருவாக்கி அதனை மக்கள் மீது திணித்தார்கள்.
சோல்பரி அரசியலமைப்பு எமது கருத்தையும் பெற்று தமக்குத் தேவையானதை பிரித்தானியா தயாரித்தது. அந்த அரசியலமைப்பும் அமைச்சர்களின் கருத்துக்களைப் பெற்று அமைக்கப்பட்டாலம் தங்களுக்குத் தேவையானவாறே உருவாக்கப்பட்டது.
இந்த மூன்று அரசியலமைப்புக்களும் மக்கள் மீது பலவந்தமாக திணிக்கப்பட்டவை. இன்று எந்தக் கட்சிக்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இல்லாததுடன், சாதாரண பெரும்பான்மை இல்லாத நிலையிலேயே புதிய அரசியலமைப்பை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதற்கு இதனைப் போன்ற பொன்னான சந்தர்ப்பம் வேறு ஏற்படப் போவதில்லை. மிக அரிதாகவே இவ்வாறான சந்தர்ப்பங்கள் உருவாகும்.
இரு பிரதான கட்சிகளும் எதிர்த் தரப்பிலுள்ள தமிழ்க் கட்சியும் இணைவதன் மூலம் பெரும்பான்மை பலத்தைப் பெற முடியும். சோல்பரி யாப்புக்கு முற்றிலும் மாற்றமாகவே 1972ஆம் ஆண்டு யாப்பு உருவாக்கப்பட்டது. புதிய அரசியலமைப்பொன்றை அமைப்பதானால் அதனை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து சோல்பரி யாப்பில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
1970ஆம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்க அரசாங்கம் சோல்பரி யாப்பின் முழுமையான மாற்றம் புதிய அரசியலமைப்பொன்றைக் கொண்டு வர மக்களின் ஆணையைக் கோரியது. எதிர்பாராதவாறு அன்றைய அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை மக்கள் வழங்கியிருந்தனர். இதன் பிரகாரம் புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதற்காக சிறிமாவோ அரசு சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்தது.
புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்கும் நோக்கத்தில் சமஷ்டிக் கட்சியின் தலைவர் செல்வநாயகம் உள்ளடங்கலாக சகல கட்சிப் பிரதிநிதிகளும் இதில் பங்கேற்றனர்.
அரசியலமைப்புத் திருத்த நடவடிக்கைக் குழுவின் சகல கூட்டங்களிலும் செல்வநாயகம் பங்கேற்றார். இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது சமஷ்டி ஆட்சியா, ஒற்றையாட்சியா என்ற சர்ச்சை தலைதூக்கியது. நாம் சமஷ்டி ஆட்சியையே பிரேரிக்கின்றோம் என்று தெரிவித்திருந்த தர்மலிங்கம், உங்களுக்கு ஒற்றையாட்சிக்கு வெளியே அதிகாரம் வழங்க முடியாவிட்டால் மாவட்ட சபைகளை உருவாக்கி அவற்றுக்கு அதிகாரம் வழங்குமாறு யோசனை வழங்கினார்.
இந்த மிக முக்கியமான மாற்று யோசனைக்கு அன்றைய அரசாங்கம் எந்தவித பிரதிபலிப்பையும் வெளியிடவில்லை. இந்த யோசனை குறித்து எதுவும் பேசாமல் சமஷ்டிமுறையை தாறுமாறாக விமர்சிக்க அரசதரப்பு முற்பட்டது.
மாவட்ட சபை அமைக்கும் தமிழ்க் கட்சிகளின் யோசனையை ஏற்று செயற்பட்டிருந்தால் எமது நாட்டின் வரலாறு இப்பொழுது இருப்பதை விட மாறியிருக்கும். அன்று அவர்கள் பொலிஸ் அதிகாரமோ காணி அதிகாரமோ கோரவில்லை. இந்தத் தவறுக்கு சகல கட்சிகளும் பொறுப்புக் கூற வேண்டும்.
இதேபோன்றே 1978ஆம் ஆண்டு யாப்பும் எம்மீது திணிக்கப்பட்டது. 1972ஆம் ஆண்டு யாப்புக்கு அமைவாகவே 1978 யாப்பு உருவாக்கப்பட்டது. இன்று புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவது குறித்து பேசப்படுகிறது. 1972 யாப்பைப் போன்று முன்னைய யாப்புக்கு முரணாக செல்வதா அல்லது 1978ஆம் ஆண்டு யாப்பைப் போன்று முன்னைய யாப்புக்கு (72) உட்பட்டதாக மேற்கொள்வதா என்ற பிரச்சினை எழுந்திருக்கிறது.
இருக்கும் யாப்புக்கு முழுமையாக மாற்றமாக ஒரு தடவை யாப்பைத் திருத்த முடியும். இராணுவ ஆட்சி நிலவும் நாடுகளில் இரு தடவைகள் அவ்வாறு செய்ய முடியும். 1978ஆம் ஆண்டு அரசியலமைப்புக்கு முரணாக சென்று அரசியலமைப்பொன்றை உருவாக்க முடியாது. 17ஆவது மற்றும் 19ஆவது திருத்தங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில் எமக்கு 1978ஆம் ஆண்டு யாப்பைப் புறக்கணித்து செல்ல முடியாது. இதற்கு நீதிமன்ற அனுமதி கிடைக்கப் போவதுமில்லை. அதேபோன்று அதற்கு தார்மீக உரிமையும் கிடையாது.
அவ்வாறானால் புதிய அரசியலமைப்பொன்றை எவ்வாறு உருவாக்குவது என்ற பிரச்சினை எழுகிறது. இதற்கு சில வழிவகைகள் இருக்கின்றன. அதிலொன்று அரசியலமைப்பு சபையொன்றை உருவாக்கி மேற்கொள்வதாகும். மற்றது சகல கட்சிகளையும் உள்ளடக்கி தெரிவுக்குழுவின் ஊடாக முன்னெடுப்பதாகும்.
இந்தக் குழு சகல தரப்பினருடனும் ஆராய்ந்து உத்தேச நகல் சட்டமூலமொன்றைத் தயாரித்து அமைச்சரவையின் அனுமதியைப் பெற்ற பின் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து மூன்றில் இரண்டு பெரும்பான்மையின் ஊடாக நிறைவேற்றுவதாகும். பின்னர் சர்வஜன வாக்கெடுப்பின் ஊடாக மக்களின் அனுமதி பெறப்படும். 2000ஆம் ஆண்டு அரசியலமைப்புத் திருத்தம் இவ்வாறு தெரிவுக்குழு அமைத்தே மேற்கொள்ளப்பட்டது.
அரசாங்கம் புதிய அரசியலமைப்புத் தொடர்பான ஒரு நிலைப்பாட்டுடனேயே இந்தத் தெரிவுக்குழு செயற்பாட்டை முன்னெடுத்தது. தெரிவுக்குழுக் கூட்டங்களில் பேசப்படுவது மக்களுக்கோ ஊடகங்களுக்கோ செல்லவில்லை. தெரிவுக்குழு முறையின் ஊடாக அரசியலமைப்பைத் திருத்துவது வெளிப்படைத் தன்மை அற்ற முறையாகும்.
அதனாலேயே இம்முறை தெரிவுக்குழு முறைக்குப் பதிலாக முழு பாராளுமன்றத்தையும் அரசியலமைப்பு சபையாக மாற்றி புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்க அரசாங்கம் தீர்மானித்திருக்கிறது. இதன்படி முழுப் பாராளுமன்றமும் அரசியலமைப்பு சபையாகக் கூடி யாப்பு திருத்துவது குறித்து ஆராயும்.
இதற்காக 21 பேர்கொண்ட செயலணிக் குழுவொன்று உருவாக்கப்படவிருப்பதோடு தேவைப்படும் பட்சத்தில் உபகுழுக்களும் அமைக்கப்படும். இந்த செயற்பாட்டுக்கு உதவும் வகையில் மக்களின் கருத்தறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு மக்கள் கருத்தறியும் குழு நாடு பூராகவும் சென்று மக்களின் அபிப்பிராயங்களைத் திரட்டி வருகிறது.
சிவில் அமைப்புக்கள், பொதுமக்கள் மட்டத்தில் புதிய அரசியலமைப்புக் குறித்த கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டு விட்டன. சகல தரப்பினரதும் யோசனைகள் பாராளுமன்றத்தில் உருவாக்கப்படும் செயலணிக்குழுவுக்கு வழங்கப்பட்டு நகல் சட்டமூலம் தயாரிக்கப்படும்.
இந்த நகல் சட்டத்தின் ஒவ்வொரு சரத்தாக ஆராயப்பட்டு மூன்றில் இரண்டு பெரும்பான்மையில் நிறைவேற்றக் கூடியவாறான அரசியலமைப்பு யோசனை உருவாக்கப்படும். இந்த செயற்பாடுகள் யாவும் வெளிப்படைத் தன்மையுடன் முன்னெடுக்கப்படும். பாராளுமன்றம் முழுமையான அரசியலமைப்பு சபையாகக் கூடி இதுகுறித்து ஆராய்வதால் ஊடகங்களுக்கும் பொதுமக்களுக்கும் இந்த நடவடிக்கைகள் நேரடியாக சென்றடையும்.
ஒவ்வொரு எம்.பியும் தெரிவிக்கும் கருத்துக்கள் ஹன்சாட்டில் பதியப்படும். இந்த செயற்பாட்டின் இறுதியில் நகல் அறிக்கை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டு அமைச்சரவையின் அனுமதி கிடைத்த பின்னர் உத்தேச அரசியலமைப்புத் திருத்த சட்டநகல் வர்த்தமானியில் வெளியிடப்படும். அடுத்து அது மாகாணசபைகளின் அனுமதிக்காக அனுப்பப்படும். மாகாணசபைகளின் கருத்து பெறப்பட்ட பின் இச்சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு மீண்டும் ஆராயப்படும்.
பாராளுமன்றம் அரசியலமைப்பு சபையாகக் கூடி ஆராய்ந்த போது சில சரத்துகளுக்கு ஆதரவு தெரிவித்த எம்.பி ஒருவருக்கு மீண்டும் இதுதொடர்பான விவாதத்தின் போது அதனை எதிர்க்க சந்தர்ப்பம் ஏற்படும். வழமை போல பாராளுமன்றம் கூடியே புதிய அரசியலமைப்புப் பற்றிய விவாதம் இடம்பெற்று மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறப்படும். அதன் பின் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும்.
சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவது தொடர்பிலும் பல்வேறுபட்ட கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன. தற்பொழுது உள்ள அரசியல் அமைப்பில் உள்ள சில பிரிவுகளை மாற்றுவதற்கு சர்ஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டும். 13 பிரிவுகள் தொடர்பில் தனித்தனியாக சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அதனால் புதிய அரசியலமைப்பு தொடர்பிலும் 13 சர்வஜன வாக்குகள் நடத்தப்பட வேண்டும் என சில தரப்பினர் வாதிடுகின்றனர்.
புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவது குறித்து அரசியலமைப்பில் 5ஆவது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பிரிவின் பிரகாரம் ஒரு அரசியலமைப்பு சட்டமூலத்தின் ஊடாக புதிய அரசியலமைப்பை உருவாக்க முடியும். இதற்காக இரண்டு மூன்று சட்டமூலங்கள் தேவையில்லை. எந்தவொரு அரசியலமைப்பும் நிரந்தரமாக இருந்திருப்பதில்லை. தேவை ஏற்பட்டால் அதன் கருப்பொருள் மாறாது மாற்றம் செய்வது தவறில்லை.
புதிய அரசியலமைப்பு சட்டநகலொன்றை உருவாக்குவதற்கு நீண்டகாலம் பிடிக்காது. 2000ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட நகல் சட்டமூலம் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை மனித உரிமை தொடர்பான சட்டங்கள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு புதிய சட்டமூலத்தை உருவாக்க முடியும். இதில் உட்படுத்த வேண்டிய பல்வேறு அம்சங்கள் குறித்து பல்வேறு மட்டங்களில் ஆராயப்பட்டு வருகிறது.
உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் அடிப்படை மனித உரிமைமீறல் மனு தொடர்பான தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்ய அவகாசம் இல்லை. எனவே உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யும் அதிகாரத்தை மேன்முறையீட்டு நீதிமன்றங்களுக்கு வழங்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்ய யோசனை முன்வைக்கப்பட்டது.
சுற்றாடல், சுகாதாரம், கலாசாரம், பொருளாதாரம், சமூக விடயங்களையும், மகளிர், சிறுவர் உரிமை விவகாரங்களையும் அரசியலமைப்பில் உள்வாங்க யோசனை முன்வைக்கப்பட வேண்டும்.
ஒவ்வொரு மதத்தினரும் பின்பற்றும் தனிப்பட்ட சட்டங்களில் தலையீடு செய்வது குறித்து மதத் தலைவர்களுடன் பேசியே தீர்மானிக்கப்பட வேண்டும். முஸ்லிம் திருமண மற்றும் சொத்துப் பகிர்வு, தேசவழமைச் சட்டம், உடரட்ட சட்டம் என ஒவ்வொரு இனத்தவருக்கும் தனித்துவமான சட்டங்கள் நடைமுறையில் இருக்கின்றன.
இவற்றில் திருத்தங்கள் செய்வது தொடர்பில் சம்பந்தப்பட்ட இனத்தினரே யோசனை முன்வைக்க வேண்டும்.
பாராளுமன்றத்துக்கு தெரிவாகும் மக்கள் பிரதிநிதிகளின் கல்வித் தைகமை தொடர்பிலும் யோசனைகள் முன்வைக்கப்படுகிறது. ஆனால் அவ்வளவாக கற்றிராத ரி.பி.தென்னக்கோன், சோமவீர சந்திரசிறி, டி.எஸ்.சேனநாயக்க, சிறிமாவோ பண்டாரநாயக்க, பிரேமதாச ஆகியோர் நாட்டுக்கு பெரும் சேவையாற்றியிருக்கிறார்கள்.
மோசடி, திருட்டு தொடர்பில் நீதிமன்றத்தினால் தண்டிக்கப்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது. கல்வித் தகைமை விடயத்தை சட்டத்தில் உள்வாங்குவது குறித்து ஆராய முடியும். புதிய அரசியலமைப்பில் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை முழுமையாக நீக்கி அந்த அதிகாரத்தை பாராளுமன்றத்துக்கு வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி பெயரளவில் நாட்டின் தலைவராக இருப்பார்.
பாராளுமன்றத்தில் உள்ள எம்.பிக்களிடையே கூடுதல் நம்பிக்கை உள்ள ஒருவர் பிரதமராக தெரிவாகி நிறைவேற்று அதிகாரம் கொண்ட நபராக செயற்படுவார். அமைச்சரவையினதும் பாராளுமன்றத்தினதும் ஒத்துழைப்பு இருக்கும் வரையே அவரால் பிரதமராக செயற்பட முடியும். எனவே நிறைவேற்று அதிகாரம் பிரதமருக்கு அன்றி பாராளுமன்றத்துக்கே செல்கிறது.